தி.சிகாமணி
மூத்த பத்திரிகையாளர்
தொடர்ந்து உரிமைகள் பறிக்கப்பட்டு அதிகாரமற்றதாக ஆக்கப்பட்டிருக்கும் தமிழ்நாட்டிற்கு புதிய பேரிடியாக தொகுதி மறு வரையறை என்ற அறிவிப்பு வந்துள்ளது.
2001 மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பின் மறு வரையறை செய்யப்பட்டது அதன்பின் தற்போதுபோது 2026இல் மறு வரையறை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது 2026இல் நாட்டின் மக்கள் தொகை 142 கோடியாக இருக்கும் - மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி எல்லைகள் பிரிக்கப்படும். தொகுதி. மறு வரையறைக்குப்பின் இந்தியாவின் மக்களவை உறுப்பினர்களுக்கான இடங்கள் 543இல் இருந்து 753 ஆக உயரும். மக்கள் தொகை அதிகமாக உள்ள உத்தரப்பிரதேசத்தில் 80 இடங்கள் 128 இடங்களாக உயரும். பீகாரில் தற்போது உள்ள 40 இடங்கள் 70 இடங்களாக உயரும். மத்திய பிரதேசத்தில் உள்ள 29 இடங்கள் 47 இடங்களாக உயரும். மகாராட்டிராவில் 48 இடங்கள் 68ஆக உயரும். ராஜஸ்தானில் உள்ள 25 இடங்கள் 44ஆக உயரும்.
இதற்கு மாறாக தென் மாநிலங்களின் மக்களவை இடங்கள் சொற்பமான உயர்வைத்தான் சந்திக்கும். அல்லது குறைவைச் சந்திக்கும். தமிழ்நாட்டில் 39 இடங்கள் 41ஆகவும், கருநாடகத்தில் 28 இடங்கள் 36ஆகவும், தெலங்கானா 17 இடங்கள் 20ஆகவும், ஆந்திரப் பிரதேசம் 25 இடங்கள் 28 ஆகவும் உயரும். கேரளத்தில் 20 இடங்களில் ஒன்று குறைக்கப்படும் என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. கர்னோஜ் மய்யத்தின் மற்றொரு ஆய்வு. தமிழ்நாட்டுக்கும் கேரளத்துக்கும் தலா எட்டு தொகுதிகள் குறையும் என்ற அதிர்ச்சி தகவலைத் தந்துள்ளது.
1972ஆம் ஆண்டு குடும்ப கட்டுப்பாடு.திட்டத்தை ஒன்றிய அரசு அமல் செய்தபோது அதை தென் மாநிலங்கள் உறுதியுடன் நிறைவேற்றின. பெண் கல்வி விகிதம் அதிகமாக இருந்ததால் பெண்கள் கருவுறுவதும் குறைந்தது. இதற்கு மாறாக வட மாநிலங்களில் குடும்பக் கட்டுப்பாடு முறையாக பின்பற்றப்படவில்லை. இதன் காரணமாக அங்கு மக்கள் தொகை வெகுவாக குறையவில்லை. ஏற்கெனவே நிதி அடிப்படையில் தென் மாநிலங்கள் வஞ்சிக்கப்படும் பிரச்சினை இருக்கிறது. ஒன்றிய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்து கொள்கிறது என்று சமீபத்தில் சட்டப்பேரவையில் பேசிய தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு எடுத்துரைத்தார். உதாரணமாக ஒன்றிய அரசுக்கு வரி வருவாயாக தமிழ்நாடு செலுத்தக்கூடிய ஒரு ரூபாய்க்கு ஈடாக 29 பைசா மட்டுமே நமக்கு திரும்பக் கிடைக்கிறது. உத்தரப் பிரதேசம் செலுத்தக்கூடிய ஒரு ரூபாய்க்கு திரும்ப் அவர்களுக்கு ஈடாக இரண்டு ரூபாய் 73 பைசா கிடைக்கிறது.
