'மச்சாவதாரத்தின் மகிமையோ மகிமை!' - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 29, 2023

'மச்சாவதாரத்தின் மகிமையோ மகிமை!'

27.11.2023 திங்கள் அன்று காலை மயிலாப்பூர் கோவில் குளத்தில் திடீரென ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதந்தன. இது தொடர்பாக தகவல் கிடைத்த பிறகு சென்னை மாநகராட்சி மீன்களை அகற்றியது. ஒட்டுமொத்த குளத்து மீன்களுமே செத்துப் போனது தான் மிகவும் அதிர்ச்சிகரமான தகவல்!  

ஹிந்து அமைப்பினர் தெய்வீக திருக்கார்த் திகைத் திருவிழா என்ற பெயரில் மயிலாப்பூர் கோவில் குளத்தின் படிக்கட்டுகளில்  மக்களை விளக்கேற்ற அழைத்துள்ளனர். இதற்காக கடைகளிலும்  - வீடுகளிலும் நன்கொடையாக பணம், எண்ணெய், விளக்குகள் போன்றவை பெறப்பட்டன. 

ஞாயிறன்று இரவு குளக்கரை எங்கும் விளக்குகள் வைக்கப்பட்டு எரியவிடப்பட்டன. இந்த நிலையில் சரியாக இரவு 8 மணி அளவில் கனமழை பெய்யத் துவங்கியது, இதனால் எண்ணெய் முழுவதும் மழைநீரில் கலந்து தெப்பக்குள நீரோடு கலந்து விட்டது! இதனால் தண்ணீரின் அடர்த்தி அதிகமாகி மீன், தலைப்பிரட்டை, நத்தை போன்ற அனைத்து உயிர்களும் மடிந்தன.

இதற்கு முன்பும் கார்த்திகை விளக்கு ஏற்றப் பட்டதுண்டு. ஆனால் ஆங்காங்கே சிலர் மட்டுமே விளக்கு ஏற்றுவார்கள். 

 ஆனால் ஹிந்து அமைப்புகள் மக்களை தங்களின் மதவெறிக்கு பலியாக்கியதோடு மட் டுமல்லாமல், அதன் மூலம் ஏராளமான மீன்கள் செத்து மிதப்பதற்கும் காரணமாகி விட்டனர்.

 இந்த நிலையில் குளத்தில் மீன்கள் இறந்த செய்தி வெளியான உடனேயே ஹிந்து அமைப்பினர் தங்கள் சார்பில் ஒட்டிய சுவரொட்டி மற்றும் சமுகவலைதளப் படங்களை உடனடியாக நீக்கி விட்டனர்.

பக்தியின் பெயரால் புத்தி கெட்டுப் போய் இப்படி எல்லாம் நடந்து கொள்வது கண்டு வாய் விட்டுச் சிரிக்க முடியாது - எள்ளி நகையாட வேண்டிய ஒன்றே!

பக்தியை மூலதனமாக்கி மதத்தையும், மதம் சார்ந்த அரசியலையும் பரப்பிடத் திட்ட மிட்டவர்களுக்கு இது ஓர் அதிர்ச்சியான நிகழ்வே!

அவசர அவசரமாக ஒட்டிய சுவரொட்டிகளை ஒட்டியவர்களே கிழித் திருக்கிறார்கள் என்றால் இதன் பொருள் என்ன? குற்றமுள்ள நெஞ்சு குறு குறுப்பது தானே! 

"பக்தி வந்தால் புத்தி போகும்" என்று தந்தை பெரியார் சொன்னதை எண்ணிப் பார்க்க வேண்டாமா?

புண்ணிய நீராடல் என்பது எல்லாம் அறிவின் கீழிறக்கம் தானே! மகாவிஷ்ணு மச்ச அவதாரம் (மீன்) எடுத்ததாகக் கதை கட்டிய பேர்வழிகளை நினைத்தும், அதனை நம்புபவர்களை எண் ணியும் ஒரு முறையாவது தலை குனியுங்கள்!

விஞ்ஞானம் ஒரு பக்கத்தில் வளர்கிறது - இன்னொரு பக்கத்தில் அஞ்ஞானமா? வெட்கக் கேடு!


No comments:

Post a Comment