இருக்கின்ற பள்ளிகளை மூடி விட்டு
எடு!துடைப்பம்! தைசெருப்பை!! என்றே அன்று
'பெருமூளை' ராஜாஜி போட்டார் ஆணை!
பெரியார்தான் களங்கண்டு அதைஉ டைத்தார்!!
ஒருபாதி நாம்கற்றோம்! இன்னும் இன்னும்
உச்சத்தைத் தொட்டோமா? இல்லை யில்லை!!
நெருப்பள்ளி நம்தலையில் போடுதற்கே
நீட்டுகிறார் 'விஸ்வகர்மா யோஜ னா'வை!!
பெரியார்தான் இல்லையென்ற பிழைநினைப்பு!
பேரறிஞர் மறைந்துவிட்ட மதமதப்பு!!
நெரிக்கின்றார் நம்கழுத்தை நீட்டைக் கொண்டு!
நெறியற்ற மனுநீதி வழியில் நின்றே!!
புரிநூலார் கல்விவேலை ஏப்பம் போட
போடுகின்றார் புதுத்திட்டம்! விட்டோமானால்
தறிகெட்டுப் போய்விடுமே தமிழர் நாடு!
தணல்பட்ட பஞ்சாகும் தமிழர் பாடு!!
நாதியற்றுப் போனோமோ என்றே நாமும்
நடுங்குகின்ற வேளையிலே பெரியார் போலே
வீதியிலே வீரமணி முழக்க மிட்டே
வெகுண்டெழுந்து வருகின்றார் ஊர்கள் தோறும்!!
ஆதிமுதல் வரலாற்றை அள்ளித் தந்தே
அடுக்கடுக்காய்ப் பாயுதவர் அம்புச் சொற்கள்!!
நீதியதை வெல்லுதற்கே அவரின் பின்னே
நிழலாக நாம்நிற்போம் வாஎன் தோழா!!
தொண்ணூறு வயதுதாண்டும் தொண்டின் எல்லை!
தொடர்நடையே ஓட்டமாகுங் காற்றின் பிள்ளை!!
கண்ணெல்லாம் ஒளிப்பிழம்பு! கருணை வெள்ளம்!
கருத்துக்கள் ஊறுகின்ற அறிவுக் கேணி!
தன்னலத்தை எண்ணாத தந்தை உள்ளம்!
தமிழ்நாடே அவர்விரலின் திசையில் நிற்கும்!!
உன்னைத்தான் அழைக்கின்றார் வாஎன் தோழா!
உறுபகையின் வாலறுப்போம் வாஎன் தோழா!!
- பாவலர் சுப முருகானந்தம்.
மாநிலத் துணைத் தலைவர்,
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்
No comments:
Post a Comment