1980 ஆம் ஆண்டில் திராவிடர் கழக மகளிரணியைத் தொடங்குவதற்கு முதல் வீராங்கனையாக வந்தவர் பார்வதி போன்றவர்கள்தான்!
அவர் பெயர் என்றைக்கும் நிலைக்கும் வகையில், பெரியார் திடலில் உள்ள ஓர் இடத்திற்குப் பார்வதி அம்மையாரின் பெயர் வைக்கப்படும்!
சென்னை, நவ.28 1980 ஆம் ஆண்டில் திராவிடர் கழக மகளிரணியைத் தொடங்குவதற்கு முதல் வீராங்கனை யாக வந்தவர் பார்வதி போன்றவர்கள்தான்! அவர் பெயர் என்றைக்கும் நிலைக்கும் வகையில், பெரியார் திடலில் உள்ள ஓர் இடத்திற்குப் பார்வதி அம்மையாரின் பெயர் வைக்கப்படும்! என்றார் திராவிடர் கழகத் தலை வர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
பெரியார் பெருந்தொண்டர் க.பார்வதி அவர்களின் படத்திறப்பு - நினைவேந்தல் நிகழ்வு!
கடந்த 23.11.2023 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் உள்ள அன்னை மணியம்மையார் அரங்கில் நடைபெற்ற ‘சுயமரியாதைச் சுடரொளி' பெரியார் பெருந்தொண்டர் மறைந்த க.பார்வதி அவர்களின் படத்தினைத் திறந்து வைத்து நினைவேந்தல் உரை யாற்றினார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
அவரது நினைவேந்தல் உரை வருமாறு:
துணிவாக வந்து பேசுகிறார்கள்;
தெளிவாகப் பேசுகிறார்கள்!
மிகுந்த வேதனையோடும், துன்பத்தோடும், துய ரத்தை அனைவரோடும் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்கிற உந்துதலாலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளக் கூடிய வாய்ப்பைப் பெற்ற நான், உங்களை யெல்லாம் பார்க்கும்பொழுது ஆறுதல் பெறுகின்றேன். பார்வதி என்கிற கொள்கைப் பட்டறையில் உருவாக்கப் பட்ட அறிவாயுதங்கள் பலரும் இங்கே பேசியதை யெல்லாம் கேட்டபொழுது பார்வதி மறையவில்லை; பார்வாதி வாழுகிறார், வாழ்ந்து கொண்டிருக்கிறார். ஒரு பார்வதி மறைந்தாலும் உடலால், பல பார்வதிகளை உருவாக்கிவிட்டுத்தான் போயிருக்கிறார் என்று சொல்லக்கூடிய அளவிற்கு, ஒரு தெம்பூட்டக் கூடிய தாகும். இது ஒரு தொடர் பயணம் - பல நேரங்களில் இயற்கையின் கோணல் புத்தி - அது அதனுடைய கடமையைச் செய்யும் - அதுதான் இயற்கையினுடைய கூறு. அதற்காக நாம் வருத்தப்படுவதற்கு வாய்ப்பில்லை. ஆனாலும், ஆறுதல் அடையவேண்டும்.
அவரோடு இந்தக் கொள்கை முடியவில்லை - அவர்களுக்குப் பிறகும் அது வளர்ந்திருக்கிறது
அவர்களோடு முடிந்துவிட்டது என்று சொன்னால், அந்தக் கொள்கைக்குப் பெருமை இல்லை. அவர் களுக்குப் பிறகும் அது வளர்ந்திருக்கிறது என்று சொல்லும்பொழுதுதான், அவர்களுக்குப் பெருமை - அவர்களுடைய தொண்டினுடைய சிறப்பு என்கிற பெருமைக்குரிய நிகழ்ச்சியில் - முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் பார்வதி அவர்களுடைய படத்திறப்பு - நினைவேந்தல் நிகழ்ச்சியில் உரையாற்றிய கழகத் துணைத் தலைவர் மானமிகு கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே,
கழகத்தினுடைய பிரச்சார செயலாளர் அருமைத் தோழர் வழக்குரைஞர் அருள்மொழி அவர்களே,
அறிமுக உரையாற்றிய தோழர் திராவிடர் கழக சட்டத்துறை அணியின் அமைப்பாளரும், பெரியார் நூலக வாசகர் வட்டத் தலைவருமான அருமைத் தோழர் வீரமர்த்தினி அவர்களே,
வரவேற்புரையாற்றிய கழகத் துணைப் பொதுச் செயலாளர் பொறியாளர் ச.இன்பக்கனி அவர்களே,
பார்வதி அம்மையாருடைய செல்லப் பிள்ளையாக உருவாக்கப்பட்டவர்களில் முதன்மையானவராக இருக் கக்கூடிய நம்முடைய டெய்சி.மணியம்மை அவர்களே,
மற்றும் அவரை இழந்து நாம் துயரமடைகிறோம், துன்பப்படுகிறோம் என்றாலும், நேரிடையாக குருதி உறவு என்ற அடிப்படையில், மிகப்பெரிய அளவிற்குப் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கக்கூடிய அருமை பார்வதி அம்மையாரின் குடும்பத்து உறவுகளாக இருக்கக்கூடிய சகோதரர்களே, சகோதரிகளே, நண்பர்களே, வந்திருக்கக் கூடிய சான்றோர்ப் பெருமக்களே, கழக குடும்ப கொள்கை உறவுகளே உங்கள் அனைவருக்கும் என் அன்பார்ந்த வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கி றேன்.
அவருடைய பணிகளைப் பற்றி இங்கே நிறைய சொன்னார்கள் - எங்களைப் பொறுத்தவரையில், நம்மைப் பொறுத்தவரையில் இந்த இழப்பு என்பது சாதாரணமானதல்ல. என்னதான் நமக்கு ஆறுதல் சொன்னாலும்கூட, மிக முக்கியமான ஒரு காலகட்டத்தில், ஒரு சிலர் அவர்கள் களத்திற்கு வரவேண்டும் என்கிற அவசியமில்லை; அவர்கள் இருக்கிறார்கள் என்கிற துணிவு இருக்கிறதே - அதுவே நமக்குத் தெம்பூட்டக் கூடிய துணிவாகும்.;
அதுபோன்று, பார்வதி அம்மையார் கொஞ்ச காலத்திற்கு முன்பு, அவர்கள் போராட்டக் களத்தில் பங்கேற்பதற்குத் தயாராக இருந்தாலும், நாங்கள் அனுமதிக்கவில்லை.
பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன அறக்கட்டளையின் உறுப்பினர் அவர்!
கடைசியாக அவரைப் பார்த்தது இங்கேதான் - பேசியதும் இங்கேதான் - பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன அறக்கட்டளையின் உறுப்பினர் அவர். அறக்கட்டளையின் கூட்டம் நடைபெறும்பொழுது, அறக்கட்டளையின் உறுப்பினர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பப்படும். அந்த அழைப்பிதழை எடுத்துக் கொண்டு, எல்லோரையும் பார்க்கவேண்டும் என்று இங்கே வந்துவிட்டார்.
அப்படி வந்தவர்கள் அனைவரையும் வரவேற்பது தான் என்னுடைய கடமை. ஆனால், பார்வதி அவர்கள் வந்தபொழுது, நான் அவரிடம் உரிமை எடுத்துக்கொண்டு, ‘‘ஏம்மா, நீங்கள் வந்தீர்கள்? அழைப்பிதழ் எல்லோ ருக்கும் வழக்கமாக அனுப்புவார்கள். ஆனால், நீங்கள் ஏன் இங்கே வந்தீர்கள்? உங்களைத்தான் வரக்கூடாது என்று நான் சொல்லியிருக்கிறேனே! நாங்கள்தான் உங்களை வந்து பார்க்கவேண்டும்'' என்றேன்.
மூன்று, நான்குமுறை இதய நோயிலிருந்து அவர் காப்பாற்றப்பட்டார்
ஏனென்றால், அவருடைய உடல்நிலை கடைசி கட்டத்தில் அவ்வளவுக் கடினமான நிலை. மூன்று, நான்கு முறை அலை வந்ததைப்போல, அலையிலிருந்து தப்பித்ததைப்போல, அவர் இதய நோயிலிருந்து காப்பாற்றப்பட்டார்.
இதய நோய் என்பது எங்களைப் போன்ற வர்களுக்கும் இருக்கிறது என்றாலும்கூட, ஒவ் வொருவருக்கும் ஒவ்வொரு வகையில் இருக்கும். அது பார்வதி அம்மையாரைப் பொறுத்தவரைக்கும் மிகவும் துல்லியமான சங்கடங்களை உருவாக்கக் கூடியது. ஆகவே, அவர்களை மிகவும் கவனத் தோடு பார்த்துக்கொள்ளவேண்டும் என்கின்ற நிலை.
பார்வதி அவர்கள் இரண்டு, மூன்று முறை மருத்துவமனைக்குச் சென்று உச்சகட்ட சிகிச் சையை மேற்கொண்டவர்.
‘கண்ணாடி பாத்திரத்தை கல்தரையில் வைத்தாற்போல்...!’
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களுடைய கவிதையில் ஒரு வரியில் சொன்னதைப்போல் ‘கண் ணாடி பாத்திரத்தை கல்தரையில் வைத்தாற்போல்’ என்பது போன்று.
கண்ணாடி பாத்திரத்தை பொத்தென்றோ அல்லது வேகமாகவோ கீழே வைக்க முடியுமா? ‘கண்ணாடி பாத்திரத்தை கல்தரையில் வைத்தாற்போல்' என்றால், என்ன அர்த்தம்? சாதாரண தரையாக இருந்தாலும் பரவாயில்லை; அல்லது மெத்தையாக இருந்தாலும் பரவாயில்லை. அதுபோன்று அவருடைய உடல்நிலை இருந்தது. அந்நிலையிலும் அவர் உழைத்தார்.
இங்கே சொன்னார்கள், அவருடைய பெருமை களையும், சாதனைகளையும் சொன்னார்கள். இங்கே கவிஞர் சொன்னதுபோன்று, அவரை இந்த அளவிற்குத் தயார் செய்தது அவருடைய வாழ்விணையர் கணேசன் அவர்களாவார் - முதல் பெருமை அவருக்குத்தான்.
மிக அமைதியானவர், அதிகமாக யாரிடமும் பேசமாட்டார். இயக்க ரீதியான செயல்பாடுகள் - எங்கள் வீட்டிற்கு வந்தால்கூட என்னுடைய வாழ்விணையர் மோகனா அவர்களிடம் பேசிக் கொண்டிருப்பார். என்னிடம் இயக்கத்தைப்பற்றி மட்டும்தான் பேசுவார்.
ஆனால், எல்லாவற்றையும் அவர் கடமை உணர்ச்சியோடு எதையும் செய்வார்.
இந்த இயக்கத்தினுடைய தொண்டராக, தோழராக இத்தனை ஆண்டுகள் இருப்பதில், இவ்வளவு மகிழ்ச்சி யோடு இருப்பதில், குடும்பப் பாசத்தோடு இருப்பதில் - குருதிக் குடும்பத்தைவிட, கொள்கைக் குடும்ப உறவுகள்தான் மிக நெருக்கமானது என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கின்ற இயக்கம் திராவிடர் கழகம். தந்தை பெரியார் அவர்களுடைய இயக்கம்.
மற்ற கட்சிகளுக்கும், நம்முடைய இயக்கத்திற்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால், ஆடம்பரத்தில் பிறந்த இயக்கமல்ல இந்த இயக்கம். எங்கே சென்றாலும், திண்ணையில்தான் படுத்திருப்போம். இயக்கத் தோழர் களோடு குடும்ப ரீதியாகத்தான் பழகுவோம். எந்த வசதியையும் பார்க்காமல் பழகுவோம். ஓர் அன்பு, ஒரு கூட்டுக் குடும்பம்போல் பழகுவோம்.
நம் நாட்டில் பெண்கள் பொதுவாழ்க்கைக்கு
வருவது என்பதே அபூர்வம்!
இதுவரையில் இந்த இயக்கத்திற்கு உள்ள ஒரு பெரிய செல்வம் என்னவென்றால், நம் நாட்டு வாழ்க்கை முறையில், சமூகத்தினுடைய நிலையில், பெண்கள் பொதுவாழ்க்கைக்கு வருவது என்பதே அபூர்வம். தப்பித் தவறி வருபவர்களை நல்ல பெயரோடு இருக்கவிடமாட்டார்கள்.
சாதாரணமாகவே ஒரு குறுகிய மனப்பான்மை நம்முடைய நாட்டில் உண்டு. ‘‘என்ன அவர்கள் இரண்டு பேரும் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருக்கிறார்களே?'' என்பார்கள்.
1980 ஆம் ஆண்டில்
மகளிரணியைத் தொடங்குவதற்கு முதல் வீராங்கனையாக வந்தவர்
ஆக, அப்படிப்பட்ட ஒரு சிந்தனை இருக்கின்ற இடத்தில், இந்த இயக்கத்தில், அன்னை மணியம் மையார் இருக்கும்பொழுதே மகளிரணியைத் தொடங்கவேண்டும் என்று சொன்னேன். சில நாள்களில் அன்னை மணியம்மையார் மறைந்து விட்டார். அதற்குப் பிறகு திராவிடர் கழக மகளி ரணியைத் தொடங்குவதற்குத் தயங்கினார்கள். அதற்குப் பிறகு. 1980 ஆம் ஆண்டில் மகளிர ணியைத் தொடங்குவதற்கு முதல் வீராங்கனையாக வந்தவர் பார்வதி போன்றவர்கள்தான்.
இந்த இயக்கத்தைப்பற்றி யார் வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் விமர்சனம்கூட செய்திருக் கலாம். ஆனால், மகளிர் சம்பந்தப்பட்ட முறையில், ஒரு சிறு விமர்சனம் இன்றைய வரையில் வந்ததில்லை என்றால், இந்த இயக்கத்தினுடைய சிறப்பைப்பற்றி நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.
காரணம், இந்த இயக்கம், பெண்ணுரிமைப் பேணு தலை, அந்தக் கொள்கையை மனதார உணர்ந்திருக்கிறது என்பதால்தான். தந்தை பெரியாருக்கே அந்தப் பெருமை சேரும்.
நம்முடைய மாநாடுகளில் சமமாக அமர்ந்து உண்ணுதல் என்பதே ஒரு பெரிய புரட்சியாக இருந்தது. ‘‘இன்ன ஜாதிக்காரர்கள் சமைப்பார்கள் - இந்த மாநாட்டிற்கு வாருங்கள்'' என்று சொல்லி மாநாடு நடத்தியது ஒரு பெரிய சாதனை.
‘‘பெண்களுக்குத் தனி இடம் உண்டு’’ என்று விளம்பரம் செய்யாத ஒரே இயக்கம்!
அது எப்படி ஒரு பெரிய புரட்சியோ - அதே மாதிரி, நம்முடைய இயக்கத்தின் தனிப்பட்ட சிறப்பு என்னவென்றால், ‘‘பெண்களுக்குத் தனி இடம் உண்டு'' என்று விளம்பரம் செய்யாத ஒரே இயக்கம் நம்முடைய இயக்கம்தான். எல்லோரும், எல்லா இடங்களிலும் அமர்ந்திருப்பார்கள்.
நம்முடைய மாநாடுகள் பந்தல் போட்டுத்தான் நடைபெறும். அந்த மாநாட்டுப் பந்தலில் எல் லோரும் படுத்திருப்பார்கள். அறிமுகமாகிப் பேசிக் கொண்டிருப்பார்கள். உறவுகளாகவும், கொள்கை உறவுகளாகவும் இருப்பார்கள்.
நீதிக்கட்சியின் செயலாளர்
திருச்செந்தூர் பரமசிவம்
இப்பொழுது மட்டுமல்ல, நாமெல்லாம் இயக்கத்திற்கு வருவதற்கு முன்பே அய்யா காலத்தில் சுயமரியாதை இயக்கத்திற்குக் குடும்பம் குடும்பமாக வருவார்கள். நம்முடைய அருள்மொழிகூட ‘முரசொலி'யில் சுயமரி யாதை இயக்க மகளிர்பற்றி எழுதிக் கொண்டிருக்கிறார்.
நீதிக்கட்சியினுடைய செயலாளராக இருந்தவர், திருச்செந்தூர் பரமசிவம் என்பது அவருடைய பெயர். பழைய தோழர்களுக்கு அவரை நன்றாகத் தெரியும். ஜிப்பா அணிந்துகொண்டிருப்பார்.
இரவு 11 மணிக்கு வீட்டிற்கு வருவார்; கதவைத் தட்டுவார் - எங்களைப் பார்க்கமாட்டார் - ‘‘அம்மா, பசிக்குது, என்ன இருக்கிறது சாப்பிடுவதற்கு?'' என்று உரிமையோடு கேட்பார்.
மற்றவர்கள் பசியாக இருந்தாலும், கவுரத்திற்காகவது சொல்லமாட்டார்கள். ஆனால், இயக்கம் என்பது அப்படிப்பட்டதல்ல; இந்தக் கொள்கை உறவு முறை என்பது மிகவும் தெளிவானதாகும். தாயாகவும், பிள் ளையாகவும் பழகக்கூடிய உணர்வு; தங்கையாய், அண் ணனாய் பழகக்கூடிய உணர்வு. இந்த உணர்வு குடும்பப் பிரச்சினை ஏற்பட்டாலும்கூட, பேசித் தீர்க்கக்கூடிய ஒரு வாய்ப்பைப் பெற்ற ஓர் இயக்கம்.
இது அய்யா, அம்மா காலத்திலிருந்தே இருக்கிறது. ஒரு சிறு பிரச்சினைகள்கூட வந்ததே கிடையாது. அப்படி ஒரு கொள்கை நெறியைக் கடைப்பிடிப்பவர்கள் நாம் மட்டுமே! காரணம், நம்முடைய கொள்கைகள் தீவிரமான கொள்கைகளாகும்.
இந்தத் தீவிரமான கொள்கை - சமத்துவத்தைப் பேசுகின்ற ஒரு கொள்கை இருக்கின்ற இடத்தில் பொது ஒழுக்கம் என்பதும், தனி மனித ஒழுக்கம் என்பதும் மிக முக்கியம்.
இயக்கத்தில் ஒரு சிறு மாசுகூட ஏற்படக்கூடாது!
அதை தந்தை பெரியார் அவர்கள், பொதுவாகச் சொல்லும்பொழுது, ‘‘நான் பொதுச் செய்திகளைச் சொன் னாலும், இயக்கத்தைப் பொறுத்தவரையில், இயக்கத்தில் ஒரு சிறு மாசுகூட ஏற்படக்கூடாது'' என்று மிக அழகாகச் சொல்வார்.
அதையெல்லாம் மனதில் நிறுத்தி இந்தப் பிள்ளை களை பிரச்சாரத்திற்கு அழைத்துக் கொண்டு போகும் போது எப்படியெல்லாம் பார்வதி அவர்கள் பாதுகாப்பாக இருந்தார்கள் என்பது மிக முக்கியமாகத் தெரிந்த ஒன்று.
ஓட்டல்களில் தனியாகத் தங்குவது போன்ற நிலை கிடையாது. சுதந்திரம் என்பது வேறு; உரிமைகள் என்பது வேறு. கடமைகளும், பாதுகாப்பும் என்பது வேறு. இதில் முரண்பாடு கிடையாது.
கட்டுப்பாட்டிற்கும், அடிமைத்தனத்திற்கும் வேறுபாடு இருக்கிறது!
திராவிடர் கழகம் என்றால் கட்டுப்பாடு. அந்தக் கட்டுப்பாடு தவறியவர்கள் என்று இயக்கத் தோழர்களை யாரும் சொல்ல முடியாது. அந்தக் கட்டுப்பாட்டிற்கும், அடிமைத்தனத்திற்கும் வேறுபாடு இருக்கிறது. கார் ஓட்டுவது நமது உரிமை; ஓட்டுநர் உரிமம் வைத்தி ருப்பதால் எங்கே வேண்டுமானாலும் கார் ஓட்டிக் கொண்டு போகலாம். சிவப்பு விளக்கு எரியும்பொழுது, காரை நிறுத்தவேண்டும். யாருக்காக? நமக்காக?
அது காவல்துறையினருக்காக அல்ல; நம்முடைய பாதுகாப்பிற்காக. பச்சை விளக்கு எரிந்தால், போகலாம்.
எதற்காக?
இல்லை என்றால், இரண்டு பக்கமும் வருகின்ற வாகனங்கள் ஒன்றையொன்று மோதிக்கொண்டு விபத்து ஏற்படும்.
கடைசி வரையில் கொள்கை
உறுதியோடு இருந்தவர்
எப்படி அந்த உணர்வு வருகிறதோ, அது போன்று இந்த இயக்கம் பகுத்தறிவு இயக்கம் என்பதை அடிப்படையில் உணர்ந்து, பார்வதி போன்றவர்கள் போட்ட பாதை அறிவுப் பாதை யாகும். அவர்கள் அந்தப் பட்டறையில் உருவாகி யவர் என்பதால் கடைசி வரையில் கொள்கை உறுதியோடு இருந்தார்கள்.
அதுதான் இந்த இயக்கத்தினுடைய பெருமை!
இந்த இயக்கத்தை யாரும் எளிதில், எப்பேர்ப்பட்ட ஆட்களாக இருந்தாலும் குறை சொல்ல முடியாது.
அதேநேரத்தில், கடவுளைப்பற்றி பேசுகிறவர்கள்; பெரிய பரந்த பாரத தேசம் என்று பேசுகிறவர்கள்; உலகப் பார்வை என்று சொல்லக்கூடியவர்கள் - இவர்கள் எல்லாம் நம் அருகே நெருங்கவே முடியாது.
எல்லாவற்றிற்கும் எடுத்துக்காட்டாக இருக்கக்கூடியவர்கள் தந்தை பெரியாரின் தொண்டர்கள்!
இந்தப் பெருமை இந்த இயக்கத்திற்கு இருக்கக் கூடிய பெருமை. அந்த அளவிற்கு எல்லா ஒழுக் கத்திலும் - சமூக ஒழுக்கத்தையும் பார்த்து, அவற்றை மனதில் நிறுத்தி, தனி மனித ஒழுக்கத் தையும் பார்த்து எல்லாவற்றிற்கும் எடுத்துக் காட்டாக இருக்கக்கூடியவர்கள் தந்தை பெரியாரது தொண்டர்கள்.இவர்கள் எல்லாம் பெரிய வசதியானவர்களா என்றால், கிடையாது. பெரிய நிலையில் இருப்பவர்களைப் பற்றி நாம் கவலைப்படுவது இல்லை.
நம்முடைய மகளிர் நன்கொடை வசூலிக்கும்பொழுது அவர்களை எவ்வளவு கொச்சையாகப் பேசியிருக் கிறார்கள்? பார்வதி அவர்களும், மற்றவர்களும் சொல் வார்கள். அதற்கு நாங்களும் பதில் சொல்லியிருக்கிறோம் என்று சொல்வார்கள்.
ஒவ்வொரு நிகழ்ச்சியையும் மிகச் சிறப்பாக நடத்துவார்கள்.
ஆகவே, சமூகத்தில் எந்தக் கொள்கையை சொல் லுகிறோமோ, அந்தக் கொள்கைப்படி வாழ்ந்து காட்டியது மட்டுமல்ல - இனி வாழவேண்டியவர்களுக்கும் இந்தக் கொள்கையை எப்பொழுதும் அமையக்கூடிய ஒரு நிரந்தரமான வழிகாட்டிக் கொள்கை - பயனுள்ள கொள்கை என்று காட்டியிருக்கிறார். அதுதான் பார்வதி அம்மையாரின் இந்தப் படம்.
ஆகவே, அவர்களைப் பொறுத்தவரையில், எவ்வளவு கஷ்டம் வந்தாலும், எவ்வளவு சங்கடங்கள் இருந்தாலும், அவற்றைத் தான் தாங்கிக் கொண்டு, தம்முடைய குடும்பத்தையும் சிறப்புடையதாக்கினார். அவர் மறைந்தவுடன், இயக்கத்திற்கு அவருடைய பிள்ளைகள் வரவேண்டும் என்கிற அவசியம்கூட இல்லை.
இங்கே நண்பர்கள் சுட்டிக்காட்டியதைப்போல, அந்த அளவிற்குத் தமது பிள்ளைகளை அவர் இயக்க உணர்வோடு ஆளாக்கி இருக்கிறார்.
இன்னொரு செய்தியை உங்களுக்குச் சொல்கிறேன் - இவ்வளவு நெருக்கமாக திடலில் இருந்தவர்கள் - பார்வதியாக இருந்தாலும், மனோரஞ்சிதமாக இருந்தாலும், அம்மா திருமகள் ஆனாலும், இறையன் ஆனாலும் அவ்வளவு நெருக்கமாக இருந்தார்கள்.
தங்களுக்காக, தங்கள் குடும்பத்தினருக்காக ஒருபோதும் பரிந்துரைக்காக வந்ததில்லை!
மற்ற அமைப்புகளுக்கும், நம்முடைய அமைப்பிற்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால், மற்றவர்களுக் காகத்தான் அவர்கள் பரிந்துரைக்கு வந்திருப்பார்களே தவிர, தங்களுக்காக, தங்கள் குடும்பத்தினருக்காக ஒருபோதும் பரிந்துரைக்காக வந்தது கிடையாது.
யோசிப்பார்கள், நமக்காக, நாம் எப்படிப் போய் கேட்பது? என்று.
அவர்களுக்காக மற்றவர்கள் கேட்டிருப்பார்களே தவிர, அவர்கள் தங்களுக்காக கேட்கமாட்டார்கள். இந்த இயக்கத்தினுடைய தனித்தன்மை அதுதான்.
அப்படிப்பட்ட ஒரு சிறப்பான சூழ்நிலையில், இன் றைக்கு வாழ்ந்து காட்டக்கூடிய ஒரு பெருமையை, அவர்கள் தனிப்பட்ட முறையிலும் சரி, பொது வாழ்க்கையிலும் சரி சிறப்பாக வாழ்ந்திருக்கிறார்.
அவர் ஒரு பிரச்சார இயந்திரம்!
அதைவிட, யாரிடம் அவர் பேசினாலும், இந்தக் கொள்கையை ஏற்றுக்கொள்ள வைப்பதில், அவர் ஒரு பிரச்சார இயந்திரம்.
அவர்களும் சரி, டெய்சி அவர்களும் சரி. நம்முடைய மகளிரணி என்பதே ஒரு தனித்தன்மையானது. அந்த அணியில் நிறைய பேர் இருக்கிறார்களா? இல்லையா? என்பதைப்பற்றி கவலைப்படவேண்டிய அவசியமே இல்லை.
நிறைய பேர் இருக்க முடியாது, அறிவியல் ரீதியாக. விஞ்ஞானிகள் குறைவாகத்தான் இருப்பார்கள். டாக்டர் கள் குறைவாகத்தான் இருப்பார்கள். அதனால், எண் ணிக்கையை வைத்து முடிவு செய்வதல்ல - அவர்கள் என்ன பணி செய்கிறார்கள்? சமூகத்திற்கு எப்படி பயன்படுகிறார்கள்? என்பதை வைத்துத்தான் முடிவு செய்யவேண்டும்.
என் நெஞ்சைத் தொடுகின்ற விஷயம்!
ஆகவேதான், பார்வதி அவர்கள் வெறும் படமல்ல - பாடம். உடல்நலம் குறைந்த நிலையில்கூட, தனக்கு முடிவு எப்பொழுது வேண்டுமானாலும் ஏற்படும் - ஆகவே, நாம் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்று அவர்கள் நினைக்கவில்லை. நம்முடைய கடமையை நாம் சரியாக செய்துகொண்டிருப்போம் என்று மற்றவர் களைத் தொடர்புகொள்ளவேண்டும் என்று இயக்கம் சம்பந்தமாக பேசியவாறு இருந்துள்ளார். என் நெஞ்சைத் தொடுகின்ற விஷயம் என்னவென்றால், கவிஞர் அவர்கள் சொன்னார்; என்னுடைய பிறந்த நாள் அன்று நான் திடலுக்கு வருவதில்லை. அது ஒரு சடங்கு என்று நினைத்து கூடுமானவரையில் அதைத் தவிர்த்து விடுவேன்.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் கண்டிப்பாக வரவேண்டும் என்று சொல்லியதால்தான் ஒரு சில பிறந்த நாளுக்கு நான் வந்திருக்கிறேன்.
இந்த ஆண்டு பிறந்த நாளுக்காக மகளிரணியினர் மலர் வெளியிட இருக்கிறார்கள் என்று என்னிடம் சொன்னார்கள். நான் விடுதலை சந்தா கொடுங்கள் அது போதும் என்றேன்.
இருந்தாலும் மகளிரணியினர் மலர் போடுகின்ற பணியைச் செய்துகொண்டிருக்கிறார்கள். அதிலும் அந்த மலருக்காக விளம்பரம் வாங்குவதிலிருந்து பல பணிகளைச் செய்தவர் யார் என்றால், மறைந்தும் மறை யாமல் நம் நெஞ்சங்களில் நிறைந்துள்ள பார்வதி அவர்கள்.
விதவைகளுக்குப் பூச்சூட்டு விழா- அடிமைச் சின்னமான
தாலி அறுக்கும் நிகழ்ச்சி!
ஆகவே, அவர்களுக்கு உடல்நலக் குறைவு இருந்தாலும், நாம் இயக்கப் பணிகளை செய்ய வேண்டும் என்பதிலேயே குறிக்கோளாக இருந் தார். இயக்கத் தோழர்களை, இயக்கக் குடும்பத்த வர்களை ஒருங்கிணைக்கவேண்டும். மற்றவர்க ளோடு பேசவேண்டும் என்பதில் ஆர்வம் உள்ளவராக இருந்தார்.
விதவைகளுக்குப் பூச்சூட்டு விழா- அடிமைச் சின்னமான தாலி அறுக்கும் நிகழ்ச்சிகளை வேறு எந்த இயக்கமும் செய்தது இல்லை.
விதவைகளுக்குப் பூச்சூட்டுவிழா என்றதும், மற்றவர் கள் அதிசயப்பட்டார்கள்; ஆத்திரப்பட்டார்கள்; பயப் பட்டார்கள் என்பது ஒருபுறம் இருக்க - அந்தப் பூச்சூட்டு விழாவிற்கு ஆள்களைத் தேடுவதே கடினமாக இருந்தது.
நான், பார்வதி அவர்களிடம் சொன்னேன், “இந்த விழாவிற்கு ஆள் வருவதற்கே கஷ்டம் போலிருக்கிறதே'' என்றேன்.
பார்வதி அவர்கள் சொன்னார், ‘‘இங்கே வந்தாலும், மேடைக்கு வருவதற்குத் தயங்குகிறார்கள்'' என்றார்.
நீங்கள் ஒரு முன்மாதிரியாக இருக்கலாமே!
‘‘யார் வரவில்லை என்றால் என்ன, உங்களைப் போன்றவர்கள் இருக்கிறீர்கள் அல்லவா - உங்களை இதுவரை விதவை என்று சொன்னதில்லை. ரெடிமேடாக நீங்கள் எல்லாம் இருக்கும்பொழுது, நாம் ஏன் கவலைப்படவேண்டும். நீங்கள் ஒரு முன்மாதிரியாக இருக்கலாமே'' என்றேன்.
நமக்கொன்றும் சடங்கு இல்லை, சம்பிரதாயம் இல்லை என்றேன்.
உடனே சரி என்றார் அவர்.
எளிய நிலையில் வாழ்ந்துகொண்டு, பிள்ளை களையெல்லாம் ஆளாக்கியுள்ளார்.
பார்வதி அம்மையாருக்கு
‘வாழ்நாள் சாதனையாளர்' விருது!
பார்வதி அம்மையாருக்கு ‘வாழ்நாள் சாதனையாளர்' விருதாக ரூ.ஒரு லட்சத்தை சின்னக்குத்தூசி அறக்கட் டளை சார்பாக ‘நக்கீரன்' கோபால் அவர்கள் வழங்கினார்.
அந்த விருது தொகையான ஒரு லட்சம் ரூபாயை அவரது குடும்பத்திற்குக் கொடுக்கப் போகிறேன் என்று அவர் சொல்லவில்லை; இயக்கத்திற்குக் கொடுக்கிறேன் என்று சொன்னார்.
நான் அவரிடம், ‘‘உங்களுக்கு சில கடமைகள் இருக் கின்றன; இயக்கத்திற்கு உங்களுடைய உழைப்பைக் கொடுத்திருக்கிறீர்கள். தேவைப்படும்பொழுது நாங்கள் சொல்கிறோம்'' என்று சொல்லிவிட்டு, அவரையே வைத்துக் கொள்ளச் சொல்லிவிட்டேன்.
பெரிய வசதி படைத்தவர்களிடம் ஒரு லட்சம் ரூபாயை விருதாகக் கொடுத்தால், அதை அவ்வளவு சீக்கிரம் இயக்கத்திற்குக் கொடுக்கக்கூடிய மனப்பான்மை வருமா?
இயக்கத்தை முன்னிலைப்படுத்தி,
குடும்பத்தைப் பின்னால் நிறுத்தினார்!
எந்த அளவிற்கு பார்வதி அவர்கள், இயக் கத்தை முன்னிலைப்படுத்தி, குடும்பத்தைப் பின் னால் நிறுத்தினார் என்பதற்கு இந்நிகழ்வு ஓர் அடையாளம்.
அவர் மறைவதற்கு முன்புகூட, ‘‘நான் இறந்ததற்குப் பிறகு எனக்கு மாலை, மலர்வளையம் வைக்கவேண்டாம். அதற்குப் பதில் என் உடலருகே ஓர் உண்டியல் வைத்து, மாலைக்குத் தரும் பணத்தை அதில் தோழர்கள் நன்கொடை யாகப் போடவேண்டும். அப்படி வரும் தொகை யைப் பெரியார் உலகத்திற்கு நன்கொடையாகத் தரவேண்டும்'' என்று தன் விருப்பத்தைத் தெரிவித்து, அதையே நிறைவேற்றிக் காட்டியிருக் கிறார்கள் தமது குடும்பத்தினர்மூலம்.
எத்தகைய கொள்கை உணர்வு - இயக்க உணர்வு பாருங்கள்!
வாழும் காலம் எல்லாம் இயக்கத்திற்குத் தன்னுடைய உழைப்பைக் கொடுத்து, நன்கொடை திரட்டி, இயக்கத் திற்குப் பங்களித்ததுபோல், தான் மறைந்தாலும், அதுவும் இந்த இயக்கத்திற்குப் பயன் தரவேண்டும் என்று கருதுகிறார் என்றால், எந்த அளவிற்கு ஆழமாகச் சிந் தித்திருக்கிறார் பாருங்கள்! அவர்கள்தான் பெரியார் தொண்டர்கள்!
‘‘செத்தும் கொடுத்தார்'' என்று சொல்வார்களே, அப்படித்தான் நம்முடைய பெரியார் பெருந்தொண்டர் பார்வதி அவர்கள் தன்னுடைய மறைவிற்குப் பிறகும் இயக்கத்திற்கு, பெரியார் உலகத்திற்குப் பங்களித்தி ருக்கிறார்.
இப்படி முழுக்க முழுக்க இயக்கம் முன்னால் - கொள்கை அதற்கு முன்னால் -கடமை அதற்கு முன்னால் என்று மிகப்பெரிய அளவிற்குக் கட்டுப்பா டோடு நடந்து, மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கக் கூடிய பார்வதி அம்மையாருடைய மறைவு என்பது, நமக்கு ஈடு செய்ய முடியாத ஓர் இழப்பாகும். பார்வதி அம்மையார் அவர்கள் என்றைக்கும் எடுத்துக்காட்டாகத் திகழக்கூடியவர்.
பெரியார் திடலில் உள்ள ஓர் இடத்திற்குப் பார்வதி அம்மையாரின் பெயர் வைக்கப்படும்!
அவருடைய பெயர் என்றைக்கும் நிலைக்கும் வகையில், எப்படி திருமகள் இறையன் பெயரில் பெரியார் திடலில் உள்ள கூடத்திற்குப் பெயர் வைக்கப் பட்டு இருக்கிறதோ, அதுபோல, பெரியார் திடலில் உள்ள ஓர் இடத்திற்குப் பார்வதி அம்மையாரின் பெயர் வைக்கப்படும் என்பதை மகிழ்ச்சியோடு உங்களுக்குச் சொல்லி, விடைபெறுகிறேன்.
நன்றி, வணக்கம்!
- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நினைவேந்தல் உரையாற்றினார்.
No comments:
Post a Comment