‘விஸ்வகர்மா யோஜனா'-ஸநாதனத்தின் சமூக அநீதி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 1, 2023

‘விஸ்வகர்மா யோஜனா'-ஸநாதனத்தின் சமூக அநீதி

கட்டுரையாளர்: ஜமாலன்

"பரம்பரைத் தொழில் அல்லாத வேறு எந்தத் தொழிலையும் செய்வதற்கு - அந்தத் தொழிலுக்கு ஆட்கள் தேவையாக இருந்த போதிலும் கூட - இந்துக்களை ஜாதி அமைப்பு அனுமதிப்பது இல்லை. தன் ஜாதிக்கென்று ஒதுக்கப்பட்ட தொழிலைத் தவிர வேறு புதிய தொழிலை மேற்கொள்வதைவிடப் பட்டினி கிடப்பதே மேல் என்று ஓர் இந்து இருப்பதற்கு ஜாதி அமைப்பு தான் காரணம், தொழில்களை மாற்றிக் கொள்ள ஜாதி அனுமதிப்பதில்லை." 

- அம்பேத்கர் (தொ.1.பக்.68).

"ஒரு மனிதர் தனது மனத்திற்கு இசைந்த தொழிலைச் செய்வதாயிருந்தால் அது அவரது முன்னோர்களின் தொழிலாகவே இருக்க வேண்டும். அதற்கு மாறாக வேறு தொழில்களை எடுத்துக் கொள்வதனால்தான் நாம் இயற்கைக்கு மாறான விபரீதங்களையே காண்கிறோம். அதனால்தான் சமூகத்தில் கொடுமையும் பிளவும் தாண்டவமாடுகின்றன." 

- காந்தி (தொ.1, பக்.91)

“நீங்கள் விரும்பினால் பிராமணர்களை நிந்தியுங்கள். ஆனால், ஒரு போதும் பிராமணியத்தை நிந்திக்காதீர்கள்.

காந்தி (தொ.7, பக்.80)

இந்திய ஒன்றிய முதன்மை அமைச்சர் நரேந்திரதாஸ் தாமோதர் மோடி அவர்கள் ஆகஸ்ட் 15, 2023 சுதந்திர தினத்தன்று வழக்கம்போல் ஓர் அதிர்ச்சி தரும் திட்டத்தை அறிவித்தார். தொடர்ந்து ஒன்றிய மக்களை அதிர்ச்சியிலும், பயத்திலும், வாழமுடியாத நிலையிலும் உறைய வைப்பதில் ‘சிறந்தவர்' என்ற பெயர்பெற்றவர் பிரதமர் மோடி. ஒரு முன்னிரவில் பணம் செல்லாது என்று அறிவித்து நாட்டு மக்கள் அனைவரையும் ஈவு இரக்கமின்றி நடு ரோட்டில் நிறுத்தியவராயிற்றே. இன்றுவரை அந்த 'செல்லாக்காசுத் திட்டம்' நாட்டையே செல்லாமல் ஆக்கிவிட்டது. இன்றும் அதிலிருந்து யாரும் எழ முடியாமல் உள்ளனர். அது அடிப்படைப் பொருளாதாரக் கட்டமைவையே சிதைக்கும் ஒரு திட்டம். அதனை எந்தப் பொருளாதார அறிவோ, ஆலோசனைகளோ இன்றி நடைமுறைப் படுத்தியது அரசு. கரோனா பெருந்தொற்றில் உலகமே அதிர்ச்சி அடையும் அளவிற்கு ஆயிரக்கணக்கான கி.மீ., லட்சக்கணக்கான தொழிலாளிகள் நடந்தனர். அதில் பலர் இறந்தும் போயினர். அது குறித்து எந்தக் கவலையும் அவர் அடைந்ததாகத் தெரியவில்லை. இப்படி, அடுத்தடுத்து இந்த 9 ஆண்டுக் கால ஆட்சியில் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியை மக்களுக்கு அளித்து விட்டு, அதானியின் குடும்பத்தை உலகப் பணக் காரர்களில் இரண்டாம் இடத்திற்குக் கொண்டுபோய் அழகுபார்த்தவர் மக்களை எப்படி மதிப்பார். தற்போது 2024இல் வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக அடுத்த ஆயுதத்தை எடுத்து வீசியுள்ளார். அதுதான் "பிரதான் மந்திரி விஸ்வகர்ம யோஜனா",

இந்த அரசின் திட்டங்கள் அனைத்தும் மிகவும் நுட்பமாக வடிவமைக்கப் பட்டவையாக உள்ளன. ஸநாதன பிராமண வருண தருமத்தை மீண்டும் இந்நாட்டில் கொண்டுவருவதற்கான அடிப்படைகளை மிக நேரடியாகச் செயல்படுத்தும் ஒன்றாக அவை உருவாக்கப்படுகின்றன. அப்படியொரு ஸநாதன வருண தருமத்தைச் சட்டபூர்வமாக்கும் முயற்சியே, சுதந்திரத் தினத்தன்று முதன்மை அமைச்சரால் அறிவிக்கப்பட்ட இத்திட்டம். இவர்கள் தேர்ந்தெடுக்கும் பெயர்கள் அனைத்தும் சமஸ்கிருதமும், பிராமண ஸநாதன தர்மத்தையும், அதன் புராணங்களையும் அடிப்படையாகக் கொண்டவைதான். அதில் ஒன்று தான் இந்த 'விஸ்வகர்மா’திட்டம். இப்பெயர் ஒரு குறிப்பிட்ட ஜாதியையும், இந்தப் பிரபஞ்சத்தைத் தொழில்ரீதியாகக் கட்டமைத்த கடவுளையும் குறிப்பது. குறிப்பாக, 'விஸ்வகர்மா ஜெயந்தி' மற்றும் பிரதமர் மோடி அவர்களின் பிறந்தநாள் அன்று இத்திட்டம் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. 

இத்திட்டத்தைத் தற்போது அறிவித்தாலும், இதற்கான ஆரம்பம் பிப்ரவரி 1, 2023இல் மோடி அவர்கள் பேசிய பேச்சிலேயே வெளிப்பட்டது. "பாரம்பரியமாக, தங்கள் கைகளாலும், கருவிகளாலும், உபகரணங்களாலும் கடினமாக உழைத்து எதையாவது அல்லது புதிதாக ஒன்றை உருவாக்கும் கோடிக்கணக் கான 'விஸ்வகர்மாக்கள்’ இந்த நாட்டைக் கட்டி யெழுப்புபவர்கள். கொல்லர்கள், பொற்கொல்லர்கள், குயவர்கள், தச்சர்கள், சிற்பிகள், கைவினைஞர்கள், கொத்தனார்கள் என எண்ணற்றவர்களின் பெரிய பட்டியல் நம்மிடம் உள்ளது. இந்த விஸ்வகர்மாக்கள் அனைவரின் கடின உழைப்புக்கு ஆதரவாக நாடு முதன்முறையாகப் பல்வேறு ஊக்கத் திட்டங்களைக் கொண்டு வந்துள்ளது. அத்தகையவர்களுக்குப் பயிற்சி, தொழில்நுட்பம், கடன் மற்றும் சந்தை ஆதரவு ஆகியவற்றுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பிரதம மந்திரி 'விஸ்வகர்மா கவுசல் சம்மான்' அதாவது, 'பிரதமர் விஸ்வகர்மா திட்டம் கோடிக்கணக்கான விஸ்வகர்மாக்களின் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும்" என்று அறிவித்தார் (ANI NEWS). இந்த அறிவிப்பை முகவுரையாகக் கொண்டு இத்திட்டம் குறித்த வழிகாட்டு அரசு ஆவணம் துவங்குகிறது.

இத் திட்டத்தைப் பாரம்பரிய கைவினைத் திறனில் திறமையானவர்கள் பயன்பெறும் வகையில் பிரதமர் மோடியின் பிறந்தநாளான் 17.09.2023 அன்று ஒன்றிய அரசு தொடங்கியுள்ளது. இத்திட்டத்திற்கான செலவாக 13,000 கோடிக்குப் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இது 2023-2028 அய்ந்தாண்டுகளுக்கான நிதி ஒதுக்கீடு என்கிறது. ஆனால், பொருளாதார வல்லுநர்கள் ஆண்டிற்கு 2,600 கோடி என்பது இந்திய மக்கள் தொகையில் உள்ள பெருவாரியான கைவினைத் தொழில் செய்யும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களில் (OBC) குறிப்பிட்ட சதவீதத்தினரை மட்டுமே சென்ற டையக் கூடியதாக உள்ளது என்கிறார்கள். இந்திய ஒன்றியத்தில் உள்ள 20கோடி கைவினைஞர்களில் 3.5% பேருக்கே பயனளிக்குமாம். மீதமுள்ள அச் சமூகத்தைச் சேர்ந்த 96.5% பேருக்கு இத்திட்டம் அதிருப்தியை உருவாக்கும் என்கிறார்கள். குறிப்பாக இத்திட்டம் உண்மையில் இந்தியாவில் நசிந்துவரும் நெசவுத் தொழிலை இம்முதல் திட்ட அறிவிப்பில் இணைக்கவில்லை என்பதைச் சுட்டிக் காட்டுகிறார்கள்

முதற்கட்டமாக, 18 தொழிலாளர்கள் இத்திட்டத்தின் கீழ்வரும் என்கிறார்கள். (i) தச்சுத் தொழிலாளி (சுதர்); (ii) படகு தயாரிப்பாளர்; (iii) கவசம் செய்பவர்; (iv) கொல்லர் (லோஹர்); (v) சுத்தியல் மற்றும் கருவி கிட் தயாரிப்பவர்; (vi) பூட்டு தொழிலாளி; (vii) பொற் கொல்லர் (சோனார்); (viii) பானை வனைபவர் (கும்ஹார்); (ix) சிற்பி (மூர்த்திகர், கல் செதுக்கியவர்), கல் உடைப்பவர்; (x) காலணி தயாரிப்பவர் (சார்ம்கர்)/ ஷூஸ்மித் / காலணிக் கைவினைஞர்; (xi) கொத்தனார் (ராஜ்மிஸ்திரி); (xii) கூடை / பாய் / துடைப்பம் தயாரிப்பவர் / தேங்காய் நாரில் கயிறு திரிப்பவர்; (xiii) பொம்மை & விளையாட்டுப் பொருட்கள் தயாரிப்பாளர் (பாரம்பரியம்); (xiv) முடி ஒப்பனையாளர் (பார்பர், நாய்); (xv) மாலை தயாரிப்பாளர் (மலக்கார்); (xvi) சலவைத் தொழிலாளி (தோபி); (xvii) தையல்காரர் (டார்சி); மற்றும் (xviii) மீன்பிடி வலை தயாரிப்பாளர். இவை சுருக்கமாகத் தரப்பட்டுள்ளன. ஆவணத்தில் ஒவ்வொரு தொழிலுக்கும் விளக்கங்கள் தரப்பட்டுள் ளன. குறிப்பாக, ஆவணம் ஒவ்வொரு தொழிலுக்கும் அதன் ஜாதியைப் பட்டியலில் தந்துள்ளதே இதன் உள்நோக்கத்தை வெட்டவெளிச்சமாக்கும். இந்த அட்டவணை தனியர்களின் தொழிலை அடிப் படையாகக் கொண்டிருந்தால்கூட பிரச்சினையில்லை. தொழிலாளர்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது. அதாவது ஒரு குறிப்பிட்ட தொழிலைச் செய்யும் தொழிலாளர்கள் அவர்களது குடும்பம், குரு-பரம்பரை அமைப்பை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இதெல் லாம் மிகவும் நாகரீகமான வார்த்தைகள். உண்மையில் ஸநாதன வருண தர்மம் கூறும் தொழில்கள் பிறப்பின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்றன என்பதை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. இதுதான் இத்தகைய திட்டங்களின் நோக்கமும்கூட. 

இந்த பி.ஜே.பி. அரசின் திட்டங்கள் அனைத்தும் மிகவும் நுட்பமாக வடிவமைக்கப் பட்டவையாக உள்ளன. ஸநாதன பிராமண வருண தருமத்தை மீண்டும் இந்நாட்டில் கொண்டுவருவதற்கான அடிப்படைகளை மிக நேரடியாகச் செயல்படுத்தும் ஒன்றாக அவை உருவாக்கப்படுகின்றன. அப்படியொரு ஸநாதன வருண தருமத்தைச் சட்டபூர்வமாக்கும் முயற்சியே, சுதந்திரத் தினத்தன்று முதன்மை அமைச்சரால் அறிவிக்கப்பட்ட இத்திட்டம்.

இத்திட்ட வழிகாட்டு ஆவணப்படி, இதற்கான பயனாளர்களை ஒன்றிய, மாநில மற்றும் உள்ளுர்ப் பஞ்சாயத்துகளில் ஒருவர் என மூன்று அமைப்புகள் இணைந்த ஒரு குழு தேர்வு செய்யும். கிராமப் பஞ்சாயத்துத் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டவர் குறித்த ஆவணங்கள், குடும்பப் பின்னணி ஆகியவற்றைச் சரிபார்த்துத் தரவேண்டும். அத்தேர்வில் அவர்களது குடும்பம், பாரம்பரியம், மரபான தொழில் என்ற அடிப்படையில் நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அதாவது, குடும்பப் பாரம்பரியத் தொழிலாக உள்ளவர்கள், 18வயது நிரம்பியவர்கள் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள்,  அரசுப் பணியில் உள்ளவர் களுக்குக் கிடையாது. ஒரு குடும்பத்திற்கு ஒருவர் மட்டுமே - கணவர், மனைவி அல்லது திருமணமாகாத பிள்ளை என்கிறது ஆவணம். அவர்களுக்கு அடை யாள அட்டை, வங்கிக் கணக்கு, பான் எண், ஆதார் எண் இணைத்து வழங்கப்படும். அப்படி தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 5 நாட்கள், நாளொன்றுக்கு ரூ.900 ஊக்கத்தொகையுடன், அடிப்படைத்திறன் பயிற்சி அளிக்கப்படும். அதன்பின் வைக்கப்படும் நேர்வில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதனைத் தொழிற்பயிற்சி நிறுவனங்கள் (அய்டிஅய்), ஒன்றிய நிறுவனங்கள் வழி அரசு செயல்படுத்தும். இந்தப் பணப் பரிவர்த்தனை அனைத்தும் வங்கிகள் வழியாக நடைபெறும். அப்படி தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஒரு லட்சம் உள்ளூர் கூட்டுறவு மற்றும் அரசு அறிவித் துள்ள வங்கிகள் கடனுதவி 5% வட்டிவிகிதத்தில் தரும். ரூ.15,000 கருவிகள் வாங்க மின்னணு 'வவுச்சராகத் தரப்படும். குறிப்பிட்ட நிறுவனங்களில் அக்கருவிகளை அந்த 'வவுச்சர்'கள் வழியாகப் பெறலாம். ஒவ்வொரு கட்டத்திலும் சான்றுகள் வழங்கப்படும். அந்த ஒரு லட்சத்தை 18 மாதங்களில் மாதத் தவணையாக வட்டியுடன் செலுத்த வேண்டும். முழுமையாகப் பணத் தைச் சரியாக, தாமதமின்றி செலுத்துபவர்களுக்கு இரண்டாம் கட்ட உயர்மட்டப் பயிற்சி 15 நாட்களுக்கு நாளொன்றுக்கு ரூ.500 ஊக்கத்தொகையுடன் வழங்கப் படும். அதன்பின் அவருக்கு 2 லட்சம் கடனாக வழங்கப்படும். 30 மாதங்களில் 5-8% வட்டிவீதத்தில் கடனை மாதத் தவணையில் செலுத்த வேண்டும். அதற்கான வங்கிகள் கிராம வங்கிகள், அரசு வங்கிகள் மற்றும் அரசு அறிவிக்கும் வங்கிகள் ஆகியவற்றில் செலுத்த வேண்டும். இவ்வங்கிகளுக்கு CGTMSE  காப்பீட்டு நிறுவனம் வழியாக இக்கடன்கள் திரும்பபெற உறுதி செய்யப்படும். இப்பயிற்சியில் தயாரிக்கப்பட்ட கைவினைப் பொருட்களை விற்பதற்கு அரசு தேசிய விற்பனை அமைப்புகள் வழியாகவும், கண்காட்சிகள், சிறப்பு விற்பனை முகாம்கள் வழியாக ஏற்பாடு செய்யப் படும்.

ஏற்கெனவே, ஒன்றிய அரசு கடந்த 9 ஆண்டுகளில் "யோஜனா, போஜனா' என பல வண்ண வண்ணமான திட்டங்களை அறிவித்து அத்தனையும் வெற்றியடை யாத நிலையில், இத்திட்டத்தை அறிவிக்கிறது. பிரதம மந்திரி காப்பீட்டுத் திட்டத்தில் நிகழ்ந்த பல குளறுபடிகள் மற்றும் ஊழலை மத்திய தணிக்கைக் குழு சிகிநி அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது. ஒரே 'ஆதார்' அட்டையில் எண்ணற்ற பணப் பட்டுவாடாக்கள், ஒரே தொலைபேசி எண்ணில் எண்ணற்ற பணப் பரிமாற்றம் நிகழ்ந்துள்ளது. இறந்த பலரின் பெயரில் மருந்துவக் காப்பீட்டுத்தொகை வழங்கப்பட்டுள்ளது.

இப்படி அதிதவீன ஊழல்களைச் செய்வதற்காகவே இத்தகைய புதிய திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன. நீட்தேர்வின் மூலம் எண்ணற்ற கார்ப்பரேட் மற்றும் தனியார் நிறுவனங்கள் பயிற்சி மய்யங்கள். மருத்துவக் கல்லூரிகளில் கொள்ளை அடிக்க வழி செய்ததைப் போல், இத்திட்டத்திலும் பல கார்ப்பரேட் நிறுவனங்கள் நுழைந்து, அம்பானி, அதானி கைவினைக் கருவிகள் விற்பனைக்கடை, பயிற்சி மய்யங்கள், தேர்வு மய்யங்கள் எனத் துவங்கி அந்த 13,000 கோடியை விழுங்கப் போகிறார்கள்; 'நெல்லுக்கு மிஞ்சும் நீர் புல்லுக்கு' என்று ஒரு முதுமொழி உண்டு. ஆனால், இதிலோ 'புல்லுக்கு மிஞ்சும் நீர் கொஞ்சம் நெல்லுக்கு' என்ற நிலை உருவாகும் அபாயமே இத்திட்டத்தின் பின் உள்ளது. இதன்மூலம் உள்ளூர் பாஜக குட்டித் தலைவர்கள், ஜாதியத் தலைவர்கள் 'கமிஷன்' பெறுவதும். பயன டைவதுமே நடக்கும். உண்மையான பயனாளர்கள் 'கமிஷன்', வட்டி என வாங்கிய பணத்திற்குமேல் கட்டி அழ வேண்டிய நிலையே உருவாகும். ஏற்கெனவே, கைவினைஞர்கள் தங்கள் பாரம்பரியத் தொழிலை விட்டு வெளியேறி படித்து முன்னேறி நகரம் நோக்கி நகரும் சூழலில், இத்திட்டம் அதை இன்னமும் விரைவுபடுத்தி, மொத்தமாக பாரம்பரியத் தொழிலையே அழித்துவிடக் கூடியதாக மாறவும் வாய்ப்பு உள்ளது. குறிப்பாக இத்திட்டம் கைவினைஞர்கள் குடும்பங்கள் படித்து முன்னேறாமல் வேறு தொழில்களுக்கும் போகாமல் இருப்பதற்கான ஒரு திட்டமாகவே உள்ளது. இப்படியாக, இத்திட்டத்தில் நிறைய குளறுபடிகள் என்றாலும், இத்திட்டத்தின் பின்னிருக்கும் மதவாத. ஜாதிய அரசியலே கவனத்தில் கொள்ளவேண்டிய முக்கியப் புள்ளி, பாரம்பரியம், பரம்பரை என்ற பெயரில் மரபுரிமைகளை, மக்கள் செல்வத்தைப் பண்டமாக்கி விற்கும் கார்ப்பரேட் அரசியலே இதிலும் உள்ளது.

