நீதிக்கட்சி 107 ஆவது ஆண்டு விழாவில் தமிழர் தலைவர் எழுச்சியுரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 21, 2023

நீதிக்கட்சி 107 ஆவது ஆண்டு விழாவில் தமிழர் தலைவர் எழுச்சியுரை

 திராவிட இந்தியாவுக்கும், ஹிந்துத்துவ இந்தியாவுக்கும் நடக்கும் போராட்டம் தொடர்கிறது!

நீதிக்கட்சி 107ஆம் ஆண்டு விழா-நாடெங்கும் கொண்டாடப்படும்

சென்னை, நவ.21- திராவிட இந்தியாவுக்கும், ஹிந்துத்துவ இந்தி யாவுக்கும் நடக்கும் போராட்டம் தொடர்கிறது! நீதிக்கட்சி 107ஆம் ஆண்டு விழா-நாடெங்கும் கொண்டாடப்படும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்.

நீதிக் கட்சி 107ஆம் ஆண்டு விழா சென்னை பெரியார் திடலில் அன்னை மணியம்மையார் அரங்கில் நேற்று (20.11.2023) மாலை திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

புதுமை இலக்கிய தென்றல் மற்றும் திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற விழாவில் புதுமை இலக்கிய தென்றல் தலைவர் செல்வ.மீனாட்சி சுந்தரம் இணைப்புரை வழங்கினார். செயலாளர் வை.கலையரசன் வரவேற்றார்.

தமிழர் தலைவர் உரை

திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையுரையில்,

நீதிக்கட்சி 107ஆவது ஆண்டு விழாவை துவக்கி வைப்பதில் எல்லையற்ற மகிழ்ச்சி அடைகிறோம். இன்றைய ஆட்சி  நீதிக் கட்சியின் நீட்சி மட்டுமல்ல, நம்முடைய இனத்தின் மீட்சி-மாட்சியாகும். வேர்கள் பற்றி விழுதுகள் அறிந்துகொள்ள வேண்டும். இந்த விழா கொண்டாடுவது சம்பிரதாயம் அல்ல, கணக்கு பார்க்கும் நிகழ்வு. நீதிக்கட்சி திராவிட ஆட்சிக்கு அடி கோலியது. தமிழ்நாடு முழுவதும் தென்னாடு முழுவதும் கருத் தரங்கம், நீதிக்கட்சி ஏற்படுத்திய மாற்றம் குறித்து கூற வேண்டும். 

‘‘குடிசெய்வார்க்கு இல்லை பருவம்'' என்பதுபோல் எந்த பருவம் ஆனாலும் தொடர்ந்து நடக்கும். 

நீதிக்கட்சிபற்றி இதுவரை இல்லாத புத்தகங்களைத் தேடிப்பிடித்து வெளியிட்டுள்ளோம். பெரிய புத்தகங்களைவிட சிறு வெளியீடுகளான புத்தகங்களாக வெளியிடப்பட்டுள்ளன. ஆகவே, அதனை அனைவரும் பரப்ப வேண்டும். நீதிக்கட்சி என்றால் திராவிட ஆட்சி!

1944இல் நீதிக்கட்சி திராவிடர் கழகமாக பெயர் மாற்றம் செய்யப் பட்டது. அதற்கு முன்பாக 1943 கடலூரில் ஊர்வலமாக இரு கொடி களை ஏந்தி முழக்கங்களிட்டு  சென்றோம். ஒரு கொடி சிவப்புக் கொடியில் தராசு உள்ளது. அடுத்தது புலி வில் கயல்  கொடி.

நீதிக்கட்சித் தலைவர்கள் டி.எம்.நாயர், தியாகராயர், நடேசனார் தலைவர்கள் ‘‘பார்ப்பனரல்லாதார் கொள்கை அறிக்கை''யை வெளியிட்டார்கள். ஆங்கிலத்தில் ‘ஜஸ்டிஸ்' பத்திரிகை, தமிழில் அப்படியே ‘‘நீதி'' என்று இல்லாமல் ‘‘திராவிடன்'' என்கிற பெயரில் ஏடு வெளியிடப்பட்டது. பனகல் அரசர் உள்ளிட்ட புத்தகங்களை அனைவரும்  பரப்ப வேண்டும். அதற்கான நூல்களை வெளி யிட்டுள்ளோம்.

இன்றைய ஆட்சியை ஏன் மிகப்பெரிய அளவில் பார்ப்பனர்கள் எதிர்க்கிறார்கள்? தந்தை பெரியார் கொள்கை வழியில் காமராசர், அவரைத் தொடர்ந்து அண்ணா, அவரைத் தொடர்ந்து கலைஞர் ஆட்சி திராவிட ஆட்சியாக தொடர்ந்தது. இன்று வெளிப் படையாகவே ‘திராவிட மாடல்' ஆட்சி என்று அறிவித்து நம் முதலமைச்சர் சமூகநீதிகாத்த சரித்திர நாயகர் முதலமைச்சர் ஆட்சி சாதனை தொடர்ந்துகொண்டிருக்கிறது. அண்ணாவிடம், ‘‘10 ஆண்டுகளில் ஆட்சியைப் பிடித்து விட்டீர்களே'' என்றபோது, ‘‘எம் பாட்டன் நீதிக்கட்சி'' என்றார்.

‘‘பதவி வேட்டை கட்சி'' என்று நீதிக்கட்சியை கொச்சைப்படுத்தி பார்ப்பனர்கள் பிரச்சாரம் செய்தனர். 

பதவி அவர்களை தேடி வந்த போதும் ஏற்காத தலைவர்களாக இருபெரும் தலைவர்கள் இருந்த வரலாறு இன்றைய தலைமுறை யினர் அறிந்து கொள்ள வேண்டும்.

நீதிக்கட்சித் தலைவராக இருந்த தியாகராயர் சென்னை மாகாணத்துக்கு பிரீமியராகப் பதவி ஏற்கவேண்டும் என்றபோது, அப்போது முதலமைச்சர் இல்லை, பிரீமியர் என்பதாகும். அவர் பதவியை ஏற்கவில்லை, சுப்பராயலு ரெட்டியார் பதவிக்கு வந்தார். அவருக்கு உடல்நிலை சரியில்லாத நிலையில், அடுத்து பனகல் அரசர் பதவியேற்றார்.

தந்தை பெரியார் ஏழு  ஆண்டுகளுக்கு மேலாக நீதிக்கட்சியின் தலைவராக இருந்தார். ராஜாஜி பதவியிலிருந்து வெளி யேறும்போது முக்கிய எதிர்க்கட்சியாக இருந்தது நீதிக் கட்சி. நீதிக்கட்சியின் தலைவர் தந்தை பெரியார் பதவியை ஏற்க வேண்டும் என்று கவர்னர் ஜெனரல், வைஸ்ராய், கவர்னர் என வெள்ளைக்காரர்கள் அழைத்தபோது தனக்குப் பதவி வேண்டாம் என்றார்.

அப்படி பதவி தேடி வந்தபோதும் பதவியை ஏற்காத இருபெரும் தலைவர்களாக தியாகராயரும், தந்தை பெரியாரும் இருந்தார்கள்.

தீண்டாமை ஒழிப்பு மசோதாவை தாதாபாய் பார்சி இனத்தைச் சேர்நத் எம்.பி., கொண்டு வந்தபோது, சுரேந்திரநாத் பானர்ஜி, மதன்மோகன் மாளவியா கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். அதேபோல், ஜி.கே.கோகலே 1901 ஆம் ஆண்டிலிருது 1915 ஆம் ஆண்டுவரை ஜாதி, தீண்டாமை ஒழிப்புப் பற்றி பேசவில்லை.

