அரசியல் சட்ட எரிப்புப் போராட்டத்தில் ஆதிக்க சக்திகளின் ஆட்டம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 18, 2023

அரசியல் சட்ட எரிப்புப் போராட்டத்தில் ஆதிக்க சக்திகளின் ஆட்டம்!

கி.தளபதிராஜ்

ஒப்பாரும் மிக்காரும் இல்லாத உலகத் தலைவர் தந்தை பெரியார், மானுடத்தின் மாண்பு காக்க தன் வாழ்நாள் முழவதும் போராடியவர். தமிழர்களின் சூத்திரப் பட்டம் ஒழிய, இன இழிவு நீங்க தன் வாழ்வையே போராட்டக் களமாக மாற்றிக் கொண்டவர். பெரியார் நடத்திய போராட்டங்களிலேயே முதன்மையானது சட்ட எரிப்புப் போராட்டம். ஜாதியைப் பாதுகாப்பதாகச் சொல்லி இந்திய அரசியல் சட்டத்தை எரித்து சவக்குழிக்கு அனுப்பச் சொன்னார். பல்லாயிரக்கணக்கான கழக தோழர்கள் பல ஆண்டு சிறைப்பட்டு சித்திரவதைப்பட்டதும் - பல தோழர்கள் தங்கள் இன்னுயிரை ஈந்ததும் இந்தப் போராட்டத்தில் தான். சட்ட எரிப்புப் போராட்டத்தின் மூலம் பெரியார் தன் இயக்கத்திற்கு முடிவுரை எழுதுகிறார் என்றார்கள். 

இந்திய அரசியல் சட்டத்தை எரிக்கும் போராட்டத்தை தந்தை பெரியார் அறிவித்தபோது தமிழ்நாட்டில் காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. சட்டத்தை எரித்தால் என்ன தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பது  அந்தச் சட்ட நடைமுறையிலேயே இல்லாதது ஆட்சியாளர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது. பார்ப்பன சக்திகள் படமெடுத்து ஆடின. இந்திய ஒன்றிய அரசும் பார்ப்பன லாபியும் கொடுத்த அழுத்தத்தில் புதிதாக ஒரு சட்டத்தை இயற்ற தமிழ்நாடு அரசு முனைந்தது.

தேசிய அவமதிப்பு தடைச்சட்ட மசோதா விவாதம்

அரசியல் சட்ட எரிப்புப் போராட்டத்தில் கலந்துகொள்ள இருந்த தோழர்களை சந்திப்பதற்காக பெரியார் சென்னையிலிருந்து ரயில் மூலம் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். பெரியார் தன் சுற்றுப் பயணத்தை தொடங்கிய அதே நாளில் நவம்பர் 11 ஆம் தேதி தேசிய அவமதிப்புத் தடைச்சட்ட மசோதா சட்ட மன்றத்தில் விவாதத்திற்கு வந்தது. 

விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய அண்ணா, "ஜாதியை ஒழிப்பது இந்த அரசாங்கத்தின் கடமை என்று பத்து நாள்களுக்கு முன்பு நேரு அவர்களே சொன்னார்களே! அந்த அடிப்படையில் பெரியாரைச் சந்தித்துப் பேசினால் அவரை விட தனிப்பட்டவர்களிடத்தில் மரியாதை காட்டுகிறவர், அவரை விட தாட்சண்யத்திற்கு கட்டுப்படக் கூடியவர், அவரைவிட எதிரியின் மனப்பான்மையை அறிந்து தன் மனப்போக்கை மாற்றிக் கொள்ளக்கூடிய ஒருவரை நீங்கள் தமிழ்நாட்டிலேயே பார்க்க முடியாது. சட்டங்களைச் செய்வதினால் பலன் இல்லை.

தேசியக்கொடி அவமதிக்கப்பட்டால் அது தன் நெஞ்சில் புண்ணை ஏற்படுத்தும் என்று அமைச்சர் அவர்கள்  கருதுவது போல், பெரியாரை அடக்குவதற்காக நீங்கள் கடுமையான சட்டம் கொண்டு வந்தால் மனம் புண்படுபவர்கள் இன்று தமிழ்நாட்டில் லட்சக்கணக்கில் இருக்கிறார்கள் என்பதை அமைச்சரவை தயவு செய்து தெரிந்து கொள்ள வேண்டும் என்று நான் பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்! " என்றார்.  (அண்ணா தந்தை பெரியார் அவர்களிடமிருந்து பிரிந்திருந்த காலகட்டம் அது )

தேசிய அவமதிப்பு தடைச்சட்ட மசோதா நிறைவேறியது

தேசிய அவமதிப்புத் தடைச்சட்ட  மசோதா நீண்ட விவாதத்திற்குப் பின் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த புதிய சட்டத்தின் படி, காந்தி பட எரிப்பு, சிலை சேதப்படுத்தல், தேசியக் கொடி எரித்தல், அரசியல் சட்டப்  புத்தகத்தை எரித்தல், வேறு வகையில் அவமானம் இழைத்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவதை தேசிய அவமதிப்பாகக் கருதி மூன்று ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்டும். இச்சட்டப்படிக் கருதப்படும் குற்றங்களைச் செய்ய முயற்சித்தாலும் குற்றம் செய்ததாகவே கருதப்படும். 

சட்டமன்றத்தில் புதிதாக நிறைவேற்றப் பட்ட சட்டத்தை தந்தை பெரியார் அவர்களோ, கழகத் தோழர்களோ ஒரு பொருட்டாகவே கருதவில்லை. 'யானைக்கு முள்வேலி கட்ட முயற்சி!'  'தடியனைக் காப்பாற்றும் பொடியன்!' 'பயமுறுத்தல் சட்டம்!' 'உலகிலேயே எங்கும் கண்டறிய முடியாத நூதனச் சட்டம்!' என்றெல்லாம் தலைப்பிட்டு கிண்டலடித்து எழுதியது விடுதலை! போராட்டத்திற்கான ஆயத்த பணிகளில் தலைவரும் தொண்டர்களும் முன்பை விட தீவிரமாக இறங்கினர். 

பெரியார் கைது

தமிழ்நாடு முழுவதும் நவம்பர் 26 ஆம் தேதி நடைபெறப்போகும் சட்ட எரிப்புப் போராட்டத்திற்கு தோழர்கள் தயாராகி கொண்டிருந்தார்கள். அதற்கு முதல்நாள் 25ஆம் தேதி திருச்சி - சிறீரங்கத்தில் ஒரு பொதுக்கூட்டம். தந்தை பெரியார் சிறப்புரை. அந்தக் கூட்டத்தை முடித்துக் கொண்டு சென்னை புறப்படுவதாக திட்டமிடப்பட்டிருந்தது. நவம்பர் 25 மாலை திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையிலிருந்து சிறீரங்கம் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள தயாராகிக் கொண்டிருந்தார் பெரியார். மாலை 6.40 மணிக்கு பெரியார் மாளிகை வந்த காவல்துறை கண்காணிப்பாளர் எஸ்.சோலை அவர்கள் அரசியல் சட்ட எரிப்புப் போராட்டத்தில் கலந்து கொள்வதை தடுப்பதற்காக தங்களை கைது செய்கிறோம் என்று சொல்லி பெரியாரை வேனில் அழைத்துச்சென்றார்.  சிறீரங்கம் கூட்டத்தில் திருச்சி நகர தலைவர் தி.வீரப்பா தலைமையேற்க கடலூர் வீரமணி (தற்போதைய கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்), வடவேற்குடி திருஞானசம்பந்தம், ஏ.எம்.ஜோசப் ஆகியோர் பேசினர். தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றத் தொடங்கிய போதுதான் பெரியார் கைது செய்யப்பட்ட செய்தி கிடைத்தது. சில மணி நேரங்களில் பெரியார் கைது செய்யப்பட்ட செய்தி தீயாய் பரவ தமிழ்நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

