மேற்கு வங்கத்தின் கிருஷ்ணா நகர் தொகுதி எம்.பி. மஹுவா மொய்த்ரா. முதலமைச்சர் மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். பிரதமர் மோடி மற்றும் அதானி குழுமத்தை குறிவைத்து நாடாளுமன்றத்தில் கேள்விகள் எழுப்ப தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தானிடம், லஞ்சம் வாங்கியதாக மொய்த்ரா மீது பாஜ எம்.பி. நிஷி காந்த் துபே புகார் கூறினார். இதுபற்றி நாடாளுமன்ற ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரிக்க மக்களவை தலைவர் ஓம் பிர்லா உத்தரவிட்டார்.
ஜார்க்கண்ட் மாநிலம், கோடா தொகுதியின் பா.ஜ.க எம்.பி. திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.யை பணம் மற்றும் பரிசுகளைப் பெற்றுக்கொண்டு நாடாளுமன்றத்தில் கேள்விகள் கேட்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இருந்து இடை நீக்கம் செய்ய வேண்டும் மற்றும் அவர் மீது குற்ற வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று மக்களவை தலைவர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
திரிணாமுல் காட்சி எம்.பி., சமீபத்தில் 61 கேள்விகளைக் கொண்ட பட்டியலை கொடுத்துள்ளார். இந்தக் கேள்விகளில்
50 கேள்விகள் தர்ஷன் ஹிரானந்தனியின் வணிக நலன்களைப் பாதுகாப்பதற்கும் ஊக்குவிப்பதற்கும் மட்டுமே தொடர்புடையவை என்று குற்றம் சாட்டப்படுகிறது. இந்தக் கேள்விகள் அதானி குழுமத்தைப் பற்றி கேட்கப்பட்டவை.
ஹிரானந்தனி குழுமம் அதானி குழுமத்தின் போட்டியாளராகும். பல வணிக ஒப்பந்தங்களில் அதானி குழுமத்துடன் போட்டி போட்டு வருகிறது.
ஹிரானந்தனி குழுமம் பி.ஜே.பி. எம்.பி.யின் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது. மேலும், தனது கவனம் வணிகத்தில் மட்டுமே உள்ளது என்றும், அரசியலுடன் தனக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்றும் கூறியுள்ளது.
ஹிரானந்தனி குழுமம், தேசிய நலனை அடிப்படையாகக் கொண்டு அரசாங்கத்துடன் எப்போதும் நெருக்கமாகப் பணியாற்றி வந்துள்ளதாகவும், இனியும் தொடர்ந்து பணியாற்றும் என்றும் தெரிவித்துள்ளது.
இந்தக் குழுமம், நாடு முழுவதும் பல ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் திட்டங்களில் செயல்பட்டு வருகிறது. மேலும், தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள், வணிக மற்றும் குடியிருப்புத் திட்டங்களையும் உருவாக்கி வருகிறது.
பா.ஜ.க. எம்.பி.யின் குற்றச்சாட்டுகளுக்கு திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி., பதிலடி கொடுத்துள்ளார்.
முதலில் தவறான அறிக்கை தாக்கல் செய்தவர் மீதான விசாரணையை மக்களவைத் தலைவர் முடித்துவிட்டு, பின்னர் தனக்கு எதிராக விசாரணைக் குழு அமைக்க வேண்டும் என்று தனது சமூக ஊடக பக்கத்தில் எழுதியுள்ளார்; திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி., தமது வலைதளத்திலும் பதிவிட்டுள்ளார்.
"மனுவில் பொய் கூறி, போலியான ஆவணங்களைச் சமர்ப் பிப்பது ஒரு குற்றம். இது குறித்து எப்போது நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும், வெவ்வேறு நபர்களுக்கு வெவ்வேறு விதிகளா என்பதையும் பார்க்க காத்திருப்போம்," என்று குறிப்பிட் டுள்ளார்.