இத்திட்டத்தை அறிவிக்கும் அரசு ஆவணம் கூறும் ஒரு முக்கியமான அடிப்படைச் சொல்லே இங்கு கவனப்படுத்த வேண்டியுள்ளது. அது இயற்கையாக அமைந்த "குரு-சிஸ்யா பரம்பரார்" என்பது. தலைமுறை தலைமுறையாக வரும் குடும்பங்களின், அவர்களின் மரபில் ஊறிய கைத்தொழில்களை வாரிசுகள் பின் பற்றுவதற்கான பயிற்சி அளிப்பதே இதன் உள்நோக்கம். அதாவது கவினைஞர்கள், தங்கள் கைகளாலும் கருவிகளாலும் பணிபுரியும் முறைசாராத, தொழிலா ளர்கள், குரு-சிஷ்ய பரம்பரை அல்லது குடும்ப அடிப்படைபின் பாரம்பரியத் திறன்களை வலுப்படுத்தி வளர்ப்பதை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண் டுள்ளது. இதற்குப் பாரம்பரிய மரபணுக்கள் அடிப்படை என்று அறிவியல் பூர்வமாக விளக்கமளிக்க முனை கின்றன பல இந்துத்துவப் பத்திரிக்கைகள். உண்மையில் பாரம்பரிய மரபணுக்கள் என்பதே பயிற்சிவழிப் பதிவுறும் ஒன்றே. பல ஆண்டுகள் ஒருவர் வேறொரு தொழில் பயின்று வந்தால் அவரது பாரம்பரிய மரபணுக்கள் மாற்றமுறும் என்பதே அறிவியல். சரி அய்ரோப்பிய, மேற்கத்தியச் சமூகங்களில் உள்ளவர்கள், இப்படித்தான் பரம்பரையாக இத்தொழில்களைச் செய்து வருகிறார்களா? யாரும் எந்தத் தொழிலையும் செய்யலாம் என்பதே சமூகவிதி. அதுவே சமூகநீதி. ஆனால் இத்திட்டமோ சமூக ஸநாதன அநீதி,

இத்திட்டம் சுவர்ச்சிகரமான பல சொற்களால் அலங்கரிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதையும், கைவினைஞர்கள் மற்றும் அவர்களின் தயாரிப்புகள், அவர்களது சேவை கள் அனைவருக்கும் சென்றடைவதையும் நோக்க மாகக் கொண்டுள்ளது என்கிறது. 'விஸ்வகர்மா'க்கள் உள்நாட்டு மற்றும் உலகளாவிய மதிப்புச் சங்கிலி களுடன் ஒருங்கிணைக்கப்படுவதை உறுதிப்படுத்துவ தாகக் கூறுகிறது. இதெல்லாம் கேட்க நன்றாகத்தாள் உள்ளது. உண்மையில், முறைசாராத் தொழிலாளர் வளத்தைச் சரியான முறையில் வளப்படுத்துவதும். பயன்படுத்துவதும் மக்கள் தொகை அதிகமாகவும், கல்வி பரவலாக்கம் அற்ற நிலையிலும் அவசியமானதும் கூட. ஆனால், இத்திட்டம் அடிப்படையில் பரம்பரைத் தொழில் என்கிற குலத்தொழிலைப் பாரம்பரியமாகச் செய்து வருபவர்களிடம் அல்லது அதற்கான ஜாதி களிடம் மட்டுமே அதனை உறுதிப்படுத்த முயல்கிறது. இதுதான் இதன் அடிப்படையில் அமைந்துள்ள பிரா மணிய ஸநாதன வருண தரும சூழச்சி. உண்மையில் கைவினைக் கலைத்திறனை வளர்ப்பதல்ல இத்திட்டத் தின் நோக்கம். கைவினைஞர்களை வளரவிடாமல் செய்வதே. கைவினக் கலைத்திறனை வளர்க்க வேண்டும். என்றால் தொழில்சார்ந்த திட்டமாக இதனை அறிவிக்கலாமே ஒழிய, 'குரு-பரம்பரா' என்று அறிவிப்பது ஏன்? அத்தகைய தொழில் செய்ய விரும்பும் 'விஸ்வகர்மா' சமூகத்தினருக்கு முன்னுரிமை வழங்க லாம் அதைவிட்டு, ஜாதிகளையும் தொழிலையம் இணைப்பதே இந்தக் 'குரு-பரம்பரா' என்கிற சொல்லாடலின் பின்னிருப்பது.

உண்மையில், ஒன்றிய பாஜக இந்துத்துவ அரசு தொழிலாளர் மீதான அக்கறையில் இத்திட்டத்தைக் கொண்டுவரவில்லை. மாறாக, வர்ண தருமத்தை மீண்டும் நடைமுறைப்படுத்தி, நான்காம் வர்ணம் எனப்படும் சத்திரிய (இதனைதான் அவர்கள் OBC  என்கிறார்கள்) மற்றும் அவர்ணர்கள் (பட்டியல் இனத்தவர்கள் SC, ST) வாழ்க்கைத் தரம் உயரும் என்று பீற்றுகிறார்கள். இது ஏற்கெனவே 1952இல் 'நவீன சாணக்கியன்' என்று பார்ப்பனர்கள் கொண்டாடிய ராஜாஜி அவர்கள் சென்னை மாகாண முதலமைச்சராக இருந்தபோது "குலக்கல்வித் திட்டம்" என்ற பெயரில் அறிமுகப்படுத்திய திட்டம்தான். அன்று ராஜாஜி அவனவன் ஜாதித் தொழிலை அவனவன் செய்ய வேண்டும். வண்ணார் வீட்டுப் பிள்ளைகள் படிக்க வேண்டியது இல்லை. குலத் தொழிலைச் செய்தால் போதும் எல்லோரும் படித்தால் வேலை எங்கிருந்து கிடைக்கும்" என்று கூறினார். இன்றும்கூட வி.எச்.பி. அமைப்பைச் சேர்ந்த OBS மணியன் என்பவர் வண் ணார்கள் குலத்தொழில் செய்தால் அதிகம் சம்பாதிக்க லாம் என்று ராஜாஜியின் குரலையே பேசுவதைக் கவனிக்கலாம். எத்தனை ஆண்டுகள் ஆனாலும், பார்ப்பனியம் தனது ஸநாதன வருண தர்மத்தை நடைமுறைப் படுத்துவதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறது.

இத்திட்டத்தை அறிவிக்கும் அரசு ஆவணம் கூறும் ஒரு முக்கியமான அடிப்படைச் சொல்லே இங்கு கவனப்படுத்த வேண்டியுள்ளது. 

அது இயற்கையாக அமைந்த "குரு-சிஸ்யா பரம்பரா' என்பது. தலைமுறை தலைமுறையாக வரும் குடும்பங்களின், அவர்களின் மரபில் ஊறிய கைத்தொழில்களை வாரிசுகள் பின்பற்றுவதற்கான பயிற்சி அளிப்பதே இதன் உள்நோக்கம்.