பெரியார் மீண்டும் கைது

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டு ஒரு சில நாட்களில் வெளிவர,  காந்தியார் பட எரிப்பு, நேரு பட எரிப்பு, இந்திய தேசிய யூனியன் பட எரிப்பு என அடுத்தடுத்து போராட்டங்களை அறிவிக்கப் போவதாக எச்சரித்தார் பெரியார். அதனைத்தொடர்ந்து டிசம்பர் 14 ஆம்தேதி பெரியார் மீண்டும் கைது செய்யப்பட்டார். மூன்று குற்றப்பிரிவுகளின் கீழ் ஒவ்வொரு பிரிவிற்கும் 6 மாதங்கள் வீதம் ஒன்றரை ஆண்டு காலம் தண்டனை விதிக்கப்பட்டது

பெரியார் கைது செய்யப்பட்ட நிலையில் அன்னை மணியம்மையார் அவர்கள் கழகப் பொறுப்பாளர்களுடன் சிறைபட்ட கழகத் தோழர்களை தொடர்ந்து சந்தித்து ஆறுதல் கூறி வந்தார். கடலூர் வீரமணி (தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி) அவர்கள் அம்மா அவர்களுடன் தொடர்ந்து பயணித்தார். நடிகவேள் எம்.ஆர்.ராதா அவர்களும் சிறைச்சாலைகளுக்குச் சென்று தோழர்களை சந்தித்தார். 

மூன்று மாதம் முதல் மூன்று ஆண்டுகள் வரை சிறைக்கொட்டடியில் சித்ரவதை அனுபவித்த தோழர்களின் கதை இரத்தக் கண்ணீர் வரவழைக்கக்  கூடியவை. நோய்வாய்ப்பட்டு சிறையிலேயே மாண்ட தோழர்கள்! குடும்பத்தையே நிர்க்கதியாய் நட்டாற்றில் விட்டு விட்டு சூத்திரப் பட்டம் ஒழிய சிறை சென்ற சிங்கங்கள்! பெற்றோரை, பெற்ற மகனை, உற்றார் உறவினரைப் பறி கொடுத்து அவர்கள் முகத்தைக் கூட பார்க்க முயற்சிக்காமல் வைராக்கியத்துடன் சிறைத் தண்டனையை அனுபவித்த தீரர்கள்! சிறை வாழ்க்கை முடிந்து விடுதலையான சில நாட்களிலேயே நோய்வாய்ப்பட்டு மறைந்து போன மறவர்கள்! என நெஞ்சை உலுக்கும் செய்திகள் சொல்லி மாளாது. திராவிடர் கழகத்தைத் தவிர பெரியார் தொண்டர்களைத் தவிர இப்படியொரு மேன்மையான இயக்கத்தை அகில உலகத்திலும் வேறு எங்கும் காண முடியாது.

சட்ட எரிப்புப் போரில் 

உயிர் நீத்த தோழர்கள்

பட்டுக்கோட்டை இராமசாமி, மயிலாடுதுறை அடுத்த மணல்மேடு வெள்ளைச்சாமி, லால்குடி நன்னிமங்கலம் கணேசன், திருச்சி வரகநேரி சின்னச்சாமி, 14 வயதே நிரம்பிய திருச்சி வாளாடி பெரியசாமி ஆகிய அய்ந்து தோழர்களும் சிறைக் கொடுமை தாங்காது சிறையிலேயே மாண்டனர்.

