இன்ப வாழ்வுக்கு இதுவும் முக்கிய தேவை!
நாம் அனைவருமே மகிழ்ச்சியோடும், மன நிறைவோடும் வாழ வேண்டுமென விரும்பு கிறோம். அது தேவையான இலக்குதான்; எண்ணக் கூடாததோ, எதிர்பார்த்து திட்டமிட்டு வாழ்க்கைப் பாதையைச் செப்பனிடுவதோ தவறல்ல.
ஆனால், அப்படிப்பட்ட இன்ப வாழ்வு, நிம்மதியான வாழ்வைப் பெற நாம் எவற்றிற்கு முக்கியத்துவமும், முன்னுரிமையும் தருகிறோம் என்பதை சற்று ஆழ்ந்து தக்கதோர் சுயபரி சோதனையை மனதிற்குள் - சில கேள்விகளை எழுப்பி, விடைகளைத் தேடுவது அவசியம்!
நல்ல படிப்பு, நல்ல உத்தியோகம், கை நிறைய ஊதியம் - வசதியான வீடு, அன்பான துணைவி, பாசமுள்ள பிள்ளைகள் இவற்றுக் கெல்லாம் உரிய இடங்கள் நம் வாழ்க்கைத் திட்டத்தில்.
சரிதான்!
நேரிய வழியில், கடுமையான உழைப்பின் சீரிய விளைச்சலாக அவை அத்தனையும் கிடைத்தால் நம் குடும்பம் ஒரு நல்ல குடும்பம், மகிழ்ச்சி ஊற்றெடுக்கும் குடும்பமாக அமைந் தால் அதுவே புரட்சிக் கவிஞர் அவர்கள் பாடியதுபோல், "நல்ல குடும்பம் ஒரு சிறந்த பல்கலைக் கழகம்" என்ற பெருமையும் அதற்குச் சேரும்.
இவை எல்லாவற்றையும்விட ஓர் எளிய, ஆனால் முற்றிலும் முதன்மையான கவனம்
"நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்" என்ற அறிவுரையினை எவரே புறந்தள்ளிவிட்டு வாழ்வில் பொலிவினை, வலுவினைத் தேட முடியும்?
பணம், பதவி, செல்வாக்கு எல்லாவற்றையும் தாண்டி, முக்கியத்துவம் பெறுவது நமது உடல்நலம் தானே!
செயல்பட - உழைக்கும், அன்றாட பணி களில் கலகலப்புடன், சுறுசுறுப்புடன் ஈடுபட - உடல் நலம் எப்போதும் சரியானதாக, மனக் கவலை அற்றதாக அமைதல் அவசியமன்றோ?
அதற்கு மேற்சொன்ன வசதிகள், நல்ல பழக்க வழக்கங்கள், உடற்பயிற்சிகள் மற்றும் பக்குவ மடைந்த மனதினையும் பெற வேண்டுமல்லவா?
அதற்கு முக்கியத் தேவையான ஒன்று - எப்படி நல்லபடி வாழ -
நல்ல குடும்பம் -
போதிய ஊதியம் - பண வருவாய்
எல்லாம் முக்கியமோ, அதேபோலவே முக்கியமான சிறந்த உண்மையான - பாசமுள்ள நண்பர்களையும் அமைத்துக் கொள்ளல் வேண்டும்.
நாம் மதிக்கும் அந்த உண்மை நட்புறவுடன் கூட அந்த நண்பர்கள் நமக்கு உயிரினும் மேலானவர்கள், கிடைத்தற்கரிய, இழக்கக் கூடாத இணையற்ற செல்வங்கள் ஆகும்!
நம்மிடம் வந்து நட்புக் காட்டி பேசுகிறவர்கள் அத்தனை பேரும் மேலே காட்டிய நண்பர்கள் (இலக்கண) வட்டத்தில் எளிதில் நுழைந்துவிட முடியாது; நுழைந்து விடவும் கூடாது!
நம்மிடம் குறையாத அன்பு, வற்றாத பாசம் - இவற்றை மட்டுமே காட்டும் - எதையும் எதிர் பார்த்து கணக்குப் போட்டு பழகாதவர்களும், 'அகநக' நட்புடையவர்களும், உயர் உண்மை நட்புறவுகளும் நமது ஆயுள் நீளுவதற்கு, மிக மிகத் தேவையானவர்கள் ஆவர்.
எண்ணிக்கை குறைவாக இருப்பினும் அதைப்பற்றிக் கவலைப்படாமல், 'பயில்தொறும் பண்புடையாளர்களாக' அந்த நட்புறவுத் தோழர்கள் - எப்பாலினரானாலும் (கைம்மாறு வேண்டா கடப்பாட்டுடன் பழகினால்), அவர் களது வாழ்வும், நம்முடைய வாழ்வும் என்பதைத் தாண்டி என்றும் மகிழ்ச்சியில் ஆளும்; இன்ப ஊற்றாகி நம்மை மகிழ்ச்சியின் உச்சத்திற்கு அழைத்துச் செல்லும் என்பது உறுதி.
கணக்கு பார்க்காத போடாத கண்ணியர்களே நமக்குத் தேவை - அதுவே உண்மை நட்புறவு!
நட்புறவில் லாப, நஷ்ட 'கணக்குப் பிள்ளை களை' ஒதுக்கி வையுங்கள்.
No comments:
Post a Comment