வேடிக்கை பார்க்கும் ஒன்றிய அரசை வீட்டுக்கு அனுப்பவேண்டும்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 10, 2023

வேடிக்கை பார்க்கும் ஒன்றிய அரசை வீட்டுக்கு அனுப்பவேண்டும்!

 கருநாடக மாநிலத்தைப் பார்த்த பிறகாவது காவிரிப் பிரச்சினையில் தமிழ்நாட்டுக் கட்சிகள் ஒரே அணியாக, ஒரே குரலில் பேசவேண்டாமா?

ஒரே நாடு, ஒரே தேர்தல் என்று ‘ஒரே' பேசும் ஒன்றிய பி.ஜே.பி. அரசு ஒரே நதிநீர் இணைப்புச் சட்டத்தைக் கொண்டு வரலாமே!

காவிரி நதிநீர்ப் பிரச்சினையில் கருநாடகத்தைப் பார்த்தாவது, தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் ஒரே குரலில் பேசவேண்டும். எதற்கெடுத்தாலும் ‘ஒரே ஒரே' என்று பேசும் ஒன்றிய பி.ஜே.பி. அரசு ஒரே நதிநீர் இணைப்புச் சட்டத்தைக் கொண்டு வரலாமே! அதை விட்டுவிட்டு வேடிக்கை பார்க்கும் ஒன்றிய பி.ஜே.பி. அரசை வரும் தேர்தலில் வீட்டுக்கு அனுப்ப வேண்டும்  என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார். 

அவரது அறிக்கை வருமாறு:

காவிரி டெல்டாவில் தஞ்சை, நாகை, திருவாரூர் போன்ற மாவட்ட விவசாயிகளின் கண்ணீர் வற்றாத கண்ணீராகப் பெருக்கெடுத்தோடுகிறது. காரணம், பயிர் களுக்குப் போதிய காவிரி தண்ணீர் வரத்து இல்லாததே!

உச்சநீதிமன்றத் தீர்ப்பையே மதிக்காத 

கருநாடக மாநில அரசு

கருநாடக மாநிலம், அங்கே அவர்களுக்குப் போதிய தண்ணீர் இருந்தும், தமிழ்நாட்டிற்கு உச்சநீதிமன்றமும், காவிரி நதிநீர் ஒழுங்காற்று ஆணையமும் ஆணை யிட்டபடி, 5 ஆயிரம் கன அடித் தண்ணீரையோ, 3 ஆயிரம் கன அடி தண்ணீரையோ கொடுக்க திட்ட வட்டமாக மறுத்து, உச்சநீதிமன்றத் தீர்ப்பையே உதாசீனம் செய்து, இரக்கமற்ற அரசியல் செய்து அடாவடித்தனத்தைத் தொடர்கிறது!

மிகவும் சிக்கலான இப்பிரச்சினையில், அண்டை மாநிலத்துடன் எப்போதும் நல்லுறவு பேணுவதே மக்கள் நலப் பாதுகாப்புக்குரியதாக அரசியல் அமையும் என்ற அடிப்படையில், மிக எச்சரிக்கையுடன் தமிழ்நாடு முதல மைச்சர் மாண்புமிகு மானமிகு மு.க.ஸ்டாலின் தனது ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்கிறார்!

முதலாவதாக, அடிப்படையான ஓர் உண்மையைச் சுட்டிக்காட்டி, அதன் பிறகே மற்ற உண்மைகளுக்குச் செல்லவேண்டும்.

கருநாடகத்தைப் பார்த்தாவது 

தமிழ்நாடு திருந்தவேண்டாமா?

கருநாடகத்தில் உள்ள எந்த அரசியல் கட்சியானாலும் - அமைப்புகள் ஆனாலும் ஒரே குரலில் - தொடக்கத் திலிருந்தே - தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் தரக்கூடாது என்பதில் ஒரே அணியில் - நியாயத்தைப் புறந்தள்ளிக் கூட, ஒன்றுபட்டு நிற்கிறார்கள்!

தமிழ்நாட்டில் இதற்கு நேர்மாறாக - அவிழ்த்துக் கொட்டிய ‘நெல்லிக்காய் மூட்டை அரசியல்' என்ற அவல நிலையே!

மேகதாது அணையைக் கட்ட விடவில்லையே - சட்ட நடவடிக்கைகள்மூலம் தமிழ்நாடு தனது உரிமைகளை உச்சநீதிமன்றம் வரை சென்று நிலை நிறுத்துகிறதே என்ற ஆத்திரம் கருநாடக மாநிலத்தில் - கட்சி பேதமற்ற அரசியல் அடிப்படை!

அண்டை மாநிலச் சகோதரத்துவத்தைக்கூட அவர் கள் மறந்துவிட்டு, அரசமைப்புச் சட்டத்தையும், உச்சநீதிமன்றத்தையும்கூட அவமதிக்கிறார்கள்.

பா.ஜ.க.வின் இரட்டை வேடம்!

நேற்றைய (9.10.2023) தமிழ்நாடு சட்டமன்றத் தீர்மானத்தை ஆதரிக்காமல், அதிதீவிர வேஷம் கட்டி - சாக்குப் போக்காக்கி - வெளிநடப்புமூலம் தமிழ்நாடு பா.ஜ.க. வழக்கமான தனது இரட்டை வேடத்தைப் போட்டு, தன்னை தமிழ்நாட்டு மக்களுக்குத் தன்னை சரியாக அடையாளம் காட்டிக் கொண்டுள்ளது!

பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்திருப்பது வரவேற்கத்தக்கது. என் றாலும், அதில் கூறப்பட்ட சில கருத்துகளைத் தவிர்த் திருந்தால் அவர்களுக்குப் பாராட்டு கிடைத்திருக்கும்; சிறு சறுக்கலைக்கூட இந்த வேளையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் தவிர்த் திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.

பேச்சுவார்த்தைகள் என்ற நாடகம் - பிரச்சினைக்குத் தீர்வு வழங்குவதைவிட, தமிழ்நாட்டு விவசாயிகளை மேலும் அதிருப்திக் கடலில் தள்ளவே பயன்படும் என்பது அப்பட்டமான உண்மை! முதலமைச்சராக இருந்தவருக்குப் புரியாதா?

பேச்சுவார்த்தை பலனளிக்குமா?

காவிரி நதிநீர்ப் பங்கீட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் வரும்போது- எதிர்க்கட்சியாகிய அ.தி.மு.க. வழக்கில் நாங்களும் இணைகிறோம் என்று  அல்லவா கூறி உயர்ந் திருக்கவேண்டும்? அப்படி  வாதாடுவதற்குப் பதில், பேச்சுவார்த்தை நடத்த யோசனை கூறுவது எவ்வகை யில் ஏற்கத்தக்கது?

ஜெயலலிதா அம்மையார் ஆட்சியிலிருந்தபோது காவிரி நதிநீர் ஆணையப் பிரச்சினையில் ஏன் உச்சநீதி மன்றத்தை நாடி, வழக்கு நடத்தி கடுமையாக வாதாடினார் என்பதை ‘வசதியாக' மறந்துவிடலாமா? பேச்சுவார்த் தையை ஏன் தவிர்த்தார்? அது ‘அம்மா வழியும் அல்லவே!'

இனி வருங்காலத்தில் தமிழ்நாட்டு நலன் காப்பதில் சறுக்கல்களைத் தவிர்க்கவேண்டும்!

பா.ஜ.க. தன்னை இதன்மூலம் அடையாளம் காட்டிக் கொண்டு விட்டது!

நோட்டாவுடன் போட்டியிட வேண்டிய நிலை பி.ஜே.பி.,க்கு வரும்!

காவிக் கட்சி தமிழ்நாட்டுத் தேர்தல்களில் இனி ‘‘நோட்டாவுடன்'' தான் போட்டி போட முடியுமே தவிர, மற்ற கட்சிகளுடன் போட்டி போட முடியாது என்பது இதன்மூலம் உறுதியாகத் தெரிகிறது!

பா.ஜ.க.வின் உட்கட்சி குழப்பம் ஒருபுறமிருந்தாலும், வெளியேயும் சட்டமன்றத்தில் காட்டும் ‘‘வித்தைகள்'' ஒருபோதும் தமிழ்நாட்டு விவசாயிகளிடம் விலை போகாது!

Upper riparian State  என்ற தண்ணீர் பாயும் மேற்பகுதி மாநிலம் என்பதால், தனக்கே காவிரி நீர் முழுமையும் என்ற ‘மாயை'யிலிருந்து கருநாடகா வெளியே வரவேண்டும்.

நியாயங்கள் இறுதியில் வெல்லும்! உறுதியான பல் உள்ள காவிரி நதிநீர் ஆணையம் தேவை! தேவை!! 

நாட்டின் நதிகள் நாட்டுடைமையாக்கப்படவேண்டி வாஜ்பேயி காலத்திலிருந்து கூறியதில், ஏன் இந்த 9 ஆண்டுகால மோடி அரசு எந்த முயற்சியும் எடுக்கவே இல்லை?

‘ஒரே நதி நீர்' இணைப்புச் சட்டம் 

கொண்டு வரலாமே!

புதிய நாடாளுமன்ற கட்டடம், புதிய தனி விமானங் கள் கட்டுதல் போன்றவற்றிற்காக பல்லாயிரம் கோடி ரூபாய்ச் செலவு செய்வதை, இதற்குப் பயன்படுத்தி யிருக்கலாமே! அனைத்து மக்கள் நலமும் பாதுகாக்கப் பட்டிருக்குமே!

ஒரு பக்கம் வெள்ளம்

மறுபக்கம் கடும் வறட்சி என்ற நிலை மாறி, அனை வரும் பயன்பெற்று, சுமூகமாக நதிநீர் சண்டையின்றி வாழ நிரந்தரத் தீர்வு ஏற்பட வேண்டாமா? அதைச் செய்யத் தவறிய ஒன்றிய பா.ஜ.க. அரசு, அதுபற்றி இதுவரை எடுத்த நடவடிக்கை என்ன?

ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே ரேஷன் கார்டு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்பதைவிட, ஒரே நதிநீர் இணைப்பு ஏற்பட்டிருந்தால், வெள்ளம், வறட்சி இரண்டு கொடுமைகளிலிருந்தும் நம் நாட்டு மக்கள் - அனைத்து மாநிலத்தவரும் காப்பாற்றப்பட்டு, மகிழ்ச்சி வாழ்வு வாழ்வார்களே!

ஒன்றிய அரசை மாற்ற முடிவு செய்வீர்!

இதைச் செய்யத் தவறிய ஆட்சியை மாற்றி, புதிய தோர் வரலாறு படைக்க, நாட்டு மக்கள் ஆயத்தமாகிட அரிய தருணம் நெருங்குகிறது.

மக்களே, விழிப்புடன் நடந்துகொள்வீர்!

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
10.10.2023


No comments:

Post a Comment