திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் “பேய்” நடமாடுவதாக வதந்தி திராவிடர் கழகம் சார்பில் அமைக்கப்பட்ட உண்மை கண்டறியும் குழுவின் அறிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 13, 2023

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் “பேய்” நடமாடுவதாக வதந்தி திராவிடர் கழகம் சார்பில் அமைக்கப்பட்ட உண்மை கண்டறியும் குழுவின் அறிக்கை

15 பேர் பலியான இடத்தில் "பேய்கள்" உலாவுவதாக கடும் பீதி அச்சத்தில் பொதுமக்கள்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் ஏற்பட்ட சாலை விபத்துக்களால் அந்த பகுதியில் பேய் நடமாட்டம் இருப்பதாக வதந்தி பரவி மக்கள் அச்சத்துடன் இருப்பதாக செய்தி ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் செய்தி பரவியதன் அடிப்படையில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் ஆணைக்கிணங்க உண்மை கண்டறியும் குழு விபத்து நடந்த பகுதிக்கு நேரடியாக சென்று ஊராட்சி மன்றத் தலைவர்கள், அனைத்துக் கட்சி பெருமக்கள், வணிக பெருமக்கள், காவல்துறை அதிகாரிகள், பள்ளி கல்லூரி மாணவர்கள், உள்ளிட்ட பொதுமக்களை நேரடியாக சந்தித்து உரையாடி திராவிடர் கழக தலைமைக்கு அறிக் கையாக சமர்ப்பிக்கப்படுகிறது

சம்பவங்களும் அதை ஒட்டிய பொய் கற்பனைகளும்

( விபத்து குறித்தும் பேய் நடமாடுவதாக உருவான வதந்தி குறித்தும் மாலை மலர் நாளிதழின் மின் பதிப்பில் வெளிவந்த செய்தியை அவ்வாறே கீழே தருகிறோம்.

"திருவண்ணாமலை மாவட்டம் செங்கம்-பெங்களூரு செல்லும் சாலையில் அந்தனூர் பக்கிரிப்பாளையம் கிராமங்களுக்கு அருகே கடந்த அக். 15ஆம் தேதி மேல்மலையனூர் கோவிலுக்கு சென்று விட்டு திரும்பிய கார் விபத்தில் சிக்கியது. அதில் பயணம் செய்த குழந்தை,பெண்கள் உட்பட 7 பேர் இறந்தனர். இதை தொடர்ந்து அதே பகுதியில் சுமார் 100 மீட்டர் தூரத்தில் கடந்த அக். 23ஆம் தேதி இரவு நடந்த சாலை விபத்தில் அசாம் மாநிலத்தைச் தொழிலாளர்கள் உட்பட 8 பேர் பலியானார்கள்

விபத்து நடந்த பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அரசுக்கு சொந்தமான விவசாய பண்ணை ஒன்று செயல்பட்டு வந்தது. தற்போது அந்த பண்ணை செயல்படவில்லை. சாலையின் இருபுறமும் அடர்ந்த தைல மரங்கள், கருவேல மரங்கள், காட்டு மரங்கள் அதிகமாக உள்ளன. அதனால் மாலை 6 மணிக்கு மேல் அந்த பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது.

15 பேர் பலியான பகுதியில் இறந்தவர்களின் ஆன்மாக்கள் சுற்றித் திரிவதாக அந்தப் பகுதியில் பீதி ஏற்பட்டுள்ளது.

மாலை 6 மணிக்கு மேல் அந்தப் பகுதியில் திடீரென சுழல் காற்று வீசுகிறது. அலறல் சத்தம் கேட்கிறது. சாலையின் குறுக்கே வெள்ளை மற்றும் கருப்பு நிறத்தில் உருவங்கள் நடமாடுவது போல உள்ளது என அந்த பகுதி மக்களிடையே தகவல் பரவியது.

இதனால் பொதுமக்கள் விபத்து நடந்த பகுதியை மாலை 6 மணிக்கு மேல் கடந்து செல்ல அச்சப்படுகின்றனர். அவ்வழியாக செல்வதை தவிர்த்து வருகின்றனர். விபத்து நடந்த இடத்தை கடந்து தான் குடிமகன்கள் டாஸ்மாக் கடைக்கு செல்ல வேண்டும்.

மேலும் அதன் அருகே 3 ஓட்டல்களும் உள்ளன. தற்போது பேய் பீதியால் டாஸ்மாக் கடைகளும் ஓட்டல்களும் வெறிச்சோடிக் கிடக்கின்றன. பேய் பீதி குறித்து தெரியாத வெளியூர்க்காரர்கள் மட்டுமே டாஸ்மாக் கடைக்கும் வந்து செல்கின்றனர்.

இந்த பேய் பீதி நாளுக்கு நாள் அங்குள்ள மக்களை முடங்கச் செய்து வருகிறது. இதனால் வீடுகளின் முன்பு வேப்பிலை கட்டுகின்றனர் 6 மணிக்கே வீட்டில் விளக்கேற்றி சாமி கும்பிடுகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து அப்பகுதி படித்த இளைஞர்கள் நகைச்சுவையாக கூறி சிரிக்கின்றனர். திருவண்ணாமலை பெங்களூரு சாலையில் விபத்து நடந்த பகுதியில் அடர்ந்த காட்டு மரங்கள் உள்ளன வனப் பறவைகள் அதிக அளவில் உள்ளன.

மேலும் நாய்கள் அதிக அளவில் சுற்றித் திரிகின்றன. 6 மணிக்கு மேல் மரங்களில் இருந்து பறவைகள் அதிக அளவில் சத்தம் எழுப்புகின்றன. ஒரு சில பறவைகளின் சத்தம் அலறல் சத்தம் போல இருக்கிறது.

மேலும் காற்றில் மரங்கள் அசைவது பயந்தவர்களுக்கு பீதியை ஏற்படுத்தி இருக்கிறது. தற்போது மாலை 5.30 மணிக்கு மேல் கடும் குளிரும் வாட்டத் தொடங்கியுள்ளது பனிமூட்டமும் உள்ளது. நாய்கள் அதிக அளவில் அங்கு நின்று கொண்டு குரைத்தபடி ஊளை இடுகின்றன.

இது ஒருவேளை அச்சத்தை ஏற்படுத்தலாம். வாகனங்களில் செல்லும்போது அதில் உள்ள வெளிச்சம் மரங்களில் பட்டு அந்த நிழல் சாலையின் குறுக்கே உருவங்கள் போவது போல தெரியும். இதனால் அச்சமடைந்து வருகின்றனர். மற்றபடி ஆவி நடமாட்டம் உள்ளது என்பதை இந்த நவீன காலத்தில் நம்ப முடியாது.

சம்பவ இடத்தில் தொடர்ந்து விபத்துக்கள் நடந்து வருகிறது. இதனை தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்தப் பகுதியில் அதிக அளவு மின்விளக்குகளைப் பொருத்த வேண்டும். சாலையின் நடுவில் ஒளிரும் விளக்குகளை பொருத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

செய்தி நாளிதழ்களிலும் தொலைக் காட்சியிலும் உள்ளூர் தொலைக் காட்சிகளிலும் சமூக ஊடகங்களானwhatsapp - facebook ஆகிவற்றிலும் இந்தச் செய்தி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

விபத்து நடந்த பகுதியை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள மக்கள் இது ஒரு வதந்தி என்று உணர்ந்திருந்தாலும் ஏதோ ஒரு அச்சம் அவர்களிடம் காணப்படுகிறது.

இளைஞர்கள் நகைச்சுவை சம்பவமாக இதை சொல்லி சிரித்தாலும் வீட்டில் பெரியவர்கள் அச்சப்படுவதால் இரவு நேரங்களில் வெளியே வருவதில்லை என்கிறார்.

பேய் வதந்தியினால் ஏற்பட்டுள்ள  சமூக மற்றும் பொருளாதார பாதிப்புகள்

விபத்து நடந்த பகுதியில் உண்மை அறியும் குழுவினர் பார்வையிட்டுக் கொண்டிருந்த போது அங்கே வந்த பள்ளி கல்லூரி மாணவர்களுடன் உரையாடினார்கள்.

வீட்டில் பெற்றோர்கள் மாலை நேரத்தில் வெளியே அனுப்ப அச்சப்படுவதால் மாலை நேரங்களில் நகரத்தில் டியூஷன் படிக்க அனுப்ப மறுப்பதாக தெரிவித்தனர்.

நகரத்தில் கடைகளில் பணிபுரியும் ஆண்களும் பெண் களும் அச்சத்தின் காரணமாக மாலையிலேயே வீடு திரும்ப வேண்டியதாக உள்ளது. இதனால் பணியிடங்களிலும் பெரும் சிக்கலை உருவாக்கி உள்ளதாக தெரிவித்தனர்.

விபத்து பகுதியில் ஸ்டார் ஓட்டல் என்கிற பெயரில் தாபா ஓட்டல் நடத்தி வரும் பர்கத்துல்லா என்பவர் இரவு நேர வியாபாரம் சுத்தமாக இல்லை - பேய் வதந்தியினால் தனது வணிகம் பெருமளவில் பாதிக்கப்பட்டதாக வருத்தப் பட்டார். அதைப் போலவே அங்கு டீக்கடை மற்றும் பாஸ்ட்புட் நடத்தி வருபவரும் நம்மிடம் கூறினார்.

விபத்து பகுதிக்கு அருகே டைல்ஸ் கடை நடத்தி வரும் உரிமையாளர் இதனால் ஏற்பட்ட வணிக பாதிப்பு குறித்து மிகுந்த வருத்தத்துடன் தனது கவலையை பகிர்ந்து கொண்டார்.

அவ்வாறே இரவு நேரத்தில் பணி முடித்து திரும்பும் கூலித் தொழிலாளர்கள் மாலை நேரத்தில் சீக்கிரம் வீடு திரும்ப வேண்டி இருப்பதால் தங்கள் வருமானம் பாதிக்கப்படுவதாக கூறினர்.

விபத்து ஏற்படக் காரணங்கள்


விபத்து நடந்த இடங்கள் இரண்டையும் பார்வையிட்ட போது அந்தப் பகுதியில் அடிக்கடி விபத்து நடைபெறுவதற்கான காரணங்கள் வெளிப்படையாக தெரிந்தது - அவையாவன:

திருவண்ணாமலை, மேல்மலையனூர், மேல்மருவத்தூர், புதுச்சேரி ஆகிய பகுதிகளில் இருந்து கிருஷ்ணகிரி, ஓசூர், பெங்களூரு செல்லும் மிக முக்கியமான சாலை என்பதால் பயணிக்கும் வாகனங்களின் எண்ணிக்கையும் வேகமும் அதிகமாக உள்ளது.

திருவண்ணாமலையில் இரவு நேரங்களில் கிரிவலம் முடித்து திரும்பும் வாகன ஓட்டுநர்கள் அசதியின் காரண மாக கவனப்பிசகு ஏற்படுவதால் விபத்துக்கள் நடக்கின்றன.

சாலையின் இருபுறமும் அடர்ந்த தைல மரங்கள் கருவேல மரங்கள், காட்டு மரங்கள் அதிகமாக உள்ளதாலும் சாலைகள் நேராக இல்லாமல் வளைந்து காணப்படுவதாலும் எதிரில் வரும் வாகனங்கள் மறைக்கப்பட்டு விபத்துகள் நடைபெறுகிறது.

அடிக்கடி விபத்து நடைபெறும் பகுதிகள் என சுட்டிக் காட்டப்பட்ட இடங்களில் வெளிச்சம் இல்லாமல் இரவு நேரங்களில் காரிருள் மண்டிக் காணப்படுகிறது. இது வாகன ஓட்டிகளுக்கு தூக்கத்தை ஏற்படுத்துவதாக கூறுகிறார்கள்.

குறுகலான சாலை,அதிக அளவு வாகனங்களின் எண்ணிக்கை, சாலையை சுற்றியுள்ள முட்புதர்கள், காரிருள் ஆகியவை ,மட்டுமே விபத்திற்கான காரணங்களாக கண்டறிந்தோம்.

ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் காவல் துறையினருடன் ஆலோசனை

விபத்து நடைபெற்ற இடத்தின் ஊராட்சி மன்ற தலைவர்களை சந்தித்து உரையாடினோம் . முதலாவதாக அந்தனூர் ஊராட்சி மன்ற தலைவர் கலைச்செல்வி வெங்கடேசன் பேய் இருப்பதாக சொல்லப்படும் செய்தியை மறுத்ததுடன் இது ஊடங்கள் இட்டுக் கட்டி செய்தி வெளியிட்டதாக குறைபட்டுக் கொண்டார். ஊடகங்களின் செய்தியால் மக்களுக்கு பேய் குறித்த அச்சம் பரவலாக இருப்பதாக தெரிவித்ததுடன் மக்களுக்கு பகுத்தறிவை உருவாக்கும் பணியில் திராவிடர் கழகம் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் துணை நிற்பதாக உறுதி கூறினார்.

அதே போல் விபத்து நடைபெற்ற மற்றொரு இடமான பக்கிரிப்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் முனியன் அவர்கள் வெளியூரில் இருந்ததால் அவரிடம் அலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசியபோது திராவிடர் கழகத்தின் பிரச்சாரம் இங்கு அவசியம் தேவைப்படுகிறது என்பதை வலியுறுத்தினார்.

திராவிட முன்னேற்ற கழக சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி மற்றும் தி.மு.க. முக்கிய பொறுப்பாளர்கள் அனைவரும் திருவண்ணாமலை சென்றதால் சந்திக்க இயலவில்லை.

பேராசிரியர் வணங்காமுடி அவர்களின் சிகரம் பள்ளியில் பிரச்சார பணிகளைத் துவக்குவது குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு இருந்த போது ம.தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர்கள் நேரில் வந்து சந்தித்து தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் தங்களின் ஆதரவை தெரிவிப்பதாக கூறினார்.

செங்கம் காவல் துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகம் சென்று காவல் துறை துணை கண்காணிப்பாளர் தேன் மொழி வேல் அவர்களை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தப்பட்டது .திராவிடர் கழகம் சார்பில் அரசியல் சட்டம் 51கி (லீ)இல் கூறியப்படி மக்களுக்கு அறிவியல் மனப்பான்மையை உருவாக்கும் வகையில் பேய் - பிசாசு - பில்லி - சூன்ய மோசடிகளை அம்பலப்படுத்தும் விதமாக கிராமங்களில் பரப்புரை செய்ய திட்டமிட்டு இருப்பதாகவும் நிறைவாக தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களே பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றத் திட்டமிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. பரப்புரை பயணம் எந்தெந்த பகுதியில் என்ன தேதியில் நடைபெறும் என திட்டமிட்டு அனுமதிக் கடிதம் அளித்தால் உயரதிகாரிகளின் ஆலோசனை பெற்று அனுமதி அளிப்பதாக கூறினார்.

காவல் துறை சார்பில் விபத்து நடைபெற்ற பகுதியில் உடனடியாக முட்புதர்கள் அகற்றப்பட்டதாகவும் விபத்து பகுதியில் மின்விளக்கு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு மின்விளக்கு அமைக்க இருப்பதாகவும் தடுப்பான்கள் (Bariguard) அமைக்க உத்தரவிட்டு உள்ளதாகவும் கூறினார்.

காவல் துறை துணை கண்காணிப்பாளர் அவர்களின் உடனடி நடவடிக்கைக்கு திராவிடர் கழகம் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டதுடன் அவரை பாராட்டி பேராசிரியர் கு.வணங்காமுடி அவர்கள் எழுதிய 'புரட்சி பேச்சாளர் பெரியார்' என்ற நூல் பரிசாக வழங்கப்பட்டது.

திட்டமிடலும் தேவையான நடவடிக்கையும்

விபத்து நடைபெற்ற பகுதியை சுற்றியுள்ள கிராமங்களில் பேய் - பிசாசு -பில்லி - சூனிய மோசடிகளை அம்பலப்படுத்தும் துண்டறிக்கையை விநியோகித்து பிரச்சாரம் செய்தல்.

விபத்து நடைபெற்ற பகுதியை சுற்றியுள்ள கிராமங் களை மய்யப்படுத்தி பகுத்தறிவு பிரச்சார கூட்டங்களை நடத்துதல்.

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை அழைத்து வந்து செங்கம் நகரில் மிகப்பெரும் அளவில் மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம் மற்றும் மூடநம்பிக்கை ஒழிப்பு பொதுக்கூட்டத்தை நடத்துதல்.

அதிகமான போக்குவரத்தை சுட்டிக்காட்டி நாற்கர சாலை அமைக்க தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லல்.

விபத்து நடைபெற்ற பகுதியில் மின்விளக்கு மற்றும் வேகத்தடுப்பான்கள் அமைக்க தமிழ்நாடு அரசிற்கு கோரிக்கை வைத்தல்.

திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் அவர்கள் தரும் செயல் திட்டங்களை ஏற்று விரைந்து செயல்படுத்துதல்.

நன்றி !

பொதுமக்களுக்கு பேய் குறித்த அச்சத்தை களைந்து அறிவியல் மனப்பான்மையை உருவாக்கும் செயல்திட்டத்தில் திராவிடர் கழகம் சார்பில் அமைக்கப்பட்ட உண்மை கண்டறியும் குழுவில் எங்களையும் இணைத்த திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு எங்களின் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து இந்த அறிக்கையை தங்களிடம் சமர்ப்பித்து தாங்கள் அளிக்கும் வேலைத் திட்டத்திற்காக காத்திருக்கிறோம் நன்றி!


உண்மை கண்டறியும் குழுவில் 

பங்கேற்ற தோழர்கள்

ஊமை.ஜெயராமன் (தலைமை கழக அமைப்பாளர், திராவிடர் கழகம்)

பேராசிரியர் கு.வணங்காமுடி (கல்வியாளர், பகுத்தறிவாளர் கழகம்)

தே.மூர்த்தி (மாவட்ட தலைவர், திராவிடர் கழகம், திருவண்ணாமலை)

பழ.பிரபு (பொதுக்குழு உறுப்பினர், திராவிடர் கழகம்)

கே.ராமன் (ஒன்றியத் தலைவர், திராவிடர் கழகம் செங்கம்)

சீனிமுத்து.இராஜேசன் (மாவட்ட இளைஞரணி தலைவர், கிருட்டிணகிரி)

No comments:

Post a Comment