2024 பொதுத் தேர்தல்தான் ஒரே தீர்வு என்பதை
வெகுமக்களுக்குப் புரிய வைப்பதே முன்னுரிமைப் பணி!
தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை
மேலும் ‘தனது மூர்க்க' பிடிவாதத்தைக் காட்டி, உச்சநீதிமன்றத்தையே அவமதிக்கப் போகிறாரா, ஆளுநர் ஆர்.என்.ரவி.? 2024 பொதுத் தேர்தல்தான் ஒரே தீர்வு என்பதை வெகுமக்களுக்குப் புரிய வைப்பதே முன் னுரிமைப் பணி என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு:
பிரதமர் மோடி தலைமையில் கடந்த 9 ஆண்டுகளுக்குமேல் நடைபெற்றுவரும் ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க. ஒன்றிய அரசு அரசமைப்புச் சட்ட நெறிமுறைகளையும், ஜனநாயகம் என்ற மக்களாட்சியின் மாண்புகளையும், அவ்வாட்சியை பொறுப்பில் அமர்த்திய குடிமக்களாகிய வாக்காளர் பெருமக்களை வெகுவாக, வெளிப்படையாக அவமதித்து வருவதுடன், தவறான வழியில் ஆளுநர்களின் அரசமைப்புச் சட்ட விரோத செயற்பாடுகளை மறைமுகமாக ஊக்குவிப்பதாகவும் உள்ளது!
எந்தெந்த மாநிலத்தில் மக்கள் எதிர்க்கட்சிகளுக்கு வாக்களித்து ஆட்சியில் அமர்த்தினார்களோ, அங்கு தேர்தலில் வெற்றி பெற்ற கட்சியின் உறுப்பினர்களை, கட்சி மாறச் செய்து அல்லது தங்களிடம் உள்ள அதிகாரங்கள்மூலம் அச்சுறுத்தி, ஆட்சிகளைக் குறுக்கு வழியில் கைப்பற்றி பா.ஜ.க. ஆட்சி நடத்துகின்றது.
அரசமைப்புச் சட்ட நடைமுறைக்கு
நேர் முரணாக நடக்கும் ஆளுநர்!
அது முடியாதபோது, அம்மாநில ஆளுநர்கள்மூலம் ஒரு போட்டி அரசினை நடத்துகின்றனர். எதிர்க்கட்சி ஆட்சிகளை செயல்படவிடாமல், மக்களுக்குரிய சட்ட திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போட்டு, அரசமைப்புச் சட்ட நடைமுறைக்கு நேர் முரணாக நாளும் நடந்து, ஒருவகையான தேக்க நிலை அரசியல் நடத்துகிறார்கள்.
தமிழ்நாட்டிற்கு அனுப்பப்பட்ட ஆளுநர் பட்டாங்கமாய் தமிழ்நாடு அரசின் கொள்கை முடிவுகளுக்கு எதிராகவும், அவசியமற்ற பிரச்சினைகளைப் பேசி, ‘தனி ஆவர்த்தனத்தை' அனுதினமும் செய்து வருவதோடு, சுமார் 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல், பல மாதங்களாகியும் கிடப்பில் போட்டு வைக்கிறார்.
தமிழ்நாடு அரசு எல்லையற்ற பொறுமையைக் கடைப் பிடித்து, மோதல் போக்கினால் ஆளுமை பாதிக்கப்படக் கூடாது என்பதால், பெருந்தன்மையை நிலை நிறுத்தியது.
கடைசியாக உச்சநீதிமன்றம் சென்று நீதி கேட்க வழக்குப் போட்டுள்ளது.
உச்சநீதிமன்றம் வைத்த குட்டு!
இதற்குமுன்பே கேரளா, தெலங்கானா, பஞ்சாப் மாநில ஆளுநர்களின் ஒத்துழையாமைக்காக வழக்குகள் போடப் பட்டுள்ளன.
