ஏகாம்பரர் கலைஞர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 25, 2023

ஏகாம்பரர் கலைஞர்

கலைஞரும் சமணமும்! முத்தமிழறிஞர் கலைஞர் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சி இது. அவரது சொற்களிலேயே... "ஒருமுறை, ஒரு பண்டிதர்,  நான் மாணவனாக இருந்தபொழுது திருவாரூரில் வந்து கதாகாலட்சேபம் நடத்தினார். அப்போது,அவர் கூறிய தாவது 'சமணர்கள் சைவர்களிடம் தோற்றார்கள்.

அப்படித் தோற்றுப்போன சமணர்கள் 8,000 பேரைக் கழுவிலே ஏற்றினார்கள்' என்று சொன்னார். மாணவனாக அப்போதிருந்த நான் உடனே எழுந்து, "சைவ மதமும், அன்பைப் போதிக்கிற மதம் அல்லவா? சமண மதமும் அன்பைப் போதித்த மதம் அல்லவா! இப்படி அன்பைப் போதிக்கின்ற மதங்களுக்கிடையே தகராறு ஏற்பட்டு.. அதில் சிலர் தோற்றிருந்தாலும் அன்பைப் போதிப்பதாகச் சொல்கிற சைவ மதத்தினர் சமணர்களைக் கழுவில் ஏற்றலாமா? அன்பு எங்கே போயிற்று?" என்று கேட்டேன். உடனே அந்த பாகவதர், "இந்தச் சின்னப் பையனுக்கு விஷயம் தெரியவில்லை. நான் பாட்டைச் சொல்கிறேன், கேளுங்கள்" என்றார்.

'எண்பெருங்குன்றத்து எண்ணாயிர வரும் ஏறினார்கள்' என்ற பாட்டைச் சொல்லிச் சமணர்கள் தாங்களே கழுவில் ஏறினார்கள் என்று பாடிக் காட்டினார். அந்தப் பாட்டு எனக்கு முன்பே தெரிந்திருந்த அக்காரணத்தால் உடனே, நான் திரும்பக் கேட்டேன். "நீங்கள் பாட்டின் கடைசி அடியை மட்டும் பாடிக் காட்டுகிறீர்கள்!

நான் முழுமையும் சொல்கிறேன் கேளுங்கள்" என்று, 

பண்புடை அமைச்ச னாரும்

பாருளோர் அறியு மாற்றால்

கண்புடை பட்டு நீண்ட

கழுத்தறி நிரையி லேற்ற

நண்புடை ஞானம் உண்டார்

மடத்துத்தீ நாடி யிட்ட

எண்பெருங் குன்றத் தெண்ணா

யிரவரும் ஏறி னார்கள்.

'ஏற்ற ஏறினார்கள்' என்றுதான் பாட்டு இருக்கிறது.

ஆகவே அவர்கள்தான் சமணர்களைக் கழுவிலே ஏற்றினார்கள் என்று நான் சொன்னேன்". இந்த நிகழ்ச்சியை அவர், 1974 நவம்பர் 17ஆம் தேதி, சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடைபெற்ற வர்த்தமானர் 2500ஆவது நினைவு நாள் விழாவில் தான் ஆற்றிய உரையில் நினைவுகூர்ந்திருக்கிறார்.

அந்த விழா குறித்த செய்தி, 1974 டிசம்பர் 1 ஆம் தேதியிட்ட 'தமிழரசு' இதழில் வெளியாகியுள்ளது. அந்த விழாவில் அவர் சமணம் மற்றும் சுயமரியாதை இயக்கம் ஆகியவற்றுக்கிடையே உள்ள ஒற்றுமை குறித்தும் இவ்வாறு குறிப்பிட்டார்.

"... தமிழகத்திலே பெரியார் ராமசாமி அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு அவர் வழிநின்று பேரறிஞர் அண்ணா அவர்களால் நடத்தப்பட்ட தன்மான இயக்கம்; இன்றைக்கு நாங்கள் ஏற்றுக்கொண்டிருக்கிற சுயமரியாதைக் கொள்கை இவைகள் எல்லாம் வடிவெடுக்கக் காரணமாக இருந்த கொள்கைகளில் சமணக் கொள்கையும் தலையாய கொள்கை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். சமணக் கொள்கைகளில் முக்கியமானது, 'உலகத்தை ஆண்டவன் படைத்தான்' என்பதை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இன்னும் சொல்லப்போனால் ஒரு மனிதன் தன்னுடைய பாவங்களை எல்லாம் அகற்றிவிட்டால் அவனே கடவுள் ஆகின்றான். இதுதான் சமண மதத்தில் கொள்கை.

ஆகவே, மனிதனே தன்னைத் தெய்வமாக ஆக்கிக் கொள்ள வேண்டும்; அந்தத் தெய்வம் சிறந்த தெய்வம் என்பது சமண மதத்தின் கொள்கையாகும். அந்தக் கொள்கையோடுதான் இன்றைக்கு இந்த அரசு, 'ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்' என்ற வகையில் பணியாற்றி வருகிறது. மகாவீரர் வர்த்தமானர் எந்தக் கொள்கை மக்கள் மத்தியில் பரவ வேண்டும் என்று விரும்பினாரோ அந்தக் கொள்கைகளுக்காகப் பாடுபட்டு வருகிறோம்"

No comments:

Post a Comment