சென்னை, அக். 21- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் போலி ஒளிப்படத்தை வெளியிட்ட பாஜக நிர்வாகியின் பிணை மனுவை தள்ளு படி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாரதிய ஜனதா கட்சியின் கோவை தெற்கு மாவட்ட தொழில்நுட்ப பிரிவு மாவட்ட தலைவர் செல்வக்குமார். இவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சமூக வலைதளங்களில் அவதூறாக விமர்சித்து, போலியான ஒளிப்படங்களையும் பதிவிட்டிருந்தார். இதுகுறித்து, பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் தி.மு.க. பிரமுகர் ஆறுமுகசாமி என்பவர் புகார் அளித்திருந்தார்.
இதன்பேரில், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், சமூக வலைதளங்களை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் செல்வக்குமார் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறை, அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பிணை கோரி அவர் தாக்கல் செய்த மனுவை கோவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில், பிணை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு குற்றவியல் வழக்குரைஞர் கிஷோர்குமார் ஆஜராகி, அரசமைப்பு சட்டத்தில் பேச்ச்சுரிமை மற்றும் கருத்துரிமை கொடுக்கப் பட்டாலும், அவை வரம்புக்குள் இருக்க வேண்டும்.
ஆனால் மனுதாரர் வரம்பை மீறி செயல்பட்டுள்ளார். அவருக்கு பிணை வழங்கினால் பலரும் இதேபோன்ற செயல்களில் ஈடுபடுவார்கள். எனவே, பிணை வழங்கக் கூடாது என ஆட்சேபம் தெரிவித்தார். இதைப் பதிவு செய்த நீதிபதி, பாஜக நிர்வாகி செல்வக்குமாரின் பிணை மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment