"இறந்த மனிதரும் - இறக்காத மனிதமும்!" - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, November 24, 2023

"இறந்த மனிதரும் - இறக்காத மனிதமும்!"


நேற்று (23.11.2023) நாளேடுகளில் வந்துள்ள ஒரு அருமையான செய்தி:

"மனிதத்தின் மறுமலர்ச்சி இதோ!" என்று இந்த உலகிற்கும் பாடம் சொல்லிக் கொடுக்கும் சக்தி படைத்த ஒரு செய்தி.  

இறந்த பின்பும் வாழும் மனிதர்களை நமது 'ஒத்தறிவு' (Empathy) உருவாக்கித் தரும் ஆற்றல் படைத்தது அச்செய்தி!

அப்படியென்ன முக்கியச் செய்தி?

இப்படி ஆசிரியர் கூறாமல் - நம் ஆவலை அதிகரித்துக் கொண்டே போகிறாரே, அதைத் தெரிந்து கொள்ளுவோம் என்கின்றீர்களா?

இதோ கூட்டல் கழித்தல் இல்லாமல் அப்படியே அதை தருகிறேன்.

படித்துப் பரவசப்படுங்கள்.

'ஆம்புலன்ஸ்' விபத்தில் சிக்கி தடை ஏற்பட்டபோதும் புனேயில் இருந்து விமானத்தில் பறந்து வந்த நுரையீரல் சென்னை மருத்துவமனையில் நோயாளிக்கு பொருத்தி சாதனை!

புனே, நவ.23- தானம் பெற்ற நுரையீரலை கொண்டு வந்த போது ஆம்புலன்ஸ் விபத்தில் சிக்கியது.இருந்தாலும் புனேயில் இருந்து விமா னத்தில் சென்னை கொண்டு வந்து நோயாளிக்கு பொருத்தி மருத்துவர்கள் சாதனை படைத்தனர்.

நுரையீரல் கொடை

"சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் நுரையீரல் கோளாறால் பாதிக்கப்பட்ட கேரளாவை சேர்ந்த 26 வயது வாலிபர் ஒருவர் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு நுரையீரல் மாற்று அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் அவர் உடல் உறுப்பு கொடைக்காக காத்திருந்தார். இந்த நிலையில் மராட்டிய மாநிலம் புனே மாவட்டத்தை சேர்ந்த 19 வயது வாலிபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் உறுப்புகளை கொடை செய்ய குடும்பத்தினர் முன்வந்தனர். அவரது நுரையீரலை சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெறும் 26 வயது நோயாளிக்கு பொருத்த  ஏற்பாடு செய்யப்பட்டது.

இதற்காக தற்கொலை செய்த 19 வயது வாலிபரின் நுரையீரல் புனேயை அடுத்த பிம்ப்ரி சிஞ்ச்வாட் டவுன்சிப்பில் உள்ள டி.ஒய். பாட்டீல் மருத்துவ மனையில் அகற்றப்பட்டது. நவிமும்பையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையின் இதய மற்றும் நுரையீரல் அறுவைச் சிகிச்சை நிபுணரான மருத் துவர் சஞ்சீவ் ஜாதவ் தலைமையிலான மருத்துவக் குழுவினர், கொடை பெறப்பட்ட நுரையீரலுடன் தனி விமானத்தில் சென்னைக்கு பறக்க தயார் ஆனார்கள். 

விபத்தில் சிக்கிய ஆம்புலன்ஸ் 

இதற்காக டி.ஒய். பாட்டீல் மருத்துவமனையில் இருந்து நுரையீரலுடன் புனே விமான நிலையம் நோக்கி ஆம்புலன்சில் விரைந்தனர். விமான நிலையம் செல்லும் வழியில் ஹாரீஸ் பாலத்தில் ஆம்புலன்ஸ் வேனின் டயர் வெடித்தது. இதில் ஆம்புலன்ஸ் 2 வாகனங்கள் மீது மோதியதோடு, பாலத்தின் தடுப்புச் சுவரில் மோதி நின்றது. ஆம்பு லன்சின் முன்பகுதி சுக்குநூ றாக நொறுங்கியது.

