"உண்மை நண்பர்களை கண்டறிவது எப்படி?"
"அய்யா, வாழ்வியல் எழுதுகையில் உண்மை நண்பர்களை, நட் புறவுகளை வரவுகளாக்குங்கள் என்று கூறுகிறீர்கள்; சரிதான், அவர்களை நாங்கள் எப்படி, எங்கே கண்டுபிடிப்பது? அதற்கும் ஒரு வழி சொன்னால் பயனுள்ளதாக இருக்குமே!" என்று கேட்கிறார், வாழ்வியல் வாசகர் அன்பர்!
பழம் வாங்கும்போது பலமுறை பார்த்து, தொட்டு, சரியானதா அழுகியதா? பிஞ்சில் பழுத்ததா? புகை போட்டு பழுக்க வைத்ததா? என்றெல்லாம் பல மணித் துளிகள் பார்த்துப் பார்த்து தேர்வு செய்கிறீர்களே - சில மணி நேரத்தில் செரிமானப் பொருளுக்கே இத்துணை ஆராய்வுகள் என்றால், காலமெல்லாம் நமக்குத் துணையாக, அன்பின் ஊற்றாக, பண்பின் பாடமாக உள்ள உண்மை நண்பரை போதிய ஆய்வுக்குப் பின், கண்டறிந்து, பிறகு முழுப் புரிதலுக்குப் பின்தானே "பற்றிக்" கொள்ள வேண்டும்?
வள்ளுவர் நமக்கெல்லாம் வழிகாட்டி, நமது ஆய்வுப் பணிச் சுமையை அவர் எடுத்துக் கொள்கிறாரே! என்னே கைம்மாறு கருதாத உதவி!!
'நட்பு' என்ற தலைப்பில் உள்ள பத்து குறள்களையும் முழுவதாக உள்வாங்கி மனதில் இறுத்திப் படித்துப் பிடித்துக் கொண்டால் உறுபயன் உடனே உங்களுக்குக் கிடைக்கும் என்பது உறுதி!
(1) நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் - 784)
நட்பு என்பது அரட்டைக்கோ, முகநூல் துதிக்கோ, கேளிக்கைக்கோ என்பதில்லை, நாம் பிழை செய்யும்போது - பாதை விட்டு விலகிச் செல்லும்போது- நமக்கு அதைச் சுட்டி இடித்துரைத்து, திருத்திட முன்வரும் நட்பே உண்மை நட்பு!
முன்னே அது கசப்பாக வந்தாலும்
பின்னே அது இனிக்கும்
பிறகு நம்மை பள்ளத்தில் விழாமல் தடுத்தாட் கொள்ளவும் சிறப்பாகப் பயன்படும்.
(2) அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண்
அல்லல் உழப்பதாம் நட்பு. (குறள் - 787)
தீமைகளை நீக்கி, நல்வழிப்படுத்தித் துன்பத்தில் தொடர்பு கொள்வதே நட்பு என்பதே இதன் பொருள்.
வலிவுற்று வளமாக வாழும் காலத்து ஏராளமானோர் நட்பு வட்டத்தை நிரப்ப ஓடோடி வருவர்; அவர்களைத் தேர்வு செய்யாமல் ஆர, அமர யோசித்து, காத்திருந்து கடமையாற்றிட அவர் என்றும் நம்மோடு இருப்பாரா என்று தேர்ந்து தெளிவடைவதில் எளிய முறை, நமக்குத் துன்பம் நேரும் போதும் நம்முடன் இருந்து துன்பத்தில், அதனால் ஏற்படும் துயரத்தில் - ஏன் தோல்விகள் ஏற்படும் நிலையில்கூட நம்மைவிட்டு அகலாத நிழலாக இருப்பவர்களே நல்ல உண்மை நட்புறவாளர்கள் ஆவார்கள்!
1976 துவக்கத்தில் எனக்கே ஓர் அனுபவம் - எங்கள் வீட்டின் முன் உள்ள காம்பவுண்டு சுவர் மழையில் இடிந்த நேரம். எனவே அதை மாற்றிக் கட்டிட ஒடோடி வந்த நண்பர் பொறியாளர் - நான் "மிசா"வில் சிறை பிடிக்கப்பட்டபோது, அவரே காணாமற் போய் விட்டார்! விடுதலைக்குப் பிறகும்கூட அவரைக் காண இயலவில்லை.
முன்பு காணாமற் போனதற்கு 'பயம்' காரணமாக இருக்கலாம்; விடுதலை ஆகி வீட்டிற்கு வந்த பின்பும் காணாமற் போனதற்குக் காரணம் ஒரு வேளை வெட்கத்தால் இருக்கக் கூடும்!
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு. (குறள் - 788)
"உடை வேட்டி நெகிழின் உடனே தனிச்சையாக யாரும் சுட்டிக் காட்டு முன்பே கை அதனைப் பிடித்து மானம் காப்பாற்றுவது போல" என்ற உவமை போல் எங்கும் காண முடியாது. வள்ளுவர் துணைக் கொண்டு வாழ்க்கை செப்பனிடுவோம் - வாருங்கள்.
No comments:
Post a Comment