நம்பியூரில் கூட்டத்தை முடித்து விட்டு திருப் பூருக்கு ஆசிரியரின் பிரச்சாரப் பெரும்படை வந்து கொண்டிருக்கும் போதே, ‘‘அதிரடி க.அன்பழகன் பேசிக்கொண்டிருக்கிறார். மழைப்பொழிவு இருக்கிறது'' என்கின்ற தகவல்கள் வந்த வண்ணம் இருந்தன. இந்தப் பரப்புரைக் கூட்டம் நெடுகிலும் எந்தக் கூட்டமும் மழையால் கைவிடப்படவில்லை. அதிரடி அன்பழகன் மழையினூடேயே பேசி முடித்திருந்தார். அடுத்து திருப்பூர் மகாலட்சுமி ஆலயம் மகான் மகாலட்சுமி சுவாமிகள் பேசும் போதும், அதற்கடுத்து தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் பேசும் போதும், நிறைவாக ஆசிரியர் பேசும் போதும் மழை விட்டுவிட்டு பொழிந்து கொண்டிருந்தது. ஆனால், மக்கள் மழைக்கு அஞ்சி கலைந்து சென்றுவிடவில்லை. மாறாக நாற்காலிகளை குடைகளாக்கியும், பாலித்தீன் பைகளையும், கைக்குட்டைகளையும் தொப்பிகளாக்கிக் கொண்டும், வீதியோரமாக ஒதுங்கிக்கொண்டும் ஆசிரியர் பேச்சை கேட்க தயாராயினர். அதைவிட முக்கியம் ஆசிரியர் இன்னமும் உற்சாகமாக மாறிப்போனார். அவர் உரையைத் தொடங்கும் போதே, “மழை அதிகமாக; கடுமையாக இருக்காது. ஆனாலும், ‘அடாது மழை பெய்தாலும் நான் விடாது பேசுவேன்.' ஏனென்றால், மழையில் நனைவதை விட ஆபத்து, ஜாதி வெறியில் நனைவது” என்றார். மக்களுக்கு இருந்த கொஞ்ச நஞ்ச தயக்கமும் ஓடியே விட்டது. மிகுந்த மகிழ்ச்சியுடனும், வியப்புடனும் ஆசிரியர் உரையை செவிமடுத்தனர். மழை இல்லாமல் இருந்திருந்தால் ஆசிரியர் எவ்வளவு எழுச்சியாகப் பேசியிருப்பாரோ, அதைவிட சிறப்பாக பேசி அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி விட்டார். வழக்கமாக அவருக்கு 35 நிமிடத்தில் இருந்து 40 நிமிடம் பேச வாய்ப்பு இருக்கும். மழை மிரட்டியும் அதற்குப் பணியாமல் 35 நிமிடங்களுக்கு மேல் பேசி, மக்கள் ஆசிரியரிடம் எதை எதிர்பார்த்து வந்திருந்தனரோ அதைப் பெற்ற பிறகுதான் திரும்பிச் சென்றனர். குறிப்பாக ‘‘சிறீ சபரி சாஸ்தா பக்தர்கள் குழு” என்ற பெயரும், அதற்குக் கீழே அய்யப்பன் கோட்டோவியமும் இருந்த பச்சை நிற பனியன் அணிந்திருந்த நடுத்தர வயதைச் சார்ந்த ஒருவர், மழையைக் கூட பொருட்படுத்தாமல் நின்ற இடத்தை விட்டு கொஞ்சமும் அசையாமல் ஆசிரியரின் பேச்சை முழுமையாக கேட்டுவிட்டுத்தான் சென்றார். இத் தனைக்கும் ஆசிரியர், ‘‘திராவிடர் இயக்கம் வருகிற வரையிலும் கல்விக்கென்று ஒரு கடவுள், சரஸ்வதி இருக்கத்தானே செய்தார். அப்போதெல்லாம் நாம் ஏன் படிக்க வில்லை?” என்ற கேள்வியை எழுப்பித்தான் பேசினார். இன்னுமொருவர் ஆசிரியர் பேசியதற் கெல்லாம், ‘அப்படிப் போடு’, ‘பின்னே’, ’ஆமாம்’, என்ற சொற்களுக்குப் பதிலாக, உடல் மொழிகளால் வெளிப்படுத்தி ரசித்து கேட்டுக் கொண்டிருந்தார். ஆக, மழையின் எண்ணம் ஈடேறவில்லை. இக் கட்டான சூழலையும் ஆசிரியர் மிகச்சரியாக பயன் படுத்திக்கொண்டதால், திருப்பூர் நிகழ்ச்சி வரலாற்று புகழ் பெற்றுவிட்டது.
Wednesday, November 1, 2023
திருப்பூரில் கொட்டும் மழையில் தமிழர் தலைவர் ஆசிரியர் எழுச்சியுரை
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment