தமிழர் தலைவர் ஆசிரியர், டி.கே.எஸ்.இளங்கோவன் நினைவுரை
சென்னை, அக். 2- திராவிட இயக்கக் கொள்கை வீரர் ஏ.வி.பி.ஆசைத்தம்பி அவர்களின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சி சென்னை பெரியார் திடலில் நேற்று (1.10.2023) மாலை நடைபெற்றது.
திராவிடர் இயக்கக் கொள்கை வீரர் ஏ.வி.பி.ஆசைத்தம்பி நூற்றாண்டு விழா சென்னை பெரியார் திடலில் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் நேற்று (1.10.2023) மாலை திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்றது.
திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையேற்று ஏ.வி.பி.ஆசைத்தம்பி யின் படத்தைத் திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார்.
ஏ.வி.பி.ஆசைத்தம்பிக்கு திராவிடர் கழகம் நூற்றாண்டு விழாவை உறவோடும், உரிமையோடும் கொண்டாடுகிறது.
ஏ.வி.பி. ஆசைத்தம்பியின் தந்தை பழனியப்பன் இயக்கத் தில் செயல்பட்டுவந்தவர். இயக்க மாநாடுகளில் தந்தை பெரியார் புரட்சி செய்தார். விருதுநகர் உறவின்முறையினர் தான் சமையல் செய்ய வேண்டும் என்று மாநாடுகளில் சமையல் பொறுப்பை தந்தைபெரியார் பழனியப்பனிடம் ஒப்படைத்தார். அந்த வகையில் ஏ.வி.பி.ஆசைத்தம்பி கொள்கைவழி பாரம்பர்யம் உள்ளவர்.
வாலிபப் பெரியார் என்று அழைக்கப்பட்டவர்
திராவிட நாடு இதழில் 8.8.1943இல் நீதிக்கட்சி குறித்து ஏ.வி.பி.ஆசைத்தம்பி எழுதியதன் தொடர்ச்சியாக தந்தை பெரியார் 1944இல் "அண்ணா தீர்மானம்" என்பதைக் கொண்டு வந்தார். நீதிக்கட்சி திராவிடர் கழகம் ஆனது.தலைமுறை இடைவெளியின்றி சிந்திக்கின்ற இயக்கம் இது.தொண்டர் களின் கருத்தும் தலைவரின் கருத்தும் கொள்கையால் ஒன்றாக இருக்கின்ற இயக்கம். தந்தைபெரியாரைப்போல் நிறுததி நிதானமாக ஆசைத்தம்பி பேசுவார் அதனாலேயே அவர் வாலிபப்பெரியார் என்று அழைக்கப்பட்டார்.
அரண்மனை நாயே, அடக்கடா வாயை என்று சர்வாதி காரி படத்தில் வசனம் எழுதியிருந்தார். அது இன்றைக்கும் பொருந் தக்கூடியது.
‘காந்தியார் சாந்தி அடைய’ என்கிற புத்தகத்தை எழுதிய தால் ஆசைத்தம்பிக்கும், அந்நூலைப்பித்தவர்கள்மீதும் வழக்கு தொடரப்பட்டு, அபராதம், தண்டனை அளிக்கப் பட்டது. காந்தியாரை கோட்சே என்ற பார்ப்பான் கொன்றான், காந்தியாரை மத வெறி கொன்றது. ஸநாதனம் கொன்றது என்று எழுதியதால், நிர்வாணப்படுத்தப்பட்டு அவமரியாதை செய்யப்பட்டார். மொட்டையடிக்கப்பட்டார். ஆறு மாத சிறைத்தண்டனை பெற்றார். சிறை என்ன செய்யும் என்று கேள்வி எழுப்பி சிரைக்கச்செய்யும் என்று கலைஞர் அப் போது எழுதினார்.
