பா.ஜ.க.வுக்கு ஏற்பட்ட தேர்தல் பயம்: எதிர்க்கட்சிக்காரர்களின் தொலைப்பேசியை ஒட்டு கேட்கும் பா.ஜ.க. - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, November 2, 2023

பா.ஜ.க.வுக்கு ஏற்பட்ட தேர்தல் பயம்: எதிர்க்கட்சிக்காரர்களின் தொலைப்பேசியை ஒட்டு கேட்கும் பா.ஜ.க. - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை நவ.2  ‘‘விரைவில் 5 மாநில தேர்தல் வரவிருக்கிறது. 5 மாநிலங்களிலும் பாஜக தோல்வியை தழுவப்போகிறது என்ற செய்தி தான், நமக்குத் தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது. அதனால், அவர்களுக்கு அச்சம் வந்துவிட்டது. அந்த அச்சத்தின் காரண மாகத்தான் எதிர்க்கட்சித் தலைவர்களின் செல்போன்களை ஒட்டுக்கேட்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறன்றனர்'' என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

சென்னை திருவான்மியூரில், பூவிருந்த வல்லி திமுக சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி இல்லத் திருமணவிழா தமிழ் நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று (1.11.2023) நடைபெற்றது.  இத்திருமண விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "நாம் ஒரு நெருக்கடி நிலையைச் சந்தித்தோம். நாட்டுக்கே நெருக்கடி நிலை வந்தது, எமர் ஜென்சி. அந்த நேரத்தில் எமர்ஜென்சியை நாம் எதிர்த்தோம். டில்லியில் இருந்து தலைவர் கலைஞருக்கு தூதுவர்கள் வந்தனர். மறைந்த பிரதமர் இந்திராகாந்தி, கொண்டு வந்த அவசர நிலையை, எமர்ஜென்சியை நீங்கள் ஆதரிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் எதிர்க்கக்கூடாது. அதை மீறி எதிர்த்தால், உங்களுடைய ஆட்சி கவிழ்க்கப்படும். எமர்ஜென்சியை எதிர்க் காமல் இருந்தால், இன்னும் சில காலம் உங் களுடைய ஆட்சி தொடரும், என்று அந்தத் தூதுவர்கள், கலைஞரிடம் கோபாலபுரம் இல்லத்தில் வந்து கூறினார்கள். அப்போது நான், துரைமுருகன், டி.ஆர்.பாலு போன்ற வர்கள் எல்லாம், பக்கத்தில் இருந்தோம். அப்போது கலைஞர் ஒரு வார்த்தையைக் கூறினார், ‘‘எந்தக் காலத்திலும் எந்தச் சூழ் நிலையிலும், நாட்டுக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய நெருக்கடி நிலையை நாங்கள் ஆதரிக்க மாட்டோம். நாங்கள் ஜனநாயகத்தைத்தான் நம்பியிருக்கிறோம். ஆட்சி அல்ல, எங்கள் உயிரே போனாலும், நாங்கள் இதற்கு சம் மதிக்கமாட்டோம்'' என்று டில்லியில் இருந்து வந்த தூதுவர்களிடத்தில் சொல்லி அனுப் பினார். இது வரலாறு. 

அடுத்தநாள், சென்னை கடற்கரையில் ஒரு மாபெரும் கூட்டத்தைத் திரட்டி, அந்த மக்கள் கூட்டத்தில் கலைஞர் ஒரு தீர் மானத்தை முன்மொழிந்தார். பிரதமர் இந்திரா காந்தி, கொண்டு வந்திருக்கும் நெருக்கடி நிலையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். எமர்ஜென்சியை ரத்து செய்ய வேண்டும். ‘மிசா' சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் வைத்திருக்கும் தலைவர் களை எல்லாம் உடனடியாக விடுதலை செய்யவேண்டும். அந்த தீர்மானத்தை கலைஞர்முன்மொழிய, அங்கு குழுமியிருந்த மக்கள் அனைவரையும் எழுந்து நிற்கவைத்து அந்தத் தீர்மானத்தை வழிமொழிய வைத்தார். தீர்மானம் நிறைவேற்றிய அடுத்த விநாடி, தமிழ்நாட்டில் நடந்துகொண்டிருந்த திமுக ஆட்சி கலைக்கப்படுகிறது. அதன்பின் திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த வர்கள் அனைவரும் கைது செய்யப்படு கிறார்கள். அதன்பின் நடந்தவை எல்லாம் உங்களுக்கு நன்றாகத் தெரியும். அந்த சமயத்தில் திமுக வேட்டி கட்டவே பலரும் அச்சமடைந்தனர்.

இன்று நாட்டில் இருக்கக்கூடிய நிலைமைகள் உங்களுக்கு நன்றாகத் தெரியும். ஜனநாயகம் பாதுகாக்கப்படுமா?, மக்களாட்சி நீடிக்குமா? என்ற நிலையில்தான் இன்றைக்கு சூழல் அமைந்திருக்கிறது. எதிர்க்கட்சிகளை மிரட்டுவது, ஒன்றியத்தில் இருக்கும் பாஜக அரசு, தனக்கு எதிராக யார் எந்த கருத்தைக் கூறினாலும், அவர்களை மிரட்டுவது அச் சுறுத்துகிறது. அதற்காக, வருமான வரித்துறை, அமலாக்கத் துறையை பயன்படுத்துகின்றனர். இன்னும் சொல்ல வேண்டும் என்றால், தற்போது அலைபேசி ஒட்டுக்கேட்கும் முறை யைக் கையாண்டுள்ளனர். ஒரு பெரிய நிறு வனமான ஆப்பிள் நிறுவனத்தைச் சேர்ந்த வர்களே எச்சரித்துள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எல்லாம் அவர்களே கடிதம் எழுதியுள்ளனர்.

இப்படி ஒரு செய்தி வந்தவுடன், ஒன்றிய அமைச்சர் இதுகுறித்து விசாரிக்க விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்று ஒரு அறிவிப்பு வெளியிடுகிறார். இது என்ன கேலிக்கூத்து. செய்வதை எல்லாம் செய்து விட்டு, அதுகுறித்து விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என சொல்லும் அளவுக்கு, நாட்டில் இன்றைக்கு கொடுமைகளை சந்தித்துக் கொண்டிருக்கிறோம். அவர்களைப் பொறுத்தவரை தோல்வி பயம் வந்துவிட்டது. ‘இந்தியா' கூட்டணி அவர்கள் எதிர்பாராத வகையில் அமைந்து, மக்களிடத்தில் மோடி ஆட்சியின் கொடுமைகள், அக்கிரமங்கள், அநியாயங்கள், அவலங்களை எடுத்துக்கூறி வருகிறோம். விரைவில் 5 மாநில தேர்தல் வரவிருக்கிறது.

5 மாநிலங்களிலும் பாஜக தோல்வியை தழுவப்போகிறது என்ற செய்திதான், நமக்கு தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது. அத னால், அவர்களுக்கு அச்சம் வந்துவிட்டது. அந்த அச்சத்தின் காரணமாகத்தான் இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதையெல்லாம் முறியடித்து நாட்டுக்கு ஒரு நல்ல விமோசனத்தை ஏற்படுத்தி தருவதற்கு, இந்தியாவைக் காப்பற்றுவதற்கு, இண்டியா கூட்டணிக்கு வரும் மக்களவைத் தேர்தலில் மிக சிறப்பான வெற்றியைத் தேடித் தர வேண்டும்'' என்று முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் கூறினார்.

No comments:

Post a Comment