பாணன்
பீகார் ஜாதிவாரி கணக்கெடுப்பு விவரங்களை நிதிஷ்குமார் அரசு வெளியிட்டுள்ளது. இந்த ஒரு நடவடிக்கையால், 2024 இன் அரசியல் கதை மாறப் போகிறது.
இந்தியா கூட்டணியால் கலங்கிப் போயிருந்த மோடி அரசு சமூகத்தின் தாக்கங்களின் பிடியில் சிக்கியிருந்த பெண்களை இட ஒதுக்கீடு என்ற மாயப் பொடி போட்டு தாமரைப் பக்கம் இழுத்து விடலாம் என்ற நப்பாசையோடு எதிர்பாராத விதமாக சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தைக் கூட்டி மகளிருக்கான இட ஒதுக்கீட்டு சட்டத்தை அமல்படுத்தியது. பாஜக நினைத்தது போன்றே எந்தக் கட்சியும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இவர்களின் சூழ்ச்சியைப் புரிந்து கொண்ட சோனியா காந்தி முன்கூட்டியே சிறப்பு கூட்டத்தொடரில் மகளிர் இட ஒதுக்கீட்டை கொண்டுவாருங்கள் என கடிதம் எழுதி தன்னுடைய அரசியல் கோட்டையை வலுப்படுத்தினார். கடைசி நாள் வரை சோனியாவின் கடிதத்தின் தாக்கத்தை மறைக்க பாரத், ஒரே நாடு ஒரே தேர்தல் என்று எல்லாம் நடாளுமன்றத்தில் விவாதத்திற்கு வரும் என்று அவர்களாகவே வதந்திகளை பரப்பிக்கொண்டு இருந்தனர்.
ஆனால் சோனியாவின் கணிப்பு தப்பவில்லை. இருப்பினும் மகளிர் இட ஒதுக்கீடு தனக்கு பெரிய பலம் என்று நினைத்துக்கொண்டு இருந்த போது சமூகநீதியின் கிழக்கு முகமாக விளங்கும் பீகார் மாநில அரசு வீசிய அம்பு தேசிய ஜனநாயக கூட்டணியின் மாயக் கோட்டையை ஒரே இரவில் தகர்த்துவிட்டது.
மோடி இதை எதிர்பார்க்கவே இல்லை. சர்ஜிகல் ஸ்டிரைக் என்று கதை ஓட்டிக் கொண்ட கூட்டத்திற்கு இதுதான் உண்மையான சர்ஜிகல் ஸ்டிரைக் - மிகவும் துல்லியமான தாக்குதல் என்று காட்டிவிட்டார்.
ஏற்கெனவே இந்தியா கூட்டணியின் ஒற்றுமையால் வாக்குகள் ஒன்றுபடுவது தெளிவாக தெரிந்த பிறகுதான் அவசர அவசரமாக ஆர்,எஸ்,எஸ். அமைப்பின் ஆலோசனையின் படி மகளிர் இட ஒதுக்கீடு சட்டத்தைக் கொண்டுவந்து பெரும்பாலான பெண்களின் வாக்குகளை பிடித்துவிடலாம் என்ற நப்பாசையில் இருந்த மோடி - அமித்ஷா கூட்டணிக்கு பீகாரின் ஜாதிவாரி ஆய்வறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்திவிட்டது.
ஆய்வறிக்கை
90 ஆண்டுகளுக்குப் பிறகு சமூகத்தில் ஜாதிகள் குறித்த ஆய்வறிக்கையை பீகார் அரசு வெளியிட்டுள்ளது இது 2024ஆம் ஆண்டு தேர்தலில் மிகவும் முக்கிய பங்கு வகிக்கும்.
ராமர் கோவில் அதோடு மகளிர் இட ஒதுக்கீடு இது இரண்டுமே ஹிந்தி பெல்ட்டில் குறைந்த பட்சம் கணிசமான இடங்களைப் பார்த்து விடலாம் - இதர பகுதிகளில் கிடைப்பதை வைத்து மீண்டும் ஆட்சியை பிடித்துவிடலாம் என்ற மமதையில் இருந்த பஜனைக்கோஷ்டிகளுக்கு பீகார் அரசு பெரிய சவால் ஒன்றை முன் வைத்துள்ளது.
இதன் முன்பு பெண்களுக்கான இட ஒதுக்கீடு குறித்த பரபரப்பு சூரியனைக் கண்ட பனி போன்று விலகிவிட்டது. ஜாதிவாரி ஆய்வறிக்கை இந்த தேர்தலில் எந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைக் காணலாம். பீகாரில் வெளியிடப்பட்ட ஜாதிவாரி ஆய்வறிக்கையில் உயர் ஜாதியினர் 15.5%, பிற்படுத்தப்பட்ட ஜாதி 27.1% மிகவும் பிற்படுத்தப்பட்ட ஜாதி 36% பட்டியல் ஜாதி 19.6% மற்றும் பழங்குடியினர் 1.6%. இந்த புள்ளிவிபரம் நாடு முழுவதும் பெரும் புயலை கிளப்பி உள்ளது.
இதனிடையே பீகார் மாநிலம் இந்த கணக்கெடுப்பை நடத்துவதா வேண்டாமா என்ற ஒரு வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்தது. இப்போது உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி விட்டது, இதனால் இதர மாநிலங்களும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த பாதை பிறந்துவிட்டது.
நிதிஷ்குமார் அரசு மிகவும் திட்டமிட்டு எந்த ஒரு அய்யப்பாட்டிற்கும் இடமில்லாமல் துல்லியமான ஒரு புள்ளி விபரத்தை வெளியிட்டுவிட்டது. இதற்கு எதிராக பாஜகவோ இதர எந்த ஒரு வலதுசாரி அமைப்புகளோ பொய்யான கட்டுக்கதைகளைக் கூற வழியில்லாமல் போய்விட்டது. அவர்கள் எப்படி மகளிர் இட ஒதுக்கீட்டிற்கு எந்த ஒரு எதிர்ப்புக் காட்ட வாய்ப்பில்லாமல் மசோதாவை நிறைவேற்ற வைத்தார்களோ அதே அளவில் பதிலடி தரப்பட்டுள்ளது.
பீகாரில் மொத்த பிற்படுத்தப்பட்ட இதர பிற்படுத்தப்பட்ட மக்கள்தொகை 63% இதோடு பட்டியல் மற்றும் பழங்குடிபிரிவினரைச் சேர்த்தால் அது 84% ஆக உயர்கிறது.
ஆனால், அங்கே நிலவரம் என்ன? பெரும்பாலும் உயர்ஜாதியினர் கல்வி அறிவு இல்லாத நிலச்சுவாந்தார்கள் மற்றும் பெரும் நில உடமையாளர்கள். இதனடிப்படையில் அங்கு உயர்பதவியை அதிகம் ஆக்கிரமித்து இருப்பவர்கள் பார்ப்பனர்கள் மற்றும் மிகச்சொற்ப அளவு உயர்ஜாதியினர். அதாவது வெறும் 5 விழுக்காடு. அங்கு உயர்ஜாதி அல்லாதவர்களின் பங்களிப்பு மிக மிக குறைவாகவே உள்ளது காரணம் என்ன? ஏன்? என்ற கேள்வி தானாகவே எழுகிறது?
“ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை” இந்தக்கேள்வி பெரும் விவாதப் பொருளாக மாறிக்கொண்டு வருகிறது.. குறிப்பாக இட ஒதுக்கீடு தொடர்பான விவாதத்தில்.
ஜாதிரீதியான ஆய்வறிக்கை மட்டுமல்ல மதரீதியான தரவுகளும் வெளியாகியுள்ளன. இந்துக்கள் 82%, முஸ்லீம்கள் 17.7% பீகார் முஸ்லீம்களையும் பிரித்து ஆய்வறிக்கை செய்துள்ளது - முக்கியமாக பெரும் பணக்காரர்களாக உள்ள மூமின்கள் நடுத்தர மற்றும் வறிய நிலையில் உள்ள சேக் என்று பிரித்துள்ளனர் இதில் என்ன விபப்பு என்றால் 82 விழுக்காடு உள்ள ஹிந்துக்களுக்கு வெறும் 17 விழுக்காடு இஸ்லாமியர்களால் ஆபத்து என்று ஹிந்துத்துவ வாதிகள் கூறி வருகின்றனர்.
அடுத்த அதிரடி ஒன்று பாஜகவிற்கு காத்திருக்கிறது அது விரைவில் சமூக பொருளாதார ஆய்வறிக்கை ஒன்றையும் நிதீஷ் குமார் அரசு வெளியிடப் போகிறது. இதன் மூலம் ஒரு உண்மை வெளிவரப் போகிறது - அதாவது ஒன்றுமே இல்லாத 30 விழுக்காடு மக்கள் ஏதோ அன்றாட வாழ்க்கைக்கு தேவையாவைகளைக் கொண்ட 47 விழுக்காடு மக்கள் மீதமுள்ள 23 விழுக்காட்டு மக்கள் ஒரு பெரும் சமூகத்தின் தேவைகளை முடக்கி வைத்துள்ளனர் என்ற விபரம் வெளிவரும். இதனால் ஏற்படும் தாக்கம் மோடி மற்றும் ஆர். எஸ்.எஸ். தலைமைக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் என்பதில் அய்யமில்லை. இந்தியக் கூட்டணியில் உள்ள மற்ற மாநிலங்களும் இந்த ஜாதிவாரி கணக்கெடுப்புப் பணியைத் தொடங்கும் என்று தெரிகிறது. 2024 க்கு ஒரு கதை அமைக்கப்படுகிறது.
அயோத்தி ராமன் Vs தந்தை பெரியார்
இங்கிருந்து புதிய திருப்பம் ஒன்று உருவாகி உள்ளது. இந்தியா கூட்டணியின் எதிர்கால திட்டம் பற்றி பொதுமக்கள் குழம்பி உள்ள நிலையில் ராமனுக்கும் தந்தை பெரியார் கொள்கைக்குமிடையே தான் 2024 தேர்தல் களம் இருக்கப் போகிறது.
பா.ஜ.க.வின் எப்போதும் போது பெரிய கோட்டிற்குக் மேலே மற்றோரு பெரிய கோட்டை கிழித்து பிரச்சினையை மூடி மறைக்கும் உத்தி இதில் பலிக்காது - காரணம் தற்போது இந்தியா கூட்டணி கிழித்திருப்பது கோடு அல்ல, மலை. இந்த ஜாதி ஆய்வறிக்கையின் தாக்கம் எப்படி இருக்கும் - எடுத்துக்காட்டக, பாஜகவின் ஹிந்தி பெல்ட்டில், குறிப்பாக உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், அரியானா, ஜார்கண்ட், ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்ளிட்ட பகுதிகளில் மிகப் பெரிய சவாலாக இருக்கப் போகிறது? இதில் மூன்று மாநிலத்தில் பாஜக ஆட்சி என்பது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் மண்டல் வெர்ஸஸ் மந்திர் என்பது அயோத்தி ராமன் வெர்ஸஸ் தந்தை பெரியார் என்று வந்து நிற்கிறது.
தந்தை பெரியார் வெள்ளைக்காரன் போகும்போது பார்ப்பனர்கள் பனியாக்கள் கைகளில் அதிகாரத்தைக் கொடுத்து விட்டான் என்றார். இன்றும் அது உண்மைதான். 80 விழுக்காடு உழைக்கும் வர்க்க மக்களை வெறும் 20 விழுக்காடு மக்கள் அடக்கி ஆளுகின்றனர். வடக்கே குறிப்பாக மராட்டியம் பிராமண-பனியா-தாக்கூர் நாடு என்று அழைக்கப்படுகிறது.
நமது நாட்டில் தனிநபர் வருமானம், நில உரிமை, தனியார் நிறுவனங்கள் பெரும் கார்ப்பரேட்டுகள், பல்கலைக்கழகங்கள் அரச அதிகார மய்யம் என அனைத்திலும் குறிப்பிட்ட வர்க்கத்தின் ஆளுமை - நீதிமன்றம் கல்விக்கூடங்கள் என அனைத்தும் என்று கூறலாம். நாட்டின் முதுகெலும்பான இந்த விவகாரங்களை வட இந்திய பெரும் ஊடகங்கள் என்றுமே விவாதிப்பதில்லை. காரணம் அங்கும் அந்த 20 விழுக்காடு மக்களின் ஆதிக்கம்தான்.
உரிமைகளுக்கான காத்திருப்புகள்
அதிகாரச் சம நிலைக்கான காத்திருப் புகள் அன்றும் உள்ளது இன்றும் உள்ளது. இதை உடைத்தெறியத்தான் நாணயத்தின் இரண்டு பக்கங்களாக அண்ணல் அம்பேத்கர் மற்றும் தந்தை பெரியார் கடைசி வரை போராடினார்கள் - பீகார் அரசு வெளியிட்ட ஆய்வறிக்கை வெறும் எண்கள் அல்ல, அது விடுதலைக்குப் பிறகான ஆதிக்க வர்க்கத்தின் ஆக்டோபஸ் கரத்தினை வெட்டி வீசும் கோடாரிக் கணைகள் ஆகும் இந்தக் கோடாரியை அவ்வப்போது தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், கன்ஷிராம், கர்பூரி தாக்கூர், ஜெ.பி.நாராயணன் உள்ளிட்ட பல சமூகநீதியின் பால் அக்கறை கொண்ட தலைவர்கள் கூர்தீட்டினார்கள். ஆனால், கூர் தீட்டப்பட்ட கோடாரியை கையாளும் வகையில் மக்கள் தயாராக வில்லை. அதாவது அவர்களை தயாராக விடாமல் பார்ப்பனியம் பார்த்துக்கொண்டது.
இதில் தமிழ்நாடு மட்டுமே இந்த கோடாரியை கையில் எடுத்து வெட்டி வீசியுள்ளது ஆய்வறிக்கை மற்றும் கணக் கெடுப்பு குறித்த வரலாற்றை பார்க்கலாம். 90 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆய்வறிக்கை மிகவும் முக்கியமானது? இதற்கு, பின்னால் உள்ள வரலாற்றைப் புரிந்து கொள்வது மிகவும் முக்கியம். 1881 ஆம் ஆண்டு பிரித்தானியர்களால் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்கப்பட்டது. இது ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் கணக்கெடுப்பு தொடர்ந்து நடந்தது விடுதலைக்கு முன்பு ஜாதி ரீதியிலான கணக்கெடுப்பு நடந்தது - அதன் பிறகு அது கைவிடப்பட்டது அல்லது கையிலெடுக்க விருப்பப்படவில்லை. சமூகத்தின் மக்களில் உண்மை நிலையைப் புரிந்துகொள்ளாமல் எப்படி திட்டங்களைத் தீட்டமுடியும் என்ற கேள்வி எழுந்ததால் அந்த ஆங்கிலேயர் கொடுத்த கணக்கெடுப்பு விபரங்களை வைத்துக்கொண்டே காற்றில் கவிதை எழுதினார்கள்.
