திஸ்பூர்,நவ.17- ராஜஸ்தானில் வரும் 25-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. ஆளும் கட்சியான காங்கிரஸ் ஆட்சியை தக்கவைக்க தீவிர பிரசாரம் மேற்கொண்டுள்ளது. எதிர்க்கட்சியான பா.ஜ.க. ஆட்சியைப் பிடிக்க தீவிர முனைப்புக் காட்டி வருகிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் பா.ஜ.க. நேற்று (16.11.2023) தேர்தல் அறிக்கையை வெளியிட்டது.
இதற்கிடையே, அசாம் மாநில ஆளுநர் குலாப் சந்த் கடாரியா பா.ஜ.க.வுக்கு ஆதரவாக ராஜஸ்தானின் உதய்பூரில் பிரச்சாரம் செய்தார்.
இந்நிலையில், அசாம் ஆளுநரை நீக்க வேண்டும் என ஆம் ஆத்மி மற்றும் திரிணாமுல் உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
இதுதொடர்பாக, திரிணாமுல் காக்ங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் ரிபுன் போரா எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட செய்தியில், அசாம் ஆளுநர் குலாப் சந்த் கடாரியா ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் பா.ஜ.க.வுக்காக பிரச்சாரம் செய்து வருகிறார். இது ஜனநாயகத்துக்கு விடுக்கப்பட்ட சவால். அவர்மீது இந்திய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவேண்டும். அரசியல் சட்டத்தின் பாதுகாவலராக இருந்தும் அவர் பா.ஜ.க.வுக்காக பிரசாரம் செய்வது மிகவும் வெட்கக் கேடானது. அவரை உடனடியாக பதவி யில் இருந்து நீக்கவேண்டும் என பதிவிட்டுள்ளார். ஆம் ஆத்மி கட்சியும் அசாம் ஆளுநரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
No comments:
Post a Comment