காவி என்றாலே தில்லுமுல்லு தானா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 27, 2023

காவி என்றாலே தில்லுமுல்லு தானா?

'வீட்டுக்கு வீடு தேசியக் கொடி ஏற்றுங்கள்' என்று பிரதமர் நரேந்திரமோடி கூறியதை செய்தியாக்கி அதனோடு உளவு மென்பொருளை அனுப்பி ராணுவ அதிகாரிகளின் அந்தரங்க விவகாரங்களை எடுத்து பாகிஸ்தானுக்குத் கொடுத்த பாஜக ஆதரவாளர் குஜராத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். பா.ஜ.க.வினர் தேசபக்தியை குத்தகைக்கு எடுத்திருப்பது போன்று நாட்டின்மீது அக்கறை கொண்டவர்களைப் போன்று பல தகவல்களை வாட்ஸ்அப் மூலம் அனுப்பிக்கொண்டே இருப்பார்கள். எடுத்துக்காட்டாக‘எனது தேசம் 'எனது மண்' என்ற மோடியின் பேச்சை செய்தியாக்கி, அதில் மண்ணைக் கையில் எடுத்து காண்பிப்பது போன்ற படத்தை அனுப்புவார்கள். அதே போல் வீட்டுக்குவீடு தேசியக்கொடி ஏற்றுங்கள் என்று மோடி கூறியதை வைத்து தேசியக்கொடிகளை வீடுகளில் ஏற்றி இருக்கும் படங்களை எடுத்து அனுப்புவார்கள்; இவ்வாறு அனுப்பப்படுவதை யாரும் சந்தேகம் கொள்ள மாட்டார்கள். இதைப் பயன்படுத்தி, பலர் மோசடிகளைச்செய்து வருகின்றனர். 

குஜராத்தைச் சேர்ந்த சங்கர் மகேஷ்வர் என்ற நபர் வீட்டுக்கு வீடு தேசியக்கொடி என்ற மோடியின் பேச்சை செய்தியாக்கி, ராணுவ அதிகாரிகளின் கைப்பேசிக்கு படத்தோடு அனுப்பி உள்ளார். இந்த படத்தோடு "ணீஜீளீ" என்ற உளவு மென்பொருளையும் அனுப்பி உள்ளார். தேசியக்கொடி படம் என்றதும் ராணுவ அதிகாரிகள் அதனை முழுமையாக நம்பி தங்களுக்கு வந்த வாட்ஸ் அப் தகவலைத் திறந்துள்ளனர். இதன் மூலம் அவர்களுக்குத் தெரியாமலேயே அவர்களின் மொபைல் மெமரியில் உளவு மென்பொருள் சென்று விட்டது. மென்பொருள் தானாகவே இயங்கி, அவர்களின் உரையாடலைப் பதிவு செய்வது, காமிராவை இயக்கி அந்தரங்க செயல்பாடுகளைப் படமாக்குவது, அதனை உளவாளிகளுக்கு அனுப்புவது போன்ற நடவடிக்கைகளை இந்த மென்பொருள் செய்யும். தேசியக்கொடி படங்களை அவர் எந்த எந்த  அதிகாரிகளுக்கு அனுப்பினாரோ அந்த அதிகாரிகள் குறித்த  நடவடிக்கைகளைப் பதிவு செய்து, பாகிஸ்தானில் உள்ள உளவு அமைப்பிற்கு சங்கர் மகேஷ்வர் அனுப்பி உள்ளார், இதற்காகப் பெரும் தொகையையும் பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் ராணுவ அதிகாரிகள் குறித்த தகவல்கள் குஜராத்தில் குறிப்பிட்ட நபரிடமிருந்து துபாய் வழியாக பாகிஸ்தானுக்கு அனுப்பப்படுவது குறித்து இந்திய ராணுவ உளவுத்துறை குஜராத் மாநில காவல்துறைக்குத் தகவல் அனுப்பியது. இதனை  அடுத்து குஜராத் மாநில காவல் துறையினர் அவர்கள் அனுப்பிய கைப்பேசி எண்ணை வைத்திருப்பவரைத் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். அவர் உள்ளூர் பாஜகவினரோடு நெருங்கிய நட்பு கொண்டு பழகி உள்ளார். அவர்களோடு இருந்துகொண்டு முக்கிய பிரமுகர்களின் எண்களை வாங்கியுள்ளார். 

இதுகுறித்து குஜராத் தீவிரவாத தடுப்புப் பிரிவு இணை ஆணையர் ஓம் பிரகாஷ் கூறியதாவது: 

"ஆனந்த் மாவட்டம் தாராபூர் நகரில் வசிக்கும் ஒருவர் இந்திய சிம் கார்டில் வாட்ஸ்அப்பை பயன்படுத்தி, பாகிஸ்தானுக்கு உளவுத் தகவல்களை அனுப்புவதாக இந்திய ராணுவ உளவுத் துறையிடமிருந்து எங்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. முக்கிய பிரமுகர்களின் கைப்பேசிகளுக்கு   அனுப்பி தகவல்களை அவர் திருடி வந்துள்ளார். அதன் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில் தாராபூரில் ஆனந்த் என்ற இடத்தில் உள்ள லப்சங்கர் மகேஸ்வர்  என்ற நபர் பாகிஸ்தானுக்கு உளவு பார்ப்பது உறுதியானது.. லப்சங்கர் மகேஸ்வர் பாகிஸ்தானில் பிறந்து வளர்ந்தவர். 1999-இல் இந்தியாவில் குடியேறி, அதன் பின்னர் அவருக்கு இந்திய குடியுரிமை கிடைத்துள்ளது. இவரது குடும்பத்தினர் இன்னும் பாகிஸ்தானில் தான் வசித்து வருகின்றனர். இந்திய ராணுவத்தினரின் குடும்ப உறுப்பினர்களைக் குறிவைத்து அவர் உளவுத் தகவல்களை திரட்டியுள்ளார். இந்த நிலையில், பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டின் பேரில் அவரைக் கைது செய்து விசாரித்து வருகிறோம்." இவ்வாறு அவர் தெரிவித்தார்.

எப்படி எல்லாம் தில்லுமுல்லுகள் செய்யலாம் என்பதைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று  எவராவது விரும்பினால் இத்தகைய பிஜேபி பேர் வழிகளை அணுகலாம்.

வருமான வரித்துறையில் வேலை வாங்கித் தருகிறேன். இரயில்வேயில் வேலை வாங்கித் தருகிறேன் என்றெல்லாம் பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து நம்பச் செய்து, பல லட்சக்கணக்கில் பண மோசடி செய்பவர்கள் பிஜேபியினராக இருந்து வரும் தகவல்கள் நாளும் வெளிவந்து கொண்டுள்ளன.

தார்மீகம் பற்றி எல்லாம் இவர்கள் கொட்டி அளப்பதற்கு மட்டும் குறைச்சல் இல்லை. காவிகள் என்றாலே சந்தேகப்படும் நிலை ஏற்பட்டுள்ளது - எச்சரிக்கை! எச்சரிக்கை!!


No comments:

Post a Comment