ஜாதி ரீதியிலான கணக்கெடுப்பு
இந்தியாவில் ஜாதி அமைப்பு உள்ளது. உலகிலேயே எந்த நாட்டிலும் இல்லாத ஒரு வித்தியாசமான கணக்கெடுப்பு இந்தியாவில் நடந்தது, அய்ரோப்பிய காலனி நாடுகள் இன்றைய மேற்கு கடற்கரை ஆப்பிரிக்க நாடுகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தியது, அது உள்ளூர் மக்கள், நாடோடிகள், கால்நடைமேய்ப்பர்கள், விவசாயிகள் என்று தான் மேற்கொண்டது. இதில் நாடோடிகள் மத்திய ஆப்பிரிக்க நாடுகள் பலவற்றில் சென்று வந்துகொண்டே இருப்பவர்கள். கால்நடை மேய்ப்பவர்கள் லட்சக்கணக்கான கால்நடைகளோடு புல்வெளிகளை நோக்கி ஆண்டுதோறும் தொடர்ந்து பயணம் செய்பவர்கள்,
ஆனால் இந்தியாவில் மட்டும் தான் ஒரே சமுகத்தைச் சேர்ந்த மக்களை பல்வேறு பிரிவுகளாக கணக்கெடுக்கும் நிலைக்கு ஆங்கிலேயர்கள் தள்ளப்பட்டார்கள் - காரணம் ஜாதியப் படிநிலை ஜாதிரீதியான கணக்கெடுப்புகள் நடக்கும் போது தங்களது சமூக எண்ணிக்கைக்கு ஏற்ப உரிமைகளை கொடுப்பதை உறுதிசெய்ய மக்கள் வலியுறுத்தினர் - அதாவது கையில் புள்ளிவிபரம் உள்ளது ஆகையால் அரசும் மறுக்க முடியாது அவரவரர் எண்ணிக்கைக்கு ஏற்ப உரிமை என்ற உரிமைக் குரலும் தெற்கில் இருந்துதான் கிளம்பியது.
1852களில் சென்னையில் இருந்து துவங்குகிறது. அதே காலகட்டத்தில் மகாத்மா ஜோதிபா புலே மகாராட்டிரா மாநிலத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான உரிமைக் குரலை எழுப்பத் துவங்கி விட்டார். 1900களில் கோலாப்பூர் சமஸ்தானம் அதன் பிறகு மைசூர் சமஸ்தானம் என தொடர்ந்து பார்ப்பனர் அல்லாதவர்களுக்கு சமவாய்ப்பு கிடைக்க விகிதாச்சார முழுக்கம் எழும்பத் துவங்கியது
தெற்கே அரை நூற்றாண்டுகளுக்கு முன்பு கிளம்பிய விகிதாச்சார உரிமைக்கான தீப்பொறி நீதிக்கட்சி என்ற பெயரில் பெரும் நெருப்புப் பிழம்பாக மாறி இருந்தது - இதன் தொடர்ச்சியாக அண்ணல் அம்பேத்கர் பட்டியலினமக்களுக்குத் தனித் தொகுதிகளை உருவாக்க விரும்பினார். ஆனால், காந்தியார் அதை தடுக்கும் வகையில் பட்டினி கிடந்து அண்ணலின் திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்டார் - அதே நேரத்தில் விடுதலைக்குப் பிறகு தனித்தொகுதி ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது. இதனால் தாழ்த்தப்பட்ட பழங் குடியின மக்களுக்கு பிரதிநிதிகள் கிடைத்தனர்.
அதன் பிறகு அரசமைப்புச்சட்டத்தில் இட ஒதுக்கீடு முறை கொண்டுவரப்பட்டு இன்றுவரை அரசியல், கல்வி வேலைவாய்ப்பு என அனைத்து துறைகளிலும் இட ஒதுக்கீடு முறை உள்ளது ஆனால் விடுதலைக்குப் பிறகு ஜாதிவாரி கணக்கெடுப்புமட்டும் நடத்தப்படவே இல்லை.
1951 ஆம் ஆண்டு முதல் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் பிரிவு மட்டுமே கணக்கெடுப்பில் சேர்க்கப்பட்டது அதிலும் உட்ஜாதி பிரிவுகள் விபரம் சேர்க்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு இன்றுவரை உள்ளது, பிற்படுத்தப்பட்ட மற்றும் உயர்ஜாதியினர் குறித்த விபரங்கள் கேட்கப்படவில்லை.
இப்போதும் இந்தியா முழுவதுமுள்ள ஜாதிகளின் எண்ணிக்கை குறித்து நாம் பேசுவது அனைத்தும் ஆங்கிலேயர்களின் கணக்கெடுப்பில் கிடைத்தவை ஆகும். ஜாதிவாரி கணக்கெடுப்பு வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. இன்று நகரங்களில் கூட பேச்சோடு பேச்சாக தம்பி உன் பேச்சு நம்ம வட்டார மாதிரி இருக்கு நீ அவுங்க ஆளுதானே என்று மறைமுகமாகவும், இந்த ஜாதிக்கு வீடு தரமாட்டோம் ஆகவே உங்க ஜாதி என்ன என்று நேரடியாகவும் கேட்கிறார்கள். அப்படி இருக்க கணக்கெடுப்பில் ஜாதியைக் கேட்பதில் தவறே இல்லை. இப்போதும் இது பரவலாக உள்ளது, ஏன் மக்கள் தொகை கணக்கெடுப்பு செய்யக்கூடாது?
முன்பு பல அட்டவணைகள் கொண்ட பெரிய புத்தகத்தைத் தூக்கிச் சுமக்க வேண்டும் - இப்போது அப்படி அல்ல கையடக்க மடிக் கணினி போதும் - எத்தனை ஆயிரம் காலம் வேண்டுமானாலும் உருவாக்கிக் கொள்ளலாம். நாட்டில் 4000 ஜாதிகள் இருந்தால் 4000 பத்திகளை உருவாக்குங்கள். மேலும் ஒவ்வொரு ஜாதியினரின் சமூக மற்றும் பொருளாதார நிலையை கண்டறியவும். சமூகத்தில் சொற்ப எண்ணிக்கை கொண்ட பிரிவாக இருந்தாலும் அவர்களுக்கு தேவையான வசதிகளைச் செய்துதர அவர்களின் சமூக பொருளாதார நிலையைக் கண்டறிய இந்த ஜாதிவாரிக் கணக்கெடுப்பு தேவையான ஒன்று ஆகும் நாங்கள் அனைவரும் இந்தியர்கள் எங்களை ஜாதி அடையாளம் வைத்து பிரிக்கவேண்டாம் என்று கூட்டம் கூச்சலிடும்.