இதில் மருத்துவர் சஞ்சீவ் ஜாதவ் உள்ளிட்ட மருத்துவக் குழுவினர் மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் காயமடைந்தனர். மருத்துவர் ஜாதவுக்கு தலை, கை, முழங்கால் ஆகியவற்றில் காயம் ஏற்பட்டது. இருப்பினும் அதனை பொருட்படுத்தாத மருத்துவர் சஞ்சீவ் ஜாதவ் துரிதமாக செயல்பட்டார். காயமடைந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநரை மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தார்.

உடனடியாக வேறு ஒரு ஆம்புலன்ஸ் வரவ ழைக்கப்பட்டது. அதில் ஏறிய மருத்துவக் குழுவினர் புனே விமான நிலையம் நோக்கி விரைந்தனர். அங்கு நுரையீரலுடன் பறக்கக் காத்திருந்த விமானத் தில் ஏறினர். உடனே விமானம் சென்னைக்குப் பறந்தது. சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கி, மீண்டும் ஆம்புலன்ஸ் மூலம் நுரையீரல் அப்பல்லோ மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டது.

வெற்றிகரமாக பொருத்தப்பட்டது

சென்னை மருத்துவமனையில் நுரையீரலை பொருத்துவதற்காக 26 வயது நோயாளி "ஆப்ரேசன் தியேட்டரில்" தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தார்.சரியான நேரத்தில் மருத்துவக் குழுவினர் நுரையீரலை ஒப்படைத்தனர். நோயாளிக்கு வெற்றிகரமாக நுரையீரல் பொருத்தப்பட்டது. இந்த உடல் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சையில், ஆம்புலன்ஸ் விபத்தில் காயம் அடைந்த மருத்துவர் சஞ்சீவ் ஜாதவ் உள்ளிட்ட மருத்துவர்கள் ஈடுபட்டனர்.

இதில் முக்கியத்துவம் என்னவென்றால், நுரையீரல் கொடை பெறப்பட்ட 6 முதல் 8 மணி நேரத்தில் நோயாளிக்கு அதைப் பொருத்த வேண்டும். இல்லாவிட்டால் அந்த நுரையீரல் பயனின்றிப் போய்விடும். எனவே புனே மருத்துவக் குழுவினர் விபத்தில் சிக்கி காயம் அடைந்த போதிலும், கடமையை கண்ணாகவும், நேரத்தை பொன் னாகவும் கருதி சற்றும் தாமதிக்காமல் செயல்பட்டு 26 வயது நோயாளிக்கு மறுவாழ்வு அளித்துள்ளனர்.

மருத்துவர் உருக்கம்

இதுபற்றி மருத்துவர் சஞ்சீவ் ஜாதவ் கூறுகையில், “நுரையீரல் கொடை பெற்ற நோயாளி சென்னை மருத்துவமனையில் 72 நாட்களாக ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு நுரையீரலை பொருத்த நாங்கள் புறப்பட்ட போது விபத்தில் சிக்கி விட்டோம். இந்த தருணத்தில் நோயாளி "ஆப்ரேசன் தியேட்டரில்" வைக்கப்பட்டு இருக்கிறார். உரிய நேரத்தில் அவருக்கு நுரையீரல் மாற்று சிகிச்சை செய்யாமல் இருந்திருந்தால் அவர் உயிரிழந்து இருப்பார். தற்போது அவர் நலமுடன் உள்ளார். எங்களது வலியைப் பொருட்படுத்தாமல் அவரது உயிரைக் காப்பாற்றியது மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார். 

இக்கட்டான நேரத்தில் சோதனையை கடந்து சாதனை படைத்த புனே மருத்துவக் குழுவினர் மருத்துவ சமூகத்தின் பாராட்டுதலை பெற்றனர். மறுவாழ்வு கிடைத்த நோயாளியின் குடும்பத்தினர் அவர்களுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்."

இதுதான் அந்தச் செய்தி!

மருத்துவர் சஞ்சீவ் ஜாதவ் போன்றவர்களிடம் பொங்கிய மனிதமும், பெற்றோர்களின் கருணை பொங்கிய மனிதமும் மருத்துவக் குழுவினர், காவல்துறையினர் மனிதமும் மறக்க முடியாதவை. பாராட்டிப் பின்பற்றப்பட வேண்டிய மனிதத்தின் மறுமலர்ச்சியும்கூட! 

வாழ்க கருணையாளர்கள் 

வளர்க மனிதம் பொங்கும் மனித உள்ளங்கள்!

No comments:

Post a Comment