புதுடில்லி, அக். 17- ஒன்றிய பா.ஜ.க. அரசு கடந்த 2018-ஆம் ஆண்டு தேர்தல் நன்கொடை பத்திரங்களை அறிமுகப்படுத்தியது. ஆயிரம், 10 ஆயிரம், ஒரு லட்சம், 10 லட்சம், ஒரு கோடி ரூபாய் போன்ற மதிப்புகளில் தேர்தல் பத்திரங்களை எஸ்.பி.அய். வங்கி விற்பனை செய்கிறது.
இதன் மூலம் தனி நபர், நிறுவனங்கள் என அனைவரும் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு நிதி அளிக்கலாம். ஒருவர் எத்தனை தேர்தல் பத்திரம் பெறலாம் போன்ற எந்த அளவு கட்டுப்பாடுகளும் இல்லை. மார்ச் 2018 மற்றும் 2022க்கு இடைப்பட்ட காலத்தில் தேர்தல் பத்திரங்கள் மூலம் பெறப்பட்ட நிதியில் பா.ஜ.க.விற்கு அதிக அளவில் நிதி சென்றது. 4 ஆண்டுகளில் மட்டும் பா.ஜ.க. சுமார் 5 ஆயிரத்து 270 கோடி ரூபாயை தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடையாக பெற்றது.
இதனிடையே, தேர்தல் பத்திரங்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன. தேர்தல் பத்திரங்கள் ஊழலுக்கே வழிவகுக்கும் என்று மனு தாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷன் வாதிட்டார். 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக தேர்தல் பத்திர வழக்கில் தீர்ப்பு வழங்க வேண்டும் என்றும் மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷன் கேட்டுக்கொண்டார். இந்நிலையில், தேர்தல் பத்திரங்கள் தொடர்பான வழக்கு விசாரணையை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசியல் சாசன அமர்வில் வருகிற 30ஆம் தேதி விசாரணை நடைபெறும் என்று தலைமை நீதிபதி அறிவித்துள்ளார்.
No comments:
Post a Comment