டாக்டர் அம்பேத்கர் குறிப்பிடுவது போல், இந்திய சமூகத்தில் வர்ண அமைப்பு ஒரு ஏணி போன்றது - இந்த ஏணியின் மிக உயரத்தில் அமர்ந்துகொண்டு அனைத்து வசதிகளையும் ஈராயிரம் ஆண்டுகளாக அனுபவித்துக் கொண்டு தனக்கு கிடைக்கும் வசதிகள் கீழே உள்ளவனுக்கு கிடைக்கக் கூடாது என்ற ஒரே எண்ணத்தில் தான் ஜாதி கணக்கெடுப்பு தேவையில்லை என்று குமுறுகிறார்கள். மிகவும் அடித்தளத்தில் வாழும் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் எத்தனை கொடும் வன்முறைக்கு ஆளாகின்றனர் என்பது இன்று சமூக வலைதளத்தை திறந்தாலே கொட்டிக் கிடக்கிறது. இது காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மும்பை முதல் சிலிகுரி சியல்டா வரை பரவிக் கிடக்கிறது.
இதர பிற்படுத்தப்பட்ட சமூகம்
இடைநிலை ஜாதிகளுக்கும் கிட்டத்தட்ட இதே நிலைதான் - ஒரு பிரபல ஊடகம் தமிழ்நாடு முதலமைச்சரையும் கேரள முதலமைச்சரையும் சூத்திர முதலமைச்சர் என்று குறிப்பிடுகிறார்கள். விடுதலைக்குப் பிறகு ஜாதிவாரிக் கணக்கெடுப்பில் உள்ள குழப்பங்களைக் களைய 1953இல் காகா கலேல்கர் கமிஷன் உருவாக்கப்பட்டது.
ஒன்று உயர்ஜாதி மற்றொன்று தாழ்த்தப் பட்ட பழங்குடியின மக்கள் இவர்களுக்கு இடையே பெரும்பான்மைச் சமூகம் கல்வி மற்றும் இதர உரிமைகள் மறுக்கப்பட்டு இருந்தது. இவர்களை பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட என அடை யாளம் காணப்பட்டனர். காகா கலேல்கர் ஆணையம் இவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்க பரிந்துரை செய்தது.
ஆனால் அன்றைய காலகட்டத்தில் உயர்பதவிகளை இறுகப் பற்றிக்கொண்டு உட்கார்ந்திருந்தவர்கள் பிற்படுத்தப்பட் டோருக்கான உரிமைகள் குறித்து மாநில அரசுகள் கூட பேசக்கூடாது என்ற நிலையை உருவாக்கினார்கள்.
இருந்தபோதிலும், தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசம் போன்ற மாநிலங்கள் தங்கள் மாநிலங்களில் இதர பிற்படுத்தப்பட்ட மக்களை அடையாளம் கண்டு, மாநில அளவில் இட ஒதுக்கீடு கொள்கையை உருவாக்கின. 1970களில் ஹிந்தி பேசும் பகுதிகளில் பொது உடைமை இயக்கம் வலுப்பெற்றது. இதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் ஜெயப்பிரகாஷ் நாராயணன்.
இது ஜனதா கட்சிக்கு வழிவகுத்தது. இந்த ஜனதா கட்சி 1977 தேர்தலில் ஹிந்தி பகுதிகளில் பெருவாரியான இடங்களைப் பிடித்து இதரபிற்படுத்தப்பட்ட மக்களுக்கான ஒதுக்கீடு குறித்து பேசத் துவங்கியது.
1978இல் மண்டல் கமிஷன் உருவாக் கப்பட்டது. மண்டல் கமிஷன் இதர பிற்படுத்தப்பட்ட மக்களின் நிலைமைகளைப் புரிந்து கொள்வதையும் கொள்கை முன்மொழிவை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டது. இந்தியாவின் 52% மக்கள் இதர பிற்படுத்தப்பட்டவர்கள் என்று ஆணையத்தின் அறிக்கை காட்டுகிறது. ஆனால், உயர் அதிகாரத்துவத்தில், பிரதி நிதித்துவம் 12.5% மற்றும் அரசாங்க வேலைகளில், அது 4.7% மட்டுமே இருந்தனர் பொதுப் பிரிவில் உள்ள இடங்கள் முழுக்க முழுக்க உயர் ஜாதியினரால், முழுமையான ஆதிக்கத்தால் கட்டுப்படுத்தப்பட்டன. இட ஒதுக்கீடுக்கான கோரிக்கை இங்குதான் தொடங்குகிறது மான்யவர் கன்ஷிராம் "எண்ணிக்கைக்கு ஏற்ப இடங்கள்” என்ற முழக்கத்தை இங்கிருந்துதான் துவக்குகிறார்.
மண்டல் ஆணையம் அனைத்து மட்டத்திலும் பிற்படுத்தப்பட்ட மக்களின் பங்களுக்கு 80 20 என்ற விகிதத்தில் உள்ளதை கண்டறிந்தது - கிட்டத்தட்ட 80% அனைத்து அதிகாரங்களும் உயர் ஜாதியினர் கைகளில் இருந்தன. ஆகையால் மண்டல் ஆணையம் இட ஒதுக்கீடு குறித்த அறிக்கையை சமர்பித்தது.
உடனே இட ஒதுகீட்டின் மூலம் தகுதிகள் காணாமல் போகிறது, இதன் மூலம் திறமையற்றவர்கள் வந்துவிடுவார்கள் என்ற பேச்சு பலமாக எழுந்தது. இது எப்படி என்றால் காலம் காலமாக அனைத்து பயிற்சியையும் பெற்று தீரமாக ஓட்டப்பந்தய களத்தில் நிற்கும் ஒருவரோடு நோஞ்சானாக வாரக்கணக்கில் உணவின்றி நின்ற ஒருவர் என்னோடு சமமாக ஓடவேண்டும் என்பது போன்று உள்ளது எவ்வளவு திறமையுடன் முன்னே சென்றாலும் அங்கே ஜாதி வலையமைப்பு சிக்கவைத்து முன்னே செல்லவிடாமல் செய்து விடுகிறது.
இந்த பாகுபட்டை கலைக்க 27% இதர பிற்படுத்தப்பட்டோருக்கான ஒதுக்கீட்டை ஆணையம் பரிந்துரைத்தது. இந்த எண் எங்கிருந்து வந்தது? மக்கள் தொகை மதிப்பீடு 52% என்றால், 27% எப்படி இருக்க முடியும்? 1962 இல், உச்ச நீதிமன்றம் இடஒதுக்கீட்டில் 50% உச்சவரம்பு என்ற இரும்புக் கோட்டையை எழுப்பி தடைபோட்டது. இந்தத் தீர்ப்பை 9 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் 1992 இல் இந்திரா சகானி தீர்ப்பில் உறுதி செய்தது. ஏற்கெனவே 7.5% பழங்குடி மற்றும் 15% தாழ்த்தப்பட்ட என மொத்தம் 22.5% இடஒதுக்கீடு இருந்ததால், இதர 50% உச்சவரம்பை உறுதி செய்ய 27% ஒதுக்கீட்டை மட்டுமே மீதம் உள்ளது.
இதர பிற்படுத்தப்பட்ட மக்கள் தொகை மதிப்பீடு 60 விழுக்காட்டிற்கு மேல் உள்ளது என்பது இங்கு ஒரு மிக முக்கியமான புள்ளி. ஆனால் அவர்கள் நினைத்தால் எல்லாம் நடக்கும் ஆம் திடீரென்று உயர்ஜாதி ஏழைகளுக்கு 10 விழுக்காடு கொண்டுவந்தார்கள் இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. சில மாநிலங்கள் இன்றும் இதை நடைமுறைப்படுத்தவில்லை.
ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு பா.ஜ.க பயப்படுகிறது, அதற்கான காரணம் இருக்கிறது. 1990களில், மண்டல் அரசியல் உச்சம் பெற்ற போது, பாஜகவின் ஹிந்துத்துவா ஒருங்கிணைப்பு சிதைந்தது. 1989 தேர்தல் முடிவுகளில், உ.பி. - பீகாரில் காங்கிரஸ், ஜனதா தளம் மற்றும் பாஜக இடையே மும்முனைப் போட்டி நிலவியது. காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக இருந்தது. ஆனால் அதை ஆட்சியில் இருந்து விலக்கி வைக்க, பாஜக மற்றும் இடதுசாரிகள் ஜனதா தளத்திற்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்தனர். உலக வரலாற்றில் வலது மற்றும் இடதுசாரிகள் ஒன்றாக இருந்த அதிர்ச்சியான காலகட்டம் அது.
மண்டல் அரசியல்
ஆனால் இந்த இடது வலது ஓரணி மூலம், வரலாற்றில் இரண்டாவது முறையாக, காங்கிரஸ் அல்லாத ஆட்சி மத்தியில் மலர்ந்தது. வி.பி.சிங் ஆட்சிக்கு வந்தவுடன் மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்தினார். நாடு முழுவதும், 27% இதரபிற்படுத்தப்பட்ட மக்களுக்கான உரிமை நடைமுறைக்கு வந்தது பெரும் போராட்டம் வெடித்தது.
இருப்பினும் வி.பி.சிங் ஹிந்தி பெல்ட் மாநிலத்தின் ஹீரோவாக உயர்ந்தார். இப்போது மீண்டும் வலதுசாரி தனது கோரமுகத்தைக் காட்டத் துவங்கியது. 1991இல், இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அத்வானி ராமர் கோவில் பிரச்சினையை எழுப்பி பிரச்சாரம் செய்தார். ஹிந்தி பெல்ட்டில், ஹிந்து வாக்காளர்களை ஹிந்துத்துவா பதாகையின் கீழ் ஒருங்கிணைக்க முயற்சி செய்யப்பட்டது. ஆனால் ஜனதாதளத்தின் மண்டல் அரசியல் ஹிந்துத்துவா அரசியலை ஊதித்தள்ளியது அன்றிலிருந்து ஹிந்துத்துவா அரசியல் மண்டலை மய்யமாக வைத்து அரசியல் நடக்கிறது.
