பரிணாமத்தைப்பற்றிய சுவையான நூல் இதோ! (2) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, November 23, 2023

பரிணாமத்தைப்பற்றிய சுவையான நூல் இதோ! (2)

பொதுவாக நாம் யாரை நம்புகிறோம்? நம்மையும், நம்முடைய நம்பிக்கையைச் சம்பாதித் துள்ள நம்முடைய குடும்பத்தினரையும், நம்முடைய நட்பு வட்டாரத்தில் இருப்பவர்களையும், நம் சகாக்களையும் நாம் நம்புகிறோம். நம்பிக்கை சம்பாதிக்கப்பட வேண்டிய ஒன்று. நாம் ஒருவரை நம்பாதிருப்பதற்கான காரணத்தைக் கண்டுபிடிக் கின்றவரை நாம் அவரை நம்புகிறோம். எர்னஸ்ட் ஹெம்மிங்வே கூறியதுபோல, "ஒருவர்மீது நம்பிக்கை வைக்கலாமா கூடாதா என்பதைக் கண்டுபிடிப்பதற்கான சிறந்த வழி, அவர்கள்மீது நம்பிக்கை வைப்பதுதான்." வாசகர்களாகிய நீங்கள் என்மீது நம்பிக்கை வைக்குமாறு நான் உங்களைக் கேட்டுக் கொள்கிறேன். அதே நேரத்தில், நான் எழுதியிருப்பதைக் கேள்விக்கு உட்படுத்துமாறும் நான் உங்களை வேண்டிக் கொள்கிறேன். இங்கு நான் குறிப்பிடுகின்ற தகவல்கள்மீது உங்களுக்கு நம்பிக்கைப் பிறக்காவிட்டால், வேறு வழிகளில் அவற்றை அறிந்து கொள்ள முயலுங்கள். கடந்த காலங்களில் நீங்கள் எத்தகைய தகவல்கள்மீது நம்பிக்கை வைத்திருந்தீர்கள் என்பதை யோசித்துப் பார்க்கும்படியும் நான் உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்வதிலுள்ள முக்கியமான பகுதி நம்பிக்கை. ஒரு தகவலின் மூலாதாரத்தின்மீது நீங்கள் நம்பிக்கை வைக்கா விட்டால், நீங்கள் அந்தத் தகவலை நம்ப மாட்டீர்கள். நீங்கள் என்மீது ஓரளவாவது நம்பிக்கை வைக்காவிட்டால், பரிணாம வளர்ச்சியை என்னால்  உங்களுக்குப் புரிய வைக்க முடியாது. உங்களை என்மீது நம்பிக்கை கொள்ள வைக்க முடியுமா? முடியாது. நான் இந்தப் புத்தகத்தை துல்லியமான அறிவியல் தகவல்களின் அடிப்படையில் எழுதி யுள்ளேன் என்ற உத்தரவாதத்தை மட்டுமே என்னால் உங்களுக்குக் கொடுக்க முடியும். பூமியில் உயிரினங்களின் தோற்றம் மற்றும் அவற்றின் வாழ்க்கை குறித்த, நிரூபணமான விளக்கங்களையும், அந்த விளக்கங்கள் பெறப்பட்டிருந்த விபரங் களையும் மட்டுமே என்னால் உங்களுக்குப் படைக்க முடியும்." என்கிறார் நூலாசிரியர் புரோசாந்தா சக்கரவர்த்தி அவர்கள்.

அடுத்த பகுதி "தகவல்களும் உண்மையும்" என்ற தலைப்பில் ஒரு சிறு பகுதி,

இப்படி சுவைமிக்க விளக்கங்கள் - விறு விறுப்புடன் விஞ்ஞானத்தை விரித்துரைக்கிறார். விளக்கம் சராசரி திறந்த மனதுள்ள மனிதனையும் புரிந்துகொள்ள வைக்கும் என்பது உறுதி.

சித்திர கதை வடிவில் டார்வினின் சுருக்கமான வாழ்க்கை வரலாறு. இளம் பிள்ளைகளும், ஈர்ப்புடன் உள்வாங்கிட உயரிய உத்தி இது!

பக்கம் 60இல் "பரிணாம வளர்ச்சி என்றால் என்ன?" என்ற ஒரு அருமையான பெட்டிச் செய்தி.

அவசியம் படித்துப் பயன் பெறுங்கள்.

கூடுதல் தகவல்:  இந்த பரிணாம வளர்ச்சி பற்றி தந்தை பெரியார் 'குடிஅரசு' பதிப்பகத்தில் 1938இல் கேள்வி பதில் மூலம் 4 அணா விலையில் மொழி யாக்கம் செய்து  தனி நூல் ஒன்றை வெளியிட்டு அறிவைப் பரப்பிய அரும்பணி செய்த அறிவு ஆசானாகத் திகழ்ந்தார் என்பது அதிசயத் தகவல் அல்லவா?

No comments:

Post a Comment