சென்னை, அக். 31- சென்னையில் இணையம் மூலம் பண மோசடி செய்ததாக ஜார்க்கண்ட் இளைஞர் கைது செய்யப்பட்டார்.
புரசைவாக்கத்தைச் சேர்ந்தவர் தெல்மா கரோலின். இவருடைய கைப்பேசிக்கு அண்மையில் ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில், உங்களுடைய வங்கி கணக்குடன் பான் கார்டு எண்ணை இணைக்காவிட்டால், வங்கி கணக்கு முடக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. மேலும் அதை இணைப்பதற்கு ஒரு இணையதள இணைப்பும் அந்த குறுஞ்செய்தியில் இருந்தது.
அந்த குறுஞ்செய்தியை உண்மை என்று நம்பிய அவர், அந்த இணையதள இணைப்பில் தனது சுய விவரங்கள், வங்கி கணக்கு, பான் கார்டு ஆகியவற்றின் தகவல்களை பதிவு செய்து, தனக்கு வங்கியில் இருந்து வந்த ஒரு முறை மட்டும் பயன்படுத்தக் கூடிய எண்ணையும் (ஓ.டி.பி.) உள்ளீடு செய்தார். அடுத்த சில நிமிடங்களில் கரோலின் கைப்பேசிக்கு மற்றொரு குறுஞ்செய்தி வந்தது. அதில், அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.25 ஆயிரம் பணம், வேறு ஒரு வங்கி கணக்குக்கு அனுப்பப்பட்டு இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
வங்கி கணக்கில் இருந்து தனது பணம் திருடப் பட்டிருப்பது குறித்து, சைபர் குற்றப்பிரிவில் தெல்மா கரோலின் புகார் செய்தார். அதன் அடிப்படையில் காவல்துறை வழக்குப் பதிவு செய்து நடத்திய விசார ணையில், இத் திருட்டில் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு கும்பல் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த மாநிலத்துக்குச் சென்ற காவல் துறையினர் துப்பு துலக்கி, ஜார்க்கண்ட் மாநிலம் கிரிடி மாவட்டத்தைச் சேர்ந்த ஆகாஷ் மண்டல் (21) என்பவரை கைது செய்ததாக சைபர் குற்றப்பிரிவு அதிகாரிகள் நேற்று (30.10.2023) தெரிவித்தனர். இந்த வழக்கில் ஆகாஷின் கூட்டாளியான முகேஷ் மண்டல் என்பவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
No comments:
Post a Comment