ஈரோடு சந்திப்பில் ஆசிரியருக்கு வரவேற்பு
2023 அக்டோபர் 31 அன்று அதிகாலையில் ஈரோடு சந்திப்பின் 3 ஆம் நடைமேடையில் ஒரு குதூகலமான சம்பவம் அரங்கேறப் போகிறது என்ற அறிகுறி கொஞ்சமும் இல்லாமல், வந்து நின்ற மங்களூரு விரைவு வண்டியில் மக்கள் எப்போதும் போல இறங்குவதும் ஏறுவதுமாகவும், தேநீர் விற்பனையாளர்கள் சுறுசுறுப் பாக விற்பனையில் ஈடுபட்டுக்கொண்டும் இருந்தனர். 5:45 மணிக்கு வரும் ஏற்காடு விரைவு வண்டியின் வரவுக்காக சிலர் காத்திருந்தனர். நேரம் செல்லச் செல்ல கருஞ்சட்டையினர் ஒவ்வொருவராக கூடினர். 5:40 க்குள் ஏராளமான கருஞ்சட்டையினர் கூடிவிட்டனர்.
மக்களில் போவோர் வருவோர் அனைவரும் கூடி நிற்கும் கருஞ்சட்டையினரைத் திரும்பித் திரும்பி பார்த்துக் கொண்டே சென்றனர். ஏற்காடு விரைவு வண்டி சரியான நேரத்திற்கு நடைமேடைக்குள் நுழைந்த அதே நொடியில், திடீரென்று தவில் இசை, நடைமேடையை கிடுகிடுக்க வைத்தது. அதற்குத் தோதாக நாதஸ்வரமும், “செந்தமிழ் தேன் மொழியாள் - நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள்” என்ற எல்லா தலைமுறைகளையும் ஈர்க்கும் ’மாலையிட்ட மங்கை’ திரைப்பட பாடலும் கச்சிதமான ராகத்துடன் சேர்ந்து கொள்ள, அந்த நடைமேடையே இசைக்கச்சேரி மேடையாக மாறிப்போயிருந்தது. ரயிலினுள் அமர்ந் திருந்தவர்கள் எதிர்பாராத இசை விருந்தில் ஈர்க்கப் பட்டு, வியப்புடன் உள்ளிருந்தே எட்டிப் பார்த்தனர். ஆனால் ரயில் மெதுவாக கடந்து கொண்டேயிருந்த தால் அவர்களால் எதற்கென்று யூகிக்க முடியாமல் போனது. இறுதியில் ரயில் நின்றது.
கருஞ்சட்டைப் படையினரின் தானைத் தலைவ ரான, தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள், வசீகரப் புன்முறுவலுடனும் கூப்பிய கைகளுடனும் இறங்கினார். யானை பலம் பெற்ற கருஞ்சட்டைப் படை வீரர்கள் உற்சாகத்துடன் தலைவருக்கு ஆடை அணி வித்து மரியாதை செய்தனர். பின்னர் நடுநாயகமாக ஆசிரியர் நடந்து வர, அவரைச் சூழ்ந்த படியே தோழர்கள் எழுச்சியுடன் ஊர்வலமாக நடந்து வந்தனர்,
சற்று முன்னர்தான் நடைமேடையில் இருந்த மின் விளக்குகள் அணைந்து வெளிச்சம் குறைந்திருந்தது. தலைவர் இறங்கியவுடன், தன்னிச்சையாக ஆங்காங்கே கைப்பேசி விளக்குகள் ஒவ்வொன்றாக முளைத்து வெளிச்சத்தை அள்ளி வீசியன. தோழர்கள் பாதையை நிறைத்தபடி சூழ்ந்துவர, தவில் கருவியின் கோடையிடி தாளத்துக்கு மிகப் பொருத்தமாக, தம் கால்களை வீசி, வீசி நடந்து வந்தார் திராவிடர்களின் ஒப்பற்ற வழி காட்டியான தந்தை பெரியாரின் வாழ்நாள் தொண்ட ரான ஆசிரியர்!
நல்ல பொருத்தம்தான்! திராவிடர்களின் தலை வருக்கு, “செந்தமிழ் தேன் மொழியாள் - நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள்” என்ற பாடல்! அதனால் தான் சொல்கிறோம், திராவிடமும், தமிழும் ஒன்று! இதை அறியாதவர்களின் சுயமரியாதையில் விழுந்தது மண்ணு என்று! கேட்டால்தானே! இந்த அதிரடி இசையை முற்றிலும் எதிர்பாராத மக்கள் விறுவிறுப் படைந்த மனதுடன், ‘யார் வருகிறார்கள்? எதற்கிந்த இசை முழக்கம்?’ என்று தங்களுக்குள் கேள்வி கேட்டு, ‘ஓ... வீரமணி! செல்கிறார் என்று உணர்ந்து, வெளிப் படையாக அவர் பெயரை உச்சரித்தும், தங்களுடன் வந்தவர்களுக்கு சொல்லிக் காட்டவும் செய்தனர். இதற்குத்தானே ஆசைப்பட்டிருப்பர் நமது தோழர்கள்? அதே வேக நடையுடன் வந்த தலைவர் வாகனத்தில் ஏறினார்.
அவரது படைத் தோழர்கள் வாகனங்களில் முன்னும் பின்னுமாகச் செல்ல, ஆரியச் சங்காரரான ஆசிரியர் நடுவில் வந்தார். ஆம், திருச்சியில் கடந்த 20 ஆம் தேதி அளிக்கப்பட்ட அதே வாகனம்தான்! உங்கள் எதிர்பார்ப்பை நிறைவு செய்வேன் என்றாரே அந்த மேடையில். இதோ பிரச்சாரக் களத்தில் அவர்! அரைமணி நேரப் பயணத்திற்குப் பிறகு கால்களில் சக்கரம் கட்டிகொண்டிருக்கும் ஆசிரியர், கோபிசெட்டி பாளையம் நீர்வள ஆதாரத்துறை திட்ட இல்லம் வந்ததும் கீழே இறங்கினார். அங்கும் அதே எதிர்பாராத இசை முழக்கம்! இம்முறை, “ஓடி விளையாடு பாப்பா!” என்ற பாரதியார் பாடல் நாதஸ்வரத்தில் தவழ்ந்தது, தவில் முழக்கத்தோடு. அதுவும் ஆசிரியருக்குப் பொருத்தம்தான்! ஆரியத்தை சங்காரம் செய்ய ஓடியோடி உழைப்பவரல்லவா? ஆசிரியர் தனக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் அறைக்குள் முதல் காலடி எடுத்து வைக்கும் வரை ஒலித்த இசை, வைத்தவுடன், ”டொம்” என்ற ஒற்றை முழக்கத்தோடு, தன் இசையின் அசைவை நிறுத்திக்கொண்டது. கருஞ்சட்டை வீரர்கள் அனைவரின் முகங்களிலும் பெருத்த மனநிறைவு! இனி தலைவர் தயாராகி உள்ளூர் பிரமுகர்களைச் சந்திக்க வேண்டும்; மாலை தொடங்கி இரவு வரை நம்பியூர், திருப்பூர் ஆகிய இடங்களில் சுற்றுச் சுழன்று சூறா வளியாய் பிரச்சாரம் செய்ய வேண்டும். ம்... அதுவொரு தனித்த வரலாறு!
இவ்வரவேற்பு நிகழ்வில் தலைமைக் கழக அமைப் பாளர் ஈரோடு சண்முகம், மாநில ஒருங்கிணைப்பாளர்கள் தஞ்சை இரா.ஜெயக்குமார், ஒரத்தநாடு இரா. குண சேகரன், துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், கழகப் பேச்சாளர்கள் பிராட்லா என்னாரெசு, அதிரடி க. அன்பழகன், மாநில இளை ஞரணி துணைச் செயலாளர் சோ.சுரேஷ், ஒளிப்படக் கலைஞர் பா.சிவகுமார், வலைக்காட்சித் தோழர்கள் உடுமலை வடிவேல், யுகேஷ் மற்றும் இனியன், நிலவன், சுரேந்திரன், புத்தக விற்பனைத் தோழர்கள் சாந்தகுமார், அர்ச்சுனன், ஓட்டுநர்கள் தமிழ்ச்செல்வன், மகேஷ், ராஜூ, அருள்மணி, மகேந்திரன், ஆதித்தமிழர் பேரவை ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளர் பெ.பொன்னுசாமி, தி.மு.க. ஈரோடு வடக்கு மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவை மாவட்டத் தலைவர் எஸ்.சண்முகசுந்தரம், கோபிசெட்டிபாளையம் மாவட்டத் தலைவர் சிவலிங்கம், மாவட்டச் செயலாளர் வழக்குரைஞர் சென்னியப்பன், ஈரோடு மாவட்டத் தலைவர் நற்குணன், செயலாளர் மணிமாறன், பேராசிரி யர்கள் காளிமுத்து, கமலக்கண்ணன், பொதுக்குழு உறுப்பினர் சிற்றரசு, ஈரோடு மாநகரச் செயலாளர் காம ராஜ், பிரபு, அசோக்குமார் வி.என்.எம்.பெரியசாமி, இளைஞரணித் தோழர்கள் சிங்காரம், சிவபாரதி ஆகியோர் கலந்து கொண்டு இந்த வரவேற்பு நிகழ்ச் சியை மறக்க முடியாத ஒன்றாக ஆக்கிக் காட்டிவிட்டனர் என்றால் அது மிகையில்லை!
- உடுமலை வடிவேல்
No comments:
Post a Comment