அந்த பஞ்சாப் வழக்கிலும், முந்தைய தெலங்கானா மாநில ஆளுநருக்கு எதிரான வழக்கிலும், தமிழ்நாட்டில் பேரறிவாளன் விடுதலையை தேவையற்று காலதாமதம் செய்த ஆளுநரின் போக்குபற்றியும் கண்டனக் குரலை உயர்த்தியது உச்சநீதி மன்றம்.
‘‘ஆளுநர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்ல'' என்பதைக் கூறி, ‘‘நெருப்போடு அவர்கள் விளையாடக் கூடாது'' என்றும், ‘‘அரசமைப்புச் சட்டம் தாண்டி, அவர்களுக் கென தனி அதிகாரம் ஏதும் கிடையாது'' என்றும் சுட்டிக்காட்டி, தலையில் குட்டியதை மறக்கலாமா ஆளுநர்கள்?
உச்சநீதிமன்றத்தில் வழக்கு வந்த பிறகே, தமிழ்நாடு ஆளுநர் 10 மசோதாக்களை மீண்டும் இப்போதுதான் (16.11.2023) வேறு வழியின்றி திருப்பி அனுப்பியுள்ளார்.
அரசமைப்புச் சட்டப் பிரிவு கூறு 200-இன்படி அதை அவர் முன்பே கொடுத்திருக்கவேண்டும். தமக்கு உடன்பாடு இல்லை என்று கருதினாலோ அல்லது சந்தேகங்கள் இருந்தாலோ அரசுக்கே திருப்பி அனுப்பவேண்டும். அப்படிச் செய்யவில்லை.
அந்தக் கூறு (கிக்ஷீtவீநீறீமீ) படியே, மீண்டும் சட்டமன்றம் கூடி, அதே மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பினால், அதற்கு ஒப்புதல் (கிssமீஸீt) தருவதைத் தவிர, அவருக்கு வேறு வழியே கிடையாது - அரசமைப்புச் சட்ட விதிப்படி.
ஒன்றிய உள்துறை அமைச்சகத்தில்
நிலுவையில் உள்ள நீட் மசோதா!
அதுபோலவே, முன்பு இவர்மூலம் குடியரசுத் தலைவருக்கு அனுப்பவேண்டிய ‘நீட்' தேர்வு விலக்கு சம்பந்தமாக தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பிய இரண்டு மசோதாக்களை கிடப்பில் வைத்து, எதிர்ப்பு வந்த பிறகு திருப்பி அனுப்பினார். உடனே மீண்டும் சட்டமன்றம் கூட்டப்பட்டு, நிறைவேற்றி அனுப்பப்பட்டது. பிறகுதான் குடியரசுத் தலைவருக்கு இவர் அனுப்பி, அங்கே இப்போது உள்துறை அமைச்சகத்தில் நிலுவையில் உள்ளது அம்மசோதா!
மீண்டும் நாளை (18.11.2023) தமிழ்நாடு சட்டமன்றத்தைத் தமிழ்நாடு அரசு கூட்டி, அதே சட்ட மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி அனுப்ப ஆயத்தமாகி அறிவிப்பும் வந்துவிட்டது.
வெகுமக்களுக்குப் புரிய வைப்பதே
முன்னுரிமைப் பணி!
இனியும் தனது மூர்க்கப் பிடிவாதத்தைக் காட்டி, உச்சநீதி மன்றத்தையே அவமதிக்கப் போகிறாரா, இந்த ஆளுநர்?
ஏன் இந்த தேவையற்ற அரசியல் கண்ணாமூச்சு. வாக்களித்த தமிழ்நாட்டு மக்களை வம்புக்கு இழுப்பதுதானே இதன் உட்பொருள்?
2024 பொதுத் தேர்தல்தான் ஒரே தீர்வு என்பதை வெகுமக்களுக்குப் புரிய வைப்பதே முன்னுரிமைப் பணி!
17.11.2023
No comments:
Post a Comment