ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பது - இந்தியத் துணைக் கண்டத்தில் முக்கிய இடம் பெற்றுள்ளது. இந்தக் கணக்கெடுப்பின் மூலம் ஜாதிய வேர் ஆழமாகப் பதிந்துள்ள இந்தியாவில் கல்வியில் ஏற்றத் தாழ்வு - பொருளாதார பின்னடைவுகள் (வருண - வர்க்கப் பிரச்சினைகள்) எந்த நிலையில் உள்ளன என்பது தரவுகள்மூலம் வெளிப்படையாகத் தெரிந்து விடும்; பாதிக்கப்பட்ட, பின்னுக்குத் தள்ளப்பட்ட மக்கள் கொதித்து எழுவார்கள் என்ற அச்சமே பிஜேபி - சங்பரிவார்களைப் பிடித்து உலுக்கிக் கொண்டுள்ளது.
'விஜயபாரதம்' என்ற ஆர்.எஸ்.எஸ். வார இதழ் (17.11.2023) "ஜாதிவாரி கணக்கெடுப்பு ஹிந்துக்களைப் பிரிக்கும் சதியே என்று வரிந்துகட்டிக் கொண்டு எழுதுகிறது.
"பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், ஜாதிவாரி கணக்கெடுப்பையும், சமூகநீதியையும் ஒன்றாகச் சேர்த்து ஒரு பிம்பத்தைக் கட்டமைத்துள்ளார். இது நமக்கு ஒன்றும் புதிதல்ல. ஆங்கிலேயர்கள் பிரித்தாளும் சூழ்ச்சியை கையாண்டார்கள். இந்த சூழ்ச்சியின் மறுவடிவம்தான் ஜாதிவாரி கணக்கெடுப்பு. நிதிஷ்குமார் எடுத்துள்ள நடவடிக்கை நாடு முழுவதும் பேசு பொருளாக உள்ளது.
ஜாதிவாரி கணக்கெடுப்பு வாயிலாக பீகாரில் அசாதாரண சூழ்நிலை மேலோங்கி வருகிறது. தேர்தலில் வெற்றி பெறுவதற்காக சமூக நீதி என்ற முலாம் பூசி, ஜாதிவாரி கணக்கெடுப்பை, நிதிஷ்குமார் முதன்மைப் படுத்துகிறார்.
நிதிஷ்குமாரின் கூட்டணியில் அங்கம் வகிக்கும் லாலு பிரசாத் யாதவின் கட்சியும் இதற்கு உறுதுணையாக உள்ளது. அந்தக் கட்சி தொடர்ந்து குடும்ப அரசியலையே நடத்தி வருகிறது. பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு போதிய வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை. கல்வி நிறுவனங்களில் போதுமான இடங்கள் ஒதுக்கப்படவில்லை என்று எவ்வளவு காலம்தான் சொல்லிக் கொண்டிருக்க முடியும்? மத்திய பா.ஜ.க. அரசு பல்வேறு நலத் திட்டங்களை நிறை வேற்றி வருகிறது. இதை நிதிஷ்குமார் போன்றவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. எனவே தான் சமூகநீதி என்ற போர்வையைப் பயன்படுத்தி ஜாதிவாரி கணக்கெடுப்பை ஆயுதமாக பிரயோகிக்க அவர்கள் முற்பட்டுள்ளனர்.
நிதிஷ்குமார் பீகார் முதலமைச்சராக உள்ளார். பீகார் மக்களுக்கு பதில் சொல்ல வேண்டியவர் அவர்தான். ஆனால், அவர் இதை திசை திருப்பப் பார்க்கிறார். மத்திய அரசு மீது பழிபோட்டு சாமர்த்தியமாக தப்பிக்க நிதிஷ் குமார் வகுத்துள்ள வியூகம்தான் இந்த ஜாதிவாரி கணக்கெடுப்பு."என்று ஆர்.எஸ்.எஸ். வார ஏடான விஜயபாரதம் எழுதுகிறது.
ஜாதிவாரி கணக்கெடுப்பு முக்கியமான மக்கள் பிரச்சினையாகக் கிளர்ந்து எழுந்து விட்ட சூழலில் இதில் எதிர் நீச்சல் போட்டு வெற்றி பெற முடியாத நெருக்கடியும் மூச்சுத் திணறலும் ஏற்பட்டு விட்ட ஒரு சூழலில் ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சர் அமித்ஷா அந்தர் பல்டி அடித்துள்ளதுதான் கவனத்துக்குரிய ஒன்றாகும்.
ராய்பூரில் சத்தீஸ்கர் தேர்தலுக்கான பா.ஜ.க தேர்தல் அறிக்கையை வெளியிட்டு செய்தியாளர்களிடம் அமைச்சர் அமித்ஷா பேசினார். அப்போது அவரிடம், ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்த கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “நாங்கள் ஒரு தேசிய அரசியல் கட்சி, நாங்கள் இந்த பிரச்சினையில் வாக்கு அரசியல் செய்யவில்லை. அனைவரிடமும் கலந்தாலோசித்து, அது குறித்து உரிய முடிவை எடுப்போம். ஆனால் அதன் அடிப்படையில் தேர்தலில் போட்டியிடுவது சரியல்ல. பா.ஜ.க. ஜாதிவாரி கணக்கெடுப்பை) எதிர்க்கவில்லை. ஆனால் ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான நடவடிக்கையை நாடு முழுவதும் பலதரப்பு மக்கள் பிரதிநிதிகளுடன் கலந்து ஆலோசித்து அனை வருக்கும் பயனளிக்க கூடியவகையில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவோம் இது தொடர்பாக முடிவெடுத்து உரிய நேரத்தில் தெரிவிப்போம்” என்றார்.
ஆர்.எஸ்.எஸ். வார ஏடான விஜயபாரதம் ஜாதிவாரி கணக்கெடுப்பு ஹிந்துக்களை பிரிக்கும் என்று எழுதுகிறது; ஆனால் ஒன்றிய பிஜேபி அரசின் உள்துறை அமைச்சர் அமித்ஷாவோ நாங்கள் ஜாதிவாரி கணக்கெடுப்பை எதிர்க்கவில்லை. உரிய நேரத்தில் அதைச் செய்வோம் என்கிறார்.
சமூகநீதி எழுச்சியின் முன்னே பாசிச சக்திகள் படுதோல்வி அடையும் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.
2024 மக்களவைத் தேர்தல் இதனைப் பிரதிபலிக்கப் போவது உறுதியே!
No comments:
Post a Comment