இவர்களைப் போய் பதவி வேட்டைக்காரர்கள் என்று சொல்கிறார்கள்-
அது பெரிய பித்தலாட்டம் - உண்மைக்கு மாறானது!
நீதிக்கட்சியின் 107 ஆம் ஆண்டு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் விளக்கவுரைசென்னை, நவ.22 நீதிக்கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் நேரத்தில் சர் பிட்டி தியாகராயர் அவர்களை ‘பிரீமியராக’ பதவியேற்கச் சொன்னார்கள்; அதை அவர் மறுத்து வேறொருவருக்கு அந்தப் பதவியை கொடுக்கச் சொன்னார். ஏழாண்டுகளுக்கு மேலாக நீதிக்கட்சிக்குத் தலைவராக இருந்த தந்தை பெரியாரை, வெள்ளைக்கார ஆளுநர், ‘‘நீங்கள்தான் முதலமைச்சராக வேண்டும்‘’ என்று அழைத்தார்; அதை தந்தை பெரியார் மறுக்கிறார். பதவியேற்க மறுத்த இரண்டு தலைவர்கள் உண்டென் றால், ஒருவர் சர்.பிட்டி தியாகராயர். இன்னொருவர் தந்தை பெரியார். இவர்கள் போன்று வரலாற்றில் வேறு யாரையும் பார்க்க முடியாது. இவர்களைப் போய் பதவி வேட்டைக்காரர்கள் என்று சொல்கிறார்கள். அது எவ்வளவு பெரிய பித்தலாட்டம் - உண்மைக்கு மாறான வரலாறு என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
நீதிக்கட்சியின் 107 ஆம் ஆண்டு விழா!
கடந்த 20.11.2023 மாலை சென்னை பெரியார் திடலில் உள்ள அன்னை மணியம்மையார் அரங்கத்தில், திராவிடர் கழகம் மற்றும் புதுமை இலக்கியத் தென்றல் சார்பில் நடைபெற்ற ‘‘நீதிக்கட்சியின் 107 ஆம் ஆண்டு விழா''வில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையேற்று சிறப் புரையாற்றினார்.
அவரது சிறப்புரை வருமாறு:
எல்லையற்ற மகிழ்ச்சியடைகிறேன்!
மிகுந்த எழுச்சியோடும், மகிழ்ச்சியோடும் நடை பெறக்கூடிய நீதிக்கட்சியின் 107 ஆம் ஆண்டு விழா வினைத் தொடங்கி வைப்பதில் எல்லையற்ற மகிழ்ச்சியை அடைகிறேன்.
இந்நிகழ்ச்சிக்கு வந்திருக்கக் கூடிய உங்கள் அனை வருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நம்முடைய இனத்தினுடைய மாட்சி - மீட்சி!
சில செய்திகளை மற்றவர்கள் அறிந்துகொள்ள இதுவரை வாய்ப்பு வந்திருக்காது. அல்லது இப்பொழுது இன்றைய காலகட்டத்தில் தெரிவிக்கப்படவேண்டிய மிக முக்கியமான செய்திகளாக அவை அமையும். நீதிக்கட்சியைப் பொறுத்தவரையில், இன்றைய ஆட்சி என்பது அதனுடைய நீட்சி. நீட்சி மட்டுமல்ல, நம்முடைய இனத்தினுடைய மாட்சியும், மீட்சியும் அதுதான்.
அந்த அளவிற்குச் சிறப்பான வகையில் இருக்கும் பொழுது, நம்முடைய வேர்கள் எப்படிப்பட்டவை என்பதை விழுதுகளுக்குத் தெரிவிக்கப்படவேண்டும்.
நீதிக்கட்சிதான் திராவிடர் ஆட்சிக்கு
அடிக்கல் நாட்டியது!
இது ஒரு சம்பிரதாயமான விழா அல்ல; அல்லது சடங்குக்காக 107 ஆம் ஆண்டு விழா என்று கணக்கு சொல்வதற்காக அல்ல. மாறாக, கணக்குப் பார்ப்பதற்கான விழா; கணக்குச் சொல்லுவதற்கான விழா அல்ல! எப்படி இந்த சமுதாயம் வளர்ந்திருக்கிறது என்று சொல்லுவதற் காகவே இந்த விழா. அப்படி நாம் சொல்லும் பொழுது நிறைய செய்திகளை சொல்லவேண்டும்.
