பிற இதழிலிருந்து... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 8, 2023

பிற இதழிலிருந்து...

இது கடவுளின் கோரிக்கை அல்ல; பக்தர்களின் வேண்டுதலும் அல்ல!

பிறகு ஏன் இந்த மோடியின் வித்தை?

சமீபத்தில் தெலங்கானாவில் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாட்டுக் கோவில்கள் அரசால் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாக மிகவும் வருத்தப்பட்டு பேசியிருக்கிறார். தமிழ்நாட்டில் நீண்ட நாட்களாகவே சங் பரிவாரக் கூட்டம் கோவில்களை அரசு தன் கட்டுப் பாட்டில் வைத்துக் கொண்டு பக்தர்கள் தரும் காணிக்கையை இதர பணிகளுக்கு திருப்பி விடுவ தாக கொஞ்சமும் நேர்மையின்றி ஒரு பிரச்சாரத்தை செய்து கொண்டே இருக்கிறது. கோவில் பணத்தை எடுத்து மசூதிகள் கட்டுவதாக, தொலைக்காட்சி விவாதங்களில் வலதுசாரிகள் என்ற பெயரிலும், விமர்சகர் என்ற பெயரிலும் பங்கேற்போர், கதை அளந்து கொண்டிருக்கிறார்கள். இது தவிர, கோவில் சொத்துக்களை பலர் அபகரித்து வைத்திருப்பதாகவும் அரசு அதற்கு துணை போவதாகவும் பேசித் திரிகிறார்கள். இந்த பிரச்சாரங்கள் எந்த அளவிற்கு உண்மை என்பதை ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்:

தமிழ்நாட்டில் மட்டும்தான் கோவில்கள் அரசு கட்டுப்பாட்டில் உள்ளனவா? 

மோடி அப்படித்தான் பேசியிருக்கிறார். ஆனால், இந்தியாவில் பல மாநிலங்களிலும் அரசுக் கட்டுப் பாட்டில்தான் கோவில்கள் உள்ளன. கேரளம், கருநாடகம், ஆந்திரா, தெலங்கானா, பீகார், ஒடிசா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கோவில்களை நிர் வகிப்பதற்காக தனியாக சட்டம் இயற்றப்பட்டு அமலில் இருந்து வருகிறது. இந்த மாநிலங்களில் எல்லாம் கோவில்கள் அரசின் கட்டுப்பாட்டில்தான் உள்ளன. இதில் புதுச்சேரியில் தற்போது பா.ஜ.க. கூட்டணி ஆட்சி தான் நடைபெற்றுக் கொண்டிருக்கி றது. கருநாடகத்தில் கடந்த அய்ந்து ஆண்டுகளும் அதற்கு முன்பு சில முறையும் பாஜக தான் ஆட்சி நடத்திக் கொண்டிருந்தது. ஆனால், அப்போதெல்லாம் இந்த சட்டங்களை திருத்தி கோவில்களை அரசுக் கட்டுப்பாட்டிலிருந்து விடுவித்து விடவில்லை. மகாராட்டிரா, உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதே சம், ராஜஸ்தான் உள்ளிட்ட சில மாநிலங்களில் இந்து சமய நிறுவனங்கள் மற்றும் கோவில்களின் நிர்வா கத்தை கண்காணித்திட பப்ளிக் டிரஸ்ட் ஆக்ட் (பொது  அறக்கட்டளைச் சட்டம்) ஏற்படுத்தப்பட்டு நடைமுறை யில் இருந்து வருகிறது. இதில் மகாராட்டிராவிலும், மத்தியப்பிரதேசத்திலும், உத்தரப்பிரதேசத்திலும் தற்போதும் பாஜக தான் ஆட்சிப் பொறுப்பில் இருக்கிறது. ராஜஸ்தானில் பல ஆண்டுகள் பாஜக ஆட்சிப் பொறுப்பில் இருந்தது. அந்த மாநிலங்களில் கோவில்களை அரசு கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்க வேண்டுமென்று ஒருபோதும் சங் பரிவார் குரல் எழுப்பியதே கிடையாது. குஜராத் மாநிலத்தில் உள்ள சோமநாதர் ஆலயத்தில் அறங்காவலர் குழு தலைவராக நரேந்திர மோடி, அறங்காவலர்களாக எல்.கே.அத்வானி, அமித்ஷா ஆகியோர் இப்போதும் இருந்து வருகிறார்கள். அங்கெல்லாம் கோவில்களை அரசின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிப்பது என்று அவர்கள் ஒருபோதும் பேசவில்லை. 

கோவில் பணம் வேறு காரியங்களுக்கு திருப்பி விடப்படுகிறதா?

அப்பட்டமான கோயபல்ஸ் பிரச்சாரம் இது. கோவில் வருமானத்தில் எந்தவொரு பணத்தையும் அரசு வேறொரு காரியத்திற்கு பயன்படுத்துவது இல்லை. பயன்படுத்த முடியாது என்பதுதான் சட்டம். பணியாளர் ஊதியத்திற்காக அதிகபட்சம் மொத்த வருவாயில் 16 சதவிகிதத்தை எடுத்துக் கொள்ளலாம். மற்றபடி உண்டியல், நன்கொடை, காணிக்கை, கட்டணம், இதர வருவாய் அனைத்தும் ‘அக்கவுண்ட் ஏ’ எனும் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. மாதந்தோறும் கோவில் பணிகளுக்கு தேவையான செலவுகளுக்காக இன்ன வகைக்கு இவ்வளவு என்று மொத்த செலவுகளுக்காக நிர்வாக அதிகாரியால் கோரப்படும் தொகை இந்த 'ஏ' கணக்கிலிருந்து 'பி' கணக்கிற்கு மாற்றப்படும். ஒவ்வொரு மாதமும் இந்த வகையில் தான் செலவுகளுக்காக அந்த பணம் எடுக்கப்படுகிறது. எனவே, கோவில் பணத்தை மடைமாற்றுவதாக சொல்வது அப்பட்டமான பொய். அதிலும் குறிப்பாக, அந்தப் பணத்தை எடுத்து மசூதிகளுக்கும், கிறித்துவ தேவாலயங்களுக்கும் வழங்குவ தாக சொல்வது கடைந்தெடுத்த அயோக்கியத் தனம். அப்படி ஒரு உதாரணத்தைக் கூட அவர்களால் காட்ட முடியாது. 

மக்களின் வரிப்பணம் கோவில்களுக்கு செலவிடப்படுகிறதா? 

ஆம். ஆண்டுதோறும் இந்து சமய அறநிலை யத்துறை மானியக் கோரிக்கையின் போது பல்வேறு  கோவில் பணிகளுக்காக பொது நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்வது வழக்கமாக இருக்கிறது. தற்போதைய தி.மு.க. அரசாங்கம் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு குறைந்தபட்சம் ரூ. 600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பல்வேறு திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி விபரம் பட்டியல் 1-இல் உள்ளது. 

கோவில் சொத்தை ஆக்கிரமிப்பவர்கள் யார்?

கோவில் சொத்துக்களை முறைகேடாக ஆக்கிர மிப்பவர்கள் பலர் இருக்கக் கூடும். இருக்கிறார்கள் என்பதும் உண்மை. ஆனால், பாஜகவினர் ஆன்மீகத்தில் நம்பிக்கையுள்ளவர்கள்; அவர்கள் கோவில் சொத்தை திருட மாட்டார்கள் என்பது போன்ற பிரச்சாரத்தையும், அதனால் அந்த சொத்துக் களை அவர்களைப் போன்ற ஆன்மீகவாதிகளிடம் கொடுக்க வேண்டுமென்றும் பேசித் திரிகிறார்கள். ஆனால், சிவன் சொத்து குல நாசம் என்று பேசிக் கொண்டே எல்லா கடவுள்களின் சொத்துக்களையும் திருடுகிற வேலையை பாஜகவின் நிர்வாகிகள் பலர் செய்து கொண்டிருக்கிறார்கள். அரசு ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது என்று சொல்வதே தாங்கள் ஆக்கிரமித்ததை அரசு வெளியேற்றி விட்டதே என்கிற ஆத்திரத்தில் இருந்து தான். சமீப காலமாக தி.மு.க. அரசாங்கம் வந்த பிறகு பல்வேறு நபர்களிடமிருந்து அவர்கள் ஆக்கிரமித்து வைத்திருந்த நிலங்கள் மற்றும் கட்டடங்களை நீதிமன்ற துணையோடும், நேரடியாகவும் மீட்டெடுத்திருக்கிறது. (பட்டியல் 2-இல் உள்ளது) பாஜக, விஸ்வ ஹிந்து பரிஷத், ஹிந்து மகா சபா, சேவா பாரதி உள்ளிட்ட சங்பரிவார் ஆக்கிரமித்து வைத்திருந்து மீட்கப்பட்ட நிலங்கள் இவை.

இன்னும் பல இடங்களில் சங்பரிவார் ஆக்கிரமித்து வைத்திருக்கும் நிலங்கள் ஏராளம். உதாரணமாக, கன்னியாகுமரி மாவட்டம், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கு சொந்தமான ஒரு இடத்தை "ஹைந்தவ சேவா சங்கம்" என்கிற அமைப்பு தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. தமிழ்நாடு முழுவ தும் இப்படி தேடினால் ஆக்கிரமித்த கோவில் சொத்துக் களை காப்பாற்றிக் கொள்வதற்காக சங்பரிவார் அமைப்புகளை சேர்ந்தவர்கள் பட்டியலும், சங்பரிவார் அமைப்புகளில் ஏதாவது ஒன்றில் இருந்துகொண்டு ஆன்மீகப் போர்வையில் கோவில் சொத்துக்களை கபளீகரம் செய்தவர்கள் பட்டியலும் மிக நீண்டதாக இருக்கும். (பட்டியல் 2) இதையெல்லாம் ஏப்பம் விடும் அளவிற்கு இன்னொன்றும் நிகழ்ந்தது. 2021ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலுக்காக ஒரு இடம் அந்த டிரஸ்ட்டால் ரூ.18.5 கோடிக்கு வாங்கப்படு கிறது. இதில் வேடிக்கை என்னவென்றால் அந்த நிலம் அதற்கு சில மணி நேரத்திற்கு முன்பு தான் ரூ.18.5 கோடிக்கு விற்ற நபரால் ரூ.2 கோடிக்கு வாங்கப்பட்டி ருந்தது. எனவே, சங்பரிவார் என்றால் தமிழ்நாடு முதல் உத்தரப்பிரதேசம் வரை ஒரே ரகம் தான்.  நரேந்திர மோடி முதல் வலதுசாரிகள், விமர்சகர் கள் எனப்படுபவர்கள் வரை இந்து சமய அறநிலை யத்துறை, அதன் நிதி பயன்பாடு, அதன் சொத்துக் களை ஆக்கிரமிப்பது உள்ளிட்ட பிரச்சினைகளில் முன்வைக்கும் வாதங்கள் அனைத்தும் அப்பட்டமான அவதூறு பிரச்சாரமும், தீய உள்நோக்கமும் கொண்ட குப்பைகளே தவிர வேறு எதுவும் இல்லை. 

தனிச்சட்டம் உருவானதன் காரணம் என்ன?

உண்மையில் கோவில்களை நிர்வகிப்பதற்கான சட்டம் ஆங்கிலேயர் காலத்தில் 1817இல் கொண்டு வரப்பட்டது. பலமுறை இது திருத்தப்பட்டு 1927ஆம் ஆண்டு இந்து சமய அறநிலைய வாரியம் ஏற் படுத்தப்பட்டது. இதற்கெல்லாம் காரணமாக இருந்தது அப்போது அதை நிர்வகித்து வந்தவர்களின் முறைகேடுகளே. இந்த புகார்களின் அடிப்படையில் 1950ஆம் ஆண்டு சட்ட ஆணையம் கோவில்களை பராமரிக்க தனிச் சட்டம் இயற்றலாம் என பரிந்துரை செய்திருக்கிறது. அதனடிப்படையில் தான் 1959ஆம் ஆண்டு தற்போது நடைமுறையில் உள்ள சட்டம் இயற்றப்பட்டது. இந்து சமய அறநிலையங்கள் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட சர்.சி.பி.  ராமசாமி அய்யர் ஆணையம் 1960ஆம் ஆண்டு தமிழ் நாட்டில் உள்ளதைப் போல இதர மாநிலங்களிலும் இந்து சமய அறநிலையங்களை நிர்வகிக்க தனிச்சட்டங்கள் இயற்றலாம் என பரிந்துரைத்துள்ளது.  எனவே, முறைகேடுகளால் தான் அரசு நிர்ணயிக்க வேண்டிய அவசியம் எழுந்தது. அரசின் கட்டுப் பாட்டைக் கைவிடு என்பது முறைகேடுகள் தங்கள் பிறப்புரிமை என்று நினைக்கும் கூட்டத்தின் கோரிக் கையே தவிர, கடவுளின் கோரிக்கையும் அல்ல, பக்தர்க ளின் வேண்டுதலும் அல்ல.

நன்றி: "தீக்கதிர்" 7.10.2023


No comments:

Post a Comment