ஆசைத்தம்பிமீதான வழக்கு குறித்து விருதுநகரில் கலந்துரையாடல் கூட்டம் நடத்தப்பட்டு, அய்ந்துபேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. வழக்கு நிதியாக அறிஞர் அண்ணா ரூ.50 கொடுத்தனுப்பினார். ஏ.வி.பி.ஆசைத்தம்பி சிறையில் இருக்கும்போது, தடைசெய்யப்பட்ட புத்தகங்கள் அச்சிடப்பட்டு பரப்பப்பட்டன.
மிசா நெருக்கடி காலத்தில் சிறையில் எங்கள் அறையில் கூட்டாக சாப்பிடுவோம். எங்கள் அறைக்கு செய்தி இதழ்கள் வரும். அப்போது என்னிடம், என்ன சார் ஆசிரியர் என்ன செய்தி என்று கேட்பார். தோழர் குணசீலன் ஏ.வி.பி. ஆசைத்தம்பியிடம் நீங்களே படித்துத் தெரிந்து கொள்ள வேண்டியதுதானே, ஆசிரியரிடம் கேட்டுக்கொண்டிருக்கிறீர் களே என்றதும், ஆசிரியர்தான் நமக்காக படித்துவிடுகிறாரே, நாம் தனியே படிக்க வேண்டியதில்லை என்பார்.
அந்தமானில் திடீரென மாரடைப்பால் மறைவுற்றார். அப்போது குடியரசுத் தலைவரிடம் தொலைப்பேசியில் கலைஞர் பேசி அவர் உடல் தமிழ்நாட்டுக்கு வந்தது என்பது உள்ளிட்ட பல்வேறு வரலாற்றுத் தகவல்களை, ஏ.வி.பி.ஆசைத் தம்பியின் கொள்கை உறுதிப்பாடுகளை எடுத்துக்காட்டி சிறப்புரை ஆற்றினார் தமிழர் தலைவர்.
நிகழ்வில் கழகத்தின் பொருளாளர் வீ.குமரேசன் வருகைத் தந்த அனைவரையும் வரவேற்று வரவேற்புரை ஆற்றினார்.
அவரது உரையில்: இயக்கத்தின் வேர்களை நினைவு கூர்ந்து விழுதுகள் செயல்பட வேண்டும் என்று ஆசிரியர் அடிக்கடி சொல்வது போல் கொள்கை வீரர் ஏ.வி.பி. ஆசைத் தம்பி அவர்களை நினைவுகூர்ந்து நூற்றாண்டு நிகழ்வு நடைபெறுவதாக கூறினார். மேலும் நூற்றாண்டு நாயகரைப் பற்றி விளக்கும்போது 1951- ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி திராவிட முன்னேற்ற கழகத்தைப் பார்த்து தேர்தலில் நிற்குமா என்று கேட்டபோது, தேர்தலில் நின்றது மட்டுமல்ல, வென்றும் காட்டியவர் ஏ.வி.பி.ஆசைத்தம்பி என்றார். திராவிட முன் னேற்ற கழகம் தனது கொள்கையைப் பரப்ப கலைத்துறை யையும் வெகுவாக பயன்படுத்தியது என்றும் அதன் மூலம் நாடகத் துறையிலும் திரைத்துறையிலும் திரைக்கதை எழுது வதன் மூலமாகவும் எவ்வாறெல்லாம் கொள்கையைப் பரப் பினார்கள் என்பதை விவரித்து, அதிலும் குறிப்பாக "சர்வாதி காரி" என்ற படத்திற்கு ஏ.வி.பி.ஆசைத்தம்பி அவர்கள் திரைக்கதை அமைத்து உரையாடலின் மூலமாக கொள் கையைப் பரப்பிய விதத்தினை சான்றுகளுடன் எடுத்து ரைத்தார். இன்றைய அரசியல் சூழலிலும் அவர் எழுதிய வசனங்கள் பயன்படுகிறது என்றார்.
தாய்க்கழகத்தின் சார்பில் இந்த நிகழ்ச்சியை நடத்துகிறோம் என்றால் அது கொண்டாட்டத்திற்காக அல்ல; என்ன கொள்கைக்காக அவர்கள் எல்லாம் வாழ்ந்தார்களோ அதை இன்றைய இளைய தலைமுறைக்கு கொண்டு சேர்ப்பதற்காக வும், அவர்களின் வழியில் நடப்பதற்காகவும் என்பதை எடுத் துரைத்து வருகை தந்த அனைவரையும் வரவேற்றார்.
படத்திறப்பு!
திராவிட இயக்கக் கொள்கை வீரர் ஏ.வி.பி.ஆசைத்தம்பி அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் அவரது படத்தினை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் திறந்து வைத்தார்.
தமிழர் தலைவர் அவர்களால் சிறப்பிக்கப்பட்டோர்!
பெரியார் பெருந்தொண்டர் திராவிடர் கழக விருதுநகர் மாவட்ட காப்பாளர் தங்கசாமி, ஏ.வி.பி.ஆசைத்தம்பி அவர்களின் தங்கை மகன்கள் வெ மோகன், வெ. ஜெய்சிங் ஆகியோருக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களால் சிறப்பு செய்யப்பட்டது.
இராவண லீலாவில் பங்கேற்ற ஏ.வி.பி.ஆசைத்தம்பி
கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் அறிமுக உரை நிகழ்த்தினார். அவரது உரையில்:
திராவிட இயக்கக் கொள்கை வீரராக இருந்த ஆசைத் தம்பி அவர்கள் 55 ஆண்டுகள் தான் வாழ்ந்தார் என்றும் இன்னும் நீண்ட காலம் வாழ்ந்து இயக்கத்திற்கு தொண்டாற்ற வேண்டியவர்கள் பலரை இப்படி நாம் இழந்திருக்கிறோம் என்றார்.
குறிப்பாக அஞ்சா நெஞ்சன் அழகிரி, சர்.ஏட்டி. பன்னீர் செல்வம், மணியம்மையார், அறிஞர் அண்ணா போன்றவர் களை எல்லாம் மிக இளமை வயதிலேயே நாம் இழந்ததை குறிப்பிட்டார். ஏ.வி.பி.ஆசைத் தம்பி அவர்களின் இறப்பு என்பது தனிப்பட்ட குடும்பத்திற்கான இழப்போ இயக்கத்திற் கான இழப்போ அல்ல; ஒரு சமூகத்திற்கான இழப்பு என்றார்.
பெரியார் மறைந்து ஓராண்டில் மணியம்மையார் அவர் கள் சென்னை பெரியார் திடலில் இராவண லீலா நடத்திய தையும், அப்போது ஆட்சியில் இருந்த கலைஞர் அவர்கள் காங்கிரஸோடு கூட்டணியில் இருந்த போதும் இராவண லீலா நடக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும், ஒரு நெருக் கடியான சூழலில் இருந்தார் என்பதை விவரித்தார்.
அந்த நிலையில், திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து இராவண லீலாவில் பங்கேற்றவர்கள் இருவர் மட்டுமே ஒருவர் ஏ.வி.பி ஆசைத்தம்பி அவர்கள், மற்றொருவர் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த ராஜகோபால் அவர்கள் என்றார். அந்த நிகழ்வில் ஏ.வி.பி.ஆசைத்தம்பி அவர்கள் பேசிய உரை என்பது அவர் கொள்கை வீரர் என் பதை நமக்கு உணர்த்தும் என்பதை சான்றோடு விளக்கினார். இதைப் போன்று செய்தால் மக்கள் நமக்கு ஓட்டு போட மாட்டார்கள் என்று நினைக்கிறார்கள். ஆனால் இதை போன்ற காரியங்களை செய்தால் தான் மக்கள் நம்மை நம்பி ஓட்டு போடுவார்கள் என்றார்.
