தந்தை பெரியார் உலகமயமாகின்றார் என்பது ஏதோ வருணனை வார்த்தைகள் அல்ல! அது நிதர்சனமான ஒன்றே! எங்கெங்கெல்லாம் ஏற்றத் தாழ்வுகள் நிலவுகின்றனவோ அங்கெல்லாம் தந்தை பெரியார் தேவைப்படுகிறார். தந்தை பெரியாரின் உரிமைக் குரல் - அடுத்து கிளர்ச்சிக் குரல் கிளர்ந்து எழுவது என்பது ஒரு விஞ்ஞானமாகும்.
ஒடிசா மாநிலம் கேந்திரபாரா நகராட்சி நிர்வாகம், பிராமணர் களுக்கு மட்டுமான சுடுகாட்டை அரசு செலவில் பராமரித்து வருவது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.
நாட்டில் தீண்டாமை தலைவிரித்தாடும் இடங்களில் சுடுகாடுகளும் தப்பவில்லை.
பறையர் சுடுகாடு
படையாட்சி சுடுகாடு
தலைமுழுக
ஒரே ஆறு
என ஹைக்கூ கவிதை ஒன்றை பல ஆண்டுகளுக்கு முன்னர் கவிஞர் அறிவுமதி எழுதியதுண்டு. இரட்டை சுடுகாடு, இரட்டைக் குவளை முறை சட்டவிரோதம் என்றாலும் தொடர்ந்து கடைப்பிடிக்கப்படுகிற ஒன்றாக இருக்கிறது; இதற்கு எதிரான போராட்டங்களும் தமிழ்நாட்டில் வலுவாகவும் இருக்கிறது. தமிழ்நாட்டில் 60 ஆண்டுகளுக்கு முன்னரே பிராமணாள் மெஸ், பிராமணாள் கஃபே போன்றவை கைவிடப்பட்டுவிட்டன. ஏனெனில் ஸநாதன தர்மத்தை நிலைநாட்டும் இத்தகைய இழிநிலை ஒழிக்கப்பட வேண்டும் என்பது சமூக நீதியாளர்களின் தொடர்ச்சியான குரல்.
தற்போது ஒடிசாவிலும் இந்த ஸநாதன தர்மத்தை நிலைநாட்டும் செயல்பாடுகளுக்கு எதிரான குரல் வெடித்திருக்கிறது. ஒடிசாவின் கேந்திரபாரா நகராட்சி நிர்வாகம் அண்மையில் சுடுகாடு ஒன்றை சீரமைத்தது. அந்த சுடுகாட்டின் பெயரே 'பிராமணர் மயானம்' என்பதுதானாம். அதுவும் அரசாங்க நிதியில் பிராமணர்களுக்கான தனி மயானம் பராமரிக்கப்படுகிறது என்பதுதான் சர்ச்சையானது. இந்த மயானம் 155 ஆண்டுகள் பழைமையானதும் கூடவாம்.
ஒடிசா தலித் சமாஜ் நிர்வாகி நாகேந்திர ஜெனா கூறுகையில், "பிராமணர்களுக்கு மட்டுமான மயானத்தை நகராட்சி நிர்வாகமே நீண்டகாலம் பராமரித்து வரும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஜாதிய பாகுபாட்டை ஒரு அரசு அமைப்பே எப்படி ஊக்கப்படுத்த முடியும்? இந்த ஜாதிய வேறுபாடு விரைவில் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும்" என்கிறார்.
சிபிஎம் கட்சியின் நிர்வாகி காயதார் தால் கூறுகையில், "பிராமணர் களுக்கு மட்டுமேயான சுடுகாடு என்பது சட்டவிரோதமானது. அதே மயானத்தில் இதர ஜாதியை சேர்ந்தவர்களும் தங்களது உறவுகளுக்கு இறுதிச் சடங்குகளை செய்யவும் அடக்கம் செய்யவும் அனுமதிக்க வேண்டும்" என வலியுறுத்தி உள்ளார். அத்துடன் "பிராமணர்களுக்கு மட்டும் தனி சுடுகாடு என்பது அரசியல் சாசனம் பிற சமூகத்தினருக்கும் வழங்கி இருக்கும் அடிப்படை உரிமைகளை மீறிய ஒன்று. இதை எப்படி அரசாங்கம் அனுமதிக்கிறது" எனவும் கேள்வி எழுப்பி இருக்கிறார். ஒடிசாவின் பிராமணர் சுடுகாடு விவகாரம் சமூக வலைதளங்களிலும் பேசு பொருளாகி இருக்கிறது.
ஸநாதனம் என்பதும் வருணதர்மம் என்பதும் ஒன்றே என்று மறைந்த காஞ்சி மூத்த சங்கராச்சாரியார் மறைந்த சந்திரசேகரேந்திர சரஸ்வதி தனது தெய்வத்தின் குரலில் கூறுகிறார். (முதல் பாகம் - பக்கம் 282).
பிறப்பின் அடிப்படையில் திணிக்கப்பட்ட ஜாதி - செத்த பின்கூட சுடுகாட்டிலும் உயிர் பிழைக்கிறது என்பதை விடக் கேவலம் என்பது உண்டா?
மின்சார சுடுகாடு இந்து மதத்துக்கு விரோதம் என்று சொன்னவரும் காஞ்சி சங்கராச்சாரியாரே!
"எல்லா ஜாதியினருக்கும் ஒரே சுடுகாடு இருக்க வேண்டும்" என்ற கருத்தை எதிர்த்தவரும் அவரே! அதற்குச் சங்கராச்சாரியார் கூறிய காரணம் என்ன தெரியுமா?
"எல்லா வகுப்பினரும் ஒரே வகையான எரிப்பு முறையைக் கடைப்பிடிக்காததால் இது முடியாது" ஒன்று என்று கூறினார்.
இதனை அப்பொழுதே 'விடுதலை' (8.3.1982) வெளியிட்டு தன் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது.
"சூத்திரன் இறந்து போனால் ஊருக்குத் தெற்கு பக்கத்திலும், வைசியன் இறந்து போனால் மேற்கு பக்கத்திலும், க்ஷத்திரியன் இறந்து போனால் வடக்குப் பக்கத்திலும் எடுத்துக் கொண்டு போக வேண்டியது." (மனுதர்மம் அத்தியாயம் 5 - சுலோகம் 92) இப்படி கேவலமான மனுதர்மத்தை வரிந்து கட்டிக் கொண்டு பார்ப்பனர்கள் இன்றைக்கும் பாராட்டுகிறார்களே!
இந்த 21ஆம் நூற்றாண்டிலும் சுடுகாட்டில் கூட ஜாதி பேதம் என்றால் இதனைவிட வெட்கக் கேடு வேறு ஒன்று உண்டா?
"ஜாதி இருக்கும் நாட்டில் உண்மையான சுதந்திரம் இருக்குமா? உண்மையான சுதந்திரம் இருக்கும் நாட்டில் ஜாதி இருக்கலாமா - இருக்கத்தான் முடியுமா?" என்ற தந்தை பெரியாரின் கேள்விக்கு இதுவரை விடை உண்டா?
இந்து ராஜ்ஜியம் அமைப்போம் என்றும், இந்தியாவில் ஒரே மதம் - அது இந்து மதம் என்றும் கூச்சல் போடும் ஒரு கூட்டம் ஆட்சி அதிகார பீடத்தில் இருப்பதை அனுமதிக்கலாமா?
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் உச்சி முடி சுளீர் என்று சுண்டி இழுக்க ஒரு கேள்வியை எழுப்பினார்.
"ஒரே மதம், ஒரே கலாச்சாரம் என்று குரல் எழுப்புபவர்கள் ஒரே ஜாதி தான் - வேறு ஜாதி எல்லாம் கிடையாது என்று சட்டம் செய்யத் தயாரா?" என்று கேட்டாரே - இதுவரை பதில் உண்டா?
ஜாதி இருக்கும் வரை சமத்துவம் சமதர்மம் மலர முடியுமா?
"பொதுவுடைமையோடு பொது உரிமை முக்கியம்" என்ற தந்தை பெரியாரின் கூற்றைக் கூர்மையாகக் கருத்தூன்றிக் கணித்தால்தான் இதில் அடங்கியுள்ள ஆழமான பொருள் புரியும் - விளங்கும்.
No comments:
Post a Comment