ராஜாஜியின் குலக்கல்வித் திட்டப்படி தொடக்க பள்ளி மாணவர்கள் படிக்கும் கால அளவை 3 மணிநேரமாக குறைப்பது என்றும், மீதி நேரங்களில் அவரவர் குலத்தொழிலை, தந்தையிடம் வீட்டில் கற்றுக் கொள்ளலாம் என்றும், பெண் பிள்ளைகள் தயாரிடம் வீட்டுப் பணிகள் (சமையல், துப்புரவு, துணி துவைத்தல் உள்ளிட்டவை) கற்றுக் கொள்ளலாம் என்றார்கள். இதனையே புதிய கல்விக் கொள்கையாக அறிவித்தனர். அதாவது வேறு ஒன்றுமில்லை, பரம்பரைத் தொழிலைக் கற்றுக்கொள், படிக்காதே என்பதையே அறிவித்தார்கள். பெரியார் பெரிய அளவில் போராட் டத்தை அறிவித்து, அதனால் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டு அது கைவிடப்பட்டது. அதன்பின் ராஜாஜி பதவி விலகினார், காமராஜர் ஆட்சிக்கு வந்து அத்திட்டத்தைக் கைவிட்டார் என்பது வரலாறு. அன்றைய நாளேடுகள் அதை எதிர்த்து எழுதின. இத்திட்டம் குறித்து அன்றைய 'பிளிட்ஸ்' ஏடு 'வருணா சிரம முறைக்கு உயிர் ஊட்டும் குலக்கல்வித் திட்டம்' என்று எழுதியது. ஆனால், இன்றோ மோடியின் மடியில் (கோடி மீடியா) அமர்ந்திருக்கும் ஊடகங்கள், மீண்டும், மீண்டும் இன்றைய அரசின் திட்டங்களை வரவேற்றுப் பரவலாக்குவதில் கவனமாக உள்ளன. பார்ப்பனிய ஊடகமான 'தினமலர்' ராஜாஜி குலக்கல்வி என்ற தவறான வார்த்தையைப் பயன்படுத்திவிட்டார், மாறாக, தொழிற்கல்வி என்று கூறியிருந்தால் அன்றே இது நடைமுறைக்கு வத்திருக்கும் என்றும், இதெல்லாம் பரம்பரை ஜீன்களால் வரும் ஒன்று என்றும் பார்ப்பனிய வருண தர்மாவிற்கு அறிவியல்ரீதியாக வக்காலத்து வாங்குகிறது. ஆனால், இவை குறித்துப் பொதுக்களத்தில் விவாதங்கள் ஏதுமில்லை. எதிர்த்து வரும் கருத்துக் களை வெளியிடக்கூட ஒரு பரவலான ஊடகம் அற்ற நிலையை உருவாக்கி உள்ளது ஒன்றிய பாசிச அரசு. அப்படியே யாராவது எதிர்த்தால், அவர்களை 'விஸ்வகர்மா'க்கள் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் எதிரிகள் என்று அனைத்து ஊடகங்களும் பாஜக கட்சியினரும் சித்தரித்து ஒரு பெரும் எதிர்ப் பிரச்சாரத்தைச் செய்வார்கள். இத்திட்டத்தில் தெளிவாக ஜாதிய அடிப்படையில் ஆட்களைத் தேர்வு செய்து, அவர்களுக்குக் கடனுதவி வழங்குகிறது. அதன்மூலம், படிக்கச் செல்லாமல் குலத் தொழிலில் ஈடுபடும் ஆசையைத் தூண்டுகிறது. மற்றொருபுறம், ஜாதிகளுக்கு இடையிலான பகைமையை வளர்த்து அதனை வாக்குகளாக மாற்றத் திட்டமிடுகிறது.

நிலச் சீர்திருத்தங்கள் வழியாகவும், 1990இல் நடை முறைப்படுத்தப்பட்ட மண்டல் ஆணைய அறிக்கை யாலும், நிலம் மற்றும் அரசியல் அதிகாரத்தைப் பெற்ற மிகவும் பிற்படுத்தப்பட்ட கைவினைஞர்களுக்கும், சக்திவாய்ந்த மிகவும் பிற்படுத்தப்பட்ட விவசாயிகளுக்கும் (வடநாட்டில் உள்ள யாதவர்கள் மற்றும் குர்மிகள் போன்றோர்). இடையேயான முரணைப் பயன்படுத்த முனைகிறது. உண்மையில், இந்த முரணில் கைவினைஞர்கள், சக்தி வாய்ந்த விவசாய சமூகத்துடன் போட்டியிட முடியாது என்று மண்டல் அறிக்கையில் ஒரு குறிப்பு உள்ளது. 2018 வரை கிடைத்ததரவுகளின்படி, 10 OBC சமூகங்கள் மட்டுமே 97% இடஒதுக்கீட்டினால் கிடைத்த அரசாங்க வேலைகளைப் பெற்றுள்ளனர். மேலும் 983 OBC சமூகங்கள் (2,600 இல்) அரசாங்க வேலைகளில் பிரதிநிதித்துவம் பெறவில்லை என்று ஒரு பத்திரிகைக் குறிப்பு கூறுகிறது. ஆகையால், இத்திட்டத்தை அறிவித்து வழக்கம்போல தனது 'ஜூம்லா' வேலையைக் காட்ட முனைகிறது இன்றைய பாஜக அரசு. அதாவது, மிகவும் பிற்படுத்தப்பட்ட 'விஸ்வகர்மா சமூக வாக்குகளைத் திரட்டி விடலாம் என்று நினைக்கிறது. வழக்கம் போல, இது தனக்குப் பின்னால் தானே பற்றவைத்த நெருப்பாக மாறப் போகிறது.

