சென்னை அய்.அய்.டி. மாணவர் குறை தீர்ப்பாளராக மேனாள் டி.ஜி.பி. திலகவதி நியமனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, November 9, 2023

சென்னை அய்.அய்.டி. மாணவர் குறை தீர்ப்பாளராக மேனாள் டி.ஜி.பி. திலகவதி நியமனம்

சென்னை, நவ. 9 - சென்னை அய்.அய்.டியில் மாணவர்களுக்கு ஏற்படும் குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில் குறைதீர்ப்பாளராக ஓய்வு பெற்ற அய்.பி.எஸ். அதிகாரி திலகவதி நியமனம் செய்யப் பட்டுள்ளார். மேலும், வளாகத்தில் மாணவர்கள், ஆசிரி யர்களுடன் இணைந்து அவர்களின் குறைகளைத் தீர்க்கும் பணியில் ஈடுபடுவார் எனவும் அறிவிக்கப் பட்டுள்ளது.

சென்னை அய்.அய்.டியில் கரோனா தொற்றுக்குப் பின்னர் மாணவர்கள் மன அழுத்தத்தின் காரணமாகத் தற்கொலைகள் செய்து கொள்வது நிகழ்ந்து வந்தது. மேலும், கரோனா காலத்தில் சரியாகப் படிக்க முடியாத மாணவர்கள் வேலைக்குச் செல்வதற்கான முன் நேர் காணலில் தேர்வாக முடியாத சில சூழல் காரணமாகவும் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தில் மன அழுத்தத்துடன் மாணவர்கள் இருப்பதாகவும் கண்டறியப்பட்டன.

மேலும், மாணவர்களுக்கு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியும் ஆசிரியர் மாணவர்களிடையே சரியான புரிதல் இல்லாதது போன்றவை காரணங்களாக மாண வர்கள் மன அழுத்தத்திற்குள்ளானதாகக் கண்டறியப் பட்டது. அதனைத் தொடர்ந்து, சென்னை அய்.அய்.டி சார்பில் மாணவர்களின் மன அழுத்தத்தை போக்கு வதற்கு மன நல ஆலோசகர்கள் மூலம் ஆலோசனை வழங்கப்பட்டன. அதுமட்டுமின்றி, மாணவர்கள் தொடர் தற்கொலையைத் தடுப்பதற்கு ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி திலகவதி தலைமையில் குழு அமைக்கப் பட்டது. அந்த குழு மாணவர்களிடம் தனிப்பட்ட முறையில் பல்வேறு தகவல்களைத் திரட்டியது. அதனுடைய அறிக்கையைச் சென்னை அய்.அய்.டிக்கு அளித்தது.

இந்த நிலையில் சென்னை அய்.அய்.டியில் மாணவர்களுக்கு ஏற்படும் குறைகளைத் தீர்ப்பதற்கு ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி திலகவதி நியமனம் செய்யப்பட்டுள்ளார் எனச் சென்னை அய்.அய்.டி நிர்வாகம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு காவல்துறையின் மேனாள் காவல்துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) ஜி.திலகவதி, 'மாணவர் குறை தீர்ப்பு' ஆலோசகராக (முறைமன்ற நடுவர்) நியமிக்கப் பட்டுள்ளார்.

நவம்பர் 7, 2023 முதல் மாணவர்களின் நலன் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதுடன், பாதுகாப்பான வளாக சூழலைப் பராமரிப்பதில் நிறுவனத்தின் அர்ப் பணிப்பை ‘மாணவர் குறைதீர்ப்பு’ நியமனம் குறிக்கிறது. மாணவர்களின் குறைகள், பாதுகாப்பு மற்றும் ஒழுக்கம் தொடர்பான விஷயங்களைக் கண்காணிப்பார் என்றும், மாணவர்களின் கல்வி மற்றும் தனிப்பட்ட வளர்ச்சிக்கு ஆதரவான சூழலை உறுதிசெய்து, அய்.அய்.டியின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment