ஆளுநர்கள் அடங்குவார்களா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, November 24, 2023

ஆளுநர்கள் அடங்குவார்களா?

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே முழு அதிகாரம்! 

பஞ்சாப் ஆளுநர் வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி!

புதுடில்லி, நவ.24  மக்களால் தேர்ந்தெடுக் கப்பட்ட அரசுகளுக்கே முழு அதிகாரமும் உள்ளது என பஞ்சாப் ஆளுநர் வழக்கில் உச்சநீதிமன்றம்  தெரிவித்துள்ளது. 

பஞ்சாப்பில் ஆளும் ஆம் ஆத்மி அரசு டன் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இடை விடாத மோதல் போக்கைக் கடைப்பிடித்து வருகிறார். பஞ்சாப் மாநில சட்டமன்றத்தைக் கூட்டவிடாமல் முடக்குவது, பஞ்சாப் சட்ட மன்றத்தில் நிறைவேற்றும் மசோதாக்களை முடக்கி வைப்பது என ஆளுநர் பன் வாரிலால் புரோகித் செயல்பட்டு வருகிறார். ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் இந்த செயல்பாடுகளுக்கு எதிராக உச்சநீதி மன்றத்தில், பஞ்சாப் மாநில அரசு வழக்குத் தொடர்ந்திருந்தது.

இந்த வழக்கை நேற்று (23.11.2023) விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு, பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும் ‘‘பஞ்சாப் ஆளுநர் நெருப்புடன் விளையாடுகிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கத்தின் செயல்பாடுகளை ஒரு ஆளுநர் எப்படி முடக்கி வைக்க முடியும்? ஆளுநருக்கு இதுபோல அதிகாரங்களை கொடுத்தது யார்? சட்டமன்றக் கூட்டத் தொடர் முடிந்துவிட்டது என்பதாலேயே மசோதாக்களுக்கு ஒப்புதல் தரமாட்டேன் என்பது எப்படி சரியாகும்?'' என உச்சநீதி மன்றத் தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வு கடுமையாக சாடியது.

இந்நிலையில், பஞ்சாப் ஆளுநருக்கு எதி ராக அம்மாநில அரசு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பைப் பதிவேற்றம் செய்தது. இந்த தீர்ப்பில், ஆளுநர் vs மாநில அரசு இடையேயான பிரச்சினைக்கு உச்ச நீதிமன்றம் தெளிவான பதில் அளித்துள்ளது.

அதில், ஆளுநர் ஒரு மசோதாவுக்கு ஒப்புதலைத் தடுத்து நிறுத்தினால், அதை மறுபரிசீலனை செய்ய சட்டமன்றத்திற்குத் திருப்பி அனுப்ப வேண்டும் என உச்சநீதி மன்றம் தெளிவாகக் கூறியுள்ளது. மேலும், ஆளுநர் ஒரு தேர்ந்தெடுக்கப்படாத மாநிலத் தலைவர் என்றும், அவரது அர சமைப்புச் சட்ட அதிகாரங்களைப் பயன் படுத்தி அரசின் சட்ட மியற்றும் வழக்கமான போக்கை முறியடிக்க முடியாது என்றும் நீதிமன்றம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

ஜனநாயகத்தின் நாடாளுமன்ற வடிவில், உண்மையான அதிகாரம் மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளிடமே உள்ளது. அடையாள பதவியான ஆளுநர், மசோதாக் கள் மீதான நடவடிக்கையைத் தடுக்க முடி யாது. ஆளுநருக்கு தனியாக எந்த அதி காரமும் இல்லை. அரசும், அமைச்சர்களும் சொல்வதன்படி தான் ஆளுநர் செயல்பட முடியும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பில் குறிப் பிட்டுள்ளது.

மூன்று செயல்முறைகள் உள்ளன!

ஒரு மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்த பிறகு அடுத்த நடவடிக்கை என்ன என்பதை அரசமைப்புச் சட்டத்தின் 200 ஆவது பிரிவு தெளிவாகக் குறிப்பிடவில்லை. பிரிவு 200 இன்படி, ஆளுநருக்கு மூன்று செயல்முறைகள் உள்ளன. ஒப்புதல் வழங்க லாம், குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காக மசோதாவை அனுப்பலாம், மறுபரிசீலனை தேவைப்படும் அம்சங்களின் செய்தியுடன் கூடிய ஒரு மசோதாவை ஆளுநர் சட்ட மன்றத்திற்கு திருப்பி அனுப்பலாம்.

திருத்தங்களுடனோ அல்லது இல்லா மலோ மசோதாவை மீண்டும் சட்டமன்றம் நிறைவேற்றினால், அதற்கு ஆளுநர் ஒப் புதல் அளிக்கக் கட்டுப்படுவார் என்றும் விதி 200 கூறுகிறது. ஆளுநர் ஒப்புதலை நிறுத்தி வைப்பதாக அறிவித்தால், அந்த மசோ தாவை சட்டமன்றத்திற்குத் திருப்பி அனுப்பு வாரா என்பதில், குழப்பம் நிலவியது. தமிழ் நாட்டிலும் இது தொடர்பாக அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே கருத்து முரண் பாடுகள் ஏற்பட்டன.

இந்நிலையில், உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில், சட்டமன்றம் இயற்றும் மசோதாவை ஆளுநர் தடுத்து வைப்பது, சட்டமன்றச் செயல்முறையை தடம்புரளச் செய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்த ஆதா ரமும் இல்லாமல் ஒப்புதல் நிறுத்தி வைக் கப்பட்டுள்ளது என்று வெறுமனே அறிவிப்ப தன்மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன் றத்தை முடக்கும்  அத்தகைய நடவடிக்கை யானது, நாடாளுமன்ற ஆட்சி முறையின் அடிப்படையிலான அரசமைப்புச் சட்ட  ஜனநாயகத்தின் அடிப்படைக் கோட்பாடு களுக்கு முரணானது என்றும் உச்சநீதி மன்றம் தெரிவித்துள்ளது.

தேர்ந்தெடுக்கப்படாத மாநிலத் தலை வராக ஆளுநருக்கு சில அரசமைப்புச் சட்ட அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இருப் பினும், மாநில சட்டமன்றங்களால் சட்ட மியற்றும் வழக்கமான போக்கைத் தடுக்க இந்த அதிகாரத்தைப் பயன்படுத்த முடியாது. நாடாளுமன்ற ஜனநாயக வடிவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு உண்மையான அதிகாரம் உள்ளது என தெளிவுபடுத்தியுள்ளது உச்சநீதிமன்றம்.

No comments:

Post a Comment