தமிழ்நாடு ஆளுநருக்குத் தமிழர் தலைவர் கண்டனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 5, 2023

தமிழ்நாடு ஆளுநருக்குத் தமிழர் தலைவர் கண்டனம்

 நந்தனார் விழாவில், ஆதிதிராவிடர்களுக்குப் 

பூணூல் அணிவிப்பா?

நந்தனார் விழாவில், ஆதிதிராவிடர் களுக்குப் பூணூல் அணிவித்திருப்பதைக் கண்டித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

நந்தனார் குருபூஜை என்ற பெயரில் அவர் பிறந்த ஆதனூரில்  நடந்த விழாவில், ஒடுக்கப் பட்ட மக்களில் சிலருக்குப் பூணூல் அணி வித்திருக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. 

அதாவது பூணூல் அணியாதவர்கள் எல் லாம் கீழ் மக்கள் என்றும், பூணூல் அணிந் தவர்கள் மட்டுமே மேல் மக்கள் என்றும் சொல்லும் மனுதர்மத்தின் பேதத்தினை மீண்டும் ஒரு முறை உறுதிசெய்திருக்கிறார். அவர் பூணூல் அணிவித்ததாகச் சொல்லப் படும் அந்த இளைஞர்கள் இத்தனைக் காலம் மனுதருமப்படி இழிவு செய்யப்பட்டிருப்ப வர்கள் என்பதைத் தானே அவர் ஒப்புக் கொள்கிறார்! இது பூணூல் அணியாத மக்கள் அனைவரையும் கேவலப்படுத்தும் செயல் அல்லவா?

பூணூல் அணிவதன் மூலம் மேல்நிலை யாக்கம் செய்ய முடியும் என்று அனைவருக்கும் பூணூல் அணிவித்துப் பார்ப்பனர் ஆக்கு கின்றாரா? தமிழ்நாடு பார்ப்பனர் சங்கம் இதை தீர்மானம் போட்டு வரவேற்குமா? அந்த இளைஞர்களைப் பார்ப்பனர்கள் என்று ஏற்குமா?

"பிராமணனுக்குப் பஞ்சு நூலாலும், க்ஷத்திரி யனுக்கு க்ஷணப்ப நூலாலும், வைசியனுக்கு வெள்ளாட்டின் மயிராலும் மூன்றுவடமாகத் தோளில் பூணூல் தரிக்க வேண்டியது.'' "(அத்தியாயம் 2 - சுலோகம் 44)  என்று மநுதர்மம் சொல்லுகிறதே! 

ரிக் வேதத்தில் 10 ஆவது மண்டலம் 90 ஆவது பாடலில் இதுபற்றிக் குறிப்பிட்டுள்ளதை அண்ணல் அம்பேத்கர் எடுத்துக்காட்டியுள்ளார் (டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு தொகுதி-8 (தமிழ்)).

‘‘11. தேவர்கள், புருடனைப் பகுத்து அளித்தபோது எத்தனை விதமாகப் பகுத்துப் படைத்தார்கள்? எது அவனுடைய முக மானது? எது கைகளாகவும், தொடைகளாகவும், கால்களாகவும் ஆனது?

12. பிராமணன் அவனது வாயானான். இராஜன்யன் அவனுடைய கைகளானான். அவனுடைய தொடை பாகம் வைசியனாயிற்று. அவனுடைய பாதங்களிலிருந்து சூத்திரர் பிறந்தனர்.''

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆக லாம் என்று முறையாக ஆகமம், மந்திரங்கள் படித்து அர்ச்சகர் ஆகும் முயற்சிக்கும் தடைக்கு நிற்கும் பார்ப்பனியம் இந்த பம்மாத்து வேலைக்கு என்ன சொல்லப் போகிறது?

முன்பு ஒரு முறை ‘துக்ளக்' பேட்டிக்காக, அதன் ஆசிரியர் சோ அவர்கள் என்னிடம் இதே கேள்வியைக் கேட்டபோது நான் சொன்ன பதிலையே இப்போதும் நினைவூட்டு வது சரியாக இருக்கும். “அனைவரையும் சமமாக்க வேண்டுமென்றால்  தாங்கள் 3 சதவீதம் பேர் அணிந்திருக்கும் பூணூலைக் கழகட்டுவது எளிதா? 97% பேருக்கு அணி விப்பது எளிதா? எது அறிவுடைய செயல்?”

ஒடுக்கப்பட்ட சமூக ஆண்களை மேல்நிலையாக்கம் செய்ய பூணூல் அணிவித்த ஆளுநர், அந்த சமூகத்துப் பெண்களை மேல்நிலையாக்கம் செய்ய என்ன செய்வார்? 

நந்தனார் கதையே தீண்டாமைக் கொடு மையைச் சொல்வதுதானே! கோயிலுக்குள் செல்ல முயன்ற ஒடுக்கப்பட்ட சமூகத்தவரான நந்தனாரைத் தீயிட்டுப் பொசுக்கிய கதை தானே! அங்கே சென்று மீண்டும் தீண்டா மையை உறுதி செய்துவிட்டு வந்திருக்கிறாரா பீகார் பார்ப்பனர்?

பூணூல் அணியாதவர்களை, பார்ப்பனரல் லாதாரை, ஒடுக்கப்பட்ட மக்களை, சூத்திரர் - பஞ்சமர் என்று பிறவியினால் இழிவுபடுத்தும் மனுதர்மத் தீண்டாமைத் தத்துவத்தை அவர் உறுதிசெய்து வெகுமக்களை இழிவுபடுத்தி யிருக்கிறார். ஆளுநரின் செயல் கடுமையான கண்டனத்திற்குரியது. 

கி.வீரமணி
தலைவர்,
சென்னை
திராவிடர் கழகம்
5.10.2023

No comments:

Post a Comment