மேட்டூர், நவ.16- மேட்டூர் கழக மாவட்ட திராவிடர் கழக மகளிரணி திராவிட மகளிர் பாசறை சார்பாக கலந்துரையாடல் கூட்டம், எடப்பாடியில் கை.முகிலன் இல்ல மேல் மாடியில் நடைபெற்றது ..
கலந்துரையாடல் கூட்டத்திற்கு மாவட்ட மகளிரணி தலைவர் அம்மா அறிவுமணி தலைமை ஏற்றார்கள். மகளிர் பாசறை தலைவர் எழில் வரவேற்புரையாற்றினார்.
தலைமை கழக அமைப்பாளர் கா.நா.பாலுவின் சிறப்பான ஏற்பாட்டினால் 40-க்கும் மேற்பட்ட மாணவியர்கள், பத்து மாணவர்கள், கலந்துரையாடல் கூட்டத்திற்கு வந்திருந்து, ஒரு மாணவப் பயிலரங்கம் போல, கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.
அம்மா அறிவுமணி, தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமை யில், இயங்கும் திராவிடர் கழகம் , ஒடுக்கப்பட்ட மாணவர் சமுதாயத்திற்காக பாடுபட்டுக் கொண்டிருக்கின்ற இயக்கம் என்றும், தந்தை பெரியார் என்ற மாபெரும் தலைவரைப் பற்றி மாணவச் செல்வங்கள் நன்கு அறிந்து கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.
போர்க் குரல் எழுப்பியவர்
வாழ்த்துரை வழங்கிய கா.நா.பாலு, தந்தை பெரியாருக்கு பின், அன்னை மணியம்மையாருக்கு பின், திராவிடர் கழகத்தை வலிமையாக வழிநடத்திக் கொண்டிருக்கிறார் தமிழர் தலைவர் ஆசிரியர் என்றும், ஜாதி ஒழிப்புக்காக பாடுபடுகிற உண்மையான இயக்கம் திராவிடர் கழகம் என்றும், இந்த நாட்டில் ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களின் எந்த ஒரு பாதிப்புக்கும் குரல் கொடுக்காத கடவுள்கள் நமக்கு தேவையா? என்றும் நமக்காக குரல் கொடுத்தவர் தந்தை பெரியார் என்றும், குறிப்பாக பெண்களுக்காக அனைத்து நிலைகளிலும், போர்க்குரல் எழுப்பியவர் தந்தை பெரியார் என்றும், பெண்கள் அதை என்றென்றும் நினைவில் கொள்ள வேண்டும் என்றும், உரையாற்றினார் ..
மாணவர்களுக்கு தேவையான திராவிட இயக்க வரலாற்றின் அனைத்து பகுதிகளையும் மிகச் சிறப்பாக விளக்கி அதே நேரத்தில் அவர்களின் சந்தேகங்களுக்கும் முகிலன் தெளிவாக பதில் அளித்து நிகழ்வில் பெருமைப் படுத்தினார்.
கேள்வி - பதில்
மாநில மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்ச் செல்வி பெண்கள் குறித்தான மூடநம்பிக்கைகளை பற்றி விளக்கமாக எடுத்துரைத்து, சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும் விடை யளித்தும் கலந்துரையாடல் கூட்ட தீர்மானங்களை பற்றி விளக்கியும் தன் உரையை நிறைவு செய்தார்.
ஆசிரியை நாகம்மா, மிகச் சிறப்பாக மாணவர்கள் ஒருமுகப்படுத்தும் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் மிகப்பெரிய அவர்களுடைய ஆற்றல் என்பது அவருடைய நம்பிக்கையை சார்ந்தது என்றும் மாணவர் செல்வங்களுக்கு அறிவுரை கூறினார் .
பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் படித்தவரும், கா நா.பாலுவின் மகளுமாகிய எழில்,மேற்படிப்பு கல்லூரிகளில் எந்தெந்த வடிவங்கள் எல்லாம் ஜாதிய மனப்பான்மை இன்னும் நிலவுகிறது அதனை மாணவச் செல்வங்கள் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது குறித்தும், அதை எதிர் கொள்ள வேண்டுமானால் நாம் தந்தை பெரியாரைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்று சிறப்பான கருத்துகளை வைத்து உரையாற்றினார்.
பேச்சுப் பயிற்சி
நிகழ்ச்சியில் மிகச் சரியாக மாணவச் செல்வங்கள் கலந்து கொள்வதற்கு ஏற்பாடு செய்த சி.மெய்ஞான அருள், "மாணவச் செல்வங்கள் இது போன்ற நிகழ்ச்சிகளில் பேசுவதற்கு பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும்,தந்தை பெரியாரைப் பற்றி மேலும் மேலும் அதிகமாக தெரிந்து கொள்ள இந்த கருத்துரையாடல் அமைந்தது" என்று உரையாற்றினார்.
மேலும் சேலம் மாவட்ட ப .க தலைவர் வீரமணி ராஜு, மேட்டூர் மாவட்ட கழக செயலாளர் எம்.கலைவாணன், மேட்டூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் கோவி அன்புமதி, மேட்டூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் சி.மதியழகன் ஆகியோரும் உரையாற்றினர் .
பரிசுகள் வழங்கல்
நிகழ்வின் இடையே நடைபெற்ற ஆங்கில வார்த்தைகள் விளையாட்டு, கணித எண்கள் விளையாட்டில் கலந்து கொண்ட அத்தனை மாணவச் செல்வங்களுக்கும், மாநில மகளிர் அணி செயலாளர் தகடூர் தமிழ் செல்வி ரூபாய் 1,500 மதிப்புள்ள பரிசு பொருள்களையும் தலைமை கழக அமைப்பாளர் காநா.பாலு உண்மை இதழ்களையும் பெரியார் பிஞ்சு இதழ்களையும் வழங்கினார். பெரியார் பிஞ்சு யாழினி நிறைவாக நன்றியுரை ஆற்றினார்.
இல்லம் தேடி மகளிர் சந்திப்பு
கலந்துரையாடல் கூட்டத்தில், தமிழர் தலைவர் அவர் களின் 91 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு 91 பெரியார் பிஞ்சு ஆண்டு சந்தாக்களை திராவிடர் கழக மகளிர் அணி, திராவிட மகளிர் பாசறை தோழர்கள் இணைந்து திரட்ட வேண்டும் என்றும், தமிழர் தலைவர் அவர்களின் வழி காட்டுதல் படி தொடர்ந்து, இல்லம் தேடி மகளிர் சந்திப்பு நடத்துவது என்றும், வாய்ப்புள்ள இடங்களில் தமிழர் தலைவர் அவர்களின் அறிவிப்பினையொட்டி வைக்கம் நூற்றாண்டு விழா, கலைஞர் நூற்றாண்டு விழா தெருமுனைக் கூட்டம் நடத்துவதெனவும் தீர்மானிக்கப்பட்டது.
No comments:
Post a Comment