நடைமுறைக்கு வருவோம்
மண்டல் - மந்திர் அரசியல் இல்லை என்றால் அதன் பிறகான தேர்தல்களில் பாஜக ஆட்சிக்கு வந்து இன்று இந்தியா என்பது ஹிந்து நாடாக மாறி இருந்தால் கூட வியப்பதற்கு இல்லை. மோடியின் நடவடிக்கைகளே இதற்கு ஒரு எடுத்துக்காட்டு - ஆனால் ஹிந்தி பெல்ட் முலாயம் சிங், லாலுபிரசாத் போன்ற தலைவர்கள், கான்ஷிராம் போன்றவர்கள் காரணமாக ஹிந்துத்துவம் அங்கே செல்லுபடி ஆகவில்லை. மண்டல் அரசியல் பாஜகவுக்கு ஒரு பெரிய ஸ்பீட் பிரேக்கராகவே இருந்து வருகிறது.பிறகு எப்படி பாஜக ஹிந்து பெல்டில் பலம் பெற்றது என்றால் உங்களுக்குத் தெரியும். 2012ஆம் ஆண்டிலிருந்து மகாராட்டிராவிலிருந்து புறப்பட்ட ஒரு முதியவர் அண்ணா ஹசாரே ஊழல் ஊழல் ஊழல் என்று சங்கூதினார். அனைத்து வட இந்திய ஊடகங்களும் திட்டமிட்டு அந்த பலூனை ஊதிப்பெரிதாக்கின. இந்த ஊழல் பலூனிற்கு குறிப்பாக ஹிந்தி பெல்ட் பெருவாரி வாக்காளர்கள் மண்டலுக்கு ஆதரவானவர்களை பாஜக ஹிந்துத்துவத்தின் பக்கம் திருப்பியது உண்மைதான். இதன் விளைவுதான் 2014 மற்றும் 2019 பாஜகவின் வெற்றி. இதர பிற்படுத்தப்பட்ட மக்கள் வாக்கு சதவீதம் பாஜகவின் பக்கம் சரிய இந்த ஊழல் குற்றச்சாட்டு பெரிய காரணி ஆகும்.
பிஜேபிக்கு இதரபிற்படுத்தப்பட்ட மக்களின் வாக்குகள் 2009 இல் 22% ஆகவும், 2019 இல் 44% ஆகவும் இருமடங்காக அதிகரித்தன, அதாவது பாஜக மண்டல் அரசியலை வெற்றிகரமாக ஊழல் என்று ஊதப்பட்ட பெரிய பலூனைக் காட்டி பலவீனப்படுத்தியது.
ஊழல் பலூன் எப்போதும் பலன் தராது என்பதால் தந்திரமாக ஜாதி அரசியலில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு மற்றும் அதன் துணை அமைப்புகளை வைத்து களமிறங்கியது இதன் மூலம் பல ஜாதிக்குழுக்களை அவர்களின் வலைக்குள் கொண்டுவந்தனர்.
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்
இதை உடைக்கவேண்டும் என்ற திட்டம் நிதீஷ் லாலு கார்கே கூட்டணியால் உருவாக்கப்பட்டது. இந்த திட்டத்திற்கு பின்னால் ஈரோட்டுப் பல்கலைக்கழகத்தில் முழுமையாக படித்த கலைஞரின் மகன் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இருக்கிறார் என்பது யாருக்குமே தெரியாத உண்மை.
பாஜகவிற்கு முதலில், இதர பிற்படுத்தப்பட்ட மக்களின் வாக்குகளை சிதைக்க வேண்டும். அவர்கள் காதில், கன்னத்தில், நெற்றியில், கைகளில், வயிற்றில் என செந்தூரம் மற்றும் மஞ்சள் வண்ண சாந்தை குழப்பி அப்பிக்கொண்டு ஜெய் சிறீராம் என்று கூவிக் கொண்டே இருக்கவேண்டும் என்பதுதான் அவர்களின் கனவு. இதை உடைத்து அந்த மக்களின் வாக்குகளை நிதீஷ் குமாரின் அய்க்கிய ஜனதா தளம், லாலுபிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதாதளம், அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி போன்றவைகளோடு அரியானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தானில் காங்கிரஸ் சமூகநீதியின் பக்கம் மீண்டும் மக்களை கொண்டுவரும் துவக்கம் தான்.
இந்த ஜாதிவாரிக் கணக்கெடுப்பு ஆய்வறிக்கை, உ.பி., பீகாரில் இந்தியக் கூட்டணி 40-50 இடங்களை வென்றால், 2024ஆம் ஆண்டு பாஜக பெரிய தலைகள் கூட மற்ற இடங்களில் காணாமல் போகும் - இரண்டு வாரத்திற்கு முன்புவரை கண்களுக்கு எட்டியதூரம் வரை தங்களுக்கு எதிரிகளே இல்லை என்று நினைத்துக் கொண்டு இருந்த பஜனைக் கோஷ்டிகளுக்கு ஜாதிவாரிக் கணக்கெடுப்பு ஆய்வறிக்கை பீதியைக்கிளப்பி விட்டது - ஒரு உண்மை என்னவென்றால் தற்போதுவரை பல சமூகத்தினர் தங்களையும் ஒபிசி பட்டியலில் சேருங்கள் என்று முழங்கிக்கொண்டு வருகின்றனர். காங்கிரஸ் கட்சி அழுத்தத்தின் கீழ் 2011இல் சிறப்பு மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தியது. ஆனால், பல்வேறு மாநிலத்தில் கணக்கெடுப்பு விபரங்களில் சில முரண்பாடுகளைத் தீர்க்க முயலும் முன்பே 2012 இறுதி முதல் 2014 தேர்தல் வரை நிர்பயா பிரச்சினை, அதன் பிறகு அண்ணா ஹசாரேவின் ஊழலுக்கு எதிரான போராட்டம் என்று அரசின் செயல்பாட்டை முடக்கிவைத்தனர், அதன் பிறகு 2014ஆம் ஆண்டு வந்த பாஜக முதல் ஆட்சிக்காலத்தில் நீண்ட தூக்கத்திற்குச் சென்றுவிட்டது.
