அண்ணாமலைக்கு நெருக்கடி கொடுத்து மீண்டும் பா.ஜ.,வில் சேர்ந்த சூர்யா
சென்னை, நவ.4 தி.மு.க., - எம்.பி., சிவாவின் மகனான சூர்யாவை மீண்டும் தமிழ்நாடு பா.ஜ.,வில் சேர்த்தது, அக்கட்சியில் புகைச்சலை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து, பா.ஜ., நிர்வாகிகள் கூறியதாவது:
தமிழ்நாடு பா.ஜ., தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்ட பின், அவரது ஆதரவாளராக சூர்யா செயல்பட்டார். ஆனால், அவரது பேச்சு பல தலைவர்களை காயப்படுத்தியது. இதனால், கட்சிக்குள் அவருக்கு எதிர்ப்பு காணப்பட்டது.
இந்நிலையில், தமிழ்நாடு பா.ஜ.,வின் சிறு பான்மை பிரிவு தலைவர் டெய்சியை ஆபாசமாக சூர்யா பேசியதுடன், கட்சியின் அமைப்பு செயலர் தகுதியில் இருப்பவரை, பெண்களோடு தொடர்பு படுத்தியும் விமர்சித்தார்.
கட்சியினர் கோபம் அடைந்தனர். இதனால், சூர்யாவை கட்சியில் இருந்து ஆறு மாதங்களுக்கு நீக்கி, அண்ணாமலை அறிவிப்பு வெளியிட்டார். ஆனாலும், அவர் அளித்த வாக்குறுதியை நம்பி, சூர்யா அமைதியாக இருந்தார்.
ஆறு மாதங்கள் கடந்த பின், கட்சியில் மீண்டும் சேர்க்கச் சொல்லி, அண்ணாமலைக்கு நெருக்கடி கொடுத்து வந்தார். இதையறிந்த கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர், 'சூர்யாவை மீண்டும் கட்சியில் இணைத்தால், மக்கள் மத்தியில் கெட்ட பெயர் ஏற்படும்' என்று அண்ணாமலையிடம் கூறினர். அதனால், அண்ணாமலை பொறுமை காக்க நேரிட்டது.
இதையறிந்த சூர்யா, அண்ணாமலை மீது கோபம் கொண்டார்.
பா.ஜ.,வில் இருந்து விலகி, அ.தி.மு.க.,வில் இணைந்த நிர்மல்குமார் வாயிலாக, பழனிசாமியை சந்தித்து அக்கட்சியில் இணையவும் சூர்யா அடுத்த முயற்சி எடுத்தார். அதற்கு பழனிசாமி ஒப்புதல் அளிக்கவில்லை. எனவே, மீண்டும் பா.ஜ.,வுக்கு அழுத்தம் கொடுத்தார்.
அத்துடன், 'அ.தி.மு.க.,வில் சூர்யா இணையப் போகிறார். அவரிடம் உள்ள அண்ணாமலையின் ரகசியங்களை, பழனிசாமி கேட்டு அறிந்து, அதை வைத்து அண்ணாமலையை அரசியலில் வீழ்த்தி விடுவார்' என்ற தகவல்களையும் பரப்பினார்.
இதை அறிந்ததும், சூர்யாவிடம் அண்ணாமலை தொலைப்பேசியில் பேசினார். மீண்டும் பா.ஜ.,வில் சேர்த்ததுடன், அவர் ஏற்கெனவே கட்சியில் வகித்த மாநில ஓ.பி.சி., பிரிவு பொதுச்செயலர் பதவியில் தொடர்வார் என்றும் அறிவித்து விட்டார்.
பூனைக்கு பயந்து புலி மேல் ஏறிய கதையாக போகிறது, அண்ணாமலையின் முடிவு. சூர்யாவின் செயல்பாடுகள் முன்னர் போலவே இருந்தால், அவரால் கட்சியில் குழப்பம் ஏற்படும். மேலும், பல கட்சிகளுடன் பேசிய அவர், பா.ஜ.,வுக்கு எப்படி விசுவாசமாக இருப்பார்?
இது போன்ற விஷயங்களில் அண்ணாமலை கவனமாக செயல்பட வேண்டும்.
-இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment