“உன் சாஸ்திரத்தை விட, உன் முன்னோரை விட, உன் வெங்காயம் வௌக்குமாத்தை விட உன் அறிவு பெரிது. அதை சிந்தி என பெரியார் சொல்லியிருக்கிறார்”
பெரியாரின் கருத்துகள் அறிவியலோடு ஒத்துப் போகின்றன. குறிப்பாக இந்த வார்த்தை நிலவு பயணத்திற்கு ஒன்றிப் போகிறது என்று மயில்சாமி அண்ணாதுரை கூறியுள்ளார்.
இந்தியாவின் நிலவு மனிதர் என்று புகழப்படும் இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை சிங்கப்பூரில் 'பெரியாரும் அறிவியலும்' எனும் நிகழ்ச்சியில் பேசிய காட்சிப்பதிவு சோஷியல் மீடியாவில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றத்தின் ஏற்பாட்டில் பெரியார் விழா 2023, கடந்த 5ஆம் தேதி மாலை உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் 'பெரியாரும் அறிவியலும்' என்ற தலைப்பில் நடைபெற்றது.
இதில் பங்கேற்று பேசியிருந்த இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, தன்னுடைய வளர்ச்சிக்கு பெரியாரின் கருத்துக்கள்தான் காரணம் என்று கூறியிருக் கிறார்.
சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் இஸ்ரோவின் சாதனைகள் குறித்தும், அறிவியல் பார்வை யில் பெரியார் சொன்ன கருத்துக்கள் குறித்தும் அவர் விரிவாக பேசியிருந்தார். குறிப்பாக, சாஸ்திர, சம்பிரதா யங்கள் குறித்து அவர் பேசியது குறித்து அவர் விளக்கிய பகுதி சோஷியல் மீடியாக்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
இந்தக் காட்சிப் பதிவில் அவர் பேசியதாவது, "யார் சொல் லியிருந்தாலும், எங்கு படித்திருந்தாலும், நானே சொன்னா லும் உனது புத்திக்கும் பொது அறிவுக்கும் பொருந்தாத எதையும் நம்பாதே. உன் சாஸ்திரத்தை விட, உன் முன்னோரை விட, உன் வெங்காயம் வௌக்குமாத்தை விட உன் அறிவு பெரிது. அதை சிந்தி என பெரியார் சொல்லியிருக்கிறார். பெரியாரின் கருத்துக்கள் அறிவியலோடு ஒத்துப்போகின்றன. குறிப்பாக இந்த வார்த்தை நிலவு பயணத்திற்கு ஒன்றிப் போகிறது.
கல்லூரியில் நீங்கள் படிக்கும் பாடப் புத்தகங்கள், ஆய்வுக் கட்டுரைகள் ஆகியவற்றை கூட அப்படியே நம்பி விட வேண்டிய அவசியமில்லை என்று பெரியார் சொல்லியிருக்கிறார். நான் இதற்கு முன்னர் பல செயற்கைக் கோள்களை செய்திருந்தாலும், சந்திரயான் எனும் செயற்கைக்கோள் தான் எனக்கு ஒரு முகவரியை கொடுத்தது. அடையாளத்தை கொடுத்தது. இதற்கு பின் புலத்தில் பெரியாரின் இந்த வார்த்தைகள்தான் இருக் கின்றன. இதுதான் என்னுள் விதையை விதைத்தது.
இதில் சாஸ்திரங்கள் என்றால் 'பழைய' என எடுத்துக் கொள்ளலாம். அதாவது என்னுடைய சிறு வயதில் நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் இறங்கி கற்களையும், மணலையும் கொண்டு வந்தார். அதன் பின்னர் 50,60,70 களில் உலக நாடுகள் சார்பில் சுமார் 99 பயணங்கள் நிலவுக்கு நடந் திருக்கிறது. இந்த பயணங்களின் முடிவில் நிலவில் நீர் இல்லை என்று சொல்லப்பட்டுவிட்டது. அதாவது சாஸ் திரத்தில் நிலவில் நீர் இல்லை என்று எழுதப்பட்டுவிட்டது.
ஆனால் எனக்குள் ஒரு கேள்வி எப்போதும் இருந்து கொண்டே இருந்தது. அதாவது, நான் சிறு வயதில் இருக்கும் போது மற்ற எல்லா குழந்தைகளைப் போலவே வானத்தை பார்த்து வளர்ந்தவன் தான். அப்போதெல்லாம் தெருவிளக்கு ஏதும் கிடையாது. எனவே நிலவை தெளி வாக பார்க்க முடி யும். இந்த பிரபஞ்சம் பல பில்லியன் கோடி கி.மீ. தொலை வுக்கு பரந்து விரிந்து இருக்கையில், நிலவு நமக்கு மிகவும் பக்கத்தில்தான், வெறும் 3 லட்சம் கி.மீ.இல் தான் இருக்கிறது.
ஆக பூமியில் தண்ணீர் இருக்கும் போது நிலவில் மட்டும் எப்படி தண்ணீர் இல்லாமல் இருக்கும்? என்ற கேள்வி எழுந்தது. இந்த கேள்விக்கு திருவள்ளுவரின் கருத்தும் எனக்குள் ஊக்கத்தை ஏற்படுத்தியது. அதாவது, 'எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு' என்று கூறியிருந்தார். பெரியாரும் திருக்குறளைத் தவிர வேறு எதையும் தமிழ் இலக்கியமாக ஏற்றுக்கொள்ளவில்லை.
இந்த கருத்துக்கள் தான் நான் விஞ்ஞானியாக பரிணமித்த போது நிலவில் நீரை கண்டுபிடிக்க உதவியது. அதாவது ரஷ்யாவும், அமெரிக்காவும் சென்ற பாதையில் செல்லாமல், வேறு பாதையில் நாங்கள் சந்திரயான்-1 செயற்கைக் கோளை இயக்கினோம். அவர்கள் பின்பற்றியது 'நிலவில் இறங்கு நீரை தேடு' எனும் திட்டம். ஆனால் நாம் பின்பற்றியது 'நீரை தேடு, பின்னர் நிலவில் இறங்கு' எனும் திட்டம். எனவேதான் ரோவரை அனுப்பாமல் வெறும் செயற்கைக் கோளை மட்டும் அனுப்பினோம்.
இது நிலவை மேலிருந்து கீழாக சுற்றி வந்தது. மற்ற நாடுகள் அனுப்பிய செயற்கைக்கோள்கள் நிலவை இடமிருந்து வலமாக சுற்றி வந்தன. மற்றவர்களை விட வித்தியாசமாக யோசித்ததால் தான் நம்மால் நிலவில் நீர் இருப்பதை கண்டுபிடிக்க முடிந்தது" என்று கூறியுள்ளார். இந்த காட்சிப்பதிவு குறித்து பலரும் பல்வேறு விதமான கருத்துக்களை கூறி வருகின்றனர்.
(தொகுப்பு:தமிழ்.ஒன் இந்தியா.காம்
பதிவில் இருந்து - தகவல்: கோ.கருணாநிதி)
No comments:
Post a Comment