2015இல், கருநாடகாவில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, ஜாதி வாரியாக சமூக-பொருளாதார ஆய்வறிக்கை செய்ய நடவடிககை எடுக்கப்பட்டு தகவல்கள் திரட்டப்பட்டது. அதன் விபரங்களை வெளியிடும் முன்பே தேர்தல் வந்தது. தேர்தலில் பெரும்பான்மை இல்லாமல் தொடர்ந்து ஒரு நாள் முதலமைச்சர் எடியூரப்பா, அதன் பிறகு தேவகவுடா, பிறகு மீண்டும் எடியூரப்பா, பசவராஜ் பொம்மை என்ற குழப்பமான சூழலில் மக்கள் தொகை கணக்கெடுப்பு கிடப்பில் போடப்பட்டது - முக்கியமாக இந்த ஆய்வறிக்கை விபரஙகள் வெளிவருவதை கருநாடக உயர்வகுப்பினர் விரும்பவில்லை. இவை அத்தனைக்கும் சேர்த்து மிகப் பெரிய ஒரு திருப்புமுனையை நிதீஷ் குமார் ஜாதிவாரி ஆய்வறிக்கையை வெளியிட்டு உருவாக்கிவிட்டார். இனி எந்த ஒரு பிரச்சினையையும் மோடி - அமித்ஷா கூட்டணி கிளப்பி தேர்தல் பாதையை மாற்றி அமைக்க முடியாது. உண்மையில் சிறப்பு நாடாளுமன்ற கூட்டம் அறிவித்தது முதல் அந்தக்கூட்டம் தொடங்கும் வரை ஒட்டுமொத்த இந்தியாவையே குழப்பத்தில் வைத்திருந்த மோடி அரசுக்கு இனிமேலும் மக்களை குழப்ப வாய்ப்பு கொடுக்காமல் நிதிஷ், லாலு, கார்கே துல்லியமாக கணித்து செக் வைத்துவிட்டார்கள். பீகாரில் கிளம்பிய சமூகநீதிக்கான முழக்க நெருப்புக் கனல் பெரு நெருப்பாக வடக்கே பரவிக்கொண்டு இருக்கிறது. அதை நிறுத்த முடியாது. இது தேர்தல் பிரச்சினையாக மாறும்.
பீகாரின் ஜாதி மக்கள்தொகை கணக்கெடுப்பு முடிவுகளை ட்வீட் செய்த ராகுல் காந்தி, இந்தியாவில் ஜாதிகளின் புள்ளிவிவரங்களை அறிவது முக்கியம் என்று மீண்டும் வலியுறுத்தினார். எனவே, 1990களைப் போல மண்டல் ஸ்s மந்திர் அரசியல் மீண்டும் முன்னுக்கு வர வாய்ப்புள்ளது. ஜாதிவாரி கணக்கெடுப்பை மீண்டும் கொண்டு வருவதால் பல நன்மைகள் உள்ளன. பெரும்பாலான எதிர்க்கட்சிகள் ஜாதிவாரி கணக்கெடுப்பை ஆதரிப்பதால் எதிர்க்கட்சிகளிடையே ஒற்றுமை அதிகரிக்கும். மற்றும் இந்தியா கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணையும் வாய்ப்பும் கூடியுள்ளது. முக்கியமாக ஹிந்தி பெல்ட்டில் பாஜகவிற்கு ஆதரவு நிலைப்பாட்டில் உள்ள சில மாநிலக் கட்சிகள் வரும் சூழல் உள்ளது.
இப்போது பாஜக தாங்களும் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம் என்று கூற முடியாது - அப்படிக் கூறினால் அது ஒரு அரசியல் தோல்வியாகவே பார்க்கப்படும். மேலும் இத்தனை ஆண்டுகளாக ஏன் செய்யவில்லை என்று கேள்வி பலமாக எழும்பும். மிகவும் குழப்பத்தில் உள்ள மோடி பேசுவதற்கு ஒன்றும் கிடைக்காமல் திமுகவை வடமாநிலங்களில் அறிமுகம் செய்யும் பணியைச் செய்து கொண்டு இருக்கிறார். முதல் நாள் காட்சியிலேயே காற்றுவாங்கிய திரைப்படத்திற்கு ஜெய்ப்பூரில் விளம்பரம் செய்துகொண்டு இருக்கிறார். ராகுல்காந்தியை ராவணனாக சித்தரித்து கலவரத்தை உருவாக்க முயற்சி செய்துகொண்டு இருக்கின்றனர்.
ஆனால் ஒன்றுமட்டும் தெளிவாகி விட்டது. 2024 தேர்தல் களம் அயோத்தி ராமன் Vs தந்தை பெரியார் என்று மாறி உள்ளது என்பது மட்டும் நிச்சயம்.
No comments:
Post a Comment