சென்னை, அக். 24- சென்னை மாநகர பேருந்துகளில் ஜிபிஎஸ் கருவி மூலம் பேருந்து நிறுத்தங்களின் பெயர்களை 100 மீட்டர் தொலைவுக்கு முன்னரே அறிவிக்கும் திட்டம் ஏற்கெனவே 150 பேருந்துகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது பயணிகள் எவ்வித சிரமமின்றியும், கால தாமதமின்றியும் பேருந்தில் இருந்து இறங்கிட உதவுகிறது. இந்த வசதி மேலும் ஆயிரம் பேருந்துகளில் விரிவுபடுத்தப்பட உள்ளதாக மாநகர போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை திரும்ப 8,000 பேருந்துகள்
தொடர் விடுமுறை காரணமாக வெளியூர்களில் வேலைபார்க்கும் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். இதற்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பல்வேறு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்த பேருந்துகள் மூலம் கடந்த 20ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை சென்னையில் இருந்து பல ஊர்களுக்கு மொத்தம் 8,003 அரசுப்பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்துகளில் 4.80 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் விடுமுறைக்காக சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்பி வருவர். இதற்கு ஏதுவாக சுமார் 8,000 பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. விடுமுறைக்காக சென்னையில் இருந்து சுமார் 5 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். இதனால் நாளை புதன்கிழமை (அக்.25) வரை பல்வேறு ஊர்களிலிருந்து சென்னைக்கு பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்துதுறை அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment