'ஆப்பிள்' நிறுவனம் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, November 3, 2023

'ஆப்பிள்' நிறுவனம் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்

இரண்டு மாதங்களுக்குமுன் தொலைப்பேசி தொடர் பான ஒரு தகவல் பரவியது. அதில் 'அய்'போன்களில் உளவுப்பொருள்கள் ஊடுருவல் நடக்க வாய்ப்புள்ளது என்ற  செய்தி தான் அது.

அது பொதுவான செய்தியாக இருந்தது - இந்த நிலையில் இரண்டு மாதங்களுக்குப் பிறகு இந்தியாவில் உள்ள மிக முக்கிய அரசியல் தலைவர்களின் -  அவர்கள் பயன்படுத்தும் 'அய்'போன்கள் உளவுபார்க்கப்படும் அபாயம் இருப்பதாக 30.10.2023 அன்று ஒரு செய்தி வெளியானது. இந்தச்செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.   அதாவது இரண்டு மாதமாக மிகவும் முக்கியமான ஒரு உளவுத்தகவலை எந்த ஒரு ஊடகமும் கவனிக்காமல் விட்டுவிட்டன. இறுதியில் ஆப்பிள் நிறுவனமே உளவுத்தகவலை குறிப்பிட்ட நபர்களுக்கு அனுப்ப உளவு விவகாரம் சூடுபிடித்தது.

எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த சில நாடாளுமன்ற உறுப்பினர்களான காங்கிரஸ் கட்சியின் சசிதரூர், சிவசேனாவின் (உத்தவ் அணி) பிரியங்கா சதுர்வேதி மற்றும் திரிணாமுல் காங்கிரசின் மஹுவா மொய்த்ரா உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆப்பிள் நிறுவனத்திடமிருந்து எச்சரிக்கை  வந்தது.

எம்.பி.க்கள் மட்டுமன்றி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தியின் அலுவலகத்தில் பணிபுரியும் 3 பேருக்கும் இதேபோன்ற எச்சரிக்கை வந்திருப்பதாக கூறப்படுகிறது.  

 "இஸ்ரேலின் 'பெகாசஸ் உளவு மென்பொருளை' பயன்படுத்தி, இந்தியாவில் அரசியல் எதிரிகளின் மொபைல் போன்கள் ஒட்டுக் கேட்கப்பட்டன" என ஒரே நேரத்தில் பல தகவல்கள் உலக ஊடகங்களில் வந்தன.

இந்திய வரலாற்றில், ஜனநாயகத்தின் அனைத்துத் தூண்களும் உளவு பார்க்கப் பட்ட செய்தி இதுவே முதல் முறையாகும்!

கடந்த மழைக்கால கூட்டத்தொடரின் போது பெகாசஸ் உளவு மென்பொருள்  குறித்த தகவல் வெளி யானது; 

உடனே உள்துறை அமைச்சர் அமித்ஷா, 'உலகநாடுகளின் முன்னால் இந்தியாவை தலைகுனிய வைக்கவே 'வெளி சக்திகள்' இதை செய்துள்ளன; உள்நாட்டில் சில சக்திகள் அதை ஆதரிக்கின்றன' என்று கூறியிருந்தார்

உச்சநீதிமன்ற மேனாள்  தலைமை நீதிபதி மீது வழக்கு தொடர்ந்த பெண் ஒருவரின் கைப்பேசியும் ஒட்டுக் கேட்கப்பட்டது

 குற்றம்சாட்டிய பெண் ஊழியர், அவரது கணவர், சகோதரர்கள் என மொத்தம் 11 பேரின் தொலைப்பேசி எண்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்திருக் கின்றன.

மேனாள் தலைமைத் தேர்தல் ஆணையர் அசோக் லவாசா அலைப்பேசியும் உளவு பார்க்கப்பட்டது. இவர் கடந்த நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, பாஜக பல இடங்களில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாகச் சாடியவர்  - இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தலைமை ஆணையராக இருந்தவர் அசோக் லவாசா.

'தேர்தல் நடத்தை விதிகளை மீறினார் மோடி' என்று இவர் குற்றம் சாட்டிய சில நாள்களிலேயே இவரது தொலைப்பேசிகள் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

'ராஜிவ் காந்தி உளவு பார்க்கப்பட்ட விவகாரம்தான்' சந்திரசேகர் அரசு கவிழ முக்கிய காரணம். 'ராமகிருஷ்ணா ஹெக்டே உளவுபார்த்தார்' என்றுதான் கருநாடகா முதலமைச்சர் பதவியை இழந்தார். 

'வாட்டர்கேட் ஊழல்' உளவு பார்த்ததால் அமெரிக்க அதிபர் நிக்சன் பதவி இழந்த நிலை எல்லாம் உண்டு.

மோடி அரசில் இதை எல்லாம் எதிர்பார்க்க முடியாது. ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ள அதிர்ச்சித் தகவல் வெட்கக் கேடானது. 2024 மக்களவைத் தேர்தலில் இதற்கெல்லாம் நல்ல பாடத்தை மக்கள் கற்பிப்பார்கள் என்பதில் அய்யமில்லை.

No comments:

Post a Comment