பகுத்தறிவாளராக “கோபுர தரிசனம் - கோடி புண்ணியம்” வாங்க அலசலாம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 11, 2023

பகுத்தறிவாளராக “கோபுர தரிசனம் - கோடி புண்ணியம்” வாங்க அலசலாம்!

சமீபத்தில் பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணா மலை திருச்சி, சிறீரங்கத்தில், பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில், “சிறீரங்கம் கோவிலுக்கு எதிரில் உள்ள பெரியார் சிலையும் மற்றும் அதில் உள்ள வாசகமும் பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் அப்புறப்படுத்தப்படும்” எனத் தெரிவித்துள்ளார். அதற்குண்டான எதிர்வினை இன்றும் சமூக ஊடகங்கள் வழியாக வந்து கொண் டிருப்பதை நாம் பார்க்கிறோம். பெரியாரை எதிர்த்து அரசியல் செய்வது என்பது தமிழ்நாட்டிற்கொன்றும் புதியது அல்ல. இதைவிடக் கடுமையான எதிர்ப்புகளை எல்லாம் பெரியார் பார்த்தவர்தான், பெரியார் கண்ட திராவிடர் கழகமும் சந்தித்துள்ளது. பெரியாரின் பற்றாளர்களுக்கு இவையெல்லாம் பயிற்சிப் பாசறை என்பதைத் தமிழ்நாடு நன்கறியும்.

“கோபுர தரிசனம் - கோடி புண்ணியம்” என்ற சொல்லாடலில், சாமியை உள்ளே சென்றுதான் கும்பிட வேண்டும் என அவசியம் இல்லை, வெளியில் நின்று பார்த்தாலே உள்ளே சென்றதற்கு ஈடானது என்று சாதாரணமாக, மேலோட்டமாகப் பொருள் கொள்ள லாம். ஆனால், இதில் ஆழப் புதைந்து கிடக்கும் உண்மை என்னவென்றால், வர்ணாச்சிரமப் படிநிலை யில் பார்ப்பனர் அல்லாதவர்கள் கோவிலுக்கு உள்ளே வர அவசியமும் இல்லை, தேவையும் இல்லை. நீங்கள் வெளியில் இருந்து மட்டும் கடவுளைப் பார்த்தால் போதும் என ஜாதிப்பிரிவினைகளையும், ஏற்றத்தாழ்வு களையும் நிலைநிறுத்த சொல்லப்பட்ட மேற்கோள்தான் இது என்பதை அண்ணாமலை மறந்தாரா, மறைக் கிறாரா? எனத் தெரியவில்லை. அல்லது அவர் வாசித்த 20,000 நூல்களில் இவை பற்றி இல்லையோ?

சிறீரங்கம் ரங்கநாதர் கோயிலில் கிழக்குக் கோபுரம் வெள்ளையாக இருக்கும். ஏன் என்று பார்த்தால் இக்கோயிலில் முன்னர் இருந்த ஒரு தேவதாசியின் பெயர் வெள்ளையம்மாள். இஸ்லாமியர் படையெடுப் பின் போது அங்கே முகாமிட்டிருந்த படைத்தளபதியை சாதுரியமாகப் பேசி கோபுர உச்சிக்கு அழைத்துச் சென்று அங்கிருந்து அவனைத் தள்ளிவிட்டு, தானும் குதித்து உயிர் நீத்து அரங்கனின் செல்வங்களைக் காத்தார் என்று கூறப்படுவதுண்டு. ஒரு தேவதாசியால் அரங்கனும், அரங்கனின் செல்வமும் காப்பாற்றப் பட்டன.

சிறீரங்கம் கோவிலுக்கான வரலாற்றை வாசித்துப் பார்த்தால் அதில் பல ஆரிய சித்தாந்தங்களும், பார்ப் பனியத்தனங்களும் மேலோங்கி இருப்பதை அறிய லாம். அந்நாட்களில் சிறீரங்கம் போன்ற கோவில்களில் தான் அதிகமாக தேவதாசி முறை  இருந்துள்ளது. ஸநாதனக் கோட்பாடுகள் மற்றும் சனாதன ஜாதியப் பாகுபாடுகளுக்கு இது ஒரு தலைமைப் பீடமாக இருந்திருக்க வேண்டும்.

'தேவதாசி' என்ற சொல் கருநாடகத்தில் உள்ள அலனஹள்ளியில் உள்ள கல்வெட்டு (கி.பி.1113) ஒன்றில் காணப்படுகிறது. தமிழ்நாட்டில் கோவிலுக்கு அர்ப் பணிக்கப்பட்ட பெண்கள் ‘தேவரடியாள்’ அல்லது ‘கடவுளின் வேலைக்காரர்கள்’ என அழைக்கப்பட்டனர். தேவதாசி என்பது பார்ப்பனர் அல்லாத ஜாதிகளிலி ருந்து ஒரு பெண்ணை கோவிலுக்கு அர்ப்பணிக்கும் பாரம்பரியமாகும். "தேவதாசிகள் ஒரு போதும் வித வையாக்கப்பட மாட்டார்கள், அவர்கள் எப்போதும் ‘நித்திய சுமங்கலியாக (மங்கலகரமானவர்கள்) இருப் பார்கள்" என மூளைச் சலவை செய்யப்பட்டு பல பெண்கள் தேவதாசியாக ஆக்கப்பட்டனர் .

