முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்தநாள் நூற்றாண்டு விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 14, 2023

முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்தநாள் நூற்றாண்டு விழா

நினைவு நாணயம் தமிழ்நாடு அரசின் கோரிக்கைக்கு 

நிதி அமைச்சகம் ஒப்புதல்  

புதுடில்லி, அக்.14- தமிழ்நாடு மேனாள் முதல்-அமைச்சரும், தி.மு.க. மேனாள் தலைவருமான முத்த மிழறிஞர் கலைஞரின்  பிறந்தநாள் நூற்றாண்டு விழா தமிழ்நாடு அரசு சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதை யொட்டி, நினைவு நாணயம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான கோரிக்கையை ஒன்றிய நிதி அமைச்சகம் பரிசீலித்து ஒப்புதல் அளிக்கிறது. பிறகு இந்திய ரிசர்வ் வங்கி அந்த நாணயத்தை அச்சிடுகிறது.

இந்நிலையில் ரூ.100 மதிப்பில் நினைவு நாணயம் வெளியிடும்படி தமிழ்நாடு அரசு விடுத்த கோரிக்கைக்கு ஒன்றிய நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. நாணயத்தை வடிவமைக்கும் பணி தற்போது நிதி அமைச்சகத்தால் நடைபெற்று வருகிறது.

நாணயத்தின் ஒருபுறத்தில் கலைஞரின் சிரித்த முகத்துடன், 'முத்தமிழ் அறிஞர் கலைஞர் டாக்டர் எம்.கருணாநிதி பிறந்த நாள் நூற்றாண்டு 1924-2024' என ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் உள்ளது. மறுபுறத்தில் தேசிய நினைவுச் சின்னத்துடன் ரூ.100 என மதிப்பு குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்தியா என ஆங்கிலத் திலும், பாரத் என ஹிந்தியிலும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இந்தியாவில் நினைவு நாணயம் வெளியிடும் முறை கடந்த 1964-இல் தொடங்கியது. நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவுக்காக முதல் நினைவு நாணயம் வெளியானது. இதைத் தொடர்ந்து முக்கியத் தலைவர்களுக்கு மட்டுமின்றி முக்கிய நிகழ்வுகளுக்கும் நினைவு நாணயம் வெளியானது. இவற்றில் சில பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விடப்பட்டு உள்ளன. பல நாணயங்கள் தனிப்பட்ட பயன்பாட்டுக்கு என்றானது.

தனிப்பட்ட பயன்பாட்டுக் கான நினைவு நாணயங்கள் அவை வெளியிடப்படும் மதிப்பை விட அதிகம். இவை ஒரு காசு முதல் ரூ.1,000 வரையிலான மதிப்பில் வெளியாகியுள்ளன.

ஒவ்வொரு நினைவு நாணயமும் குறிப்பிட்ட அளவு, எடை, உலோகம், காசின் மதிப்பு, உருவம் என பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது. இந்த நினைவுக் காசுக்கான தொகையை அச்சிடக் கோருவோர் செலுத்த வேண்டும்.


No comments:

Post a Comment