பரிணாமத்தைப்பற்றிய சுவையான நூல் இதோ! (1) : வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 22, 2023

பரிணாமத்தைப்பற்றிய சுவையான நூல் இதோ! (1) : வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி

பல்வேறு கால நெருக்கடி, கழகப் பணிகள், நட்புறவுகள் சந்திப்பு, மாலை நேர மக்கள் வகுப்புகள் - இப்படி என்னை உழைக்க வைக்கும் உயர் தனி வாய்ப்புகளிடையே எனது அறிவுத் தாகத்தைத் தணிக்கவும், எழுத்துப் பசியை ஆற்றவும்தான் புதிய புத்தகப் படிப்பு என்ற எனது விசித்திர  இளைப்பாறுதல் (Relaxation).

நல்ல அரிய அறிவு சார் பிரபல ஆங்கில நூல்கள்  'மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ்" சார்பில் வெளிவரும்.  அண்மையில் வெளி வருபவைகளில் - பெரிதும் அவற்றை தமிழில் சிறந்த மொழியாக்கம் செய்து, ஆற்றல்மிகு எழுத்தாளர் இலக்கியவாதி நண்பர் பி.எஸ். வி. குமாரசாமி அவர்கள் எனது பேனாவுக்கு தவறாதுவேலை கொடுக்கவும், மூளைக்குப் பயிற்சியை முன்னே வைத்துப் படிக்க வேண்டிய, பரப்ப வேண்டிய புதிய வெளியீடுகளை அனுப்பி நூல் நயம் காண வாய்ப்பளிப்பார்!

சில நாள்களுக்கு முன் "பரிணாமத்தின் ஊடாக வாழ்க்கையின் விளக்கம்" என்ற - புரோசாந்தா சக்கரவர்த்தி அவர்கள் 2022 - சென்ற ஆண்டு எழுதிய நூலை, பிரபல எழுத்தாளர், மொழி பெயர்ப்பாளர் நாகலட்சுமி சண்முகம் அவர்கள்  தொகுத்துப் (ணிபீவீt) பதிப்புச் செய்துள்ளார். தமிழில் சுவைபட உள்ளது.

அறிவியல் தத்துவங்கள் அறியாமை இருட்டைப் போக்கும் - அறிவு வெளிச்சங்கள்; அவ்வெளிச்சங்கள் அடுத்த பல தலைமுறைக்கும் உகந்தவை கலங்கரை வெளிச்சம் எப்படி கப்பல்களின் பயணத்திற்குப் பயன் தருபவைகளோ அதுபோன்றவை.

ஆனால் புதினங்கள் போல் விறுவிறுப்பு, வேகம் தர இயலாத விவேக ஆவணத் தொகுப்புகள் அவை.

அதில் உலக சிந்தனையையே மாற்றி அமைத்து, புதிய உலகு நோக்கி மனித குல அறிவை அழைத்துச் செல்லும் பரிணாமத் தத்துவம் ஒரு அறிவுப் புரட்சிக்கு அடிக்கல் நாட்டியதுண்டு.

அன்று முதல் இன்று வரை எதிர்ப்பையும் (மதவாதிகளின்) சந்தித்து வரும் கருத்துப் போர்க் களமும் ஆகும்!

அதுபற்றி மிக அருமையாக சுவையோடும், பக்குவமும், முதிர்ச்சி பொங்கும் முகிழ்ப்புகளோடும் இந்நூல் தொகுக்கப்பட்டு, கட்டுரைகள் எளியவருக் கும் "அறிவியல் ஏன் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய உண்மை. அது வெறும் கோட்பாடு அல்ல; வெற்று நம்பிக்கை அல்ல" என்பதை நூலாசிரியர் அருமையாக வகுப்பெடுக்கிறார் வாசக நேயர்கட்கு!

"நிலவில் மனிதன் உண்மையிலேயே இறங்கி யிருந்தான் என்பதை நம்பாதிருப்பவர்களிடம் அது தொடர்பான வீடியோக்களைக் காட்டுவதாலோ, அல்லது நிலவில் இறங்கியவர்கள் துல்லியமான ஒளி பிரதிபலிப்புக் கருவிகளையும் பிற பொருட்களையும் அங்கு விட்டுவிட்டு வந்துள்ளதை இன்றும் நம்மால் பார்க்க முடியும் என்று சொல்வதாலோ, அவர்கள் தங்களுடைய எண்ணத்தை மாற்றிக் கொள்ளும்படி செய்ய முடியாது. நிலவில் மனிதன் தரையிறங்கியது தொடர்பான அனைத்து நிரூபணங்களையும் என்னால் கொடுக்க முடியும். ஆனால், இறுதியில், அதை நம்புவதும் நம்பாதிருப்பதும் அவர்களைப் பொறுத்ததே. நிலவில் மனிதன் இறங்கியதாகக் கூறப்படுவது நிஜமல்ல என்று கண்மூடித்தனமாக நம்பிக் கொண்டிருப்பவர்கள், நிலவில் மனிதன் கால் பதித்தது தொடர்பான தகவல்களைக் கொடுப்ப வர்கள்மீது  அவநம்பிக்கையை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள்  என்று அர்த்தம்.  அதனால், அது போலி என்று வாதிடுகின்ற அறிவியல் எதிர்ப்பு இயக்கங்களின்மீது அவர்கள் நம்பிக்கை வைக் கின்றனர். அடிப்படையில் அவர்கள் அறிவியலை நம்புவதில்லை. அப்படிப்பட்டவர்களுக்கு, அடிப் படை அறிவியலைப் புரிய வைப்பதிலிருந்து நாம் தொடங்க வேண்டும். அப்படிச் செய்யும்போது, அறிவியல் முடிவுகள் எப்படி எந்தக் காரணங்களால் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன என்பதை அவர் களுக்குப் புரிய வைக்க முடியும். அது அறிவியல்மீது அவர்களுக்கு நம்பிக்கையை உருவாக்கக்கூடும்.

(தொடரும்)


No comments:

Post a Comment