பெரியார் கடவுளையும், மத நம்பிக்கைகளையும் ஏன் எதிர்த்தார்? என்பதை ஒரு முக்கியமான கேள்வி யாகப் பார்க்க வேண்டும். “கோபுர தரிசனம் - கோடி புண்ணியம்" என்பது ஜாதிய ஏற்றத் தாழ்வைக் குறிப் பிடும் ஒரு சொல்லாடல். கோவில்களில் இருந்த தேவ தாசி முறை பெண் அடிமைத்தனத்தின் அடையாளம். ஜாதிய ஏற்றத் தாழ்வையும், பெண் அடிமைத்தனத் தையும் எதிர்த்துதான் தந்தை பெரியார் 94 வயது வரை போராடினார் என்பதை இன்று அவர் சிலையைக் கண்டு அஞ்சுபவர்களின் பயமே உணர்த்தி நிரூபிக் கிறது.

பெரியாரின் வழிகாட்டுதலில், 1930ஆம் ஆண்டு சென்னை சட்ட மேலவையில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி எழுப்பிய முதல் குரல் மிக முக்கியமானது. அதற்கு சத்தியமூர்த்தி அய்யர் உள்ளிட்ட ஆதிக்க வாதிகளின் எதிர்ப்புக் குரல்களையும் மறக்க முடியாது. ஒரு வழியாக 1947ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஒன்பதாம் தேதி தேவதாசி ஒழிப்புச் சட்டம் நடை முறைக்கு வந்தது. இப்படியாக கி.பி.900களில் ஆரம் பித்த அவர்களின் தோற்றம், வளர்ச்சி, ஒழிப்பு என கி.பி. 1947ஆம் ஆண்டு ஓர் அடிமை சகாப்தம் பெரியாரின் தீர்க்கமான குரலால், எதிர்ப்பால் முடிவுக்கு வந்தது. அதே போல் சமூகநீதிக்காக, பிற்படுத்தப்பட்டோ ருக்காக மற்றும் இட ஒதுக்கீட்டுக்காக இந்திய அரச மைப்புச் சட்டத்தில் 1951இல் முதல் சட்ட திருத்தத்தைக் கொண்டு வந்தவரும் தந்தை பெரியார் என சங்கி களுக்குத் தெரிந்தாலும் ஏற்க மாட்டார்கள்.

சிறீரங்கம் கோவிலுக்கு உள்ளே இருக்கின்ற சிலைகளை விட கோவிலுக்கு வெளியே எளிமையாக அமர்ந்திருக்கும் பெரியாரின் சிலை அவர்களது கண்ணை உறுத்துகிறது. இதனைப் பார்க்கும்போது, பெரியாரின் சிலையானது கோபுரத்தை விட மிகவும் வலிமையானது, முக்கியமானது என்ற கர்வம் ஒரு பகுத்தறிவாளராக நமக்குள் வருகிறது.

இன்று என் போன்ற பெரியார் பற்றாளர்கள், பகுத் தறிவாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் நடுநிலை யாளர்கள் மீண்டும் மீண்டும் பெரியாரின் கோட்பாடு களை எடுத்துரைக்க வேண்டிய தேவை உருவாக்கப் படுகிறது. இதற்கு தந்தை பெரியார் மீதான பற்றைக் கடந்து, அவர் போதித்த கோட்பாடுகளின் சமூக நீதியும், மனித உரிமையும் மற்றும் பெண்ணுரிமையுமே காரணம்.

பொறியியல், மேலாண்மை, அய்.பி.எஸ். என்ற அடையாளங்களை உடைய புதிய அரசியல்வாதியான அண்ணாமலை தந்தை பெரியாரை இகழ்கிறார். தமிழ் வழியில் படித்து, பொறியியலில் முனைவர் பட்டம் பெற்று, சந்திரயான் புகழுடன் திகழும்மயில்சாமி அண்ணாதுரை தனது உயர்வுக்குக் காரணம் தந்தை பெரியார் எனப் புகழாரம் சூட்டுகிறார்.

பெரியார் திராவிட இனத்தின் அடையாளம்,

பெரியார் சமூகநீதியின் அடையாளம்,

பெரியார் பகுத்தறிவின் அடையாளம்,

பெரியார் பெண் உரிமையின் அடையாளம்,

பெரியார் மூடநம்பிக்கை ஒழிப்பின் அடையாளம்.

எங்கெல்லாம் ஏற்றத்தாழ்வும், ஒடுக்குமுறையும் தென்படுகிறதோ அங்கெல்லாம் பெரியாரின் சித்தாந் தங்கள் தேவைப்படுகின்றன என்பதை உணர்ந்ததால் தான் "இது பெரியார் மண்" என நாம் பெருமையாகப் பறைசாற்றுகிறோம். அவர் மனித இனத்திற்கும், மானுடவியலுக்குமான ஓர் உன்னத அடையாளமாகத் திகழ்கிறார். என்றும் தந்தை பெரியாரை உயர்த்திப் பிடிப்போம், அவர் வழி நடப்போம்.

- ஆலடி எழில்வாணன்

தென்காசி மாவட்டச் செயலாளர்,

பகுத்தறிவாளர் கழகம்


No comments:

Post a Comment