''விஸ்வகர்மா' என்பது அடிப்படையில் ஒரு ஜாதியக் கூட்டமைப்பைக் குறிக்கும் சொல். தமிழ் நாட்டில் இவர்கள் 'கம்மாளர்கள்' என்று அழைக்கப் படுகிறார்கள். இவர்கள் தங்களை 'விஸ்வபிராமணர்கள்' என்று அழைத்துக் கொண்டாலும், பிற ஜாதிய சமூகம் இவர்களைக் கீழ்நிலைத் தொழிலாளர்களாகவே வைத்துள்ளது. இவர்கள் பிராமணர்கள் போலவே, பூணூல் அணிகிறார்கள். இவர்கள் தச்சுவேலை செய்யும் ஆசாரிகள், பட்டறைத் தொழில் செய்யும் கொல்லர்கள், வெண்கலப் பணிகள் செய்பவர்கள், பொற்கொல்லர்கள், கல்தச்சர்கள் என அய்ந்து பிரிவினர்கள். இவர்கள் விஸ்வகர்மா என்கிற சொர்க்கம், நகரம், தேவலோகம் ஆகியவற்றைப் படைத்த தெய்வத்தின் வாரிசுகளாகத் தங்களைக் கூறிக் கொள்பவர்கள். அவர்களுக்காக 'விஸ்வகர்மா புராணம்' என்று ஒரு புராணமே உள்ளது, ஆனால், வருண தருமப்படி இவர்கள் அவர்ணர்களாகவே சமூக மதிப்பைப் பெற்றுள்ளனர். இப்புராணம் கூட பிற்காலத் தில் உருவாக்கப்பட்டது என்ற கருத்தும் உள்ளது. காரணம், சமஸ்கிருதமயமாக்கலில் சமூகத்தில் வருண தர்மத்தால் ஒதுக்கப்பட்ட மக்களைத் தங்கள் அதிகாரத் திற்குள் கொண்டுவந்து அடிமையாக்க அவர்களைத் தங்கள் தெய்வீகப் புராணக் கதைகளில் இணைப்பது பல ஆயிரம் ஆண்டுக்கால் பார்ப்பனத் திட்டம். அதில் ஒன்றே இந்த விஸ்வகர்மா புராணம். அதாவது சமஸ்கிருதமயமாக்கலில், பிராமணர்கள் இத்தகைய கைவிளைஞர்களைத் தங்களது ஆதிக்கக் குடையின் கீழ் கொண்டுவர, வழக்கம்போல இத்தகைய புராணக் கதைகளைக் கட்டமைத்துள்ளனர்.

நால் வருணமுறை என்பது இந்திய ஒன்றியத்திற்கே உரித்தான தனிச்சிறப்பான ஒன்று அல்ல. அல்லது பல பிராமண அறிவுசீவிகள் பீற்றித் திரிவதைப்போல, உலகின் சமூக ஒழுங்கை நிலைநிறுத்த பிராமண மூளையில் உதித்த அற்புதத் திட்டமும் அல்ல. அதா வது, கீதை கூறுவதைப்போல அவரவர் கடமையை அவரவர் செய்தால் நாட்டில் சண்டை சச்சரவுகளே இருக்காது. பார்ப்பனர்கள் தின்று கொழுக்கவும், மற்ற வர்கள் உழைத்துச் சாகவும் ஆன படிநிலை ஏற்பாடு. காரணம், உலகின் அனைத்துச் சமூகங்களும் அது உருவாகிவந்த ஆதிக்காலத்தில் சமூக இயக்கப்போக்கில் தகவமைத்துக் கொண்டதே நான்கு வேலைப் பிரி வினைகள். அது ஆசிய, ஈரானிய, அய்ரோப்பா உள் ளிட்ட அனைத்துச் சமூகங்களிலும் உள்ளதை மானுடவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக 'இந்து சமயத் தத்துவம்' குறித்து எழுதும் T.M.P. மகா தேவன் அவர்கள் இம்முறை கிரேக்கத்தில் “பிளேட்டோ நாட்டு மக்களை ஆளும் தத்துவஞானிகள், போர் வீரர்கள், பாமரமக்கள் என்று மூன்று பிரிவுகளாக - மூன்று ஜாதிகளாக மூன்று தொழில்களாகப் பிரித்தார்” என்பதைச் சுட்டிக்காட்டுகிறார் (அம்பேத்கரும் பிளேட் டோவின் இந்த மூன்று பிரிவுகள் குறித்து விரிவாகப் பேசுகிறார் (தொ. பக்.807). பார்சிகளின் மதமான ஜொராஷ்டீரியத்தில் புரோகிதர்கள், சத்திரியர்கள், விவசாயிகள், கைவினைஞர்கள் என்கிற பிரிவு ஆசிய பிரிவை ஒட்டி இருந்துள்ளது. கிறிஸ்துவத்தில் இது நான்கு எஸ்டேட்டுகளாக(estates) Lords Spiritual, Lords Temporal, crafismen & marchants, serfs  எனப் பிரிக்கப் பட்டுள்ளது" (ஜமாலன் பக். 78).  ஆக நால்வருணமுறை என்பது ஒரு சமூகம் உருவாகும் போது, நடைமுறையில் உருவாகும் தொழிற்பிரிவினைகள் ஆகும். இது ஒருவரது தொழில் திறனைப் பொறுத்து உருவான ஒன்று. தொடக்கத்தில் ஜாதிகள் தொழில் பற்றிய பிரிவுகளாகவே இருந்தன. ஆனால் நாளடைவில் அவை பிறப்புப் பற்றிய பிரிவுகளாக மாறவிட்டன என்று கூறும் மகாதேவன் அவர்கள் இது ஏதோ இயல் பாய் நடந்தது போன்ற தோற்றத்தை தர முயல்கிறார். பொதுவாக வருணம் ஏன் ஜாதியாக மாறியது என்ற மில்லியன் டாலர் கேள்வியை அப்படித்தாண்டிச் செல்வதே  பெரும்பாலான பார்ப்பன அறிவுஜீவிகளின் ஆய்வு நேர்மை.

ஆனால் இந்தியாவில் பிராமணர்கள் தங்கள் மேலாதிக்கத்தை நிறுவிக்கொள்ள, தொழில் திறன் அடிப்படையில் அமைந்த இந்த உழைப்புப் பிரிவினையைப் பிறப்பு அடிப்படையானதாக மனுதர் மத்தில் மாற்றினார்கள் என்று அம்பேத்கர் கட்டிக் காட்டுகிறார். இது குறித்து மிக விரிவாகப் பேசுகிறது அவரது ஆய்வு.  அது இயல்பான போக்கில் உருவானது அல்ல. மனிதர்களின் இயற்கையான போக்கினாலும் அமைந்ததில்லை". "இது போல தொழிலாளர்களை ஏற்றத்தாழ்வாக வகைப்படுத்திய தொழில் பிரிவினை வேறெந்த நாட்டிலும் இல்லை ஜாதி அமைப்பு தொழில்களை மட்டுமே பிரிக்கவில்லை; தொழிலாளர் களையும் அது பிரிக்கிறது" (மேலும் அம்பேத்கர் கூறுகிறார், "வருண தரும முறையை ஜாதியாக உரு மாற்றம் செய்ததுதான் பிராமணியம் தனது வெற்றிக்குப் பின் முதன்மையாக ஈடுபட்ட மிகப்பெரிய சுயநல நோக்கமுள்ள செயலாகும்." (தொ.7 பக். 186). ஆக, அம்பேத்கர் தெளிவுபடுத்தும் செய்திகள், பவுத்த இந்தி யாவை வீழ்த்த பிராமணர்களின் சுங்க வமிசத்தைச் சேர்ந்த புஷ்யமித்திர சுங்கன் உருவாக்கிய எதிர்ப் புரட்சியின் விளைவாகத் திருத்தப்பட்டதே மனுதர்மத் தின் பிராமண மேலாதிக்க விதிகள். அதில் ஒன்று வருணம் ஜாதியாக மாற தொழிலை அடிப்படையாகக் கொண்ட வருணத்தைப் பிறப்பை அடிப்படையாக மாற்றியது. இரண்டு தொழில் பிரிவினைகளை இந்த மாற்றத்தின் வழி தொழிலாளர் பிரிவினையாக மாற்றி னார்கள். அதனால், பிராமணர்கள் மட்டும் வருணமாக ஜாதியாக கலப்பற்ற நிலையில் நிலைத்து விட்டார்கள். மற்ற வருணங்கள் பின் வழி பல்வேறு ஜாதிகளாக மாறிவிட்டன என்பதே. எனவே, ஸநாதன வருண தருமத்தின் பலன் முழுமையாகச் சேரக் கூடியவர்களாக இருப்பவர்கள். பிராமண வருணத்தாரே மற்ற வரு ணங்கள் தங்கள் தனித்த அடையாளத்தை இழந் துள்ளன. 

இந்த நால்வருணமுறை ருக்வேதத்தில் புருஷ சூக்தத்தில்தான் முதலில் குறிப்பிடப்படுகிறது. பிற்காலத் தில் பகவான் கிருஷ்ணரின் வழியாக கீதையில் அறிவுரையாகவும், மனு தருமத்தில் சட்டமாகவும் மாறுகிறது. இந்த நால்வருணமுறை கீதையில்தான் ஒரு முழுவடிவம் பெறுகிறது. "நான்கு வருணத்தை நான் படைத்தேன். அவை குணம் மற்றும் பிறப்பின் அடிப் படையிலானவை." (மகாதேவன், பக்.63) என்கிறது கீதை,

"சாதுர்வர்ணாயம் மயா ஸ்ருஷ்டம் குணகர்மவிபாகா 

தஸ்ய கர்தாரமபி மாம் வித்த்யகர்தாரமவ்யயம்"

-அத்.4, சு.13 (பகவத் கீதை)

“வேதியர், வேந்தர், வணிகர், வேளாளர் என்ற நான்கு வர்ணங்கள் கொண்ட சமூகம் குணங்களையும் கர்மங்களையும் ஒட்டிய பிரிவுகளாக என்னால் படைக்கப்பட்டது. இங்ஙனம் அந்தப் படைப்பு முதலிய செயல்களைச் செய்யும் கர்த்தாவாக நான் இருந்த போதிலும் அழிவற்ற பரமேசுவரனாகிய என்னை, உண்மையில் கர்த்தா அல்லன் என்று நீ அறிவாயாக" (ஸ்ரீமத் பகவத் கீதை, பக் 272) என்ற மேற்கண்ட சூத்திரத்திற்கு கீதையின் அத்தாரிட்டியான கீதா பிரஸ் வெளியிட்ட நூலில் விளக்கப்பட்டுள்ளது. மேலும், இச்சூத்திரத்தைப் பிறப்படிப்படை என்பது ஒரு வாய்ப்பாகத்தானே கூறுகிறது என்று அதனை முக்கியத் துவமற்றதாகக் கருதிவிடக்கூடாது என்று பல விளக்க வுரைகளை அவாள் பாஷையில் கூறினால் "பண்ணி பண்ணி" எழுதியுள்ளனர்.

"பகவான் மனிதர்களைப் படைக்கும்போது, அவர் களுடைய குணங்கள். கர்மங்கள் இவற்றிற்கேற்றவாறு, அந்தணர் முதலிய வருண வகுப்புகளின் பிறவியை அளிக்கிறார்." (பக்.273) "சேவையை நான்காம் வருணத்தார்க்கு அமைத்துக் கொடுக்கிறார்" (பக். 273), "பிறப்பு, செயல் இரண்டுமே வர்ணப்பிரிவிற்குத் துணை நிற்பவைதான்." "ஆயினும், பிறப்பை வைத்துதான் பிராமணர் முதலிய வர்ணப்பிரிவு நடந்து வருகிறது என்று அறிய வேண்டும். ஏனெனில், இவை இரண்டில் பிறவிக்குத்தான் முதன்மை கொடுக்கப்பட்டு வருகிறது" (பக்.273). ஆக, பகவானே வந்து பிறப்பு அடிப்படை என்பது இரண்டாம்பட்சம்தான் என்று கூறினாலும், இவாள் அதை ஒத்துக்கவே கூடாது என்பதற்காக அழுத்தி அழுத்தி அதற்கு விளக்கம் தருகிறார்கள். உண்மையில் பகவான் படைக்கும் போதே குணத் தையும், தொழிலையும் தீர்மானித்து வர்ணமாகவே படைத்து விடுகிறார் என்றால், இவ்வளவு விளக்கமே தேவையில்லை. காரணம் பகவான்தான் குணத்தையும், தொழிலையும் பிறப்பில் வைத்தே படைக்கிறாரே. பிறகு எதற்கு இத்தனை விளக்கங்கள். ஆக, வருணம் என்பது பிறப்பு அடிப்படை என்பதே ஒன்றிய மக்களில் 97 சதவீதம் மக்கள் 3 சதவீதப் பார்ப்பனர்களுக்கு அடிமை யாக இருக்கக் காரணமாக அமைகிறது. இத்திட்டம் அதனைச் சமூகச் சட்டமாக்க முயல்கிறது என்பதே அடிப்படை.

வருணத்தை ஜாதியாக மாற்றிய வரலாற்றை மூன்று கட்டங்களில் நிகழ்ந்ததாக அம்பேத்கர் குறிப்பிடுகிறார். அது விரிவாக தனி அத்தியாயமாகச் சொல்லப்பட்டுள் ளது. குறிப்பாக குரு-ருஷ்ய முறை சடங்கு வழியாக வர்ணங்கள் தீர்மானிக்கப்பட்டது. மூன்று விதமான பூணூல்கள் இடப்பட்டன (இந்த விரிவான வரலாறு இங்கு தேவையில்லை). ஆனால், வருணம் பயிற்சியின் வழியாக நிர்ணயிக்கப்பட்டது. பிற்காலத்தில், அது கறாராகப் பிறப்பு அடிப்படை என்று மாற்றப்பட்டு, மனு தர்மம் திருத்தப்பட்டது என்பதாலேயே அதில் பல முரண்களைக் காண நேர்கிறதை அம்பேத்கர் சுட்டிக்காட்டுகிறார். உலகிலேயே இல்லாத ஒரு நடைமுறையைப் பிராமணர்களின் பேரசை, சுயநலம் ஆகியவற்றின் காரணமாக, ஒன்றிய மக்களை அடிமைகளாக ஆக்கியது மட்டுமின்றி, சுயமரியாதை அற்ற உளவியலை, அதாவது அடிமை உளவியலாக உருவாக்கிவிட்டது. அதனால்தான் பெரியார் திரும்ப, திரும்ப சுயமரியாதையை உருவாக்கப் பாடுபட்டார். அவரது கடவுள், பார்ப்பனிய மறுப்பு, பெண்ணடி மைத்தனம், ஜாதிய மறுப்பு, தீண்டாமை ஒழிப்பு அனைத்தும் இந்த சுயமரியாதை என்கிற உளவியலுக் கான ஒரு நடவடிக்கைகளே. ஆனால், இத்திட்டம் சுயமரியாதையை மறுத்து, மீண்டும் கைவினைஞர்களை அடிமைகளாக மாற்றும் உளவியலைக் கட்ட முயல் கிறது.

