1865இல் அப்போதைய பிரிட்டிஷ் இந்தியாவின் ஒரு மாகாண மான வட மேற்கு எல்லைப்புற மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பே இந்தியாவில் முறையாக மேற் கொள்ளப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பாகக் கருதப்படுகிறது. அதற்குப் பிறகு, 1872இல் அடுத்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்தக் கணக்கெடுப்பு நாடு முழுவதும் நடத்தப்பட்டது. இதற்குப் பிறகு, 1881இல் முதல் முறையாக, அனைத்து இடங்களிலும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
1881 முதல் 1941வரை பத்தாண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் நடத்தப்பட்டது. ஆனால், 1941ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பு, இரண்டாம் உலகப் போர் காரணமாக முழுமையாக நடத்தப்பட வில்லை. ஆகவே, 1931ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட கணக் கெடுப்பே பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட கடைசி முழுமையான மக்கள் தொகை கணக்கெடுப்பாகக் கொள்ளப்படுகிறது.
மக்கள் தொகைக் கணக்கெடுப்பு துவங்கியதிலிருந்தே, இந்தியா வில் உள்ள மதங்கள், ஜாதிகள், இனங்கள் ஆகியவற்றை வகைப் படுத்துவது பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு சவாலான ஒன்றாக இருந் தது. ஆகவே, இது ஒவ்வொரு மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கும் ஒரு முறை மாறி மாறி வந்தது. 1901ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் 1,646 ஜாதிகள் இருப்பதாக வகைப்படுத்தப்பட்டது. 1941இல் எடுத்த கணக்கெடுப்பில் இந்த எண்ணிக்கை 4,147ஆக உயர்ந்தது. இந்தியா சுதந்திரமடைந்த பிறகு நடந்த மக்கள் தொகை கணக்கெடுப்பில், ஜாதிகள் தொடர்பான விவரம் சேகரிக்கப்பட வில்லை. ஆனால், பட்டியலினத்தினருக்கும் பழங்குடியினருக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதால், அவர்களது எண்ணிக்கை மட்டும் சேகரிக்கப்பட்டது. மற்ற ஜாதியினர் குறித்த தகவல்கள் சேகரிக்கப்படவில்லை.
பீகாரில் மேற்கொள்ளப்பட்ட ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் புள்ளிவிபரங்களை காந்தியாரின் பிறந்த நாளன்று (2.10.2023) அம்மாநில அரசு வெளியிட்டது. இந்தப் புள்ளி விவரங் களின்படி, அம்மாநிலத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 36.01 சதவீதமும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 27.12 சதவீதமும், பட்டியல் இனத்தினர் 19.65 சதவீதமும், இடஒதுக்கீடு இல்லாத பிரிவினர் 15.52 சதவீதமும், பட்டியல் பழங்குடியின மக்கள் 1.68 சதவீதமும் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. ஆகவே, பீகாரில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 36 சதவீதத்துடன் அதிக மக்கள் தொகையைக் கொண்டிருக்கின்றனர். பீகாரில் மொத்தம் 113 ஜாதிகள் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. ஆனால், தற்போது பீகார் சட்டப் பேரவையில் 7 சதவீத சட்டமன்ற உறுப் பினர்கள் மட்டுமே இப்பிரிவைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றனர்.
பீகாரைப் பொறுத்தவரை பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை அதிகமாக இருந்தபோதிலும் ஆரம்ப நாட்களில் உயர் ஜாதியினரே பீகாரின் அதிகார மய்யத்தில் ஆதிக்கம் செலுத்தினர். இதற்குப் பிறகு பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த லாலு பிரசாத், நிதீஷ்குமார் ஆகியோர் கிட்டத்தட்ட 33 ஆண்டுகளாக பீகாரில் ஆண்டு வருகின்றனர்.
தற்போது ஜாதிவாரியான மக்கள் தொகையினரின் எண்ணிக்கை வெளியாகியிருக்கும் நிலையில், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள், அம்மாநில அரசியலில் தங்களுக்கு உரிய பங்கைக் கோரலாம். கல்வி, வேலை வாய்ப்புகளிலும் இதே கோரிக்கை எதிரொலிக்கலாம்.
பீகாரில் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஜாதிவாரி கணக் கெடுப்பின் முடிவுகள் வெளியிடப்பட்டிருக்கும் நிலையில், நாடு முழுவதும் இதேபோன்ற கணக்கெடுப்பை நடத்த வேண்டுமென்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
பீகார் மாநில கணக்கெடுப்பின் மூலம் சில தரவுகள் வெளி வந்துள்ளன.
63 விழுக்காடுள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப் பட்டோரில் பட்டதாரிகள் எண்ணிக்கை 5 விழுக்காட்டைத் தாண்ட வில்லை என்பதுதான் அந்த உண்மை.
உயர் ஜாதியினர் தங்கள் எண்ணிக்கைக்கு மேலாகக் கல்வித் துறையிலும், ஏன் பொருளாதாரத்திலும்கூட ஆதிக்கம் செலுத்து கின்றனர்.
மக்கள் தொகைக் கணக்கெடுப்புக் கூடாது என்று உயர் ஜாதி யினரும், ஒன்றிய அரசும் முட்டுக்கட்டை போடுவதன் பின்னணி இந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
முந்தைய நாடாளுமன்ற கூட்டத் தொடரின் போது ஒன்றிய அரசு கொடுத்த புள்ளி விவரம் வருமாறு:
322 அய்.ஏ.எஸ். அதிகாரிகள் இணைச் செயலாளர் களாகவும், செயலாளர்களாகவும் ஒன்றிய அரசின் பல்வேறு அமைச்சரகங்களில் பணியில் உள்ளனர். இதில் 16 பேர் தாழ்த்தப்பட்டவர்கள், 13 பேர் பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் வெறும் 39 பேர் மட்டுமே; மற்றவர்கள் அனைவரும் உயர்ஜாதியினராகவே உள்ளனர். இதில் சிறுபான்மையினத்தவர் யாருமே இல்லை. இவர்கள் பதவி உயர்வு பெறுவதற்குள் ஓய்வு பெற்றுவிடுவார்கள். செயலாளர் பதவிகளில் வெறும் மூன்று பேர் மட்டுமே பிற்படுத்தப்பட்டவர்கள் உள்ளனர். இதன்படி தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, பழங்குடி சமூகத்தினர் உயர்பதவிகளுக்கு நீண்ட ஆண்டுகளாக வரவே இல்லை என்று ராகுல்காந்தி கூறியது மிகவும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
ஜாதி சட்டப்படி ஒழிக்கப்படாத நிலையில், மக்கள் தொகைக் கணக்கெடுப்பை (ஜாதியை உள்ளடக்கி)) எடுக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்).
No comments:
Post a Comment