இலவசமோ - இலவசம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, November 16, 2023

இலவசமோ - இலவசம்!

தமிழ்நாட்டில் தி.மு.க. இலவசங்களை அறிவித்து ஆட்சியைப் பிடித்துள்ளது. இலவசங்களால் நாடு நாசமாகப் போகிறது என்று  ஊளையிட்ட பிஜேபி களின் நிலை என்ன? மத்திய பிரதேசத்தில் நடப்பது என்ன?

மத்திய பிரதேச மாநில சட்டமன்ற தேர் தலையொட்டி பா.ஜ.க. தேர்தல் அறிக்கை வெளி யிட்டுள்ளது. அதில் இலவச வாக்குறுதிகளை மழை போல் பொழிந்துள்ளது -  சமையல் எரிவாயு உருளை ரூ.450க்கு வழங்கப்படுமாம். பெண்களுக்கு முதுநிலைப் பட்டப்படிப்பு வரை இலவச கல்வி வழங்கப்படும் என்பன உள்பட பல திட்டங்களை பாஜக அறிவித்துள்ளது. 

வேலையில்லாதவர்களுக்கு மாதா மாதம் பணம், பெண்களுக்குப் பணம் என பட்டியல் நீள்கிறது. மத்தியப் பிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதலமைச்சராக சிவ்ராஜ் சிங் சவுகான் உள்ளார். இந்நிலையில் நாளை 17ஆம் தேதி ஒரே கட்டமாக மத்திய பிரதேச மாநிலத்துக்கு சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் பதிவாகும் ஓட்டுகள் டிசம்பர் 3ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

மொத்தம் 230 தொகுதிகள் உள்ள நிலையில், ஒரு கட்சி ஆட்சியை பிடிக்க 116 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். அங்கு காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே நேரடியாக போட்டி நிலவுகிறது. இதனால் தற்போது மத்திய பிரதேசத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. காங்கிரஸ், பாஜகவின் மேலிட தலைவர்கள் மாநில தலைவர்களுடன் சேர்ந்து தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தான் சட்டமன்ற தேர்தலையொட்டி பாஜக சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் மக்களுக்கு ஏராளமான இலவச திட்டங்கள் அறிவிக்கப் பட்டுள்ளன. அதன்படி மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சிக்கு வரும்போது லட்லி பாக்னா மற்றும் பி.எம். உஜ்வாலா திட்டங்களின் கீழ் மக்களுக்கு ரூ.450க்கு சமையல் எரிவாயு உருளை வழங்கப்படும். விவசாயிகள் நலன்கருதி அரசு சார்பில் கோதுமை குவிண்டாலுக்கு ரூ.2,700க்கு கொள்முதல் செய்யப்படும். நெல் குவிண்டாலுக்கு ரூ.3,100க்கு அரசு சார்பில் கொள்முதல் செய்யப்படும். மாநிலத்தில் உள்ள அனைத்துப் பழங்குடியினர் வாழும் பகுதிகளிலும் ஏகலைவா வித்யாலயாஸ் பள்ளிகள் அமைக்கப்படும். அதோடு மருத்துவக் கல்லூரிகளும் கட்டப்படும். ஏழைப் பெண் குழந்தைகளுக்கு முதுகலை பட்டப்படிப்பு வரை இலவச கல்வி அளிக்கப்படும். அதோடு ஏழைக் குடும்பங்களை சேர்ந்த மாணவர்களுக்கு 12ஆம் வகுப்பு வரை இலவச கல்வி அளிக்கப்படும்.  மேலும் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர் களுக்கு (தமிழ்நாட்டைப் பார்த்து நகல் எடுத்து) மதிய உணவுடன் சத்தான காலை உணவும் வழங்கப்படும். இதுதவிர இந்திய தொழில்நுட்பக் கழகம் (அய்.அய்.டி.) போன்று மத்திய பிரதேச தொழில்நுட்பக் கழகம் மற்றும் எய்ம்ஸ் போன்று மத்தியப் பிரதேச மருத்துவ அறிவியல் நிறுவனம் நிறுவப்படும்.

பழங்குடியின மக்களை மேம்படுத்தும் வகையில் ரூ.3 லட்சம் கோடிக்கு நிதி நிலைஅறிக்கையில் திட்டங்கள் அறிவிக்கப்படும். பிரதமர் மோடியின் வீடு வழங்கும் திட்டத்தைப் போல் முதலமைச்சர் ஜன் ஆவாஸ் யோஜனா திட்டம் மூலம் வீடில்லா ஏழைகளுக்கு வீடு வழங்கப்படும் என்பன உள்ளிட்ட பல வாக்குறுதிகள் அள்ளி விடப்பட்டுள்ளன. மோடி ஏற்கெனவே கொடுத்த வாக்குறுதிகள் என்னாச்சு?   

ஆனால், இதற்கு எல்லாம் மக்கள் மயங்கிவிட மாட்டார்கள். காரணம் 10 ஆண்டுகளாக அங்கு பாஜக வெற்றி பெற்று ஆட்சியில் இருந்தது. 2019 ஆம் ஆண்டு காங்கிரஸ் வெற்றி பெற்றது - ஆனால் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களை அதிக விலைபேசி வாங்கி மீண்டும் சிவராஜ்சிங் சவான் பின்வாசல் வழியாக ஆட்சிக்கு வந்தார்.  

இவர் ஆட்சிக் காலத்தில்தான் மருத்துவக் கல்வி 'வியாபம்' ஊழல் பிரசித்தி பெற்றது. ஆளுநர் மகன் உள்பட  பலரும் தற்கொலை செய்து கொண்டனர்.

இவர்கள் மீண்டும் வெளியிட்டுள்ள வாக்குறுதி பட்டியலை நிறைவேற்றுவார்கள் என்ற நம்பிக்கை மக்கள் மனதில் சுத்தமாக போய்விட்டது.

எத்தனை நாள்களுக்குத் தான் ஊரை ஏமாற்ற முடியும்? ஏமாந்த மக்கள் இப்பொழுது பதிலடி கொடுப்பார்கள் என்பதில் அய்யமில்லை.


No comments:

Post a Comment