சிறையில் மொட்டையடிக்கப்பட்டது:
மேலும், அவர் தந்தை பெரியார் தலைமையில் திருமணம் செய்து கொண்டவர். தன்னுடைய மகனுக்கு நீதிக்கட்சி தலைவர்களில் ஒருவரான சௌந்திரப்பாண்டியன் அவர்கள் நினைவாக பெயர் வைத்தது,
திராவிடர் கழக மாநாடுகளில் அவர் ஆற்றிய உரை, திராவிடர் கழகத்தில் பல்வேறு பொறுப்புகள் அவர் வகித்தது என்று அவரது கொள்கை சிறப்பினை விவரித்தார். பேச்சு மட்டுமன்றி, எழுதுவதிலும் ஏ.வி.பி.ஆசைத்தம்பி அவர்கள் எவ்வளவு வலுவாக இருந்தார் என்பதற்கு சான்றாக அவர் எழுதிய நூல்களை பட்டியலிட்டார்.
குறிப்பாக காந்தியார் சாந்தியடைய, ஆண்களை நம்பலாமா?, வாழ்க்கை வாழ்வதற்கே, தனியரசு ஏன்? என்று நூல்களின் பெயர்கள் வருகை தந்த அனைவருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது. இந்த நூல்களை எல்லாம் மீண்டும் பதிப்பிக்க வேண்டும் என்ற வேண்டுகோளையும் பதிவு செய்தார்.
காந்தியார் சாந்தியடைய என்ற புத்தகத்திற்காக வழக்கு தொடுக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்ட ஏ.வி.பி.ஆசைத் தம்பி அவர்கள் எத்தனை கொடுமைகளை அனுபவித்தார் என்பதை விவரித்தார். நிர்வாணப்படுத்தப்பட்டு, சிறிது காலம் கழித்து கோவணம் கொடுத்தனர், ஆறு மாதம் கடுமையான தண்டனையோடு 500 ரூபாய் அபராதம் பெற்றவர். அவருக்கு அங்கே மொட்டை அடிக்கப்பட்டது. இப்படியாக பல்வேறு இழப்புகளை, தியாகங்களை செய்து இந்த இயக்கத்தை வளர்த்தனர் என்றார்.
1957-ஆம் ஆண்டு ஆயிரம் விளக்கு தொகுதியில் நின்று வெற்றி பெற்று அவர் சட்டமன்றம் சென்றதையும், மீண்டும் 1967-ஆம் ஆண்டு எழும்பூர் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்றதையும், நெருக்கடி நிலைக்கு பிறகு நடந்த நாடாளு மன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகத்தில் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினரான ஒருவர் ஏ.வி.பி.ஆசைத் தம்பி அவர்கள் மட்டுமே என்பதையும் பதிவு செய்தார்.
மிசா காலகட்டத்தில் ஆசிரியருடன் ஓராண்டு ஆசைத் தம்பி அவர்கள் சிறையில் இருந்ததை நினைவுபடுத்தி, இந்த வரலாறு எல்லாம் எதிர்கால இளைஞர்களுக்கு சென்றடைய வேண்டும்; இவர்களின் கொள்கை அனைவரையும் சென்றடைய வேண்டும் என்றார். நிறைவாக ஏ.வி.பி.ஆசைத் தம்பி அவர்களின் குடும்பத்தினர் பெரியார் திடலுடன் இனி வரும் காலங்களில் நெருக்கமான தொடர்பினை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற அன்பு வேண்டுகோளை விடுத்து நிறைவு செய்தார்.
மிகுந்த கொள்கை உறுதியோடும், கொள்கை பற்றுதலோடும் இருந்தவர் என் தந்தை!
நிகழ்வில் ஏ.வி.பி.ஆசைத்தம்பி அவர்களின் மைந்தர் ஏ.வி.பி. சவுந்தரபாண்டியன் அவர்கள் உரையாற்றினார். அவ ரது உரையில்: தனது தந்தை மிகுந்த கொள்கை உறுதியோடும், கொள்கை மீது அதிக பற்றுதலோடும் இருந்தார் என்றார்.
அரசியலில் நுழைவதற்கு முன் அவர் இருந்த இடம் திரா விடர் கழகம் என்றும், பெரியாரின் தனித்துவமான கொள்கை மீது பற்றுக் கொண்டு அவர் செயல்பட்டார் என்றார்.
தங்களது இல்லத்தின் எல்லா நிகழ்ச்சிகளிலும் முடிந்த அளவுக்கு தந்தை பெரியார் பங்கேற்று இருக்கிறார் என்றார். குறிப்பாக , அவர்கள் தந்தையின் திருமணம், சகோதரியின் திருமணத்தில் அய்யா பங்கேற்றதை எடுத்துக் கூறி, தனது அண்ணனின் திருமணத்திற்கு பெரியார் வர முடியாத சூழல் அமைந்ததால் அவரது வீட்டிற்கே அழைத்து அவர்களை வாழ்த்தியதை பதிவு செய்தார். தங்களோடு அவர் செலவிட்ட நேரத்தை விட அரசியலில் அவர் செலவழித்த நேரம் தான் அதிகம் என்றும், எங்களோடு எங்களது தந்தை இல்லை என்று வருத்தப்படுகிறோம்; ஆனால் அவரைப் பற்றி அனைவரும் பேசும்போது அவர் செய்த காரியங்கள் அனைத்தும் எங்களுக்கு பெருமையைத் தருகிறது என்றார்.
தமிழர் தலைவர் ஆசிரியருக்கு நன்றி:
பெரியாருக்கு பிறகு இந்த இயக்கத்தை வழிநடத்தும் ஆசிரியர் அவர்கள் தமிழ்- தமிழர்- தமிழ்நாடு ஆகியவற்றிற்கு எந்த பிரச்சனை வந்தாலும் அதற்கு முதல் குரல் கொடுப்ப வராக, நம்மை பாதுகாத்து துணை நிற்பவராக ஆசிரியர் இருக் கிறார் என்றார். தமிழருக்கு பிரச்சினை வரும் போதெல்லாம் முதலில் ஆசிரியர் வந்து நிற்பார்; நின்றிருக்கிறார் என்றார். அந்த வகையில் தங்களது தந்தைக்கும் நூற்றாண்டு விழாவை முதலில் அவர்தான் எடுத்திருக்கிறார் அதற்கு அனைவரின் சார்பிலும் நன்றி தெரிவித்து நிறைவு செய்தார்.
ஏ.வி.பி.ஆசைத்தம்பி அவர்களின் எழுத்துகளை தொகுக்கும் பணி:
ஏ.வி.பி.ஆசைத்தம்பி அவர்களின் எழுத்துக்களை தொகுக்கும் பணியை மேற்கொண்டுள்ள அண்ணல் தங்கோ அவர்களின் பெயரன் அருள்செல்வன் அவர்கள் இந்த இயக்கத்தை பற்றியும், இந்த இயக்கத்திற்கு எதிராக இன எதிரிகள் பேசுகின்ற போது அவர்களை எதிர்த்து நிற்க வேண்டிய அவசியம் குறித்தும், அதற்கு நம்முடைய தலைவர்களின் எழுத்துக்கள் எவ்வளவு அதி முக்கியத்துவம் வாய்ந்தவை என்பன போன்ற செய்திகளை பதிவு செய்தார்.
திராவிட இயக்கம் என்பது அறிவு இயக்கம்!
திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநில செய்தி தொடர்பு குழுத்தலைவரும் மேனாள் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.கே.எஸ்.இளங்கோவன் உரையாற்றினார்.
அவரது உரையில்: திராவிட இயக்கம் என்பது ஒரு மாபெரும் இயக்கமென்றும், தனி மனிதருடைய சுயமரியாதை யைப் பாதுகாப்பதற்காக காங்கிரஸிலிருந்து பெரியார் வெளி யேறியதையும், தமிழர்களின் சுயமரியாதையை காக்கும் போராட்டத்திற்காக பெரியார் சுயமரியாதை இயக்கத்தை தோற்றுவித்து, அதனுடைய தொடர்ச்சியாக திராவிடர் கழகம் உருப்பெற்றதை விவரித்தார். இன்றைக்கும் இந்த இயக்கத்தி னுடைய நோக்கம் என்பது தனி மனிதர்களின் சுயமரியா தையை பாதுகாப்பது தான் என்றார்.
ஏ.வி.பி.ஆசை தம்பி அவர்கள் தனது மகனுக்கு சவுந்தர பாண்டியன் என்ற பெயர் வைத்தது அவரது கொள்கை உணர்வினை காட்டுகிறது என்றார். காரணம் நீதிக்கட்சியின் முன்னவர்களில் ஒருவராக இருந்து தாழ்த்தப்பட்டோரை பேருந்துகளில் ஏற்றாத பேருந்துகளின் உரிமம் ரத்து செய் யப்படும் என்ற ஆணையை பிறப்பித்து, தாழ்த்தப்பட்டோரின் சுயமரியாதைக்காக, விடுதலைக்காக போராடிய சவுந்தரபாண் டியன் அவர்களின் பெயரை வைத்திருப்பதை சுட்டிக்காட் டினார்.
மேலும் திராவிடர் இயக்க வீரர்களான நாவலர் அவர் களுக்கு நூற்றாண்டு விழாவை கண்டிருக்கிறோம், பேராசிரி யர் அன்பழகன் அவர்களின் நூற்றாண்டு விழா, டி.கே.சீனிவாசன் அவர்களுக்கு நூற்றாண்டு, இந்த ஆண்டு கலைஞர் நூற்றாண்டு, ஏ.வி.பி.ஆசைத்தம்பி ஆகியோரின் நூற்றாண்டு விழாவை கொண்டாடுகிறோம் இவர்கள் அனைவரும் 1939இல் தந்தை பெரியார் அவர்கள் நீதிக்கட்சி தலைவராக பொறுப்பு வகித்த போது 18,19 வயது இளைஞர்களாக பெரியாரோடு வந்தவர்கள்; பெரியாரின் கொள்கையை ஏற்றுக்கொண்டவர்கள்; பெரிய படிப்பு படித்தவர்கள் அல்ல; ஆனால், ஏராளமான உலக வரலாற்றை, உண்மை வரலாற்றை, இலக்கியங்களை, அனைத்தையும் தெரிந்து கொண்டு ஊர்தோறும் மக்களை சந்தித்து, தங்களது பேச்சு, எழுத்து, திரைக்கதை மூலம் அவர்களிடம் கொள் கையை கொண்டு சென்றார்கள். அதனால்தான் திராவிட இயக்கம் என்பது அறிவு இயக்கம் என்று சொல்லப்படுகிறது என்றார்.
ஏ.வி.பி.ஆசைத்தம்பி அவர்களின் நினைவை போற்றுவோம் ; அவரின் வழி நடப்போம் !
மேலும், நம் மீது திணிக்கப்பட்ட அவமானம் அனைத்தும் வடமொழின் மூலமாக திணிக்கப்பட்டது என்பதற்கு பல்வேறு சான்றுகளை எடுத்துரைத்தார். மனுதர்மம் என்பது நமக்குத் தேவையில்லாதது; தொடர்பற்றது என்றும், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வள்ளுவம் தான் நமக்கானது என்றார். இதனை எல்லாம் நாடாளுமன்றத்தில் பதிவு செய்தவராக ஏ.வி.பி.ஆசைத்தம்பி அவர்கள் இருந்தார் என்றும், இன்று இந்த ஆளுநர் இருக்கும்போது ஆசைத்தம்பி அவர்கள் இல்லையே என்று நான் வருந்துகிறேன் என்றார்.