நீதிக்கட்சியின் 107 ஆம் ஆண்டு விழாவினை, இன்றைக்கு நாம் சிறிய அரங்கத்தில் நடத் தினாலும்கூட, நீதிக்கட்சிதான் திராவிடர் ஆட்சிக்கு அடிக்கல் நாட்டியது.
தமிழ்நாடு முழுக்கக் கொண்டாடவேண்டும்; தென்னாடு முழுக்க கொண்டாட வேண்டும்!
ஆகவே, வருகிற ஆண்டிலிருந்து தமிழ்நாடு முழுக்கக் கொண்டாடவேண்டும்; அடுத்தகட்டமாக தென்னாடு முழுக்க கொண்டாட வேண்டும். அப்படி கொண்டாடும்பொழுது கருத்தரங்கங்களை இணைத்து நடத்தவேண்டும்.
ஒவ்வொறு துறையிலும் நீதிக்கட்சியினுடைய தாக்கம் எப்படிப்பட்டது? அது ஏற்படுத்திய மாற்றம் எவ்வளவு வலிமையானது? என்பதை எடுத்துச் சொல்லவேண்டியது நமது கடமை.
இதில் என்ன ஒரு சங்கடம் என்றால், மழைக்காலம் என்பதுதான். தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாளானாலும் (செப்டம்பர் 17) மழைக்காலம்தான். நமக்குப் பருவம் முக்கியமல்ல.
குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து
மானங் கருதக் கெடும் என்ற குறள்.
அய்யா அவர்கள் இக்குறளை அடிக்கடி சொல் வதுபோன்று, அதன்படியே இந்த அரங்கத்தில் விழா விற்கான ஏற்பாடுகளைச் செய்தோம்.
இங்கே வந்திருக்கின்ற தோழர்கள் நிறைய செய்தி களைச் சொல்லவிருக்கிறார்கள். இருந்தாலும், எல்லா வற்றையும் தெரிந்துகொள்ள முடியாது. இந்நிகழ்ச்சிக்குத் தலைமை வகிக்கும் அய்யா மீனாட்சி சுந்தரம் அவர்கள் சொன்னார், அதை கேட்டவுடன் எனக்கு வியப்பாக இருந்தது.
புத்தகங்களைத் தேடிப் பிடித்து
நாங்கள் வெளியிட்டு இருக்கின்றோம்!
இளைஞர்களிடம் பல செய்திகள் போய்ச் சென்ற டைய வேண்டும் என்பதற்காகத்தான், நீதிக்கட்சியைப் பற்றி இதுவரை இல்லாத புத்தகங்களைத் தேடிப் பிடித்து நாங்கள் வெளியிட்டு இருக்கின்றோம்.
அவற்றைக் கண்டுபிடிப்பதற்கே ராஜா சர் முத்தையா செட்டியாரிடம் (அண்ணாமலைப் பல்கலைக் கழக இணைவேந்தர்) சென்று சொன்னோம். அவர் அந்நூல்களை நம்மிடம் வழங்கிவிட்டார். அப்படி வழங்கியதைத்தான் நாம் மீண்டும் பெரியார் ஆவணக் காப்பகத்தின் சார்பில் வெளியிட்டு இருக்கிறோம்.
பெரிய பெரிய புத்தகம் என்றால், நம்மவர்களுக்கு வியப்பு, மலைப்பு. வாங்கிவிடுவார்கள்; ஆனால், படிக்கமாட்டார்கள். அதனால்தான், நீதிக்கட்சித் தலை வர்களைப்பற்றி, திராவிடர் ஆட்சியைப்பற்றி, சிறிய அளவிற்கு நூல்களைக் கொண்டு வந்தோம்.
நீதிக்கட்சி, நீதிக்கட்சி என்று சொன்னால், அது ஏதோ ஒரு கட்சி போன்று தோன்றலாம். அதுதான் திராவிடர் ஆட்சி. ஏனென்று கேட்டால், திராவிடர் கழகம் என்று 1944 ஆம் ஆண்டு தந்தை பெரியார் அவர்கள் பெயர் மாற்றினார்.
எனக்கு ஒரு பெரிய மகிழ்ச்சி என்னவென்று சொன் னால், அந்த விழாவில் கலந்துகொள்ளக் கூடிய வாய்ப்பினை அளித்த இயற்கை இன்றும் எனக்கு அந்த வாய்ப்பை அளித்திருக்கிறது.
இரண்டு கொடிகளை ஏந்தி
ஊர்வலம் போனோம்!
எங்களுடைய ஆசிரியர் திராவிடமணி அவர்கள் பொதுக்கூட்டம் நடத்தும்பொழுதும், மாணவர்களாகிய நாங்கள்தான் கொடிகளையேந்தி கொண்டு ஊர்வல மாகச் செல்வோம். எவ்வளவு பேர் என்பது முக்கியமல்ல; 15 பேர், 30 பேர் ஆக இருப்போம். கடலூரில் முழக்கங் களிட்டு ஊர்வலமாகச் செல்லுவோம். அப்பொழுது இரண்டு கொடிகளைப் பிடித்துக் கொண்டு போவோம். ஒன்று சிவப்புக் கொடி. அந்த சிவப்பில் வெள்ளை வண்ணத்தில் தராசு இருக்கும். அதுதான் நீதிக்கட்சி கொடி. இன்னொரு கொடி புலி வில் கயல் சின்னங்கள் பொருத்தப்பட்ட கொடியாகும். ஏனென்றால், அதற்குப் பிறகுதான் திராவிடர் கழகக் கொடி உருவானது; திராவிடர் கழகம் என்ற பெயர் உருவானது.
ஆகவே, அப்படிப்பட்ட சூழலில், 1943 ஆம் ஆண்டு அந்தக் கொடியைப் பிடித்துக்கொண்டு போனோம். அதற்கடுத்தாண்டு மாற்றங்கள் வந்தது என்பது மகிழ்ச் சிக்குரிய செய்தியாகும். அந்த வரலாற்றையெல்லாம் தெரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காகத்தான் சிறு சிறு வெளியீடுகளான இந்த நூல்கள்.
தியாகராயர் அவர்களைப்பற்றிய புத்தகம்!
உதாரணமாகப் பார்த்தீர்களேயானால், நாயர் அவர் களைப்பற்றி புத்தகத்தைத் தோழர் ஒருவர் எழுதியிருக் கிறார். அதேபோன்று தியாகராயர் அவர்களைப்பற்றி எழுதிய தோழரைத் தேடிக் கண்டுபிடித்து, அந்தப் புத்தகத்தை மறுபதிப்பு வெளியிட்டோம்.
தலைவர்களுடைய பெருமைகளைச் சொல்வது என்பது, அவர்களுடைய பெருமைக்காக அல்ல. அந்தத் தலைவர்களுடைய உறுதி, அவர்களுடைய வாழ்க்கை பின்பற்றத்தக்கதாகும்.
‘‘பார்ப்பனரல்லாதார் கொள்கை அறிக்கை!’’
ஆகவே, அப்படிப்பட்ட புத்தகங்கள் இங்கே நிறைய இருக்கின்றன. மறுபடியும் நீதிக்கட்சியினுடைய ‘‘பார்ப் பனரல்லாதார் கொள்கை அறிக்கை'' - இதுதான் நமக்கு அடித்தளம். இதுதான் இந்த இயக்கம் வருவதற்கு மிக முக்கியமான காரணமாகும்.
‘‘திராவிடம்‘’ என்கிற பெயரில்தான்
வெளியிடப்பட்டது
ஆனால், நாயர் அவர்கள் என்ன செய்தார் என்றால், அன்றைய காலகட்டத்தில், ஆங்கிலத்தில் ‘‘ஜஸ்டிஸ்'' என்ற பெயரில் பத்திரிகை நடத்தினார்கள். அதை தமிழில் அப்படியே மொழி பெயர்த்து ‘‘நீதி'' என்றில் லாமல் ‘‘திராவிடம்'' என்கிற பெயரில்தான் வெளியிடப் பட்டது. திராவிடப் பண்பாடு முக்கியம் என்று சொன்னார்.
அந்த வரலாற்றைப்பற்றி வெளியிடப்பட்டுள்ள சிறிய புத்தகங்கள் எளிமையான புத்தகங்கள். இதுபோன்ற சிறிய புத்தகங்களை வாங்கிப் பரப்பவேண்டும். பேருந்தில் செல்லும்பொழுது படிக்கலாம்; ரயிலில் போகும்போது படிக்கலாம்.
‘‘நாயரின் இருபெரும் முழக்கங்கள்!’’
‘‘நாயரின் இருபெரும் முழக்கங்கள்'' என்ற புத்தகம். நம்முடைய சென்னை மாநகராட்சி கட்டடத்திற்கு அடுத்து இருக்கிறது விக்டோரியா மகால் - அது இன்றைக்குப் புதுப்பிக்கப்படுகிறது. அதேபோன்று பனகல் அரசரைப்பற்றியும் சிறிய புத்தகம். இன்றைய இளைஞர்கள் இந்தப் புத்தகங்களைப் படித்தால் போதும், பழைய வரலாற்றை எளிதாகத் தெரிந்துகொள்ளலாம்.
காமராஜரை கொள்கை ரீதியாகத்தான்
தந்தை பெரியார் ஆதரித்தார்!
இன்றைய நம்முடைய ‘திராவிட மாடல்' ஆட்சியை ஏன் மிகப்பெரிய அளவிற்கு எதிர்க்கிறார்கள்? காமராஜர் அவர்கள் ஆட்சி காங்கிரஸ் ஆட்சியாக இருந்தாலும், பெரியார் கொள்கைகளை அவர் நடைமுறைப்படுத் தினார் என்றவுடன், பார்ப்பனர்கள் அதனைக் கடுமை யாக எதிர்த்தார்கள்.
காமராஜரை, பெரியார் ஆதரித்தார். ஏன் ஆதரித்தார்? எப்போதும் கொள்கை ரீதியாகத்தான் அவர் ஆதரிப்பார்.
அதற்கடுத்து வந்த அண்ணா அவர்களின் ஆட்சி யையும் பார்ப்பனர்கள் கடுமையாக எதிர்த்தார்கள். அதற்குப் பிறகு கலைஞர் அவர்கள் ஆட்சிக்கு வந்த பொழுது, அண்ணாவைவிட மிகவும் ஆபத்தானவர் கலைஞர் என்று அவருடைய ஆட்சியையும் பார்ப் பனர்கள் எதிர்த்தார்கள்.
கலைஞருடைய ஆட்சியில் அவர் செய்த சாதனை கள் என்பன சாதாரணமானவையல்ல. அதற்கடுத்து, இன்றைக்கு எல்லாவற்றையும் தாண்டி தனித்து நிற்கக்கூடிய அளவிற்கு, வெளிப்படையாகவே ‘திராவிட மாடல்' என்று அறிவித்து இன்று ஆட்சி செய்துவரும் நம்முடைய சமூகநீதிக்கான சரித்திர நாயகர் முதலமைச் சரின் தொடர்ச்சியான சாதனைகள் என்பனவும் சாதாரணமானவையல்ல.
நீதிக்கட்சி ஆட்சியினுடைய
தொடர்ச்சிதான் இவ்வாட்சி!
அண்ணா அவர்கள் சொன்னது எவ்வளவு சரியான வார்த்தை என்பதைப் பாருங்கள்.
‘‘நீங்கள் கட்சியைத் தொடங்கி 10 ஆண்டுகளில் ஆட்சியைப் பிடித்துவிட்டீர்களே?'' என்று செய்தி யாளர்கள் கேட்டனர்.
‘‘10 ஆண்டுகள் அல்ல - எங்கள் பாட்டன் நீதிக்கட்சி ஆட்சியினுடைய தொடர்ச்சிதான் இவ்வாட்சி'' என்று அண்ணா அவர்கள் மிக அழகாக எடுத்துச் சொன்னார்.
மூன்று செய்திகளை உங்களுக்கு எடுத்துச் சொல்ல விருக்கிறேன்.
நீதிக்கட்சியை பதவிக்காக இருக்கின்ற கட்சி என்று பார்ப்பனர்களும், மற்றவர்களும் கொச்சைப்படுத்தி, அக்கட்சியைத் தகர்க்கலாம் என்று நினைத்தார்கள்.
யாரும் செய்யாத காரியத்தை
இரண்டு தலைவர்கள்தான் செய்திருக்கிறார்கள்!
அது எவ்வளவு பொய்யானது என்பதற்கு, இதுவரை யில் யாரும் செய்யாத காரியத்தை இரண்டு தலைவர்கள்தான் செய்திருக்கிறார்கள், நம்முடைய நாட்டில். இந்த வரலாற்றை இன்றைய இளைஞர்கள் தெரிந்துகொள்ளவேண்டும்.
