மாமல்லபுரம், நவ.11 முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாவலூர் சுங்கச்சாவடி சுங்கக் கட்டணத்தை நிறுத்திவைக்க உத்தரவிட்டுள்ளார். அந்த அறிவிப்பை அப்பகுதி மக்கள் மட்டும் இல்லாமல் பலரும் வரவேற்றுள்ளனர்.
பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள நாவலூர் சுங்கச்சாவடியில் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படாது என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் நடைபெற்ற கள ஆய்வுக்கூட்டத்திற்குப் பின் இந்த அறிவிப்பை முதலமைச்சர் வெளியிட்டார். தென்சென்னை பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கையான இதை அவர் நிறைவேற்றித் தந்துள்ளார்.
மெட்ரோ ரயில் அமைப்பதற்கான 2ஆம் கட்டப் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. ஆகவே வழக்கமான சாலையைப் பயன்படுத்த முடியாத நிலை நீடித்து வந்தது. அதனை உணர்ந்து தான் இந்தச் சுங்கக் கட்டணம் வசூலிப்பதை நிறுத்த உத்தரவிட்டுள்ளார் முதலமைச்சர்.
சட்டமன்ற உறுப்பினர்
"திருப்போரூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நாவலூர் பகுதியில் சுங்கச் சாவடி ஒன்று செயல்பட்டு வந்தது. இந்தப் பகுதியில் மெட்ரோ ரயில் தடம் அமைப்பதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
அதனால் சாலையில் அகலம் கிட்டத்தட்ட 40 % ஆகக் குறைக்கப்பட்டுவிட்டது. அதனால் முன்பைப் போல் மிக எளிதாக வாகனங்கள் விரைவாகச் செல்ல முடியவில்லை. கடந்த சில நாட்களாகவே மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதனால் மக்களின் அன்றாட நடவடிக்கைக்கு மிகப்பெரிய இடையூறாக உள்ளது.
ஆகவே அதில் வசூலிக்கப்படும் கட்டண முறையை ரத்து செய்ய வேண்டும் என்று சட்டமன்றக் கூட்டத்தொடரிலே கோரிக்கை வைத்திருந்தேன். அதனை ஏற்று அதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.
எங்கள் பகுதி மக்களின் நலனைக் கருதி, இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எங்களின் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்" என்கிறார் இத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி.
"இது சிட்டி லிமிட் உள்ளாகத்தான் இருக்கிறது. ஆகவே இந்தச் சுங்கச்சாவடியை முற்றிலுமாக அகற்ற வேண்டும் எனக் கோரிக்கை வைத்துவந்தோம். அதை உணர்ந்து இப்போது கட்டணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரத்து செய்துள்ளார். இது கட்டாயம் பாராட்டப்பட வேண்டிய செயல்தான்.
மக்கள் கருத்து
"ஒருமுறை சென்று திரும்புவதற்கு என் வாகனத்துக்கு 45 ரூபாய் சுங்கக் கட்டணம் செலுத்தி வந்தோம். தினம் நான்குமுறை இந்தச் சாலையைக் கடக்க வேண்டி இருக்கும். குறைந்த பட்சம் 120 ரூபாய் தினம் எனக்கு மிச்சமாகிறது" என்கிறார் இதே பகுதியில் பணி செய்துவரும் இளைஞர் ஒருவர்.
இதே பகுதியில் வசித்து வரும் நடுத்தர வயதுக்காரர் ஒருவர், தினம் இருசக்கர வாகனத்தில் இந்தச் சுங்கச் சாவடியைக் கடந்து வருகிறேன். கட்டணம் வசூலிப்பதற்காக வாகனங்களை நீண்ட வரிசையில் பல மணிநேரம் காக்கவைப்பார்கள். அதனால் பலரும் மிகுந்த சிரமத்தைச் சந்தித்து வந்தனர். இந்தக் கட்டண ரத்தால் இனி வாகன நெரிசல் இருக்காது. மக்கள் கோரிக்கையை ஏற்று முதலமைச்சர் இந்த நடவடிக்கையை எடுத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி தரும் செய்தி'' என்று தெரிவிக்கிறார்.
ஒருமுறை கடப்பதற்கு 33 ரூபாய் கட்டிவந்தேன். ஒருநாளைக்கு 66 ரூபாய் கட்டி சென்று வந்தேன். மாதம் குறைந்தது 20 முறையாவது இந்தச் சுங்கச்சாவடி வழியே சென்று வருகிறேன். இனிமே அந்தக் கட்டணம் இல்லை. ஒருநாளைக்கு 66 ரூபாய் என்பது என்னைப் பொறுத்தவரைப் பெரிய தொகைதான்" என்கிறார் ஒருவர்.
"இந்தக் கட்டணத்தை ரத்து செய்ததற்காக நமது முதலமைச்சருக்கு நான் நன்றி சொல்லிக் கொள்கிறேன். மிகப் பெரிய முயற்சியை எடுத்து கட்டணத்தை ரத்து செய்துள்ளார் அவர்.
இந்தச் சுங்கச்சாவடியைத் தினம் கடந்து செல்வதற்குச் சோர்ந்தே போய்விடுகிறேன். அவ்வளவு மணிநேரம் காத்திருக்க வேண்டி உள்ளது. வரிசையில் காலையும் மாலையும் வரிசையில் வாகனங்கள் நிற்கின்றன.
இதனால் அலுவலகத்திற்குச் செல்வதும் தாமதமாகிறது. வீடு திரும்புவதற்கும் தாமதமாகிறது. இனிமேல் அலுவலகம் விட்டவுடன் நிம்மதியாக வீட்டுக்கு விரைந்து செல்ல முடியும். என் பிள்ளைகளுடன் இன்பமாக நேரத்தைச் செலவிட முடியும்" என்கிறார் மேற்குவங்கத்திலிருந்து இங்கு வந்து வேலை செய்பவர்.
கார்களில் செல்பவர்கள் இந்தக் கட்டண வசூல் ரத்தை மிக மகிழ்ச்சியாக வரவேற்கின்றனர்.
கனரக வாகனத்தில் இச்சாலையை கடக்கும் ஓட்டுநர், இந்தக் கட்டண ரத்தால் மாதம் 2 ஆயிரம் வரை சேமிக்க முடியும்" என்கிறார்.
2 ஆயிரம் என்பது சாதாரண தொகை அல்ல. அதைக் கொண்டு நடுத்தர குடும்பத்திற்கு மளிகை பொருட்களுக்கான பட்ஜெட்டையே ஈடுகட்டி விடலாம் என்கிறார்கள்.
No comments:
Post a Comment