நூல் வெளியீட்டு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி உரை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 11, 2023

நூல் வெளியீட்டு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி உரை!

 கடவூர் மணிமாறனின் ‘தமிழ்மணம்' 10 தொகுதிகள் வெளியீட்டு விழா

தமிழ் நெல்லுக்குப் பாய்ச்சிய நீரில், தர்ப்பைப்புல் சமஸ்கிருதமும் செம்மொழியானது!

திருச்சி, அக்.11  ‘தமிழ்மணம்' எனும் தலைப்பில் 10 தொகுதிகளின் நூல் வெளியீட்டு விழா 7.10.2023 அன்று, திருச்சி தமிழ்ச் சங்கக் கட்டடத்தில் நடைபெற்றது. நூல்களை வெளியிட்டு தமிழர் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றியதாவது:

மொழி என்பது போர்க்கருவி!

மொழி என்பது போர்க்கருவி போன்றது என்றார் பெரியார். கால சூழலுக்கு ஏற்ப போர்க் கருவிகள் மாறு வதைப் போல, மொழியின் தன்மையும் மாறிக் கொண்டே இருக்க வேண்டும். அதாவது அறிவியலுக்கு ஏற்ப, விஞ்ஞான மொழியாக மாற வேண்டும். 

இக்கருத்தை ஏற்கும் கடவூர் மணிமாறன் நல்ல எழுத்தாளர், கருத்தாளர், தமிழாளர் ஆவார். ‘தமிழ் மணம்' என்கிற நூலின் 10 தொகுதிகளை இங்கே வெளியிடுகிறார். சிலர் தங்கள் "நூலை" வெளியே காட்டிக் கொண்டே, கருத்து சொல்லி வருகிறார்கள்.‌ அப்படியான "நூல்கள்" எல்லாம் அருகில் வரமுடியாத வாறு, இந்த 10 நூல்களும் சிறப்பாக வந்திருக்கின்றன.

‘‘நூலைப் படி - சங்கத்தமிழ் நூலைப்படி - முறைப்படி நூலைப்படி  - காலையில் படி - கடும்பகல் படி மாலை இரவு பொருள்படும்படி'' என்று பாடினார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். ஒரு காலத்தில் இராவண காவியம் நூலை தொடர் சொற்பொழிவாகக் கொண்டு சென்றது திராவிடர் இயக்கம். அதேபோல இந்த நூல்களையும் பரப்புரை செய்ய வேண்டும். திடலில் இயங்கிவரும் பெரியார் நூலக வாசகர் வட்டம் சார்பில் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்படும். 

எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்! 

கருவறையிலும் தமிழ்!!

கடவூர் மணிமாறன் அவர்கள் புரட்சிக்கவிஞர், பாவலரேறு பெருஞ்சித்திரனார், டாக்டர் கலைஞர், பேராசிரியர் அன்பழகன் போன்றோரிடம் எல்லாம் நெருக்கமாகப் பழகும் வாய்ப்பைப் பெற்றவர். சுயமரி யாதைச் சிந்தனை கொண்டவர், குறிப்பாகக் கடவுள் மறுப்புக் கொள்கையாளர். நேர நெருக்கடிகள் அதிகம் இருந்தாலும், இந்த நூல்களை எல்லாம் வாசித்தேன். மணிமாறன் அவர்கள் அவ்வப்போது எழுதுபவர் அல்லர்; அவர் ஒரு தொடர் எழுத்தாளர். இவ்வளவுப் புத்தகங்கள் வெளியிடுகிற போது, சேமிப்புகள் எல்லாம் கடந்து, கடனில் வந்து நிற்கும் நிலையும் வரும்.

இந்த விழாவில் கூட 10 புத்தகங்களையும் ஒரு பெரிய பையில் (பேக்) போட்டு கொடுத்துள்ளார். பையின் ஒரு பக்கம் விழா குறித்த செய்திகள் உள்ளன. மகிழ்ச்சி! வாழ்த்துகள்! மற்றொரு புறம் எதுவும் எழுதப் படாமல் உள்ளது. அதில் ஏதாவது ஒரு நல்ல வாசகம் எழுதியிருக்கலாம்!

மணிமாறன் போன்றோர் பணியில் இருக்கும் போதே கலைஞரை ஆதரித்து, பல நெருக்கடிகளுக்கு ஆளானவர்கள். அதையெல்லாம் சந்தித்து தான் இந்த உயர் நிலையை அடைந்திருக்கிறார்கள். இன்றைக்கும் புலவர்கள் எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்பார்கள். நாமும் ஆதரவாக இருக்கிறோம். ஆனால் எல்லா வற்றிலும் இருக்க வேண்டிய தமிழை, கருவறைக்குள் கொண்டு போகலாம் என்றால் அமைதியாக இருந்து விடுவார்கள். 

செம்மொழியான தமிழ் மொழியாம்!

கலைஞர் அவர்கள் தானே தமிழை செம்மொழியாக உருவாக்கினார். இதனையொட்டி வடமொழியும் செம் மொழியே என்றார்கள். தமிழ்நாட்டில் 8 கோடி பேர் பேசும் தமிழை, உலகம் முழுவதும் பரந்து விரிந்த தமிழை, அனைத்துத் தகுதிகளும் கொண்ட ஒரு மொழியை செம்மொழி என்றால் அது பொருத்தமானது. யாரும் பேசாத ஒரு மொழியை, நடைமுறையில் இல்லாத ஒரு மொழியை செம்மொழி என்றால் யார் ஏற்றுக் கொள்வர்? எதுவுமற்ற சமஸ்கிருதத்திற்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்?

"நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழியோடிப் புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்", என்பதற்கிணங்க சமஸ்கிருதமும் செம்மொழி என ஆக்கிவிட்டார்கள். அதாவது தமிழ் நெல்லுக்குப் பாய்ச்சிய நீரில், தர்ப்பைப் புல் சமஸ்கிருதமும் செம்மொழியானது. இந்த ஆண் டின் ஜூலை மாதத்தில் மலேசியத் தலைநகர் கோலா லம்பூரில் நடைபெற்ற உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட் டில் கூட இவை பதிவு செய்யப்பட்டுள்ளன. திராவிடம் தமிழுக்கு என்ன செய்தது என்போர், இதுபோன்ற செய்திகளைப் படிக்க வேண்டும்! 

திராவிட மொழிநூல் ஞாயிறு

தனித்தமிழ் இயக்க முன்னோடி தேவநேயப் பாவாணர் அவர்களை 'மொழி ஞாயிறு' என்று அழைக் கின்றார்கள். ஆனால் 1957 ஆம் ஆண்டு சேலம் தமிழ்ப் பேரவையினர் நடத்திய பாராட்டு விழாவில் பாவாணர் அவர்களுக்கு, "திராவிட மொழிநூல் ஞாயிறு" என்றே பட்டம் வழங்கப்பட்டது. அதேபோல பொன்னம்பலனார் அவர்களுக்கும் விருது வழங்கப் பட்டது. இவ்விருதுகளைத் தந்தை பெரியார்தான் வழங்கினார். புரட்சிக்கவிஞர் பாரதிதாசனும் இந்நிகழ் வில் பங்கேற்றார். சூழ்ச்சிக்கார்கள் திராவிட மொழிநூல் ஞாயிறு என்பதில் உள்ள "திராவிட" என்பதை மறைத்து விட்டார்கள். எனவே திராவிட மொழிநூல் ஞாயிறு என்றே அனைவரும் பயன்படுத்த வேண்டும்.

தந்தை பெரியார் விருது!

பாவலர் மணிமாறன் போன்றோர் பணியில் இருக்கும் போதே, துணிவோடு இருந்தவர்கள். தன் மானப் பெரும் புலவர்கள் இவர்கள். இதுபோன்ற பகுத்தறிவுப் புலவர்களை நாம் ஆதரிக்க வேண்டும்; தூக்கிப் பிடிக்க வேண்டும்! 

தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் நடத்தும் திராவிடப் பெருநாள் நிகழ்ச்சியில், பாவலர் கடவூர் மணிமாறன் அவர்களுக்குத் தந்தை பெரியார் விருது வழங்கிச் சிறப்பிக்க இருக்கிறோம். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள அனைத்துத் தமிழ்ச் சான்றோர்களும், புலவர் பெருமக்களும் அதில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்! 

இனமானம் ஒன்றே குறிக்கோள்!

பார்ப்பனர்கள் தங்களுக்குள் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் காட்டிக் கொள்ளமாட் டார்கள். கொலைக் குற்றம் சாட்டப்பட்ட சங்கராச் சாரியாரை "மகா பெரியவா" என்று தான் அழைப்பார்கள். அய்யர், அய்யங்கார் வித்தியாசம் இல்லாமல் மரியாதை கொடுப்பார்கள். சிறைக்குச் சென்று வந்த பிறகும் அதே மரியாதை தான்.

தமிழர்களுக்கு முதலில் தன்மானம் தேவை. பிறகு இனமானம்! நெருக்கடி ஏற்பட்டால் வருமானம், வெகு மானம், தன்மானம் அனைத்தையும் விட்டு, இனமானம் ஒன்றே பெரியது எனக் குரல் கொடுக்க வேண்டும்.

அப்பேற்பட்ட பகுத்தறிவுப் புலவராக மணிமாறன் இருக்கிறார். அவர் ஓர் எழுத்துப் போராளியாக, கருத் துப் போராளியாக இருக்கிறார். மேலும் பல நூல்கள் அவர் படைக்க வேண்டும் எனத் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பேசினார்.

நூல்கள் வெளியீடு!

முன்னதாக நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில அரசுத் தணிக்கைத் துறையின் உதவி இயக்குநர் வெ.அறிவுக் கண்ணன் வரவேற்புரை ஆற்றினார். சுபசக்தி மகளிர் கலை அறிவியல் கல்லூரியின் தாளாளர் பொறிஞர் சுப.சக்திவேல் தலைமை வகித்தார். கிராமியம் டாக்டர் போ.நாராயணன், கரூர் திருக்குறள் பேரவை நிறுவனர் மேலை.பழனியப்பன், குமார கபிலன் இலக்கிய அறக் கட்டளை நிறுவனர் நெல்லை குமார.சுப் பிரமணியம், கருவூர் தமிழ்ச் சங்கத் தலைவர் கருவூர். கன்னல், கரூர் மாவட்டத் திராவிடர் கழகத் தலைவர் ப.குமாரசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பாவாணர் தமிழியக்கம் பேராசிரியர் முனைவர் கு.திருமாறன், தூயவளனார் கல்லூரி மேனாள் தமிழ்ப் பேராசிரியர் இ.வளனறிவு ஆகியோர் நூல் திறனாய்வு செய்தனர். திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் 

கி.வீரமணி அவர்கள் நூல்களை வெளியிட பெரம்பலூர் ஓவியச் செம்மல் கி.முகுந்தன், மேனாள் காவல்துறைக் கண்காணிப்பாளர் ம.இராசன், கரூர் அரசு வழக்குரைஞர் இரா.குடியரசு, டாக்டர் சேவை. கோவிந்தராஜன், அரிய லூர் வட்டாட்சியர் ம.கலைவாணன், ஸ்கோப் இயக்குநர் பத்மசிறீ சுப்புராமன் ஆகியோர் நூலின் முதற்படிகளைப் பெற்றுக் கொண்டனர்.‌ இறுதியில் நூலாசிரியர் கடவூர் மணிமாறன் ஏற்புரை வழங்கினார். மா.கனிமொழி நன்றி கூறினார்.

குளித்தலை தமிழ்ப் பேரவைத் தலைவர், பாவலர் கடவூர் மணிமாறன் அவர்கள் தாம் எழுதிய 10 நூல் களையும் சென்னை பெரியார் நூலகத்திற்கு, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங் கினார்.

பங்கேற்றோர்

இந்நிகழ்வில் திருச்சி மாவட்டத் தலைவர் ஞா.ஆரோக்கியராஜ், செயலாளர் இரா.மோகன்தாஸ், மாநிலத் தொழிலாளரணி செயலாளர் மு.சேகர், பெரியார் வீரவிளையாட்டுக் கழகத் தலைவர் பேரா சிரியர் ப.சுப்பிரமணியன், தகவல் தொழில் நுட்பக்குழு ஒருங்கிணைப்பாளர் வி.சி.வில்வம், காட்டூர் சங்கிலி முத்து, இராஜேந்திரன், கங்காதரன், அறிவுச்சுடர், பாலக் கரை பகுதித் தலைவர் முபாரக் அலி, எடமலைப் பட்டிபுதூர் ஆசிரியர் நடராஜன்,  பெல் இளங்கோ, எலிசபெத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொகுப்பு: வி.சி.வில்வம்


No comments:

Post a Comment