காத்மாண்டு, நவ.6 - நேபாளத்தில் நிலநடுக்கத்தால் பாதிக்கப் பட்ட பகுதிகளில் சுமார் 2 லட்சம் பேர் வீடின்றி பரிதவிக்கின்றனர். அவர்கள் கடும் குளிரில் திறந்தவெளியில் தூங்கு கின்றனர்.
நேபாளத்தின் கர்னாலி மாகாணம் ஜாஜர்கோட் பகுதியில் கடந்த 3.11.2023 அன்று நள்ளிரவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் ஜாஜர்கோட், கிழக்கு ரூகம் மாவட்டங்களில் பேரழிவு ஏற்பட்டது. இதுவரை 157 பேர் உயிரிழந்துள்ளனர். 400-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இரு மாவட்டங்களிலும் பெரும்பாலான வீடுகள், கட்டடங்கள் இடிந்துள்ளன.
நிலநடுக்கம் நேரிட்ட பகுதிகளில் இதுவரை 159 முறை நிலஅதிர்வுகள் ஏற்பட்டு உள்ளன. இதனால் பகுதியளவு சேதமடைந்த வீடுகளுக்கு செல்ல மக்கள் அஞ்சுகின்றனர். சுமார் 2 லட்சம் பேர் வீடு, உடைமைகளை இழந்து திறந்த வெளியில் பரிதவிக்கின்றனர். நேபாளத்தில் குளிர் காலம் தொடங்கியுள்ளது. கடும் குளிரை பொருட்படுத்தாமல் கடந்த 4.11.2023 அன்று ஜாஜர்கோட், கிழக்கு ரூகம் மாவட்ட மக்கள் திறந்தவெளியில் தூங்கினர்.
வீடுகளை இழந்த மக்களுக்காக நேபாள அரசு சார்பில் ஆங்காங்கே தற்காலிக கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் இவை போதுமானதாக இல்லை. இதுதொடர்பாக ஜாஜர்கோட் மாவட்டம் பெரி பகுதியைச் சேர்ந்த ஊர்மிளா ராவத் கூறும்போது, “நிலநடுக் கத்தால் எங்களது குடும்பத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். வீடு, உடைமைகளை முழுமையாக இழந்துவிட்டேன். இப்போது ஆதரவின்றி தெருவில் நிற்கிறேன். தூங்குவதற்குகூட இடமில்லை” என்றார்.
பிரதமர் அவசர ஆலோசனை
நேபாள பிரதமர் பிரசண்டா தலைமையில் அமைச்சர வையின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மீட்பு, நிவாரணப் பணிகளை துரிதப்படுத்துவது தொடர்பாக விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. கட்டட இடிபாடுகளில் இருந்து கடைசி நபர் மீட்கப்படும் வரை மீட்புப் பணி தொடரும் என்று பிரதமர் பிரசண்டா உறுதிபடத் தெரிவித்தார்.
நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. மேலும் படுகாயம் அடைந்த அனைவருக்கும் இலவசமாக சிகிச்சை வழங்கப்படும். அவசர மருத்துவ சிகிச்சை தேவைப்படுவோர் தலைநகர் காத் மாண்டுக்கு அழைத்து வரப்படுவர் என்று மூத்த அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
காத்மாண்டுவில் இருந்து ஜாஜர்கோட், கிழக்கு ரூகம் மாவட்டங்களுக்கு இலவச பேருந்து சேவைகள் இயக்கப் படுகின்றன. பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு இலவச மாக தொலைத்தொடர்பு சேவையும் வழங்கப்படுகிறது. நேபாள துணைப் பிரதமர் நாராயண் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டார். அப்போது வீடுகளை இழந்து தவிக்கும் மக்களுக்கு தார்பாலின், படுக்கை விரிப்புகள் உள்ளிட்ட நிவாரண உதவிகளை அவர் வழங்கினார்.
நேபாள தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரேகா சர்மா, காத்மண்டுவில் செய்தியாளர்களிடம் கூறும்போது, “நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தேவையான உணவு தானியங்கள், மருந்து பொருள்கள், நிவாரண பொருள் கள் அனுப்பப்பட்டு உள்ளன. இந்தியா, சீனா, பாகிஸ்தான், ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் நிவாரண உதவிகளை வழங்க முன்வந்துள்ளன. நட்பு நாடுகள் உட்பட உலக நாடுகளின் நிவாரண உதவிகளை ஏற்றுக் கொள்ள நேபாள அரசு முடிவு செய்துள்ளது’’ என்றார்.
No comments:
Post a Comment