ராமராய நிங்கார் என்ற பனகல் அரசர்தான் ஒடுக்கப்பட்ட மக்கள் உள்ளிட்ட பார்ப்பனரல்லாதாருக்கு அரசில் வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு, தீண்டாமை ஒழிப்பு சட்டம் என்று நீதிக்கட்சி ஆட்சியில்தான் கொண்டுவரப்பட்டது. அரசினால் அனைத்துப் பிரிவி னருக்கும் கல்வி எனும் கல்விக் கொள்கை பல்வேறு சமூகத்திலிருந்து ஆசிரியர்கள், ரெட்டை மலை சீனி வாசன்மூலம் தீண்டாமை ஒழிப்பு உத்தரவுகள், பொதுக் கிணறு, தெருவில் நடப்பது, பொது இடம், பொது குளம் எல்லோருக்கும் உரிமை கிடைத்தது.

இன்னமும் போராட்டம் தொடர்ந்து கொண்டிருக் கிறது. அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்றால் இன்னமும் எதிர்க்கிறார்கள்.

அப்படி நீதிக்கட்சியின் நீட்சியாக இருப்பதால் இன்றும் இந்த ஆட்சியை பார்ப்பனர்கள் எதிர்க்கிறார்கள்.

களம் மாறுகிறது போராட்டம் தொடர்ந்துகொண் டிருக்கிறது.

தந்தை பெரியார் சொன்ன வகுப்புரிமையை அன்று காங்கிரசு எதிர்த்தது. இன்று அதே காங்கிரசு ஆதரிக்கிறது.

திராவிட இந்தியாவுக்கும், ஹிந்துத்துவ இந்தியா வுக்கும் நடக்கும் போராட்டம் தொடர்கிறது.

இந்தியாவைக் காப்பாற்ற வேண்டும் என்று நாமும், ஹிந்துத்துவாவைக் காப்பாற்ற வேண்டும் என்று அவர் களும் உள்ளனர். (தமிழர் தலைவர் ஆசிரியரின் முழு உரை பின்னர்).

உரிமைகளை கேட்கும் உணர்வு 

தீமைகளை எதிர்க்கும் துணிவு 

திராவிடர் கழக துணைப் பொதுச்செயலாளர் வழக் குரைஞர் சே.மெ.மதிவதனி சிறப்புரை ஆற்றினார். அவரது உரையில், 

கேரளா மாநில யுக்திவாதி சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நிகழ்வில் ‘விஸ்வகர்மா யோஜனா' பற்றி அவர்கள் நிறைவேற்றிய தீர்மானத்திற்கு அடிப்படையாக அமைந்தது நமக்கு இயக்க இதழான ‘தி மாடர்ன் ரேஸ்னலிஸ்ட்' (The Modern Rationalist) பத்திரிகையில் ஆசிரியர் அவர்களின் விஷ்வகர்மா யோஜனா பற்றிய சுற்றுப்பயணக் குறிப்பும், அவரின் பேச்சும் தான் என்பதை அவர்கள் குறிப்பிட்டதை பதிவு செய்தார். 

‘‘500 அடி குழித் தோண்டி நீதிக்கட்சியைப் புதைத்து விட்டோம்'' என்று சொன்னவர்கள் இடம் தெரியாமல் போனார்கள். ஆனால், அய்ந்து தலைமுறைகளாக இந்த இயக்கம் இருக்கிறது என்று சொன்னால், அதற்குக் காரணம் பெரியாருக்கு பிறகும் அந்த சிந்தனைகளை நம்மிடத்தில் ஆசிரியர் அப்படியே பதிய வைத்திருக் கிறார் என்றார். அன்னை மணியம்மையார் அவர்கள் 1976 இல் ‘‘உரிமைகளை கேட்கும் உணர்வு தீமைகளை எதிர்க்கும் துணிவு'' ஆகியவற்றிற்கு அடித்தளமாக  நமக்கு நீதிக்கட்சி அமைந்தது என்றார்.  சுயமரியாதை உணர்வு, கல்வி உரிமை ஆகியவற்றிற்காக உரிமை கேட்கும் உணர்வை நீதிக்கட்சி செய்த காரியங்கள் மூலம் விளக்கினார். தீமைகளை எதிர்க்கும் துணிவுடன், பார்ப்பன கொட்டத்தை அடக்கும் வகையில் இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தை நீதிக்கட்சி ஆட்சிதான் கொண்டு வந்தது என்பதை எடுத்துரைத்தார். இன்னும் நூறாண்டு தாண்டியும் இந்த இயக்கம் இருக்கும் என்று கூறி நிறைவு செய்தார்.

சந்தர்ப்பம் கிடைத்தால் தெரியும்

திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். அவரது உரையில்,

நீதிக்கட்சி தொடங்கப்பட்ட வரலாற்றை எடுத் துரைத்து, டி.எம்.நாயர் முழுமையான நாத்திகர்; சர்.பிட்டி.தியாகராயர் ஆத்திகர். ஆத்திகராக இருந்த  தியாகராயர் அவர்களுக்குப் பார்ப்பனர்களால் இழைக்கப்பட்ட அநீதியும், அதற்குப் பின்னால் அவருக்கு ஏற்பட்ட சுய மரியாதை உணர்வும், அந்த சுயமரியாதை உணர்வின் விளைவாக நீதிக்கட்சியைத் தோற்றுவிப்பதற்கு அவர் கள் எல்லாம் எப்படி காரணமாக அமைந்தார்கள் என்பதையும் பதிவு செய்தார். டாக்டர் நடேசனார் தான் நீதிக்கட்சி தோன்றுவதற்கு மூல காரணம் என்பதையும் வரலாற்று குறிப்புகளோடு எடுத்துரைத்தார். பார்ப்பனர் களுடைய ஆதிக்கம் எல்லா அரசுத் துறைகளிலும் எப்படி நிறைந்திருந்தது என்பதை புள்ளி விவரங்களோடு விவரித்தார். குறிப்பாக நீதிக்கட்சி ஆட்சிக்கு வருவதற்கு முன்னால் பார்ப்பனர் அல்லாதவர்களின் நிலை எவ்வளவு மோசமாக இருந்தது என்பதை எடுத்துக் கூறி,  100-க்கு 97 சதவிகிதம் இருந்த பார்ப்பனர் அல்லாதார் அரசுப் பணிகளில் இருந்த எண்ணிக்கையும் 100-க்கு 3 சதவீதமே இருந்த பார்ப்பனர்கள் அனைத்துத் துறை களிலும் ஆதிக்கத்தில் இருந்த விதத்தை எடுத்துரைத்தார். இந்த நிலையை மாற்றியது நீதிக்கட்சி தான் என்றும், நீதிக்கட்சியின்  வரலாற்று குறிப்புகளில் மிக முக்கிய மானதான ‘‘திராவிடன் இல்ல''த்தை நடேசனார் அவர் கள் தொடங்கியதை எடுத்துரைத்தார். அந்த திராவிடன் இல்லத்தில் படித்து, பின் நாட்களில் நீதிபதியாக, அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர்களாக உருவெடுத்தவர்களை பட்டியலிட்டார். 

நீதிக்கட்சியினுடைய மிக முக்கிய தலைவராக இருந்த பானகல் அரசர் அவர்கள் கல்விக்காக செய்த அனைத்து சாதனைகளையும் பட்டியலிட்டார். அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய செய்தியான கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரிக்கு நன்கொடையாக அந்த நிலத்தை பானகல் அரசர் வழங்கியதையும், கல்லூரி கமிட்டி,  ஸ்டாப் செலக்சன் கமிட்டி ((Staff Selection Committee) ஆகியவற்றை அவர் உருவாக்கிய விதத்தையும் விவரித்தார். நம்முடைய தலைவர்களின் நல்ல திட்டங்கள், சாதனைகள், செயல்பாடுகள் தெரிந்து விடக்கூடாது என்று பார்ப்பனர்கள் தொடர்ந்து அவர்கள்மீது பரப்பக்கூடிய அவதூறுகளையும் எடுத்துக்காட்டுடன் விவரித்தார். 

தந்தை பெரியார் மக்களுக்காக செய்த நல்ல செய்திகளை எடுத்துக் கூறி விடுவோம் என்ற அச்சத்தில் அய்யாமீது பரப்பப்படும் அவதூறுகளை விளக்கினார். பார்ப்பனர்கள் இல்லாத அமைச்சரவையை அறிஞர் அண்ணா அவர்கள் ஏற்படுத்திய தன்மையை கூறி, இன்று இருக்கக்கூடிய திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியும் பார்ப்பனர் அல்லாத அமைச்சரவையை உருவாக்கி இருக்கிறது என்றார். நமக்கு யார் மீதும் தனிப்பட்ட விரோதம் இல்லை. ஆனால், பார்ப்பனர்கள் அனைத்து நிலைகளிலும் நம்மை எப்படி வஞ்சித்தார்கள் என்பதை விளக்கினார். 

பார்ப்பனர்கள் திருந்தி விட்டார்கள் என்று சொன்னால் நம்மால் நம்ப முடியாது. அதற்கு நல்ல எடுத்துக்காட்டு நெருக்கடி காலநிலை என்றும், நெருக்கடி கால நிலையில் பார்ப்பனர்கள் எவ்வளவு ஆதிக்கத்துடன் நடந்து கொண்டார்கள் என்பதையும் விவரித்தார். பார்ப்பனர்கள் எவ்வளவு திருந்தி இருக்கிறார்கள் என்பது சந்தர்ப்பம் கிடைத்தால் தெரியும் என்று கூறி நிறைவு செய்தார்.

அந்தப் பணியை நாம் முன்னெடுக்க வேண்டும்: 

திராவிட முன்னேற்றக் கழகத்தின் செய்தித் தொடர்புக் குழு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். அவரது உரையில்,

‘‘நீதிக்கட்சியை 500 அடி குழி தோண்டி புதைப்போம்'' என்று 1938 இல் நீதிக் கட்சி தோற்றபோது கூறினார்கள். ஆனால், அதுவே விதையாக அமைந்து இன்றைக்கு ஆயிரம் அடிக்கு மேல் வளர்ந்து நிற்கிறது. மனிதர்களை மனிதர்களாக மதிப்பதற்காக உருவாக்கப்பட்ட கட்சி நீதிக்கட்சி என்றும், தங்களைப் போல மற்றவர்களும் கல்வி வாய்ப்பைப் பெற வேண்டும் என்பதற்காக  கல்வியில் சிறந்தவர்களால் ஆரம்பிக்கப்பட்ட இயக்கம் என்றார். தமிழர்களுடைய பெருமையை, சமத்துவத்தோடு தமிழர்கள் வாழ்ந்த விதத்தை, நம்முடைய வாழ்வியல் சமத்துவ வாழ்வியல் என்றும், நம்முடைய மொழிக்குரிய சிறப்புகளை அது எப்படி செம்மொழியாக இருக்கிறது என்ற விதத்தையும் எடுத்துரைத்தார். இவ்வளவு சிறப்பு வாய்ந்த நமது தமிழர்கள் வாழ்வில், நம்மை அடிமைப்படுத்தியது எது என்ற கேள்வியோடு - நம்மை எது அடிமைப்படுத்தியதோ அதை எதிர்த்து தோன்றிய இயக்கம் தான் நீதிக்கட்சி என்றார். ஜாதிய சிந்தனைகள் நிலவியிருந்த சமூகத்தில் பார்ப்பனர் அல்லாதார் அறிக்கை நீதிக்கட்சியின் மிக முக்கிய அறிக்கையாக அமைந்த பாங்கையும், 1938 இல் தந்தை பெரியார் அவர்கள் சிறையில் இருந்தபோது நீதிக்கட்சியின் தலைவராக பொறுப்பேற்க வேண்டிய சூழலையும் விவரித்தார். 

பேருந்துகளில் தாழ்த்தப்பட்டோருக்கு அனுமதி இல்லை என்ற நிலையை மாற்றி தாழ்த்தப்பட்டோரை அனுமதிக்காத பேருந்துகளின் உரிமம் ரத்து செய்யப் படும் என்ற நீதிக்கட்சியின் ஆணையையும், பள்ளிக் கூடங்களில் தாழ்த்தப்பட்டோரை அனுமதிக்கவில்லை என்றால் அதன் அனுமதி ரத்து செய்யப்படும் என்ற நீதிக்கட்சியின் வரலாற்று சிறப்பு வாய்ந்த ஆணை களையும் எடுத்துரைத்தார். சமுதாய, அரசியல் சூழலில் ஒடுக்கப்பட்டோருக்காக ஆட்சி செய்தது நீதிக்கட்சி என்றும், அதன் தொடர்ச்சி தான் திராவிட முன்னேற்றக் கழகம் என்றார். 

இட ஒதுக்கீடு தொடங்கி, கல்வி முதலிய அனைத் திலும் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய பங் களிப்பு இச்சமூகத்தில் மிகப்பெரியது என்பதை பல்வேறு சான்றுகளோடு விவரித்தார். மேலும் நம்மை படிக்க வைத்து, நம்மை மனிதர்கள் ஆக்கி சுயமரியாதையோடு வாழ வைத்த நீதிக்கட்சிக்கும், அதனுடைய தலைவர் களுக்கும் வணக்கத்தை செலுத்தி, அவர்களின் அந்தப் பணியை நாம் முன்னெடுக்க வேண்டும் என்று கூறி நிறைவு செய்தார்.

திராவிடம் என்பதே 

ஒரு இயக்கக் கருத்தியல் தான்

திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் செயலாளர் பேராசிரியர் அ. கருணானந்தன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். அவரது உரையில்,

நீதிக்கட்சி செய்தவற்றை மீண்டும் நினைவுப் படுத்துவதற்கான அவசியம் இன்று அதிகம் இருக்கிறது என்றார். ‘வாட்ஸ் அப்' வரலாற்றை மற்றவர்கள் நம்பி னால் கூட பரவாயில்லை , யுஜிசி அதைதான் வரலாறாக மாற்றி அமைக்கப் பார்க்கிறது என்று சான்றுடன் விவரித்தார். குறிப்பாக அவர்களது புத்தகத்தில் நீதிக்கட்சி பற்றிய ஒரு குறிப்பு இல்லை; தந்தை பெரியார் பற்றிய குறிப்பு இல்லை. ஆனால் Mobilisation of Caste என்ற பாடம் இருக்கிறது. நீதிக்கட்சி திராவிட ஆட்சியினுடைய முதல் கட்டம். திராவிடம் என்ற சொல்லுக்கு அர்த்தம் தெரியாதவர்கள் திராவிட இயக்கத்தின் அல்லது கட்சி யின் தலைவராக இருக்க முடியாது என்று கூறி, தொடர்ச் சியாக ஆரியம்- திராவிடம் பற்றிய சர்ச்சை பேச்சுகளை ஆளுநர் பேசி வருவதைச் சுட்டிக்காட்டினார். 

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் திராவிடம் பற்றிய கேள்விக்கு பதில் அளித்த விதத்தைச் சாடினார். ‘‘திராவிடம் என்பதே ஒரு இயக்க கருத்தியல்'' என்று ஆணித்தரமாக கூறினார். மன்னர் ஆட்சிக்காலம், காலனி ஆதிக்கம், அதன்பிறகு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களாட்சி ஆகிய முறைகளில் எதற்கு முன்னுரிமை வழங்கப்பட்டது என்பதை விவரித்தார். அந்த அனைத்து நிலையிலும் கல்விக்கான போராட்டங்கள் நடைபெற்றிருக்கிறது அந்த கல்வியை அனைத்து மக்களுக்கும் கொண்டு போய் சேர்க்க நினைத்த இயக்கம் நீதிக்கட்சி என்றார். 

2024ஆம் ஆண்டு மெக்காலே திட்டத்தின் 190 ஆவது ஆண்டு என்பதை நினைவுப்படுத்தினார். மிட்டா மிராசுகள், பணக்காரர்களின் ஆட்சி நீதிக்கட்சி ஆட்சி என்றார்கள். ஆனால், நீதிக்கட்சி ஸநாதனக் கொள்கையை ஒழிக்கவே பாடுபட்டதே ஒழிய அதனை வளர்க்கவில்லை என்றார். ஸநாதனம் என்பது பழை மைகள் நிறைந்தது. அந்தப் பழைமையை பாதுகாக்க நீதிக்கட்சி விரும்பவில்லை. ஒடுக்கப்பட்ட மக்கள் மேலெழுந்து வருவதற்காகப் பாடுபட்டது நீதிக்கட்சி என்றார். ஒவ்வொரு முறையும் உரிமை மறுப்புகள் இருந்து வந்திருக்கிறது. அந்த உரிமை மறுப்புகள் ஆங்கிலேயர்கள், முகாலயர்கள், டில்லி சுல்தான்கள் காலத்தில் வந்ததல்ல. அதற்கு முன்பே பார்ப்பனர்களால் ஏற்படுத்தப்பட்டது என்றார். கல்வி, வேலை என்று அனைத்திலும் பார்ப்பனர்களின் ஆதிக்கம் நிறைந்தி ருந்ததை மாற்றி அமைத்தது நீதிக்கட்சி என்றார். சுரண் டப்பட்டவர்கள் பார்ப்பனர் அல்லாதவர்கள்; சுரண்டிய வர்கள் பார்ப்பனர்கள் - இந்த நிலைக்கு எதிராக நீதிக்கட்சி இயற்றிய சட்டங்களை விவரித்தார். 

சுயமரியாதையும், அறிவும் மறுக்கப்பட்ட கல்வி முறை பார்ப்பனர்கள் நமக்கு அளித்தது. சுயமரியாதை உணர்வுடன் கூடிய கல்விமுறையை நீதிக்கட்சி நம்மிடம் சேர்த்தது என்பதை விளக்கி, இன்றைய சூழலை விவரித்து போர்க்களங்களில் நாம் வென்று இருக்கலாம்; ஆனால், போர் தொடர்கிறது. அதிலும் நாம் வெற்றி பெற வேண்டும் என்றால், நம்மை இழக்கக் கூட தயாராக இருக்க வேண்டும் என்று கூறி நிறைவு செய்தார்.

வரலாற்றில் இதுவரை நீதிக்கட்சி பற்றி நாம் அறிந்திடாத செய்திகளையும், இன்றைய சூழலுக்குத் தேவையான குறிப்புகளையும், 2024 நாடாளுமன்ற தேர்தலில் எப்படி அணுக வேண்டும் போன்ற அரிய செய்திகளை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் குறிப்பிட்டு சிறப்புரையாற்றினார்.

புதுமை இலக்கியத் தென்றல் தலைவர் பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் அவர்கள்  இணைப்புரை வழங்கி நிகழ்வினை ஒருங்கிணைத்தார்.

மாநிலக் கழக அமைப்பாளர் தெ.சே.கோபால் நன்றி கூறிட, விழா வெகுநேர்த்தியுடன் நிறைவு பெற்றது.

15 புத்தகங்களின் தொகுப்பு நூல் வெளியீடு

நீதிக்கட்சித் தலைவர்கள், நீதிக்கட்சி ஆட்சி சாதனை, பார்ப்பனரல்லாதார் அறிக்கை உள்ளிட்ட பல்வேறு வரலாற்று தகவல்களின் பெட்டகமாக ரூ.625 மதிப்பிலான 15 புத்தகங்களின் தொகுப்பு நீதிக்கட்சி 107ஆம் ஆண்டு விழாவில் ரூ.500-க்கு வழங்கப்பட்டது. தமிழர் தலைவர் ஆசிரியர் புத்தகங்களை வெளியிட, செல்வ.மீனாட்சிசுந்தரம்,  சிங்கப்பூர் இலியாஸ், ஆ.வெங்கடேசன், பழ.சேரலாதன், தொண்டறம், மு.இரா.மாணிக்கம், தே.செ.கோபால், வழக்குரைஞர் சு.குமாரதேவன், க.இளவரசன் மற்றும் பலர் புத்தகங்களைப் பெற்றுக்கொண்டனர். (சென்னை, பெரியார் திடல், 20.11.2023).

தமிழர் தலைவர் ஆசிரியர் உரை கேட்கத் திரண்டிருந்தோர் (சென்னை, 20.11.2023)


No comments:

Post a Comment