சென்னை,நவ.22- தமிழ்நாட்டில், அக்டோபர் மாத நிலவரப்படி ஒட்டுமொத்த சூரியசக்தி மின் உற்பத்தித் திறன், 7,000 மெகா வாட்டை தாண்டி, 7,164 மெகா வாட்டாக உயர்ந்துள்ளது.
நாட்டில் புதுப்பிக்கத்தக்க மின் துறையில், இரண்டாவது இடத்தில் தமிழ்நாடு உள்ளது.
தமிழ்நாட்டில், சூரியசக்தி மின் நிலையங்களில் இருந்து ஆண்டுக்கு, 300 நாட்களுக்கு மேல் மின்சாரம் கிடைக்கும் சாதகமான சூழல் நிலவுகிறது.
இதனால், பல நிறுவனங்களும் சூரியசக்தி மின் நிலையங்களை அமைத்து வருகின்றன.
இது தவிர, கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலை வளா கங்களில், மேற்கூரை சூரியசக்தி மின் நிலையங்களும் அமைக்கப்படுகின்றன.
ஒன்றிய அரசின் புதுப்பிக்கத்தக்க மின்சக்தி துறை, இந்தாண்டு அக்டோபர் நிலவரப்படி, ஒவ்வொரு மாநிலத் திலும் நிறுவப்பட்டுள்ள சூரியசக்தி, காற்றாலை, சிறிய நீர் மின் நிலையம், தாவரக் கழிவு, சர்க்கரை ஆலை இணை மின் நிலையம் ஆகியவற்றை உள்ளடக்கிய புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தித் திறன் விவரத்தை வெளியிட்டு உள்ளது.
அதில், தமிழ்நாட்டில் அதிக திறனில் அமைக்கப்பட்ட, சூரியசக்தி மின் நிலையங்களின் உற்பத்தித் திறன், 6,649 மெகா வாட்; மேற்கூரை, 449; விவசாய நிலங்களில், 65.86 மெகா வாட் என, ஒட்டுமொத்த சூரியசக்தி மின் உற்பத்தித் திறன், 7,164.59 மெகா வாட்டாக உள்ளது.
குறிப்பாக, கடந்த நான்கு மாதங்களில் அதிக திறனில் கூடுதலாக, 263 மெகா வாட் நிறுவப்பட்டுள்ளது. நாட்டிலேயே, புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தித் திறனில், குஜராத் மாநிலம் முதலிடத்தில் உள்ளது. தமிழ்நாடு, 18,657 மெகா வாட் உடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.
No comments:
Post a Comment