சிறையில் நோய்வாய்ப்பட்டு கடும் உடல்நலப் பாதிப்புடன் விடுதலை செய்யப் பட்ட மன்னார்குடி காரைகோட்டை இராமய்யன், கோயில் தேவராயன்பேட்டை மு.நடேசன், திருவையாறு மஜீது, இடையாற்று மங்கலம் நாகமுத்து, மயிலாடுதுறை அடுத்த பொறையாறு என்.தங்கவேலன், இடையாற்று மங்கலம் தெய்வானை அம்மாள், மயிலாடுதுறை அடுத்த மாதிரிமங்கலம் ரத்தினம், திண்டிவனம் பூங்கோதை, சென்னை புதுமனைக்குப்பம் எம்.கந்தசாமி, திருச்சி சி.ஆர்.எஸ்.மணி, டி.ஆர்.எஸ்.வாசன், அரியலூர் கண்டராதித்தம் சிங்காரவேலு, மயிலாடுதுறை அருகே மணல்மேடு அப்பாதுரை, கீழ்வாளாடி பிச்சை ஆகியோர் சிறையிலிருந்து வெளிவந்த ஒருசில நாட்களிலேயே தங்கள் இன்னுயிரை இழந்தனர்.

மறைவுற்ற தோழர்களின் உடலைக் கொடுக்க மறுத்த சிறை நிர்வாகம் 

சட்ட எரிப்புப் போராட்டத்தில் முதல் பலியான பட்டுக்கோட்டை இராமசாமி, மணல்மேடு வெள்ளைச்சாமி ஆகியோரின் உடலை ஒப்படைக்க மறுத்தனர் சிறை அதிகாரிகள்! தந்தை பெரியார் அவர்களோ சிறையில்! வெகுண்டெழுந்தார் அன்னை மணியம்மையார்! சிறை நிர்வாகத்தை எதிர்த்து கடும் கண்டனக்குரல் எழுப்பினார். நிர்வாகம் மசியவில்லை. இனி அவர்களிடம் பேசிப் பயனில்லை என்பதை அறிந்து கி.வீரமணி, எம்.ஆர்.ராதா ஆகியோருடன் சென்னை சென்று முதலமைச்சர் காமராஜர் அவர்களை சந்தித்தார். பெரும்போராட்டத்திற்குப் பின் அழுகிய நிலையில் இருவரின் உடல்களும் ஒப்படைக்கப்பட்டது. 

திருச்சி புத்தூர் பெரியார் மாளிகை யிலிருந்து இறுதி ஊர்வலம் புறப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. அன்னை மணியம்மையார் அவர்கள் ஊர்வலத்தில் நடந்தே சென்றார்கள். கழகத் தோழர்கள் பல பகுதிகளிலிருந்தும் திரண்டு வந்து பெருமளவில் கலந்து கொண்டு இறுதி மரியாதை செலுத்தினர். இயக்க மூத்த முன்னோடிகள் அந்த நிகழ்வை மிகவும் உணர்ச்சி வயப்பட்டு விவரிக்கையில் கேட்போர் உள்ளம் உறைந்து போகும்.

பெரியாரின் ஜாதி ஒழிப்புக் களம் சட்ட எரிப்புப் போராட்டத்தோடு நின்று விட வில்லை. ஜாதி ஒழிப்புக்கென பிரத்தியேக மாநாடுகளை, போராட்டங்களை தொடர்ந்து நடத்தினார்.  கருவறை நுழைவுப் போராட்டத்தை அறிவித்தார். சாகும் தருவாயிலும் சென்னை தியாகராயர் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தனது இறுதிப் பேருரையில் கூட 'உங்களை சூத்திர மக்களாக விட்டு விட்டுச் சாகப் போகிறேனே!' என்று உணர்ச்சி மேலிட உரைத்தார். பெரியார் மறைந்தார்! பெரியார் பணி தொடர்கிறது! பெரியார் பணி முடிப்போம்!

மயிலாடுதுறை வட்டத்தில் சட்ட எரிப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறைசென்ற தோழர்களுடன் தந்தை பெரியார்


No comments:

Post a Comment