அந்தத் தலைவர்கள் - தந்தை பெரியார் - சர் பிட்டி தியாகராயர் படைத்த மிக முக்கியமான அடிப்படையான வரலாறு. நீதிக்கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது. அப்படி ஆட்சி அமைக்கின்றபொழுது, அதனுடைய தலைவர் சர் பிட்டி தியாகராயர் அவர்களை அழைத்துத் தான் பதவியேற்குமாறு கேட்டுக் கொண்டார்கள். அப் பொழுதெல்லாம் பிரீமியர் என்றுதான் சொல்லுவார்கள். முதலமைச்சர் என்ற வார்த்தை கிடையாது. அப்படி அவரை அந்தப் பதவி தேடி வரும்பொழுது, அவர் ஏற்றுக்கொள்ளவில்லை.
பதவிக்காக அல்ல நீதிக்கட்சியினர் என்பதை இந்த ஒரு நிகழ்வில் இருந்தே தெரிந்துகொள்ளலாம். எனக்கு அந்தப் பிரீமியர் பதவி வேண்டாம்; வேறு யாருக்காவது கொடுங்கள் என்று சொல்லி, இன்னொருவரை அடை யாளம் காட்டினார். சுப்பராயலு பதவியேற்றார். அவர் உடல்நிலை சரியில்லாததால், அந்த இடத்திற்கு பனகல் அரசர் வந்தார்.
அப்படிப்பட்ட அந்த வரலாறு என்பது, சாதாரணமான வரலாறு அல்ல.
அதேபோன்று நீதிக்கட்சித் தலைவராக வேண்டும் என்று தந்தை பெரியாரை எல்லோரும் கேட்டுக்கொண் டார்கள். தந்தை பெரியார் அவர்கள் அதை விரும்ப வில்லை. ஆனாலும், அவரை வற்புறுத்தி, தலைவராக் கினார்கள்.
முதலமைச்சர் பதவியை
ஏற்க மறுத்த தந்தை பெரியார்!
ஏழாண்டுகளுக்கு மேலாக தந்தை பெரியார் அவர்கள் நீதிக்கட்சிக்குத் தலைவராக இருந்தார். அப்பொழுது ஓர் அதிசயமான விஷயம் என்ன வென்றால், அப் பொழுது நீதிக்கட்சிக்குத் தலை வராக இருந்தவரை, வெள்ளைக்கார ஆளுநர், ‘‘நீங்கள்தான் முதலமைச்சராக வேண்டும்'' என்று தந்தை பெரியாரை அழைக்கிறார். அதை தந்தை பெரியார் மறுக்கிறார்.
இராஜகோபாலாச்சாரியாரும் சொல்கிறார், ‘‘நீங்கள் ஏன் தயங்குகிறீர்கள் நாயக்கரே, நானும் உங்கள் கூட வருகிறேன்'' என்று கூறியபோதும், தந்தை பெரியார் அவர்கள் அதனை ஏற்கவில்லை.
ஒருவர் சர்.பிட்டி தியாகராயர்-
இன்னொருவர் தந்தை பெரியார்!
எனவே, ஆட்சித் தலைவராக இருக்கச் சொல்லி கவர்னர் ஜெனரல், வைசிராய், கவர்னர் என வெள்ளைக் காரர்கள் கேட்ட பிறகும், பதவியேற்க மறுத்த இரண்டு தலைவர்கள் இந்தியாவிலேயே உண்டென்றால், ஒருவர் சர்.பிட்டி தியாகராயர். இன்னொருவர் தந்தை பெரியார். இதுபோன்று வரலாற்றில் வேறு யாரையும் பார்க்க முடியாது.
இவர்களைப் போய் பதவி வேட்டைக்காரர்கள் என்று சொல்கிறார்கள். அது எவ்வளவு பெரிய பித்த லாட்டம் - உண்மைக்கு மாறான வரலாறு என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். இங்கே இருக்கின்ற புத்தகங் களைப் படித்தீர்கள் என்றால், நீங்கள் இன்னும் தெளி வாகப் புரிந்துகொள்ளலாம்.
(தொடரும்)
No comments:
Post a Comment