இதுதான் ராமராஜ்யம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 18, 2023

இதுதான் ராமராஜ்யம்!

மின்சாரம்

உத்தரப்பிரதேசம் ஆக்ராவில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் பணிப் பெண்ணாக ஒருவர் பணி புரிகிறார்.

தீபாவளி அன்று பகலில் அறை எடுத்த சிலர் வரவேற்பறையில் இருந்த அந்த இளம்பெண்ணை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றனர். இதுகுறித்து விடுதிப் பணியாளர்களிடம் தன்னைக் காப்பாற்றுமாறு அந்தப் பணிப் பெண் கதறுகிறார் - கெஞ்சுகிறார்.

ஆனால், விடுதியில் தங்கியிருந்தவர்கள் விடுதியாளர்களைக் கொலை செய்துவிடுவோம் என்று மிரட்டியுள்ளனர். இதனால் அவர்கள் ஒன்றும் செய்ய முடியாமல் அஞ்சினர் - தவித்தனர். தன்னந்தனியான அந்தப் பெண் அலறுவதைத் தவிர வேறு வழியில்லை. அந்த அபலையின் அலறலைச் சற்றும் பொருட்படுத்தாத அந்தக் கயவர்கள் உள்ளே வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை  செய்தனர். இச்சம்பவம் அந்த விடுதிக் கண்காணிப்புக் கேமிராவில் பதிவாகி உள்ளது. அந்த காட்சிப் பதிவு சமூக வலைதளங்களிலும் பரவியது.

அந்தப் பெண் "தயவு செய்து காப்பாற்றுங்கள்" (Please help me!) என்று அலறுவதும், அவரை ஒரு ஆண் உள்ளே இழுப்பதும், கதவைச் சாற்றுவதும், பின்னர் சில மணி நேரம் கழித்து அழுதுகொண்டே அறையில் இருந்து வெளியே அப்பெண் வருவதும், அனைவரும்  அவர் பின்னால் நின்றுகொண்டு சிரிப்பதும் காட்சிப் பதிவில் பதிவாகியுள்ளது.

எத்தகைய அவலம் - கொடூரம் - கேவலம்!

எல்லாம் நடந்த பின் ஏதோ சம்பிரதாயமாக உ.பி. பி.ஜே.பி. சாமியார் ஆதித்யநாத்தின் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

பட்டப்பகலில் சாமியார் ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் இவ்வளவு நடந்தும் இது தொடர்பாக வெகுஜன ஊடகங்கள் எந்த ஒரு செய்தியையும் வெளியிடாமல், புத்தாடை அணியாமல் ராணுவ வீரர்களின் உடையிலேயே மோடி தீபாவளி கொண்டாடினார் என்பதைத்தான் பகல் முழுவதும் ஓட்டிக்கொண்டு இருந்தன.

அய்ந்து மாநில தேர்தல்கள் நடக்கும் நிலையில் கூட இத்தகைய ஆபாசம் கோரத் தாண்டவமாடுகிறது. எந்தத் துணிச்சலில்?

அயோத்தியில்தான் இராமன் கோயில் கட்டப் போகிறோமே - மக்கள்தான் இலட்சக்கணக்கில் கூடுவதற்கு இலவச இரயில்கள் விடப் போகிறோமே - அதற்கு முன் இதெல்லாம் ஒரு பொருட்டா என்ற மத மமதையும், அதிகார ஆணவமும் நிர்வாண ஆட்டம் போடுகின்றன.

ஊரார்ப் பேச்சைக் கேட்டு,கொடிய மிருகங்கள் உலவும் காட்டினில் கர்ப்பிணிப் பெண்ணான தன் மனைவி சீதையை நிராதரவாக விட்டு வந்தவன்தானே - மகாவிஷ்ணுவின் அவதாரமான ஸ்ரீமான் இராமச்சந்திரமூர்த்தி.

க.சந்தானம் அய்யங்கார் "உத்தர ராமசரிதம்" என்ற பெயரில் வடமொழி நாடகம் ஒன்றை எழுதினார்.

அந்நூலுக்கு, "சக்ரவர்த்தி திருமகன்"  (இராமாயணம்) என்ற நூலை எழுதிய சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் முன்னுரை ஒன்றை எழுதினார்.

அதில் அவர் குறிப்பிட்டு இருப்பது கவனிக்கத்தக்கது. எழுதியவர் சாதாரணமானவர் அல்லவே! பெயரிலேயே சக்கரவர்த்தியை வைத்திருப்பவர். சக்ரவர்த்தி திருமகனாகிய இராமனைப் பற்றி எழுதினார் என்றால் சும்மாவா?

இதோ ஆச்சாரியார் எழுதுகிறார்:-

"நானும் எவ்வளவோ முயற்சி செய்துதான் பார்த்தேன். ஸ்ரீராமன் உலகத்திற்கு வழிகாட்ட அவதரித்த கடவுள் - சீதையை அரும்பாடுபட்டு இலங்கையிலிருந்து கொண்டு வந்தபின், ஊராரின் வீம்புப் பேச்சைக் கேட்டு சீதையைக் காட்டுக்கு அனுப்பி விட்டார் என்ற கொடுஞ்செயலை என் மனத்திற்குச் சமாதானப்படுத்திக் கொள்ள முடியவில்லை" என்று எழுதி இருக்கிறாரே!

(திராவிட இயக்க ஆய்வாளர் க.திருநாவுக்கரசு எழுதிய "திராவிட இயக்க இதழ்கள்" - பக்கம் 60)

இதையே தந்தை பெரியார் எழுதி இருந்தால் 'நாயக்கர் அப்படித்தான் எழுதுவார்!" என்று அனாயாசமாகப் பேச மாட்டார்களா ஆரியப் புத்திரர்கள்.

எழுதியவர் மூதறிஞர் ஆயிற்றே! உடம்பெல்லாம் மூளை உடையவர் என்று தலையில் தூக்கி வைத்து ஆடப்படுபவர் ஆயிற்றே!

அவராலேயே பொறுத்துக் கொள்ள முடியவில்லை - அவரின் மனம்கூட சமாதானம் அடையவில்லை என்றால் இராமனின் யோக்கியதை என்ன என்று எடை போட்டுப் பார்க்கட்டும் இராம பக்தர்களும், எட்டப்பர்களும், விபீடணர்களும்.

அந்த இராம ராஜ்ஜியத்தைத்தான் அமைக்கப் போகிறார்களாம். 450 ஆண்டுகால வரலாறு படைத்த இஸ்லாமியர்களின் மசூதியை இடித்து விட்டு, அதே இடத்தில் இராமன் கோயிலாம் - அதன் திறப்பு விழா வரும் ஜனவரியிலாம்!

அந்த மாநிலத்தில்தான் ஆக்ரா நகரில் ஒரு தங்கும் விடுதியில் ஒரு அபலை நான்கு கயவர்களால் சீரழிக்கப்பட்டுள்ளார்.

ஜம்மு காஷ்மீர் கத்துவாவில் ஆஷிபா என்ற சிறுமியை கோயில் கருவறைக்குள் கோயில் அர்ச்சகனும், கூட்டாளிகளும் பல நாள் அடைத்து வைத்து வன்புணர்வு செய்து அடித்துக் கொலை செய்து வீதியில் தூக்கி எறியவில்லையா?

விசாரணை நடத்த வந்த, பெண் போலீஸ் அதிகாரியிடம், "நீங்களும் பிராமின் - நாங்களும் பிராமின் - இந்த நிலையில் எங்களைக் குற்றவாளி ஆக்கலாமா? சிறைக்குள் தள்ள முஸ்தீபு காட்டலாமா?" என்று பேசிய பதர்களையும் நினைத்துப் பாருங்கள். மேலும் ஒரு வெட்கக் கேடு என்னவென்றால் அந்தக் குற்றவாளிகளுக்கு ஆதரவாகக் கொடிபிடித்து ஊர்வலம் சென்றனர் என்பதுதான்!

பெண்களைப் பேதைகளாக, காமப் பதுமைகளாகக் கருதும் இவர்கள்தான் "பாரத் மாதா கீ ஜெய்!" என்று கோஷம் போடுகிறார்கள். வெட்கக் கேடு! வெட்கக் கேடு!!

No comments:

Post a Comment