கடந்த 2019ஆம் ஆண்டு, தனது கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து சர்ச்சைக்குரிய கருத்துகளைகூறி பிஜேபி எம்.பி., நிஷிகாந்த் துபே பரபரப்பை ஏற்படுத்தியவர் ஆவார்.
அப்போது, தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசும்போது, பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்கள் திருடர்களாகவோ, கொள்ளையர் களாகவோ இருந்தாலும்கூட அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று கூறினார்.
ஜார்க்கண்டில் தனது கட்சித் தொண்டர்களிடம் பேசிய அவர், "பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராக எவரை நிறுத்தினாலும், அவர் மாற்றுத் திறனாளியாக இருந்தாலும், திருடனாக இருந்தாலும், கொள்ளையனாக இருந்தாலும், அவருக்கு ஆதரவளிக்க வேண்டும். கட்சியின் மத்திய தலைமையான அமித்ஷா, பிரதமர் மோடி, ரகுபர் தாஸ் ஆகியோரை நாம் நம்ப வேண்டும். அவர்கள் எந்த நபரைத் தேர்வு செய்தாலும், அது சரியாகத்தான் இருக்கும்," என்று கூறினார்.
கடந்த 2005ஆம் ஆண்டு, செய்தி இணையதளமான கோப்ரா போஸ்ட் மற்றும் ஒரு தனியார் செய்தி சேனல் ஒரு ரகசிய ஆய்வு நடத்தி, நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க பணம் பெறப்படுவதை வெளிப்படுத்தியது. இந்த ரகசிய ஆய்வு 12.12.2005 அன்று ஒளிபரப்பப்பட்டது.
நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க பணம் வாங்கிய 11 உறுப்பினர்களைப் பற்றியது அது. இந்த 11 உறுப்பினர்களில் 6 பேர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்கள். மூவர் பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்தவர்கள். ராஷ்ட்ரிய ஜனதா தளத்தில் இருந்தும் காங்கிரஸில் இருந்தும் ஒருவர் இந்தப் பட்டியலில் இருந்தனர்.
கேள்வி கேட்க பணம் பெற்ற 10 உறுப்பினர்களை நாடாளுமன்றம் நீக்கியது. இவர்களில் ஒரு உறுப்பினர் மாநிலங்களவையைச் சேர்ந்தவர். அவரும் நீக்கப்பட்டார்.
இந்த விவகாரம் வெளிவந்தபோது, அனைத்துக் கட்சிகளும் உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரின. ஆனால் நடவடிக்கை எடுக்கப்பட்டபோது, இது 'கங்காரு நீதிமன்றத்தின்' முடிவு என்று கூறி பாரதிய ஜனதா கட்சி புறக்கணித்தது.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 11 எம்பிக்கள் விவரம் வருமாறு,
சதர்பால் சிங் லோதா, அன்னா சாகேப், எம் கே பாட்டீல், சந்திர பிரதாப் சிங், பிரதீப் காந்தி, சுரேஷ் சண்டேல், ஒய் ஜி மகாஜன் ஆகிய ஆறு பேரும் பாஜகவைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
மனோஜ் குமார் (ஆர்ஜேடி), ராம் சேவக் சிங் (காங்கிரஸ்), நரேந்தர் குமார் குஷ்வாஹா. (பகுஜன் சமாஜ் கட்சி), லால் சந்திர கோல் (பகுஜன் சமாஜ் கட்சி), ராஜா ராம்பால் (பகுஜன் சமாஜ் கட்சி).
இந்த நிலையில் உள்ளவர்கள் தான் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மீது குற்றப் பத்திரிக்கை படிக்கின்றார்கள் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
எந்தக் கட்சியினராக இருந்தாலும் இத்தகைய கீழ்த்தர செயல்கள் கண்டிக்கப்படவும், தண்டிக்கப்படவும் தான் வேண்டும்.
No comments:
Post a Comment