நிதியாண்டு 2014-2015 முதல் 2021-2022 வரை நேரடி வரியாக தமிழ்நாட்டினுடைய பங்களிப்பு 5:16 லட்சம் கோடி கொடுத்திருக்கிறோம். ஆனால், "திரும்ப வரிப் பகிர்வாக அந்த காலகட்டத்தில் 2.08 லட்சம் கோடி மட்டும் தான் கிடைத்திருக்கிறது. 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பு வட மாநிலங்களுக்கு சாதகமாக அமைந்தது. 15ஆவது நிதிக்குழு காலத்தில் பேரிடர் நிவாரண நிதிகூட நிதி 64. 65 சதவீதத்தை மட்டும்தான் தமிழ்நாடு பெறுகிறது. ஆனால் உத்தரப்பிரதேசம் 214,39 சதவீதத்தையும் பீகார் 231.23 சதவீதத்தையும் பெறுகிறது. ஒன்றிய அரசின் பல்வேறு திட்டங்களுக்காக முழுமையான நிதி தரப்படுவதில்லை. மெட்ரோ ரயில் திட்டத்திற்கும் நிதி குறைவாகவே தரப்பட்டது. ரயில்வே நிதி ஒதுக்கீட்டிலும் பாரபட்சம் என்பதை சுட்டிக்காட்டி உள்ளார்.
தலைக்கு மேல் தொங்கும் கத்தி
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தென்னிந்திய பிரதிநிதித்துவத்தை குறைக்கும் அரசியல் சூழ்ச்சி முறியடிக்கப்பட வேண்டும். அரசியல் விழிப்புமிக்க தமிழ்நாட்டை வஞ்சிக்கும் அநீதி முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும். தென்னிந்திய மக்களுக்கு எந்தத் தீங்கும் செய்து விட மாட்டோம் என்ற உத்தரவாதத்தை வழங்கி மக்களின் அச்சத்தை பிரதமர் போக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். ஒன்றிய அரசு ஒன்றியத்தில் அதிகாரக் குவியலை வேகமாக அதிகரிக்கும் சூழலில் தென்னிந்தியாவுக்கு பிரதிநிதித்துவம் தேவை அதிகம் என்ற நிலைமையில் தலைக்கு மேல் தொங்கும் கத்தியாக தொகுதி மறு வரையறை உள்ளது.
தற்போது வட மாநிலங்களின் மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை உயர்வு காரணமாக தென் மாநில மக்களவை உறுப்பினர்களின் ஆதரவு தேவையில்லை என்ற முடிவுக்கு அகில இந்திய கட்சிகள் வரக்கூடும். தென் மாநிலங்கள் விஷயத்தில் பாகுபாடு, பாரபட்சம் காட்டப்படுவதால் தங்களுக்கு எந்த பிரச்சினையும் வராது என்ற நிலையை அவர்கள் எடுப்பார்கள். ஹிந்தி தெரியவில்லை என்றால் நீ இந்தியனா என்று கேள்வி கேட்கும் மனப்பான்மைதான் வடமாநில மக்களிடம் உள்ளது: தென் மாநில மக்களுக்கு பிரதிநிதித்துவம் வெகுவாக குறையும் போது வடமாநில மக்கள் தென் மாநில மக்களை குறிப்பாக தமிழ்நாட்டு மக்களை துச்சமாக மதிக்கத் தயாராவார்கள்.