பெரியாரின் போராட்டங்களில் தளகர்த்தராக இருந்த அவர்களது கொள்கையை எல்லாம் நாமும் வாசித்து, அடிப்படைக் கொள்கையை புரிந்து கொள்ள வேண்டும் என்றும், நம்மை எதிர்த்து நிற்பவர்களை எதிர்த்து பேசுவதற்கு துணிவு வேண்டும் என்றார். அதற்கான சான்று தான் சிறைக்கு சென்று வெளியே வந்த உடனேயே சிறைக்கு சென்றோம் என்ற அச்சமின்றி, மீண்டும் ஏராளமான புத்தகங்களை எழுதி, ஆசைத்தம்பி அவர்கள் வெளியிட்டதை நினைவுக்கூர்ந்தார்.
நெருக்கடி நிலையிலும் பல தடைகளை தாண்டி அதற்குப் பிறகும் வேகமாக செயல்பட்டவர்கள் தான் திராவிட இயக்க கொள்கைகள் வீரர்கள் என்றார். அவர்கள் என்னவெல்லாம் பேசினார்களோ, நினைத்தார்களோ அதை செயல்படுத்தும் ஆட்சி எப்போது தமிழ்நாட்டில் நடக்கிறது என்றார்.
கல்வி மறுக்கப்பட்ட, வேலை மறுக்கப்பட்ட சமூகத்திற்கு கல்வி , வேலை வாய்ப்பு பெற்று தந்தது திராவிட இயக்கம்; ஆனால் இன்று அதனை ஒழித்துக் கட்ட ஒன்றிய அரசு கொண்டு வரக்கூடிய "விஸ்வகர்மா யோஜனா" பற்றி எடுத் துரைத்தார். ஏ.வி.பி.ஆசைத்தம்பி அவர்களின் நினைவை போற்றுவோம் ; அவரின் வழி நடப்போம் என்று கூறி நிறைவு செய்தார். நிகழ்வின் தலைமை உரையை நிறைவுரையை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் ஆற்றினார்.
ஏ.வி.பி.ஆசைத்தம்பி அவர்களின் குடும்பத்தாரிடம் தொடர்பு கொண்டு இந்த நிகழ்வு நடப்பதற்கு பல வகையில் காரணமாக அமைந்த திராவிடர் கழகத்தின் தலைமை கழக அமைப்பாளர் இல.திருப்பதி அவர்கள் வருகை தந்த அனைவருக்கும், குறிப்பாக இந்த நூற்றாண்டு விழாவினை தாய் கழகத்தின் சார்பில் கொண்டாடுவதற்கு வழிவகை செய்த தமிழர் தலைவர் அவர்களுக்கும் நன்றியினை பதிவு செய்தார்.
தி.மு.க. செய்தி தொடர்புக்குழுத் தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன் அவர்களுககு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார்.
விருது நகர் மாவட்ட திராவிடர் கழகத்தின் தலைமைக் கழக அமைப்பாளர் இல.திருப்பதி நன்றி கூறினார்.
விழாவில் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், துணைப் பொதுச்செயலாளர்கள் பொறியாளர் ச.இன்பக்கனி, வழக் குரைஞர் சே.மெ.மதிவதனி, பெரியார் நூலக வாசகர் வட்டத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, புலவர் பா.வீர மணி, வழக்குரைஞர் சு.குமாரதேவன், தலைமைக்கழக அமைப்பாளர் தே.செ.கோபால், தாம்பரம் ப.முத்தையன், பகுத்தறிவாளர் கழக பொதுச்செயலாளர் ஆ.வெங்கடேசன், சி.வெற்றிசெல்வி, கொடுங்கையூர் தங்க.தனலட்சுமி, தங்க மணி, பூவை செல்வி, பெரியார் மாணாக்கன், தொண்டறம், தென்சென்னை, வடசென்னை, ஆவடி, தாம்பரம், சோழிங்கநல்லூர், திருவொற்றியூர் கழக மாவட்டங்களின் பொறுப்பாளர்கள் பலரும் விழாவில் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment