விடுதலை பற்றி அண்ணா! - கருஞ்சட்டை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 29, 2023

விடுதலை பற்றி அண்ணா! - கருஞ்சட்டை


நம் இனத்தின் விடுதலைக்குத் தேவை 'விடுதலை!' வெள்ளைக்காரர் ஆட்சியிலும் சரி, சுதேசி வெள்ளைக்காரர்களான பார்ப்பன ஆதிக் கத்திலும் சரி, அவர்களின் கண்கள் எல்லாம் கூர் வேலாகப் பாய்ந்ததெல்லாம் 'விடுதலை' ஏட்டின் மீது!

'சுதந்திரம்' அடைந்ததாகக் கூறப்பட்ட பின்பும்கூட 'விடுதலை' ஏட்டுக்கு ரூ.2,000 ஜாமீன் கட்டவேண்டும் என்று கட்டளை பிறப்பிக்கப் பட்டது. அதுகுறித்து அறிஞர் அண்ணா அவர்கள், 'திராவிட நாடு' இதழில் தலையங்கம் தீட்டினார் (27.6.1948) கனத்த இதயத்தோடு. 'விடுதலை'யின் ஆசிரியராக இருந்தவர் அல்லவா!

இதோ அண்ணா தீட்டுகிறார் தீச்சுடராய்!

''திராவிடனே! உன் சமுதாயம் சேறும், பாசியும் நிறைந்த குட்டை போல் ஆகிவிட்டது. சேறும், பாசியும் நிரம்பிய குட்டையிலுள்ள நீரை எவரே விரும்புவர்! அந்த நீர் குடிப்பதற்கோ குளிப்பதற்கோ முடியாதபடி ஆக்கப்பட்டு விட்டது. எனவே, அதை உபயோகித்து உன் உடலை நோய்க்கு ஆளாகும்படி செய்து வதைந்து போகாதே, சேற்றை அகற்றிப் பாசியை நீக்கித் துப்புரவு செய்து உபயோகப் படுத்திக் கொள்'' என்று 'விடுதலை' கூறுகின்றது.

இப்படிக் கூறுவது தவறு - 'எனவே இரண்டாயிரம் ரூபாய் ஜாமீன் கட்டு' என்று சர்க்கார், மக்களின் உரிமைகளைப் பாது காக்கும் சர்க்கார் கூறுகின்றது. இது நியாயமா?

''ஒரு காலத்தில் நீ உன்னத நிலையில் இருந்தாய். இந்நாட்டு ஆட்சி உன்னுடைய தாய் இருந்தது. ஆனால் இன்று! நீ ஆண்டி யாகக் கிடக்கிறாய் - வீரனாய் - விறல் வேந்தனாய் இருந்த நீ கோழையாய், பூனையைக் கண்டு அஞ்சும் பேதை யாகிக் கிடக்கிறாய். சிம்மாசனத்தில் சிறப்போடிருந்த நீ இன்று செங்கை ஏந்திச், சேவடி காத்து நிற்கிறாயே! இப்படி நீ ஆன தன் அடிப் படையை உணரவில்லையே!'' என்று கூறி விளக்கமும் - விழிப்பும் உண்டாக்கி வரு கின்றது 'விடுதலை'

இவ்வாறு செய்வது மாபெரும் குற்றமென்று மக்கள் சார்பில் அரசி யலை நடத்தும் சர்க்கார் கூறுகின்றது; ஜாமீன் கேட்கின்றது. இது நேர்மையா? 

"கீழ்த்தர ஜாதியாய் - நான்காம் அய்ந்தாம் ஜாதியாய் ஆக்கப்பட்டு விட்டாய்  - உழைத்தாலும் உழைப் பின் பயனை அடைய முடியாதபடி செய்யப்பட்டுவிட்டாய் - பொருளா தாரத்தில் நசுக்கப்பட்டு விட்டாய் - கல்வியில் 100-க்கு 90 பேர் தற்குறி களாய் இருக்கும் கொடு மையைப் பெற்று விட்டாய் - அரசிய லிலோ, பிற துறை களிலோ கேவலம் கீழ்த் தரச் சிப்பந்தியாய்ச் சீர்குலைக்கப் பட்டு விட்டாய்'' என்று கூறித் திராவிடப் பெருங்குடி மக்களுக்கு அறிவுத் துறையில் புத்துணர்ச்சியையும், வாழ்க்கைத் துறையில் வளத்தையும் பெறும்படி 'விடுதலை' பணி யாற்றி வருகின்றது.

சாதிச் சனியனையும், மதப் பூசல்களையும், பொருளாதார ஏற்றத்தாழ்வுகளையும், கல்வியின்மையையும் நாட்டிலிருந்து விரட்டி யடிப்பதையே  நாட்டமாகக் கொண் டுள்ளதாகச் சொல்லப்படும் சர்க்கார், இத் துறைகளில் சர்க்காரின் கொள்கைகளுக்குச் சாதகமான முறையில் பணியாற்றி வருவதைத் தவறான காரியம் என்று எண்ணி "எடு இரண் டாயிரம் ரூபா ஜாமீன்" என்று கேட்கிறது. இது முறையா?''

தலையங்கம்

''திராவிட நாடு'' இதழில் 27.6.1948

ஆட்சி மாற்றம் நேரும்பொழுதெல்லாம் 'விடுதலை' மீதான குறி தப்பியதில்லை. சிறைக்குச் சென்ற 'விடுதலை'கூட சிறைபட்டதுண்டு. நீதிமன் றத்தின் கதவைத் தட்டியல்லவா கைதிகளுக்கு 'விடுதலை' (ஏடு) கிடைத்தது.

எந்தெந்த மாவட்ட அரசு நூலகங்களுக்கு 'விடுதலை' வருவதில்லை என்பதைத் தோழர் களே, உடனுக்குடன் தெரிவியுங்கள்!

'விடுதலை' வியாபார ஏடல்ல! வீரத்தையும், விவேகத்தையும், விடுதலை உணர்ச்சியையும் தட்டி எழுப்பும் தலையாய அறிவாயுதம்!

இடையிலே இன்னும் சில நாட்கள் தான்!

நமது தலைவர் ஆசிரியர் பிறந்த நாளன்று (2.12.2023) 'விடுதலை' சந்தாக்களை வழங்க வேண் டாமா? அவர் முகத்தில் அரும்பும் அந்த ஆனந் தத்தை நாம் கண்டு களிக்கவேண்டாமா?

விரைவீர்! விரைவீர்!! சந்தாக்களைத் திரட்டுவீர்! திரட்டுவீர்!!

நம்மால் முடியாதது - வேறு யாரால் முடியும்?

முடியும் தோழர்களே, முனையுங்கள் - 

முகமலர்ச்சியோடு வாருங்கள்! வாருங்கள்!!

No comments:

Post a Comment