வடக்கு தெற்கு பேதம் ஆழமாகக் கூடும்
இந்தப் பிரச்சினை பற்றி ஆய்வாளர்கள் கிறிஸ்டோபர் ஜபர்லாட் மற்றும் கலையரசன் ஒரு கட்டுரை எழுதினார்கள். தொகுதி மறு வரையறை காரணமாக வடக்கு தெற்கு பேதம் ஆழமாகக் கூடும் என்று கணித்துள்ளார்கள். நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை, 848 ஆக உயரும் என்று அரசியல் அறிவியலாளர்கள் மிலன் வைஷ்ணவ், ஜேமி ஹின்ஸ்டன் கணக்கீடு தெரிவிக்கிறது என்று அவர்கள் மேற்கோள் காட்டியுள்ளனர். 848 பிரதிநிதிகளில் உத்தர பிரதேசம் மட்டும் 143 உறுப்பினர்களை பெறலாம். இது 79 சதவீத அதிகரிப்பாகும் என்று அச்சமூட்டும் கணக்கை சொல்லி உள்ளனர். உயர் கல்வி குறித்த அனைத்திந்திய கணக்கெடுப்பு 2021இன் படி உயர்கல்வியில் மொத்த மாணவர் சேர்க்கை விகிதம் வட மாநிலங்களவிட தென் மாநிலங்களில் மிக அதிகம். தெற்கில் 18 முதல் 23 வயது பிரிவை சேர்ந்த கிட்டத்தட்ட 50 சதவீத இளைஞர்கள் ஏதேனும் ஒரு உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்களாக சேர்ந்துள்ளனர். இதில் தேசிய அளவிலான சராசரி 27 சதவீதம் தான். இந்தியாவில் தமிழ்நாட்டில் தான் அதிகபட்சமாக 53 சதவீதம் உயர் கல்வி படித்துள்ளனர் - பீகாரில் 16 சதவீதம் உத்தரப்பிரதேசத்தில் 23 சதவீதம் என மிக மோசமான நிலையில் இருக்கின்றன.
தென் மாநிலங்கள் ஆங்கில வழி கல்வி மூலம் நவீன பொருளாதாரத்தில் பங்கேற்க வழிவகை செய்துள்ளன. அதேபோல பொது நூலகங்கள் மூலம் வாசிப்பு பண்பாடு அதிகரித்துள்ளது. இந்தியாவில் பொது நூலகங்களில் நான்கில் மூன்று பங்கு தென் மாநிலங்களில் அமைந்துள்ளன. பீகாரில் தனி நபர் வருமானம் ரூபாய் 28 ஆயிரத்து 127. தமிழ்நாட்டில் தனிநபர் சராசரி வருமானம் ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 528 ஆக உள்ளது. கருநாடக மாநிலத்தை எடுத்துக் கொண்டால் பீகாரில் ஒருவர் சம்பாதிப்பதை விட அய்ந்து மடங்கு அதிகமாக சம்பாதிக்கிறார். ஏற்கெனவே பொருளாதாரம், கல்வி, சுகாதாரம், ஊட்டச்சத்து ஆகிய பல்வேறு குறியீடுகளில் தென் மாநிலங்கள் மிக உயர்ந்த நிலைக்கு வந்துவிட்டன.
இந்த வளர்ச்சியை தடுத்து நிறுத்தவும் பிரதிநிதித்துவப் பறிப்பு நடக்கிறது என்று விமர்சிப்பவர்கள் உள்ளனர். ஒவ்வொரு குடிமகனுக்கும் ஒரு ஓட்டு என்ற அடிப்படையில் எல்லோருக்கும் பிரதிநிதித்துவம் வேண்டும் என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது. பிரதிநிதித்துவம் பற்றி பேசுபவர்கள் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 20% இஸ்லாமியர்களுக்கு நிர்வாகத்தில் இடம் கொடுக்காமல் உள்ளனர். பிற்பட்ட தாழ்த்தப்பட்ட சமூக மக்களுக்கும் வேலைவாய்ப்புகளில் உரிய இடங்களை தராமல் உள்ளனர். பத்து லட்சம் பேருக்கு ஒரு மக்களவை உறுப்பினர் என்ற வகையில் தொகுதிகள் பிரிக்கப்படுவதை எதிர்க்கக் கூடாது என்றும் சொல்லப்படுகிறது. மறு வரையறை ஆணையம் தொகுதிகளை பிரிக்கும் வேலையைச் செய்யும். ஆனால் எண்ணிக்கை முடிவை அரசுதான் எடுக்கிறது. ஜனநாயக செயல் முறையில் ஒரு தனி நபரின் சமமான குரலை அங்கீகரிப்பது எவ்வாறு முக்கியமோ அதேபோல் ஒரு கூட்டாட்சி அமைப்பில் பிராந்திய சமநிலையை அங்கீகரிப்பது அவசியமானது. மாகாணங்களின் கூட்டாக அமைந்த அமெரிக்கா போன்ற நாடுகள் நாடாளுமன்றத்தின் ஒரு அவையில் அனைத்து அலகுகளுக்கும் மாநிலங்கள் சமமான உறுப்பினர் எண்ணிக்கையை அளித்துள்ளனர். இந்திய நிறுவனங்கள் அதேபோல் சீரமைப்பிற்கு முன் விவாதங்கள் நடத்தப்பட வேண்டும் என்று அவர்கள் யோசனை தெரிவித்துள்ளனர்.
விந்திய மலைக்கு அப்பால் தென் மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சிக்கு ஒரு மாநிலத்தில் கூட ஆட்சி அதிகாரம் இல்லை, இந்த 'நிலைமை சமீபத்தில் கருநாடக தேர்தல் மூலம் நிரூபணமானது. இதன் காரணமாக வட மாநிலத்தவரின் ஆதிக்கத்தில் உள்ள திட்டங்களை நிறைவேற்றும் அதிகாரிகள் மேலும் துணிச்சல் பெற்று தென் மாநிலங்களுக்கு நிதியை வெட்டும் வேலையில் ஈடுபட வாய்ப்புள்ளது. உரிமைகளைக் கேட்டால்... ஒன்றியம் என்று அரசமைப்புச் சட்டத்தில் உள்ளதை பேசினாலே தேச விரோதம், பிரிவினைவாதிகள் என்று சொல்பவர்கள் தென் மாநில அரசியல்வாதிகள் மீது புதுப்புது முத்திரைகளை குத்த தயாராவார்கள். தொகுதி மறு வரையறையில் பார்த்தால் அது வடக்கு தெற்கின் மீது நடத்தப்படும் படையெடுப்பு எனலாம். எழுத்தாளர் ஆர்.எஸ்.நீலகண்டன் எழுதியுள்ள ஷிஷீutலீ ஸ்s ழிஷீக்ஷீtலீ: மிஸீபீவீணீ's ரீக்ஷீமீணீt பீவீஸ்வீபீமீ என்ற நூலில் தென் மாநிலங்கள் உலகத்தின் வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடத் தகுந்தவை என்று குறிப்பிடுள்ளார்.
இதே போல் சவுத் ஃபர்ஸ்ட் ஆய்வரங்கில் பேசிய மார்க்சிஸ்ட் கட்சி எம்.பி. ஜான் பிரிட்டாஸ் தென் மாநிலங்கள் அறிவிக்கப்படாத காலனி நிலையில் உள்ளன. மறு வரையறைக்குபின் முறைப்படியாக காலனி நிலைக்குத் தள்ளப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். இதே கருத்தரங்கில் பேசிய உச்ச நீதிமன்ற நீதிபதி செலமேஸ்வர் குடும்பக் கட்டுப்பாட்டை நிறைவேற்றி நிர்வாகத் திறமையுடன் செயல்பட்ட தென் மாநிலங்களை தண்டிக்கும் செயலில் ஈடுபடுகிறார்கள் என்று வேதனை தெரிவித்துள்ளார். இந்தப் பின்னணியில் 2024 மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியை முறியடிப்பதும் நம் பிரதிநிதித்துவ உரிமையைக் காப்பாற்றும் நடவடிக்கையாக இருக்க வேண்டும்.
(நன்றி: 'காக்கைச் சிறகினிலே' - நவம்பர் 2023)
No comments:
Post a Comment