வேலூரில் செய்தியாளர்களுக்குத் தமிழர் தலைவர் பேட்டி
வேலூர், அக்.28 எதை எதை எல்லாம் ஆளுநர் செய்யக் கூடாதோ அதை எல்லாம் ஆளுநர் செய்து வருகிறார். அதனால் தி.மு.க. ஆட்சியின் மீது மக்களின் ஆதரவு பெருகி வருகிறது. நமது முதலமைச்சர் கருத்தும் இதுவாகத்தான் இருக்கிறது என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
நேற்று (27.10.2023) மாலை தொடர் பரப் புரைப் பயண நிகழ்விற்காக வேலூருக்குச் சென்ற திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தி யாளர்களுக்குப் பேட்டி யளித்தார்.
அப்பேட்டியின் விவரம் வருமாறு:
செய்தியாளர்: தமிழ்நாடு ஆளுநர் நடக்காத ஒரு நிகழ்வை நடந்ததுபோன்று சொல்கிறார். ஒன்றிய அரசும் இது சம்பந்தமாக எந்தவித கருத்தையும் தெரிவிக்கவில்லையே?
தமிழர் தலைவர்: பல விஷயங்களில் தமிழ்நாடு ஆளுநர் ஒரு போட்டி அரசாங்கத்தை நடத்துகிறார். தமிழ்நாடு அரசின் கொள்கைக்கு விரோதமாகப் பேசி வருகிறார்.
மக்களுடைய உணர்வுகளைப்பற்றி அவர் கவலைப்படுவதில்லை. உண்மைக்கு மாறான பல செய்திகள் பரப்பப்படுகின்றன. அதற்கு உதாரணம் தான், நேற்றைய நிகழ்வுகள்.
சென்னை மாநகர காவல்துறை ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் அவர்கள் நேரில் சென்று தெளிவாக விளக்கமளித்திருக்கிறார். தமிழ் நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் அவர்களும் தெளிவான அறிக்கை கொடுத் திருக்கிறார்.
அதேபோல, மயிலாடுதுறையில் ஆளுநருக் குக் கருப்புக் கொடி காட்டிய நிகழ்வு குறித்தும் மிகத் தெளிவாக நேற்று (27.10.2023) செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்திருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் எந்தவிதமான சட்டம் - ஒழுங்குப் பிரச்சினையும் கிடையாது.
எதையாவது சொல்லி மக்களின் கவனத்தைத் திருப்பவேண்டும்; இந்த ஆட்சிக்கு எதிராக எதை யாவது செய்யவேண்டும் என்று நினைக்கிறார். அதில் அவர் வெற்றி பெற முடியாது.
நம்முடைய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (27.10.2023) ''தமிழ்நாடு ஆளு நரை மாற்றிவிடவேண்டாம்; குறைந்தபட்சம் நாடாளு மன்றப் பொதுத் தேர்தல் வரையிலாவது இருக்கட்டும்; அப்பொழுதுதான் எங்களுடைய கூட்டணியினர் வெற்றி பெறு வோம். ஆளுநர் எதையாவது பேசப் பேசத்தான் மக்களுக்கு உண்மை விளங்குகிறது'' என்று சொல்லியிருக்கிறார்.
காரணம் என்னவென்றால், ஆட்சிக்குப் போட் டியாக எதையாவது செய்துகொண்டே இருக்கிறார். ஆரியர் - திராவிடர் பிரச்சினையிலிருந்து, பஜனை நடத்துவதிலிருந்து, பூணூல் போடுவதிலிருந்து பல வேலைகளைச் செய்து வருகிறார். எது எதை ஒரு ஆளுநர் செய்யக்கூடாதோ, அந்த வேலை களைச் செய்கிறார் அவர். எது எதை ஆளுநர் செய்யவேண்டுமோ, அதை அவர் செய்யவில்லை.
இதை பேரறிவாளன் வழக்கில் உச்சநீதிமன்றம் மிகத் தெளிவாகச் சொல்லியிருக்கிறது.
ஆகவேதான், இதுபோன்ற வேலைகளைச் செய்து, திராவிட மாடல் ஆட்சிக்குத் தொல்லை கொடுக்கலாம் என்று நினைத்தால், அவர்கள்தான் ஏமாறுவார்களே, தவிர வேறொன்றுமில்லை.
இன்றைக்குத் தி.மு.க. கூட்டணி பலமாகிறது; பழி போட்டு அதனை அழிக்க முடியாது; மக்களுடைய உறுதி நாளுக்கு நாள் தெளிவாகிறது.
எனவே, 'பி' டீம், 'சி' டீம் என்று பல டீம்களை வைத்துக்கொண்டு வெற்றி பெறலாம் என்று அவர்கள் கனவு காண முடியாது.
தமிழ்நாட்டில் 40 தொகுதிகளில் வெற்றி பெறுவது மட்டுமல்ல - இந்தியாவில் 400 தொகு திகளில் 'இந்தியா' கூட்டணி வெற்றி பெற்று, ஒன்றியத்தில் 'இந்தியா' கூட்டணி ஆட்சி அரியணையில் அமரும்.
அதற்கு எங்களுடைய பங்களிப்பு சிறப்பாக இருக்கும்.
'ஜெய் சிறீராம்' என்ற ஒரு வார்த்தை
கடவுளைக் குறிக்கிறதாமே!
செய்தியாளர்: 'ஜெய் சிறீராம்' என்ற ஒரு வார்த்தை கடவுளைக் குறிக்கிறது என்று பி.ஜே.பி. அண்ணாமலை சொல்லியிருக்கிறாரே?
தமிழர் தலைவர்: அப்படியா! யாரைக் குறிக் கிறது. கடவுளையா? கடவுளுக்கு ஓட்டு இல்லையே!
நன்றி, வணக்கம்!
- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
No comments:
Post a Comment