இத்தகைய திட்டங்கள் பல ஆண்டுகளாக, பாஜக வின் தாய்க் கழகமான ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் வேலைத் திட்டங்களில் ஒன்று என்பதே. இந்திய ஒன்றியத்தை ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மதம், ஒரே மக்கள் என்று பல 'ஒரே'க்களால் இந்த நாட்டை ஒரே வர்ணமாக, ஒரே ஜாதியாக மூவாயிரம் ஆண்டு களாக மாறாமல் காத்துவரும் பிராமணர்கள், அதைத் தான் ஸநாதன தருமம் என்கிறார்கள், அதிகாரத்தை மீட்டெடுப்பதும், துவிஜர்களாக கருதப்படும் அடுத்த இரண்டு வர்ணங்களான சத்திரிய (ராஜ்புட்) வைசிய (பனியாக்களின்) அதிகாரத்தில் நாட்டை வழிநடத் துவதுமே இதன் குறிக்கோள். இந்தியாவின் 90 சதவீத சூத்திரர்கள், பஞ்சமர்கள் எனப்படும் அவர்ணர்கள் அனைவரும் அடிமைகளாக உழைத்துச் சாவதுமே இதன் அடிப்படை

அடிப்படையில் இந்திய ஒன்றியத்தைப் பண்டைய வர்ண ஸநாதன சமூகத்திற்கு அழைத்து செல்வதே இவர்களின் நோக்கம். ஆனால், நவீனகாலத்தில் அதனைச் சாதிக்க அவர்கள் உலகளாவிய கார்ப்ப ரேட்டுகளின் கைப்பாவைகளாக மாறியுள்ளனர். அத னால்தான் அதானியை முதன்மைப்படுத்தி, உலகக் கார்ப்பரேட்டாக இந்திய பனியா முதலாளியம் வளர்வதை 'உலகத் தலைமை' (விஸ்வகுரு) என் கிறார்கள். இந்து மதம், இந்துத்துவா என்பது ஒன்றியப் பெரும்பான்மை. மக்களுக்குத் தரப்பட்டிருக்கும் ஒரு போதை மருந்து, மார்க்ஸ் சுட்டியதைப்போல மதம் ஒரு அபின் என்பதைச் சரியாகப் பயன்படுத்துகிறார்கள் இந்தக் கார்ப்பரேட் பனியாக்கள். பார்ப்பன-பனியா முதலாளிய அதிகாரக் கூட்டு என்பது பார்ப்பனிய மேற்கட்டுமானக் கருத்தியலாலும், பனியா உள்கட்டு மானப் பொருளாதாரத்தாலும் கட்டப்பட்ட ஒரு சமூகமாக இந்திய ஒன்றியத்தை வடிவமைக்க முயல் கின்றனர்.

இத்திட்டம் இந்திய ஒன்றியத்தில் மனுதருமம் முன்வைக்கும் ஸநாதன வருண தருமத்தின் அடிப் படையான சிக்கல், ஆதாரமான 'சிக்கல், அம்பேத்கர் சுட்டிக்காட்டுவதைப்போல, தொழில் பிரிவினையாக சமூகத்தில் உருவான வேலைப்பிரிவினைகளை, திறன் அடிப்படையில் இல்லாமல், பிறப்படிப்படையில் மாற் றியதே பார்ப்பனியத்தின் சூழ்ச்சித்தனமான அனைத்து வெற்றிகளுக்கும், அவர்களது 'அதிகாரத்திற்கும் அடிப்படையாக அமைந்துவிட்டது. அந்தச் குழ்ச்சியை மற்றொருமுறை நடைமுறைப்படுத்த முனைவதே இந்த "விஸ்வகர்மா யோஜனா"வின் அடிப்படை. இது கார்ப்பரேட் பார்ப்பன- பனியாக்களுக்கான சுரண்டல் 'போஜனா' தவிர வேறு ஒன்றுமில்லை.

பார்வை நூல்கள் மற்றும் 

கட்டுரைகள்: 

1. இந்து சமயத் தத்துவம், T.M.P., மகாதேவன், 4ஆம் பதிப்பு, 2022, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகம், சென்னை,

2. காந்தியின் பகவத்கீதை, மருத்துவர் நா. ஜெய ராமன், 2022, விடியல் பதிப்பகம், கோவை

3.ஸ்ரீமத் பகவத்கீதா, ஸ்ரீ ஜயதயால் கோயந்தகா, 2018, கீதா பிரஸ், கோரக்பூர் 4. உடலரசியல், ஜமாலன், 2020, காலக்குறி பதிப்பகம். சென்னை

5. பாபசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு தொகுதி-7, மறுபதிப்பு 2008, டாக்டர் அம்பேத்கர் பவுண்டேஷன், புது டெல்லி

6. பாபசாகேப் டாக்டர் அம்பெத்கர் நூல் தொகுப்பு தொகுதி-1, மறுபதிப்பு 2008, டாக்டர் அம்பேத்கர் பவுண்டேஷன், புது டெல்லி

7. விஸ்வகர்மா திட்டம், பி.எஸ்.எம். ராவ், தினமணி, 16.09.2023 

8. குலக்கல்வியும், தொழிற்கல்வியும்!, எஸ். ராம் சுப்ரமணியன், தினமலர், நவ. 01, 2021 

9. 'மெக்காலே' எதிர்ப்பும், குலக்கல்வித் திணிப்பும், அதி அசுரன், காட்டாறு, ஆகஸ்ட் 2017

10 குலக்கல்வி திட்டம் ரத்து - 1954, ஸ்ரீராம் முரளிதரன்,https://medium.com

11. குலக் கல்விப் போராட்ட வரலாறு என்ன?, மு. செந்திலதிபன், பெரியார் முழக்கம், ஜூன் 2022

12. தமிழர்களை அடிமைப்படுத்திய பார்ப்பனர்களின் குலக்கல்வி. மே 17 இயக்க குல், செப் 2021 

13.PM Vishwakarma Guidelines for Implementation, Government of India, Minister of Micro, Small & Medium Enterprises.

- நன்றி: ‘காக்கைச் சிறகினிலே', 

அக். 2023


No comments:

Post a Comment